RSS

Tag Archives: kanchi acharya

Aside

காஞ்சி வழக்கு பற்றிய சென்ற பதிவில் மத மாற்றுக்காரர்களின் உலகளாவிய இயக்கங்களின் மறைமுகக் கை இருக்கலாம் என்று கண்டோம். அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் கண்டோம்.

ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை உண்டா என்று கேட்கலாம். என்னுடைய அலசல் அக்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பை அவற்றின் கால அளவையும் நிகழ்ந்த நேரத்தையும் கருத்தில் கொண்டு எழுப்பப்பட்ட அனுமானங்கள் என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால் நான் இந்த அனுமானத்திற்கு வரக் காரணங்கள் என்ன ?

வழக்கு பதிவு செய்யப்பட்ட விதமும், வழக்கு நடத்தப்பட்ட அழகும் அன்றைய அரசின் இவ்வழக்கு பற்றிய கருத்துக்களும், காவல் துறை மற்றும் ஊடகங்களின் நடத்தையுமே என் அனுமானத்திற்குக் காரணங்கள்.

வழக்கு பதிவு செய்யும் முன்னரே ஜெயேந்திரரைக் கைது செய்வதே முக்கியம் என்பது போல் செயல்பட்டது அரசு. அன்றைய முதலமைச்சரும் முந்தைய நாள் வரை காஞ்சி மடத்துடன் இழைந்துகொண்டிருந்தார். திடீரென்று தீபாவளி நாள் அன்று ஜெயேந்திரர் கைது செய்யப் பட்டார். அது வரை அவரே எல்லாத் தொலைக் காட்சிகளிலும் தீபாவளி அன்று நற்செய்தி வழங்கி வந்தார். இந்துமதம் என்றாலே காஞ்சி சங்கராச்சாரியார் என்ற அளவில் இருந்தது அன்று.

தீபாவளி நாள் அன்று அதிரடி முறையில் அவர் கைது செய்யப்படவேண்டிய தேவை என்ன ? தீபாவளி என்பது பாரதத்தின் அனைத்து இந்து சம்பிரதாய மக்களும் புனிதம் என்று கருதும் நாள். எனவே அன்று அந்த சமயத்தின் முக்கியத் தலைவரைக் கைது செய்து யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது என்று எண்ணத் தோன்றுவது இயற்கையே. ஆக, யாருக்கு என்ன செய்தி அனுப்பப்பட்டது ?

அப்போது என்ன கதைகள் பேசப்பட்டன ? அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து நேபாளத்திற்கு ஹெலிகாப்டரில் தப்ப இருந்தார் என்ற செய்தி பரப்பப் பட்டது. ஆந்திராவிலிருந்து நேபாளத்திற்குப் பறக்க இதுவரை ஹெலிகாப்டர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பிறந்த குழந்தைக்குக் கூட தெரியும்.

ஜெயேந்திரர் காஞ்சிபுரம் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். ஆனால் அதற்கு முன்னரே ‘நக்கீரன்’ என்னும் நாலாந்தர ஏட்டின் உதவித் தலைமை ஆசிரியர் நீதிமன்றத்திற்குள் அமர்ந்திருந்தார். அது எப்படி? அவருக்கு இந்தத் தகவல் எப்படி முன்னரே தெரிந்தது ?

வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்த பிரேம்குமார் என்ற காவல்துறை ஆய்வாளரின் மைத்துனர் இந்த உதவி ஆசிரியர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வெளியே விடாமல் இருக்க ஆன மட்டும் முயன்றனர். அரசின் அத்துனைத் துறையும் இதின் பயன் படுத்தப்பட்டன. முதல்வர் நேரடியாக இந்த வழக்கில் ஈடுபட்டார். பிரேம்குமாருடன் நேரடியாக அனைவரும் பார்க்கும் வண்ணம் தனது ஹெலிகாப்டர் அருகில் நின்று பேசினார். அன்று மாலையே இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மிகவும் அதிரடி முறையில் பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது பிரேம்குமார் காலில் காலணி (ஷூ ) அணிந்திருந்தார். விஜயேந்திரர் தான் பூசை முடித்து வருவதாகக் கூறினார். ஆனாலும் விடாப்பிடியாக பரமாச்சாரியாரின் அதிஷ்டானத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். ஏன் இவ்வளவு அவசரம் ?

ஜெயேந்திரர் மீது அசைக்க முடியாத சாட்சியங்கள் இருப்பதாக அன்றைய முதல்வர் தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தார் (Clinching Evidence).  ஆனால் அந்த சாட்சி என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரு தனி வழக்கு பற்றி முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டியது ஏன் ? யாரைத் திருப்திப் படுத்த ?

சரி, அசைக்க முடியாத சாட்சி என்ன ?

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் இருந்து 50 இலட்சம் பணம் எடுத்து அது கொலையாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது என்பதே அது. இந்தக் காரணம் காட்டியே காஞ்சி முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பிணை (bail)  மறுக்கப்பட்டது.  டெல்லியில் தலைமை நீதிமன்றம் முன் இந்த சாட்சி பற்றிக் கேள்வி எழுந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குப் புத்தகம் கேட்கப்பட்டது. அரசு தரப்பில் அப்படி ஒரு கணக்கு இல்லை என்று கூறப்பட்டது.

அன்று வரை எந்தக் கணக்கு முக்கிய சாட்சியாகக் காண்பிக்கப்பட்டதோ அதுவே இல்லை என்று அரசே கூறியது. நீதி மன்றம் கொதிப்படைந்தது.

பின்னர் அரசு அது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்கு இல்லை என்றும் அது இந்தியன் வங்கிக் கணக்கு என்றும் கூறியது. நீதிமன்றம் கணக்குப் புத்தகப் கேட்டது. அதில் 50 இலட்சம் எடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தேதியில் 50 இலட்சம் வைப்பு செலுத்தப் பட்டது என்றும் தெளிவாகியது. மடத்தின் ஒரு நிலம் விற்ற வகையில் பெற்ற பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.

ஒரு க்ரெடிட் , டெபிட் ( Credit / Debit ) வித்யாசம் கூடவா அரசிற்குத் தெரியவில்லை ? நம்ப முடியவில்லை.

இல்லாத ஒரு வங்கிக் கணக்கை இருக்கிறது என்று அரசு துணிந்து பொய் கூறியது. பணம்  செலுத்தியதை எடுக்கப்பட்டது என்று மேலும் துணிந்து பொய் கூறியது. இதெல்லம் ஒரு குற்றத்தை நிரூபிக்க அல்ல; ஜெயேந்திரருக்குப் பிணை மறுக்க.

அவரைச் சிறையில் நீண்ட காலம் வைப்பதால் யாருக்குப் பயன் என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

அவரைச் சிறையில் வைத்து விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக மயக்க மருந்து கொடுத்துப் பல கேள்விகள் கேட்டது காவல் துறை. அதனைப் பதிவு செய்து அதனைத் தொலைக் காட்சிகளுக்கும் அளித்தது. ஆனால் யார் அதனை அளித்தனர் என்று தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிலையங்கள் தெரிவித்தன. இருந்தும் அந்த ‘விசாரணையை’ ஒளி பரப்பித் தங்கள் ‘தர்ம’த்தை நிலை நாட்டின. இவையும் யாருக்காக என்று தெரியவில்லை.

ஜெயேந்திரருக்கு டெல்லி உச்ச நீதிமன்றம் பிணை அளித்து விடுவித்தது. அந்த ஆணையில் தமிழக அரசைக் கடுமையாகச் சாடியது உச்ச நீதி மன்றம். புதிய சாட்சிகள் ஒன்றும் இல்லை, வழக்கை நடத்த முயற்சி செய்யாமல் ஜெயேந்திரரைச் சிறையில் வைக்கவே அரசு விரும்புகிறது என்று நீதிமன்றம் சாடியது.

ஜெயேந்திரர் வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே விஜயேந்திரக் கைது செய்தது தமிழக அரசு மீண்டும் வேறு புதிய சாட்சிகள் இல்லாமலே.

இந்திய ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன் வாழ்நாளைக் காஞ்சி மடத்தின் சேவையில் கழிக்க நினைத்து அதில் தொண்டூழியம் செய்துவந்த சுந்தரேசையர் என்பவரைக் ‘குண்டர்’ சட்டத்தில் கைது  செய்தது அரசு. பின்னர் அதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாகக் குற்றம் செய்யும் குற்றவாளிகளை நடத்துவது போல் இவரை நடத்தியதை நீதிமன்றம் விரும்பவில்லை.

அத்துடன் இல்லாமல் மடத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது அரசு. மடத்தின் கீழே பல பாட சாலைகள், பசுக் காப்பகங்கள், மருத்துவனமனைகள் முதலியன நடந்து வந்தன. இவை அனைத்தும் பாதிக்கப்பட்டன.

இதற்கும் நீதி மன்றம் செல்ல வேண்டியதாக இருந்தது. அந்தத் தீர்ப்பில் அரசின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்தது. (“Action for freezing the accounts of the Mutts is ultra vires, illegal and liable to be set aside”).

தெரிந்தே நீதி மன்றத்தில் பொய் சொல்வது ஒரு அரசின் வேலையா ? இவ்வளவு தூரம் மெனக்கெட்டு பொய் கூறி, நீதி மன்றத்திடம் வாங்கிக் கட்டிகொண்டது யாருக்காக ?

இந்த நேரத்தில் ஊடகங்களின் செயல்பாடு பற்றிப் பேசாமலிருப்பதே நல்லது. கொல்கொத்தாவின் சோனாகாச்சியில் நடைபெறும் தொழிலுக்கும் ஊடகங்களின் செயல்பாட்டிற்கும் பெரிய வித்யாசம் இல்லை.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் பார்ப்போம். ‘காலச்சுவடு’ என்னும் ஒரு இலக்கியப் பத்திரிகை. அந்நேரத்தில் அதில் வெளிவந்த ஒரு கட்டுரையில் ஒரு சிறிய பகுதி இது. மேலும் நான் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை.

“கேட்டுக்கொண்டிருந்த நான் சொன்னேன்: “சார், நீங்கள் ஜெயேந்திரரைத் தவறாக நினைக்கக் கூடாது. அவர் எல்லோரையும்தான் சட்டையை அவிழ்க்கச் சொல்கிறார். ஆண்களிடம் வெளியில் வைத்துக் கேட்பார். பெண்களிடம் உள்ளே வைத்துக் கேட்பார். அவ்வளவுதான் வித்தியாசம்.” ( நன்றி : தமிழ் ஹிந்து )

காலச்சுவடு என்பது முற்போக்கு இலக்கியச் சூழலில் உள்ள ஒரு பத்திரிக்கை. இதுவே இப்படிச் செயல்பட்டது. மற்றவை பற்றிப் பேசவேண்டியதில்லை.

பத்திரிக்கை தர்மம் என்று கொடி பிடிப்பவர்கள் அப்போது எங்கே போனார்கள் ? யாரைத் திருப்திப் படுத்த இந்தச் செயல்பாடு ?

விஜயேந்திரரையும் ஒரு முன்னாள் நடிகையையும் தொடர்பு படுத்தியும் பத்திரிக்கைகள் பேசின. பெண் உரிமைக்காரர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார்கள் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ‘ஜன நாயக மாதர் சங்கம்’, ‘தேசியப் பெண்கள் ஆணையம்’ முதலியன அப்போது தோன்றவில்லையா ? அல்லது அந்தக் பெண் நடிகை பெண்ணே இல்லையா ?

எதற்காக இந்த அளவு வீழ வேண்டும் பத்திரிக்கைகளும், ஊடகமும், அரசும் ?

என்னிடம் பதில்கள் இல்லை. அனுமானம் மட்டுமே. விடை தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்.

ஆனால் ஒன்று நிச்சயம்.  வழக்கிலிருந்து ஜெயேந்திரர், விஜயெந்திரர் விடுதலை ஆனார்கள் என்றாலும் மடத்தின் பெருமையும் ஆளுமையும் குறைந்தது என்பது உண்மை. துறவியரின் பெருமையும் அவ்வாறே.

இனி ஜெயேந்திரர் சமூக சீர்திருத்தங்களில் அவ்வளவு தீவிரமாக ஈடுபடுவாரா என்பது சந்தேகமே. அவரது உடல் நலமும் இடம் கொடுக்காது. மன உரமும் தளர்ந்திருக்கும். பழையபடி காஞ்சி மடம் ‘ப்ராம்மணர்களின்’ கூடாரமாகலாம். ‘நமக்கேன் வம்பு’ என்று அவர்கள் பார்வை உள் நோக்கித் திரும்பலாம். இவை எதிர்பார்க்கக் கூடியவை.

காஞ்சி மடத்தின் இந்தப் போக்கினாலும் பெருமை வீழ்ச்சியாலும் பயன் அடையப்போவது யார் என்பதை அறிந்துகொள்ளப் பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.

காஞ்சி வழக்கு – என் அனுமானத்தின் காரணங்கள்

 
Leave a comment

Posted by on December 30, 2013 in Writers

 

Tags: , , , , , ,

காஞ்சி மட வழக்கின் பின்னணி – ஒரு அலசல் பார்வை

ஒருபுறம் ஆங்கிலேய அரசும் மிஷனரிகளும் செய்த தொடர் பிரச்சாரம், இன்னொரு புறம் ஆங்கிலேய அரசு தந்த ஊக்கத்தில் பாரதப் பண்பாட்டை இகழத் துவங்கிய ஆங்கில வழியில் பயின்ற மேதாவிகள். இவர்களுடன் சேர்ந்து ஆங்கில வழிக்கல்வியே உயர்ந்தது என்ற எண்ணத்தில் பாரதத்தின் பண்பாட்டுக்கல்வியான வேதக் கல்வி, ஆயுர்வேதம், இஸ்லாமிய சமயக்கல்வி, யுனானி முதலிய மருத்துவக்கலைகள் முதலியனவற்றினை இகழத் துவங்கினர் சாதாரண மக்கள்.

சமயக் கல்வியில் தொய்வு என்றால் மொழியும் தாழ்வுற்றது என்றே பொருள். சைவ சமயம் சார்ந்த ஆதீனங்களின் திருமுறைப் பள்ளிகள் தமிழையும் ஆன்மிகத்தையும் வளர்த்து வந்தன. இவையும் சற்றே தாழ்வு எய்தின.

ஆதி சங்கரரின் வழி வந்த வித்யாரண்யர் என்னும் சிருங்கேரி சங்கர மடத் துறவி விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவக் காரணமானார். ஹரிஹரா, புக்கா என்னும் சகோதரர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதலாக இருந்து இஸ்லாமிய அரசுகளின் தாக்கம் டெக்கான் என்னும் இடம் தாண்டி தெற்குப்பக்கம் வரவிடாமல் தடுத்தார். கி.பி. 1331 முதல் 1386 வரை சிருங்கேரி சாரதா பீடத்தலைவராக இருந்த விதயாரண்யர் சனாதன சம்ப்ரதாயம் காக்கச் செய்த பணி மகத்தானதாகும். இவர் தலைமைப் பதவியில் இருந்த கால அளவில் சில மாறுதல்கள் இருந்தாலும் இவரது பணி சிறப்பானது.

பிறகு வெள்ளை அரசுகளின் ஆட்சியின் போது பாரதத்தின் பண்பாட்டை உலகம் அறியச் செய்ய அத்வைத சித்தாந்தத்தின் பிரதிநிதியாக விவேகானந்தர் தோன்றி மிஷனரிகளின் கட்டுப்பாடற்ற மத மாற்றங்களை எதிர்த்தார். “எங்கள் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பிடி மண் எடுத்து இங்கிலாந்து மேல் வீசினால் அது நீங்கள் எங்களுக்கு உங்கள் கல்வி மற்றும் மத மாற்றத்தால் செய்யும் கேட்டின் அளவில் ஒரு துளி கூட் ஆகாது” என்றார். (“If all India stands up and takes all the mud that is at the bottom of the Indian Ocean and throws it up against the Western countries, it will not be doing an infinitesimal part of that which you are doing to us …”) .

ஆங்கிலேயரின் மத மாற்றத்தையும் அவர்களது கல்வி முறையையும் எதிர்த்த அவர், ஆங்கிலக் கல்வி பற்றிக் கூறுவது  “எங்கள் சிறார் உங்கள் பள்ளி சென்றதும் முதலில் அவனது தந்தை ஒரு மூடன் என்று கற்பிக்கப்படுகிறான்; பின்னர் அவனது தாத்தா ஒரு மன நிலை பிறழ்ந்த மனிதர் என்று அறிவுறுத்தப்படுகிறான்; பின்னர் அவனது இந்திய ஞான ஆசிரியர்கள் அனைவரும் நேர்மை தவறியவர்கள் என்று போதிக்கப்படுகிறான்; நான்காவதாக அவனது புனித நூல்கள் அனைத்தும் புளுகு மூட்டைகள் என்று கற்பிக்கப்படுகிறான்; அவன் பதினாறு வயது ஆகும் போது ஒரு எலும்பில்லாத, உயிரில்லாத, எதிர் மறையான எண்ணங்கள் கொண்ட  நடைப் பிணமாக ஆகிறான்..” (“The child is taken to school and the first thing he learns is that his father is a fool, the second thing that his grandfather is a lunatic, the third thing that all his teachers are hypocrites, the fourth that all the sacred books are lies. By the time he is sixteen, he is a mass of negation, lifeless and boneless …”)

அவர் வழியிலேயே காந்திஜியும் மிஷனரிகளின் செயல்களைக் கடுமையாகச் சாடினார்.

காந்தியடிகள் மிழஷனரிகளை ‘சாக்கடை ஆய்வாளர்கள்’ (Gutter Inspector ) என்று கடுமையான வார்த்தைகள் கொண்டு பேசினார். காந்தியடிகளையே கோபம் கொள்ள வைத்த பெருமை கிறித்தவப் பரப்பாளர்களைச் சாரும்.

விவேகானந்தர் முதலியோர் இந்திய தத்துவ ஞானம் என்றாலே அது அத்வைதம் என்னும் அளவில் உலக அளவில் பாரதப் பண்பாட்டைக் கொண்டு சென்றனர்.

மிஷனரிகளின் ஆதரவுடனும், ஆங்கில அரசின் ஆசியுடன் புதிதாக ஒரு பிரிவு தோன்றியது. இந்த இருவரின் ஆதரவு பெற்ற அந்த குழு ஆங்கில ஆட்சியை வரவேற்று, விடுதலை வேண்டாம் என்று கூறியது. இந்தக்குழு ஜமீன்தார்களின் ஒரு கூட்டமைப்பாகவே இருந்தது.

அதே நேரத்தில் சங்கர மடங்கள் ஆன்மிக கேந்திரங்களாகத் திகழத் துவங்கின.

தென் இந்தியாவில் காஞ்சி மடம் தனது 68-வது குருவான சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்னும் துறவியின் ஆளுமையின் கீழ் வந்தது. அதுவரை காஞ்சி மடம் ஆன்மீக உலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு சிறிய அளவிலான ப்ராம்மணர்களையே அது தனது ஆளுமையின் கீழ் கொண்டிருந்தது.

ஆனால் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கீழ் அது தென் இந்தியாவின் ஆன்மீகக் கேந்திரமாக வளரத் துவங்கியது. இதற்குப் பல காரணங்கள்.

முதலாவதாக சந்திர சேகரர் கல்வியும் ஞானமும். ஆழ்ந்த படிப்பு கொண்டவராக விளங்கினார் அவர். தர்ம சாஸ்த்ரங்கள், வேதம் முதலியனவோடு நிறுத்திக்கொள்ளாமல் பல மொழியறிவும் பெற்றிருந்தார். எதையும் ஆழ்ந்து நோக்கி அதன் உட்பொருளை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.

அதே சமயம் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது போராட்ட தியாகிகள் பலருக்கு ஆன்ம குருவாகவும் விளங்கினார். மகாத்மா காந்தியும் இவரைச் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகப் பணியுடன் சமுதாயப் பணியிலும் ஈடுபட்டுவந்தார் சுவாமிகள். பசு வதை எதிர்ப்பு, தமிழ் மறைகள் வளர்க்க திருமுறைப் பாட சாலைகள் நிறுவுதல், பாரதத்தின் சில்ப ஆகமக் கலைகள் வளர ஆண்டுதோறும் அதற்கான கலை மாநாடுகள் நடத்துதல் என்று பாரத கலாச்சாரத்தின் அனைத்து நிலைகளிலும் தனது ஆளுமையைப் பரப்பினார் இவர்.

சுதேசி இயக்கம் வலுப்பெற கதர் ஆடை அணிய வேண்டியதை மிகவும் வலியுறுத்தினார். வரதட்சணைக் கொடுமையை ஆகக் கடுமையாக எதிர்த்தார். அதற்கு சாஸ்த்ரங்களில் இடமே இல்லை என்று ஆதார பூர்வமாக வாதிட்டார்.

திருவிழாக் காலங்களில் எழைகளுக்கு உணவளிக்க ‘பிடி அரிசித் திட்டம்’ என்று புதுமையான ஒரு திட்டம் கொண்டு வந்தார். ஒரு நாள் ஒரு கைப்பிடி அளவு அரிசியை தானத்திற்கு என்று எடுத்து வைத்துவிட வேண்டும் என்று தனது பக்தர்களைப் பணித்தார். இது முதலமைச்சர் காமராஜரின் பெருத்த பாராட்டைப் பெற்றது.

சிதிலமடைந்த பல பண்டையக் கோவில்களை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஆவன செய்தார். இவற்றாலெல்லாம் இவர் ‘பரமாச்சாரியார்’ என்று அழைக்கப்பட்டார்.

ராஜாஜி, காமராஜர், வெங்கரட்ராமன், எம்.ஜி.ஆர். முதலிய தலைவர்கள் இவரிடம் தனி மரியாதை கொண்டிருந்தனர். இவரது கருத்து கேட்டு பல அறப்பணிகள் செய்தனர்.

பரமாச்சாரியாரது ஆழ்ந்த கல்வியினால் கவரப்பட்டு பல மேலை நாட்டுப் பல்கலைப் பேராசிரியர்கள் அவரிடம் பாடம் கேட்டனர். ரமண மகரிஷியின் பிரதான சீடரான பல் பிரண்டன் ரமணரிடம் பரமாச்சாரியாரால் அனுப்பப்பட்டார்.

இவை எல்லாவற்றையும் விட, இந்தியாவின் அரரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்ட போது, ஜவஹர்லால் நேரு இந்து சமய மடங்கள், ஆலயங்கள் முதலியன அரசால் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தனது இடது சாரி சித்தாந்த ரீதியாக வலியுறுத்தினார். அதன் பேராபத்தை அனேகமாக இந்தியாவின் வேறேந்த ஆன்மீகத் தலைவரும் உணரவில்லை. அப்போது பரமாச்சாரியார் பாரத தேசத்தின் அனைத்து மடாதிபதிகளையும் கூட்டி நேருவின் இடது சாரிப் போக்கினால் உண்டாகப்போகும் ஆபத்தை விளக்கி சமய சார்பற்ற அரசில் பாரம்பரியமான மடங்களும் ஆதீனங்களும் எப்படிப் பாதுகாகப் பட வேண்டும் என்று ஒரு வரைவு எழுதி அதனை வல்லபாய் படேலிடம் தரச் சொன்னார்.

இதில் முரணென்னவென்றால் கிறித்தவ, இஸ்லாமிய மத ஸ்தாபனங்கள் அந்த சமூகத்திடமே இருக்கும்; இந்து சமய மடங்கள் மட்டும் அவை ஒரே அமைப்பு சாராமல் உள்ளதால் அரசினால் நிர்வாகிக்கப்படும் என்பதே. இதனைத் தக்க காலத்தில் கண்டதால் பரமாச்சாரியார் இந்து தர்ம மடங்களைக் காத்தார்.

காஞ்சி பரமாச்சாரியார் தந்த ஒரே காரணத்தால் படேல் அந்த வரைவை ஏற்றுக்கொண்டு அதனை அரசியல் அமைப்பு எழுதிய கமிட்டியிடம் ஒப்படைத்தார். அதுவரை அவருக்கும் நேருவின் இந்த இந்து சம்ப்ரதாய விரோதப் போக்கு தெரிந்திருக்கவில்லை.

இன்றுவரை சங்கர பீடங்களும், வைணவ மடங்களும், ஆதீன மடங்களும் சுதந்திரமாகத் தங்கள் ஆன்மீகப் பணியை நடத்திக் கொண்டுள்ளன என்றால் அதற்கு காஞ்சி பரமாச்சாரியாரே காரணம்.

இதனாலெல்லாம் பரமாச்சாரியாரின் ஆளுமை பாரத தேசம் முழுவதும் பரவியது.எந்த ஒரு சமயம் சார்ந்த நடவடிக்கையும் இவரது கருத்துக்குப் பின்னரே எடுக்கப்பட்டது. இதனாலேல்லாம் அவர் தனது பொறுப்பை துழஷ்பிரயோகம் செய்தார் என்று பொருள் அல்ல.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிக மிக எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொண்டார். பல சமய, இன, சாதி மக்களும் அவர் பால் ஈடுபாடு கொண்டனர்.

காலம் 1986. தமிழகத்தில் மத மாற்றம் அமோகமாக நடைபெற்று வந்தது. மதச் சார்பற்ற அரசுகள் இதனைத் தடுக்கவில்லை. மண்டைக்காடு , மீனாட்சிபுரம் போன்ற இடங்களில் கொடுமையான மதக் கலவரங்கள் மூண்டன. இதற்குக் காரணம் மத மாற்றமே என்று நீதி விசாரணை மூலம் தெரிய வந்தது. இதனைக் கண்டு பிடிக்க நீதி விசாரணை எல்லாம் தேவை இல்லை என்றாலும் அரசியலமைப்பு சார்ந்த சமூகமாக இருப்பதால் நீதி விசாரணை தேவைப்பட்டது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நிலைமையின் உக்ரத்தை உணர்ந்தார். கட்டாய மத மாற்று தடைச் சட்டம் கொண்டு வர முயற்சி செய்தார்.

இது புதிய நடைமுறை அல்ல. முன்னமேயே ஒரிசா, ம.பி. முதலிய மாகாணங்களில் அமலில் இருந்த ஒன்றே. ஆனாலும் அன்றைய எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. காரணம் கண்டறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை. பாரத பாரம்பரிய கலாச்சாரத்தை அழிப்பதையே தங்கள் முழு முதல் வேலையாகக் கொண்டுள்ள மத மாற்று சக்திகள் நேரிடையாக இல்லாமல் எதிர்க்கட்சிகள் மூலம் நெருக்கடி ஏற்படுத்த முயன்றன. ஆனாலும் எம்.ஜி.ஆர்.முன் சென்றார்.

அரசின் இந்த கலாச்சார ஒற்றுமை காக்கும் செயலில் முன் நின்று உதவியது பரமாச்சாரியார் அவர்கள். அரசின் வரைவுக்கு சில திருத்தங்கள் அறிவுறுத்தினார். அவற்றை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார். அரசியல் அமைப்பு எழுதப்பட்டபோது பரம்மாச்சாரியாரின் பங்கை அறிந்த எம்.ஜி.ஆர். அவரது சட்டத் திருத்தங்களை ஒப்புக்கொண்டார்.

ஆனால் என்ன ஆயிற்று, என்ன சக்திகள் வேலை செய்தன என்று தெரியவில்லை. சட்டம் நிறைவேறவில்லை. சிறிது காலத்தில் எம்.ஜி.ஆர். இயற்கை எய்தினார். சட்டமும் இயற்கை எய்தியது.

ஆனால் சட்டம் இயற்றப்பட்டுவிட்டால் யாருக்கெல்லாம் அபாயம் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. இந்த சக்திகள் விழித்துக்கொண்டன.

நிலைமை இவ்வாறிருக்க, காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி ஜெயேந்திரர் பாரத சமுதாயத்தின் ஒற்றுமையை காக்க ‘ஜன கல்யாண்’, ‘ஜன ஜாக்ரண்’ என்று இரண்டு அமைப்புக்களைத் துவக்கினார். சாதிகள் கடந்து மக்களை ஒருமைப்படுத்த முயன்றார்.அதுவரை உயர் சாதிகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட காஞ்சி மடத் துறவி கிராமக் கோவில்களுக்கும் செல்லவதை வழக்கமாகக் கொண்டார். அக்கிராமக் கோவில் பூசாரிகள் கொடுத்த திருநீறு முதலிய இறை சார்புப் பிரசாதங்களை நேரில் பெற்று அணிந்துகொண்டார்.

ஜெயேந்திரரின் இந்த சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மத மாற்று சக்திகளின் அடி மடியில் கை வைப்பது போல் இருந்தது. அதுவரை எந்தக் காரணம் கொண்டு மத மாற்றம் செய்தனரோ அதுவே ஆட்டம் காணும் போல் தோன்றியது.

இந்த சக்திகள் நாஸ்திக சக்திகளைத் தூண்டின. காஞ்சி மடத்தின் மீது அவதூறு சொல்வது அதிகமானது. ஆனாலும் பரமாச்சாரியாரின் ஆளுமையாலும் பரந்த அறிவாலும் மடத்துக்கு இந்த சக்திகளால் ஆபத்து ஏற்படவில்லை.

1993-ம் ஆண்டு பரமாச்சாரியாரும் இறையடி சேர்ந்தார். காவல் தெய்வத்தின் மறைவு மடத்திற்கு ஒரு பின்னடைவே.

இந்த நிலையில் இரண்டாம் முறையாக ஜெயலலிதா ஆட்சி பதவி ஏற்றது. அவர் மடத்துடன் உறவாடுவது போல் தோன்றியது.

அப்போதைய பா.ஜ.க. அரசுடன் சேர்ந்து அயோத்தியா பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கியிருந்தார் ஜயேந்திரர். இதனாலும் அவரது ஆளுமை பாரதம் முழுவதும் பரவலாக இருப்பது போல் தோன்றியது. நாட்டு நடவடிக்கைகளில் கருத்து கூறும் அளவில் இருந்தார் ஜெயேந்திரர்.

‘ஆடு, கோழி’ முதலியனவற்றைக் கோவில்களில் பலியிடும் வழக்கத்தைத் தமிழக அரசு தடை செய்தது. இதற்க்குப் பின்னும் காஞ்சி மடம் இருந்தது என்று ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏனெனில் ஆதி சங்கரர் மிருக வதையை எதிர்த்தார்.

சில மாதங்களில் தமிழகத்தில் மீண்டும் கட்டாய மத மாற்றுத் தடைச் சட்டம் வந்தது. எம்.ஜி.ஆர். கொண்டுவர இருந்த சட்டம் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது. அதனை ஆதரித்து, வழக்கத்திற்கு மாறாக, ஜெயேந்திரரும் அவரது அடுத்த பீடாதிபதியான விஜயேந்திரரும் சென்னை மெரீனா கடற்கரையில் கூட்டம் நடத்தினர். இது காஞ்சி மட வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்தது.

இவ்வாறு வெளிப்படையாகக் காஞ்சி மடாதிபதிகள் அரசியல் சட்டத்திற்கு ஆதரவாகக் கூட்டம் நடத்தியபின் மத மாற்று சக்திகள் நிலமையின் ஆபத்தை உணர்ந்தன. வழ்க்கை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்க நேரமில்லாமல் சட்டத்தின் பின்னணி என்று தாங்கள் ஊகித்த காஞ்சி சங்கர மடத்தைக் குறி வைத்தன.

இதற்கு சற்று முன்னர் போப் ஆண்டவர் ( இரண்டாவது ஜான் பால்)  சீனா செல்ல முடிவெடுத்தார். ஆனால் சீன அரசு அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. அதன்பின் அவர் பாரதம் வந்தார். ‘முதல் ஆயிரமாண்டில் ஐரோப்பாவை கிறித்து நாடாக்கினோம்; இரண்டாம் ஆயிரம் ஆண்டில் இரு அமெரிக்காக்களையும் வெற்றி கொண்டோம்; மூன்றாம் ஆயிரத்தில் ஆசியா நல்ல அறுவடைக்குக் காத்திருக்கிறது”, என்று பரதத்தில் கூறினார். மத மாற்று சக்திகளுக்குப் பாதை காட்டினார்.

இரண்டு வருடங்கள் கழித்து அதே சீன அரசு ‘மதங்களுக்கிடையேயான உரையாடல்’ என்று காஞ்சி ஜெயேந்திரரை அழைதது. அவருக்கு தலாய் லாமாவுடன் நல்ல உறவு என்பதும் அதற்கு ஒரு காரணம். ஆனால் ஜெயேந்திரர் போகவில்லை என்பது வேறு விஷயம்.

ஒரு புறம் ஜெயேந்திரர் சேரிகளுக்குச் செல்கிறார்; அவர்களது மத மாற்றத்திற்குத் தடையாக இருக்கிறார்; இன்னொரு புறம் அவர் அயோத்தி பிரச்சினையத் தீர்க்க முயல்கிறார்; அதே சமயம் தமிழ் நாட்டின் மத மாற்று தடைச் சட்டத்தை ஆதரிக்கிறார்; சீன அரசு அவருக்கு அழைப்பு விடுக்கிறது ஆனால் போப்பை சீனாவிற்குள் அனுமதிக்கவில்லை; ஆனால் போப் ஆண்டவரோ ஆசியாவில் அறுவடை என்று கூறிச் சென்றுள்ளார் – இந்த் நிகழ்வுகள் மதமாற்ற சக்திகளுக்கு கலக்கத்த ஏற்படுத்தின.

இவை எல்லாம் போக, நேபாள இராஜ பரம்பரையினர் காஞ்சி பீடாதிபதிகளைத் தங்கள் குருவாகக் கொண்டிருந்தனர். ஆக இவர்களது ஆளுமை பாரத எல்லை தாண்டியும் இருந்தது மத மாற்று சக்திகள் கண்களிலிருந்து தப்பவில்லை.

எனவே, தங்கள் ‘திருப்பணி’களைத் தொடர இந்த சக்திகளுக்கு ஒரே ஒரு பறவை வீழ்ந்தால் போதும் என்று புரிந்தது.

இதனிடையே தமிழகத்த்ன் அன்றைய ஆளும் சக்திகளுக்கும் சங்கர மடத்திற்கும் இடையே சில பிணக்குகள் தோன்றின. அவை சில சொத்துக்கள் தொடர்பானவை என்று வதந்திகள் பரவின.

வெண்ணையும் திரண்டு வந்து தாழியும் உடைந்தால் கேட்கவா வேண்டும் ?

சங்கர ராமன் என்றோரு சங்கர மட அதிருப்தியாளர் கொல்லப்பட்டார்.

பின்னர் நடந்ததை நாடே அறியும்.

ஆங்கிலத்தில்   ” Conspiracy Theory ” (சதித் திட்டம் ) என்பார்கள். இப்படியும் நடந்திருக்கலாம் என்ற ஒரு பார்வையே தவிர இது தான் நடந்தது என்பது அல்ல. சில நிகழ்வுகள் ஒரு கால அடிப்படையில் நடக்கின்றன. அவற்றை அந்த நிகழ்வுகளின் வெளியில் இருந்து பார்த்தால் நமக்கு ஒரு “தன்மை” ( Pattern ) புலப்படும்.

என் பார்வையில் எனக்குப் புலப்பட்ட “தன்மை” இது.

ஒரு நிமிடம்.

“மத மாற்ற தடைச் சட்டம்”  திரும்பப் பெறப்பட்டது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.

 
Leave a comment

Posted by on December 29, 2013 in Writers

 

Tags: , , , ,

 
%d bloggers like this: