சிங்கம் சிங்கிளா வந்தே நமக்குப் பழக்கம். ஆனால் சிங்கம் தாரை தப்பட்டைகளுடன் வந்தால்? இன்று அப்படி நடந்தது. ஒரு சிங்கம் வந்தது. பின்னாடியே ஒரு டிரம்ஸ் கோஷ்டியும் ஒரு பெரிய சைஸ் ஜால்ரரா ( அட உண்மையான ஜால்ரா சார் ) பெண்ணும் வந்தனர். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
சீனப் புத்தாண்டை ஒட்டி எங்கள் அலுவலகத்தில் இந்த சிங்க நடனம் நடந்தது. ஆதி காலத்தில் ‘நி யென்’ (Ni Nien) என்ற ஒரு கொடிய மிருகம் இருந்துள்ளது. அது கிராமங்களுக்குள் வந்து மனிதர்களையும் குழந்தைகளையும் தின்றுவிடுமாம். அதனிடமிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு சிங்கம் பயன்படுத்தப் பட்டுள்ளது. பின்னர் ஆண்டுதோறும் புது வருடம் அன்று இந்த சிங்க நடனம் நடை பெற்றது. அதன் மூலம் ‘நி யென்’ என்ற மிருகமும் அதனை ஒட்டிய தீய சக்திகளும் அகற்றப்பட்டன. இப்படிப் பண்டைய சீனாவில் ஒரு நம்பிக்கை.
ஆனால் சீனாவில் சிங்கங்கள் இல்லாததால் மனிதர்களைக் கொண்டு சிங்க உருவங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. சீனாவில் மட்டுமல்ல சீனர்கள் அதிகம் உள்ள பல நாடுகளிலும் இந்த சிங்க நடனம் உண்டு. அத்துடன் பெரிய அளவில் உள்ள டிரம்ஸ் வாசிக்கிறார்கள். நம்மூரில் பேய் ஓட்டும்போது உடுக்கை, மேளம் அடிப்பது போல் உள்ளது. இதன் மூலமும் தீய சக்திகள் விலகும் என்று நம்புகிறார்கள்.
அடிப்படையில் சிங்கம் வருகிறது. அதற்கு லெட்யூஸ் என்ற கீரை வழங்குகிறார்கள். அதனை உண்டு அது மக்களின் மேல் துப்புகிறது. அதனை ஆசீர்வாதமாகக் கருதுகிறார்கள். பின்னர் ஒர் ஆட்டம் போடுகிறது. பின் அதற்கு சில ஆரஞ்சுப் பழங்கள் படைக்கிறார்கள். இந்தப் பழங்களின் சுளைகளை சிங்க உருவத்தின் கீழ் உள்ள மனிதர்கள் ஒரு சில சீன எழுத்துக்கள் போல் வைக்கிறார்கள். சில நம்பர்களும் அமைக்கிறர்கள். இந்த நம்பர்கள் நன்மை பயக்கும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பர்கள் ( எண்கள் ) கொண்ட லாட்டரிச் சீட்டுகள் வாங்குகிறார்கள். மறந்து விட்டேன். ஆரஞ்சுப் பழத் தோலையும் மக்கள் மீது வீசுகிறது. அதுவும் ஆசீர்வாதமாம்.
இன்னும் சில விஷயங்கள் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு வீட்டிலும் ‘ழாவோ ஷென்’ ( Zhao Shen) என்னும் சமயல் அறைக் கடவுள் உள்ளதாம். அந்தக் கடவுள் வருடாவருடம் வான் உலகம் சென்று ‘யூ ஷாவ் தா டி’ என்னும் தலைமைக்கடவுளிடம் தான் இருந்த வீட்டின் நிலவரத்தைக் கூறுமாம். எனவே அந்த சமையல் அறை கடவுளை சரிக்கட்ட என்று விசேஷப் பிரார்த்தனைகள் உள்ளதாம். இதெல்லாம் ‘தாவோயிஸம்’ என்னும் சம்பிரதாய வழக்கமாம்.
இத்தனையும் என்னுடன் பணியாற்றும் சீன நண்பர் தெரிவித்தார். ஆனால் அவர் கிறித்தவர். ஆமாம் சீனக் கிறித்தவர். தாங்கமுடியாமல் ‘கிறித்தவர்கள் எப்படி இந்த சீனப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டேன்.
‘சீனாவில் புத்த மதமோ, தாவோயிஸமோ, கிறித்தவமோ, அல்லது மதமே இல்லை என்று சொல்லும் இடது சாரியோ யாராக இருந்தாலும் இந்த வழக்கக்கள் உண்டு. இதற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை. இது எங்கள் கலாச்சாரத் தொடர்புடைய விஷயம்’ என்று போட்டாரே ஒரு போடு.
சீனாவின் ஒவ்வொரு பழக்கமும் இந்திய கலாச்சாரத்தை ஒத்து இருப்பதை உணர முடிந்தது.
மதத்திற்கும் கலாச்சாரத்திற்கும் தொடர்பில்லை என்று இந்திய மக்கள் சொன்னால் இந்திய முற்போக்காளர்கள் ஒப்புக்கொள்வதில்லை.எல்லாம் வல்ல லெனினும், ஸ்டாலினும் நமது நாட்டு இடதுசாரி முற்போக்காளர்களுக்கு நல்லறிவு வழங்குவார்களாக.