உங்களுக்கு ( 'பஹுத்' ) அறிவு இருக்கா ?

“அது ஒரு உடம்பு. உளறுவது என்பதே அந்த உடம்பு.

பொதுவாக திராவிடக் கட்சிகளுக்கே இந்த உடம்பு வரும். வாயில் வந்ததைப் பேசுவார்கள். கேட்டால் சமூக நீதி என்பார்கள். இதற்கு ‘பகுத்தறிவு’ என்றும் பெயர் உண்டு.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கன்னடம் பேசும் தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர்  ‘பகுத்தறிவு’ என்பதைக் கண்டுபிடித்து உலகிற்கு வழங்கினார். அன்றிலிருந்து மக்களுக்குப் பகுத்தறிவு ஏற்பட்டது. அதுவரை வெறும் மண் உருண்டைகளாக இருந்தவர்கள் திடீரென்று உயிர் பெற்றனர். அறிவும் சேர்ந்து பெற்று நன்மை அடைந்தனர்.

அந்தக் கண்டுபிடிப்பாளரின் பேரன் தற்போது ஒரு  விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளார். இது மாபெரும் கண்டுபிடிப்பு என்பதால் அனேகமாக ‘நோபல்’ பரிசு கிடைக்க வழியுண்டு. ஆக அடுத்த நோபல் பரிசு தமிழகத்துக்கே.

அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார் ?

60 வயதிற்கு மேல் உள்ள ஒரு ஆணும் பெண்ணும் ஒரு மணி நேரம் பேசினால் அவர்களுக்குள் வேறு ஒன்றும் நடந்திருக்காது. அதில் ஆண் நாட்டின் பிரதமர். பெண் மாநிலத்தின் முதல்வர். கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் தேர்தலில் டெப்பாசிட் இழந்த கட்சியின் தலைவர்.

இப்படி ஒரு கண்டுபிடிப்பைக் கண்டு பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் விழிபிதுங்கி நிற்கிறது. ஹார்வார்ட் பல்கலைக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும் போல் உள்ளது. ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் எல்லாம் ஆடிப்போய் உட்கார்ந்துவிட்டன. இவ்வளவு செலவு செய்கிறோம் ஆனால் இம்மாதிரி கண்டுபிடிக்க முடியவில்லையே என்று இவை கசிந்து உருகுகின்றன.

ஆனால் இவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. எத்தனை டாலர் செலவழித்தாலும் இம்மாதிரியான கண்டுபிடிப்பை இவர்களால் நிகழ்த்த முடியாது.

ஏனெனில் இப்படிக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு மரபணு ( ஜீன்) வேண்டும். அந்த ஜீன் இந்த நவீன அறிவியலாளரிடம் உள்ளது. அவரிடம் மட்டுமே உள்ளது.

அது தான் ‘பகுத்தறிவு’ ஜீன்.

ஹிந்தியில் ‘பஹுத்’+ ‘அறிவு’ என்று அறியப்படும் அளவுக்கு அதிகமான அறிவு. இந்திய வம்சாவளியில் ‘கள்’ தோன்றி மண்ணாந்தைகள் தோன்றாத காலத்திலேயே ‘வாலோடு’ முன் தோன்றி மானத்தை வாங்கிய மூட குடியில் ஈரோட்டுப் பாசறையில் தோன்றியிருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் கண்டுபிடிக்க முடியும்.

இந்தக் கட்சியின் சவப்பெட்டியில் அனேகமாக எல்லா ஆணிகளுமே அடிக்கப்பட்டு விட்டன. டெல்லியில் ஒருவர் அந்தத் திருப்பணியைத் திறம்படச் செய்து வருகிறார். தமிழ் நாட்டில் இன்னும் வேகமாக ‘பஹுத்’ அறிவின் பேரன் செயதுள்ளார்.

அனேகமாக கட்சியைக் கலைக்க வேண்டும் என்னும் காந்தியின் கனவை இவர்கள் ‘பஹுத்’ அறிவுப் பரட்சி மூலம் செய்து முடிக்க எல்லாம் வல்ல இத்தாலியம்மனை வேண்டுகிறேன்.”

Disclaimer :

I hereby declare that I have not made the above statements. When I sat in front of the computer, I heard a voice that commanded me to write whatever I heard. My hands automatically moved over the keyboard and I saw the characters appear on the screen.

மொத்த அபத்தங்களின் பேருருவம்

பசு வதைத் தடை நல்லது தான். தர்ம சம்பிரதாயம், கலாச்சார விஷயமாக மட்டும் இல்லாமல் புவி வெப்ப மயமாதலையும் தடுக்க உதவும் என்பது வரை சரியான ஒரு முடிவாகவே நான் நினைக்கிறேன்.

ஆனால், பசு வதை மட்டும் தடை என்பது என்ன தர்மம் ? ஆடு, கோழி முதலானவற்றை வதை செய்வது நல்லதா ? அவையும் ஜீவராசிகள் தானே ? அவற்றின் வதையும் தடுக்கப்பட வேண்டியது அல்லவா ?

இப்படித்தான் ஜெயலலிதா ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிடத் தடை விதித்தார். ஜாதி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தவுடன் அதைத் தொடர்ந்து சில தேர்தல் தோல்விகளும் வந்ததால் அதைக் கைவிட்டார்.

ஒட்டகம் பலியிடப்பட வேண்டும் என்று சில மதத்தினர் கேட்கின்றனர். ஒட்டகப் பலியை ராஜஸ்தான் அரசு நிறுத்தியதைத் தொடர்ந்து சிலர் தடையை நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

நாம் உட்கொள்ளும் உணவை இறைவனுக்குப் படைப்பது நமது பண்பாடு. அவரவர் உட்கொள்ளும் உணவை அவரவர் இறைவருக்குப் படைப்பது என்று நமது பாரதப் பண்பாட்டில் உள்ளது.

“அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் ” என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

மக்களின் மன நிலைக்கு ஏற்ப அவரவரது இறைவர்கள் அமைகிறார்கள் என்கிறார் அவர். மக்களின் அறிவு, அவரது பழக்க வழக்கங்கள் இவற்றிற்கு ஏற்ப அவர்களது இறைவர்களும் அமைகின்றனர். மக்களின் இயல்புகளுக்கு ஏற்ப அவர்களது இறைவர்களின் இயல்புகளும் அமைகின்றன. மாமிச உணவு உட்கொள்பவர்களின் இறைவர்களும் மாமிசம் உண்கின்றனர். அவ்வளவே.

இந்த நாட்டில் இறை வழிபாடோ, இறைத் தன்மையோ, ஆன்மீக உணர்வோ, ஆன்மீகப் புரிதல்களோ இல்லாத, இவை எதுவுமே தேவை இல்லை என்று பிதற்றுகிற அரசியல் கூட்டங்கள் மலிந்து வருகின்றன. இவை முற்போக்கு என்னும் பெயரில் வாதிடுகின்றன. இவற்றிற்கு ஆங்கில நாளேடுகள் ஆதரவளிக்கின்றன.

ஒட்டக பலி தேவையா அல்லது பசு வதைத தடை நீக்கம் தேவையா என்பது அல்ல இந்தப் பதிவின் வாதம். போலி மதச்சார்பின்மையின் பெயரில் நடைபெறும் ஊடக வெறியாட்டங்களின் மீது ஒரு வெளிச்சப் பார்வை ஏற்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

புலால் உண்ணாமையை வற்புறுத்திய வள்ளுவரைத் தெய்வமாக வழிபடும் நமது நாட்டில் மாடு அறுக்கும் போராட்டம், கோழி அறுக்கும் போராட்டம் என்று பெரியவர்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்பவர்கள் தெரிவிக்கிறார்கள். பெரியவர்களின் அழகு பல் இளிக்கிறது.

இந்த அறிவிப்புகள் போதாது என்று தாலி அறுக்கும் போராட்டம் என்று ஒன்றை அவர்கள் சொல்கிறார்கள். பகுத்தறிவைப் பறை சாற்றுகிறார்களாம். மொத்த அபத்தங்களின் பேருருவம் அது.

அறுப்பது, கழற்றுவது, கொளுத்துவது என்பதெல்லாம் போக ஏதாவது உருவாக்கியுள்ளார்களா என்று பார்த்தால் னாங்கு வரிகளுக்கு மேல் தமிழ் படிக்க முடியாத இரு தலைமுறைகளை உருவாக்கியுள்ளார்கள். இலக்கியம் என்பது இன்று ஒன்றரை அடி நக்கல் சொற்றொடர்களாகவும், முகநூலில் வடிவேலுவின் பல விதமான படங்களாகவும் பரிமளிக்கிறது என்பதே நமது தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியாக உள்ளது.

கவிதை என்ற பெயரில் இப்படி எழுதினால் புதுக்கவிதை என்று பாராட்டி விருது வழங்கும் ஒரு கூட்டமாக தமிழச் சமுதாயத்தை உருவாக்கியதை விட இப்பெரியவர்கள் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை.

‘கூவம் நதிக்கரையினிலே’ நூலில் சோ புதுக்கவிதையைக் கேலி செய்து ஒரு கவிதை எழுதினார்:

‘கரப்பான் பூச்சி
பக்கெட்டில் விழுந்தது.
பக்கெட் என்ன செய்யும் ?
யோசிக்கிறேன். கரப்பான்
பூச்சிதான் என்ன செய்யும் ?’

இப்படி எழுதிவிட்டு இதில் சமுதாயப் பார்வை உள்ளது, சமூகக் கோபம் உள்ளது என்றெல்லாம் பிதற்றுவதை கவிதை அறிதல் என்று சில குழுக்கள் கொண்டாடுகின்றன. நமது தரத்தை இவ்வளவு கீழே கொண்டு சென்றதைத் தவிர முற்போக்கு முன்னணி என்ன செய்தது ?

இதைப்பற்றி எல்லாம் எழுதினால் சனாதனி என்று சொல்வார்கள் என்பதால் பலரும் இதை எல்லாம் எழுதுவதில்லை. எனக்கு இந்த பயம் இல்லை. நான் சனாதனியாகவே இருந்துகொள்கிறேன். ஊருக்கு நல்லதும் உண்மையும் சொல்வது மட்டுமே ‘ஆ..பக்கங்களின்’ தர்மம்.

ஈ.வெ.பெரியாழ்வார் வாழ்க

குலசேகர ஆழ்வார் அரங்கனைப் பற்றி ஒரு பாசுரம் பாடினார்.

“திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே”

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்களால் ஸேவிக்கும் நாள் எந்த நாளோ ? என்று கேட்பது போல் பாடியுள்ளார் ஆழ்வார்.

இன்னொரு பாடல் உண்டு. அது திருமலைத் தெய்வத்தைப் பற்றியது :

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே ”

‘திருமலையில் உன் கோவில் வாசலில் ஒரு படியாக இருந்து உன் பவள வாய் அழகைக் காண வேண்டும்’ என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

ஆழ்வார்களை அப்படியே கொஞ்ச நேரம் விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

என்னை வாழ வைத்தவர் பெரியார். ஆம். உண்மை தான். என் தற்போதைய வாழ்க்கைக்குக் காரணம் பெரியார்.

இங்கு நான் பெரியார் என்பது ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் என்னும் பெரியாரைத்தான் சொல்கிறேன். அவர் மட்டும் இல்லை எனில் நான் நல்ல நிலையில் இருந்திருக்க முடியாது. என் சுயமரியாதையை இழந்து நின்றிருப்பேன்.
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நான் மட்டும் அல்ல, இன்னும் பலர் இன்று நல்ல முறையில் வாழக் காரணம் பெரியார் தான். நாளை பலரும் நல்ல வாழ்க்கை அடையக் காரணமும் அவரே தான்.

நினைத்துப் பாருங்கள். 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிராமண சமூகம் எப்படி இருந்தது ? உட்பூசல்களும், வடிகட்டிய மூட நம்பிக்கைகளும், அரசு வேலை அல்லது அடுப்படி வேலை என்கிற வட்டத்துக்குள் மட்டுமே இருந்த சமூகமாக இருந்தது அது. கணவனை இழந்த அச்சமூகப் பெண்கள் இருந்த நிலை என்ன ? இன்று அந்த சமூகம் இருக்கும் நிலை என்ன ? பிராமணர்களை ஒன்றுபடுத்தியது பெரியார். உட்பூசல்களால் பிளவுபட்டிருந்த சமூகம் ஓரளவு ஒன்றானது.

தற்போது யானைக்கு எந்த ‘திருமண்’ போடுவது என்று எந்த வாசுதேவாச்சாரியாரும் கோர்ட்டுக்குப் போவதில்லை. இரண்டு காரணங்கள் : ஒன்று, யானைகள் இல்லை. இரண்டு, கோர்ட்டுக்குப் போக வேண்டியவர்கள் அமெரிக்கா போய்விட்டார்கள். இரண்டாவதற்கான காரணம் பெரியார்.

எண்ணிப் பார்க்க வேண்டும் பிராமணர்கள். இன்று பன்னாட்டு வங்கிகளிலும், ஆப்பிள், கூகிள், நாஸா முதலான நிறுவனங்களில் நல்ல நிலையில் இருக்கும் இவர்கள், பெரியார் இல்லாதிருந்தால் என்ன நிலையில் இருந்திருப்பார்கள் ? தமிழக அரசு நிறுவனம் அல்லது அலுவலகம் ஏதாவதில் எழுத்தர் பணி செய்துகொண்டிருப்பார்கள். அல்லது புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இந்த உலகளாவிய பரந்த நிலை கிடைத்திருக்குமா ?

பெரியார் இருந்ததால் கல்வியில் அவர்கள் 100க்கு 110 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்த உத்வேகம் யார் கொடுத்தது ? யாரால் அமைந்தது அந்த உந்து சக்தி ? பெரியாரை மறக்கலாமா ?

ஆங்கிலத்தில் ‘Complacency’ என்று சொல்வர்கள். ‘Comfort Zone’ என்னும் வளையத்திற்குள் இருந்துகொண்டு சுகமாக இருந்திருப்பார்கள் அல்லவா ? ஆனால் பிராமணர்களின் அந்த ‘Comfort Zone’ஐ உடைத்தெறிந்தவர் பெரியார்.

யாருமே வழிபடாத பிள்ளையாரை உடைத்து, அதனால் வீதிக்கு ஒரு பிள்ளையார் கோவில் ஏற்படுத்த உத்வேகம் அளித்தவரை மறக்கலாமா ? நன்றி மறக்கலாமா ? மறப்பீர்களா ? மறப்பீர்களா ? (‘அம்மா’ பணியில் வாசிக்கவும்)

பாம்பை அடிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி அதனால் பாம்புகளை வாழவைத்த அந்த மகானை மறக்கலாமா ? ஆனால், பாம்பை விட்டு உங்களை அடிக்கச் சொன்னதால் தானே நீங்கள் வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று வாழ்க்கையில் வேறூன்றினீர்கள் ? அந்த மகானின் உபகாரத்தை மறக்கலாமா ?

யார் கதையும் வேண்டாம். என் தந்தையார் தனது சாதியின் காரணமாக அலுவலகத்தில் மேலே செல்ல முடியாமல் ஒரே இடத்தில் சில பத்து ஆண்டுகள் ஸ்திரமாக இருந்ததால் தானே நானும் என் தம்பியும் ஒரே பள்ளீயில் ஸ்திரத்தன்மையுடன் படித்தோம். மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த பலருக்கு நல்ல கல்லூரிகள் கிடைக்கக் கண்டு,
அதனால் மிகுந்த பொறுமையைக் கையாளும் மனவுறுதியை அளித்த மகானை மறக்க முடியுமா ?

அவர் ஆசீர்வாதம் இல்லை என்றால் கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று இந்த கீழ் மத்தியதர வகுப்பைச் சார்ந்த நான் சென்று பணிபுரிந்திருக்க முடியுமா ?

ஒன்றும் வேண்டாம். வெறும் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்றிருக்க வேண்டிய எனக்கு, இன்று ஹிந்தி, ஓரளவு மராட்டி, ஜப்பானிய மொழி என்று பரிச்சயம் ஏற்பட்டு இருக்க முடியுமா ? குமாஸ்தா வேலை செய்திருக்க வேண்டிய நான் இன்று கணிப்பொறியில் எழுதுகிறேன். காரணம் யார் ? அந்த மகான் அல்லவா ?

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றே கற்றும் பழகியும் வந்த நான், பள்ளியிறுதியாண்டு முடிந்தபின் ‘சாதி என்பது என்ன?’ என்பதை உணர்த்திய அந்தப் பகலவனை மறக்க முடியுமா ? கண் திறந்தவரை தூஷிக்கலாமா என்ன ?

பிட்ஸ்பெர்க் ஸ்ரீநிவாசர் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் பெரியாரை நினைக்க வேண்டாமா ? டெக்ஸாசில் மீனாட்சியைத் தரிசிக்கும் போதெல்லாம் ராமசாமியாரை எண்ண வேண்டாமா ? அவர் இல்லை என்றால் அமெரிக்கர்கள் ஸ்ரீநிவாசரையும் மீனாட்சியையும் கண்டிருப்பார்களா ? அல்லது ஸ்ரீனிவாசப் பெருமாள் அமெரிக்கா பார்த்திருப்பாரா ?

இந்த ஏப்ரல் மாதம் டெக்ஸாஸ் ( டல்லாஸ் ) போயிருந்தபோது அவ்வூர்ப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடந்து கொண்டிருந்தது. நான்கு பேர் பஞ்சகச்சம் உடுத்தி ஆழ்வார் பாசுரம் ஸேவித்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் ஆழ்வார் பாசுரம் ஒலிக்கச்செய்வது சுலபமா ? சர்க்கரைப் பொங்கலுடன் புளியோதரையும் கிடைத்தது. அன்னமிட்டவரை நான் மறக்கலாமா ?

109-வது திவ்யதேசமாக அமெரிக்காவை ஆக்கியவரை மறக்கலாமா ?

வைக்கம் என்னும் ஊர் இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டிய உத்தமர் அல்லவா அவர் !

இதெல்லாம் போகட்டும். ‘காங்கிரஸ் ஒழியவேண்டும்’ என்று தீர்க்க தரிசனத்துடன் ஆசீர்வாதம் செய்த மகான் அல்லவா அவர் ! இப்போது அது நிறைவேறியுள்ளதே. அவரைப் பாராட்ட மனம் இல்லையே உங்களுக்கு !

அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு யாருக்கு உண்டு ? கடவுள் இல்லை என்று சொன்னார். ஆனால் அதே சமயம் அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் சொன்னார். சிரிக்காமல் சொன்னார். பூசாரிகளை ஏசினார். ஆனால் அனைவரும் பூசாரிகள் ஆக வேண்டும் என்றும் சொன்னார். இன்றும் அதே நிலை தான் அவரது வழி வந்தவர்களும் கையாள்கிறார்கள். ஒரே விஷயத்தில் இரண்டு நிலைகள் எடுப்பதில் குருவுக்கு சிஷ்யன் சளைத்தவன் இல்லை என்று உணர்த்துகிறார்கள். அந்தக் குருவை மறக்கலாமா ? மன்னிக்கவும். ‘குரு’ என்பது வடமொழி. ஆகவே ‘டீச்சர்’ என்று தமிழ்ப்
படுத்திப் படிக்கவும்.

‘பறைச்சி இரவிக்கை போடுவதால் தான் துணிப்பஞ்சம் வந்தது’ என்று அரிய உண்மையைக் கண்டுபிடித்தார். நோபல் பரிசுக்குரிய அந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட வேண்டாம், தூஷிக்காமல் இருக்கலாமே ஸார்,

ஆனால் ஒன்று. ‘தி.மு.க. வை ‘கண்ணீர்த்துளிகள்’, ‘கூத்தாடிகள் கழகம்’ என்று ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். அந்த நேர்மை எனக்குப் பிடிக்கும். இதையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

திருக்குறள் பற்றி அவர் செய்யாத அர்ச்சனை இல்லை. அப்படித் தமிழ் வளர்த்தார்.

அது போகட்டும். கண்ணகியை ‘தே**யாள்’ என்று வாழ்த்தினார். என்னே உயர்ந்த மரபு !

எது எப்படியோ, எனக்கும் இன்னும் பலருக்கும் நல்ல வாழ்க்கை அமைய உதவினார். அவர் தமிழைத் திட்டியதால் எனக்கு ஆழமாகத் தமிழ் படிக்க ஆர்வம் பிறந்தது. இராமனையும் கம்பனையும் வசை பாடியதால் நான் அவர்களில் ஆழ்ந்தேன்.
ஹிந்தியை எதிர்த்ததால் அதைப் பேசக்கற்றுக் கொண்டேன். ‘பூணூலை அறுப்பேன்’ என்று சொன்னதால் அது பற்றியும் ஆன்மீகம் பற்றியும் மேலும் படிக்கத் துவங்கினேன்.

அவர் ஒழிக்க நினைத்த அனைத்தும் தழைத்தோங்கியது – காங்கிரஸ் தவிர.

இத்தனை நையாண்டி செய்தாலும் அவரிடம் எனக்குப் பிடித்தது சில உண்டு.

நேர்மை. மனதில் இருந்ததை மறைக்கமல் அப்படியே பேசும் பாங்கு. இறுதி வரை தனது நம்பிக்கையில் உறுதி.

அவர் கடவுள், வேதம், புராணம் குறித்துச் சொன்னது எதுவும் புதிதல்ல. அனைத்தும் ‘ஸார்வாகம்’ என்னும் பிரிவில் உள்ள இந்திய ஞான மரபே. ஆகவே ‘ஸார்வாகர்’ களின் ஒரு அவதார முனிவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

விபீஷணனைக் கண்காணிக்க ரங்கநாதனாக தெற்கு பார்த்துப் பள்ளிகொண்டுள்ளார் பெருமாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்று சொன்னவர் இன்று அதே கோவிலுக்கு முன்னர் பதிமூன்றாவது ஆழ்வாராக
நின்றுகொண்டிருக்கிறார். பூலோக வைகுண்டத்தில் பெருமாளை ஸேவித்தபடியே இருக்க எல்லாருக்கும் கொடுப்பினை இருக்காது. கோவிலுக்கு உள்ளே செல்ல அரசு காசு கேட்கிறது. செலவும் மிச்சம், புண்ணியமும் லாபம் என்று வாசலிலேயே நிற்கிறார்.

கட்டுரையின் துவக்கத்தில் படித்த குலசேகர ஆழ்வாரின் வேண்டுதல் என்ன ? கோவில் வாசலில் கல்லாய், படியாய் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அவருக்குக் கிடைக்கவில்லை; இவருக்குக் கிடைத்துள்ளது அந்த பாக்கியம்.

எனவே ஆழ்வாரான பெரியார் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்குகிறேன்.

பி.கு: பிராமணர்கள் என்ற பிரிவினர் இந்திய சமூகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தார்கள். இப்போது அனைவரும் வைசியரே. அனைவரும் ஏதாவது தொழில் மட்டுமே செய்கிறார்கள் – ஒன்று பொருளை விற்கிறார்கள் அல்லது அறிவை விற்கிறார்கள். இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் சேர்கிறார்கள். எனவே இக்கட்டுரையில் ‘பிராமணர்கள்’ என்ற சொல்லை ‘மூதாதையர் பிராமணர்களாக இருந்தவர்கள்’ என்ற பொருளில் புரிந்துகொள்ளவும்.

என்ன கவருமெண்டோ !

என்ன கவருமெண்டு நடக்குதோ. ஈராக்லேருந்து 40 பெண்களைக் காப்பாத்திக் கொண்டுவந்தாங்களாம். ஒரு பாராட்டுவிழா, முப்பெரும் விழா, கவிமாலை, பட்டிமன்றம், திரை உலகினர் பாராட்டு விழா – ஒண்ணும் இல்லே. ‘பெண்களை மீட்ட பிதாமகனே’ன்னு ஒரு பட்டமாவது உண்டா ? ஒரு காலத்துலே ஒரு நாளைக்கு நாலு விழா எடுத்து எப்பிடி கோலாகலமா இருந்தோம். ஹூம்

#பகுத்தறிவு

வரலாறு காணாத காமெடி

பொதுவாக நான் காப்பி அடிப்பதில்லை. ஆனால் இந்த முறை ‘துக்ளக்’ இதழ் அட்டைப்பட கார்ட்டூன் ரொம்பவும் அட்டகாஸம். எதனால் அடி விழுந்தது என்று தெரியவில்லை; இவ்வளவு பலமான அடி இதுவரை விழுந்ததில்லை; ஆ.ராசாவுக்கு எதிராக இந்தியாவிலேயே அதிகமான அளவில் நோட்டா விழுந்துள்ளது. ஊழல் முதலைகள் தயாநிதி,பாலு, ராசா என்று அனைவரும் பலமான அடி வாங்கினர்.

பா.ஜ.க.அலை வீசியது என்று காரணம் சொன்னால் மதவாத தீட்டு வந்து விடும்; காங்கிரஸ் கூட்டணி இல்லாததால் தான் இந்த அடி என்றால் இலங்கை தீட்டு வந்துவிடும். ஊழல் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவின் வெற்றி பா.ஜ.க.வினால் தான் என்றும் சொல்ல முடியாத வகையில் அவர்களுக்குள் கூட்டணியே இல்லை. தனியாக நின்று அம்மையார் வெற்றி பெற்று மிகப்பெரிய தோல்வியை வழங்கியுள்ளார். வரலாறு காணாத தோல்வி இது.

கட்சியே கல கலத்துப்போய் இருக்கிறது. இப்படி இருக்கும் வேளையில் வீரமணியின் நகைச்சுவை வடிவேலுவை மிஞ்சுகிறது. அவருக்குக் காசா பணமா. பகுத்தறிவு மானம், தமிழ் இன மானம், திராவிட மானம் என்று எதையாவது சொல்லிக் காலட்சேபம் செய்ய வேண்டும்.

அதனால் மிச்சம் மீதி உள்ள தி.மு.க.வை சீண்டிப் பார்க்கலாமே என்று எண்ணுகிறார் போலும் வீரமணி.

Image

விஷம், நெருப்பு, வியாதி, பகை – இவை நான்கையும் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க வேண்டும். தி.மு.க., தி.க., இடது சாரி, சாதிக் கட்சிகள் என்பவையே இந்த நான்கும் என்பது என் கருத்து.

கண்கள் இரண்டிருந்தும்…

தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் ஊகித்திருக்க முடியும். ஆமாம். பா.ஜ.க.வின் தமிழகக் கூட்டணியைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

கூட்டணியில் இருப்பதில் வை.கோ. தவிர ம.தி.மு.க. வில் யாரும் இல்லை. அவர் நல்ல மனிதர் தான். ஆனால் கொஞ்சம் இந்தியாவைப் பார்த்தால் நல்லது. எப்போதுமே இலங்கையையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் தன் பெயரை ‘அரங்கநாதன்’ என்று மாற்றிக்கொள்ளலாம். விபீஷணன் ஆட்சி செய்வதைக் கண்காணிக்க தெற்கு நோக்கிப் படுத்திருக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கனாதர்.

வை.கோ. வெற்றி பெற்று அவருக்குக் கல்வி அல்லது கலை அல்லது சுற்றுப்புறச் சூழல் அமைச்சுகள் அமைந்தால் நாட்டுக்கு நல்லது.

பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் ஒரே நல்ல கட்சி இவரது தான். ஆனால் இவர் மட்டுமே தான் கட்சியில் இருக்கிறார் என்பது ஒரு வருத்தம்.

மற்ற இரண்டு கூட்டணிக் கட்சிகள் பற்றிப் பேசுவதற்கு முன்னால் கொஞ்சம் அஜீரண மருந்து உட்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.

சாதியை மட்டுமே முன் நிறுத்தும் வன்முறை இயக்கம் ஒன்று. தரம் தாழ்ந்த வசை பாடிக் கட்சி இன்னொன்று. இந்த இரண்டினால் பா.ஜ.க. அடையப் போவது என்ன ?

இலக்கு முக்கியம் என்றால் அதற்கான வழிமுறையும் முக்கியமே. வெற்றி பெறுவது அவசியம் தான். ஆனால் யாருடன் கூட்டு வைப்பது என்று ஒரு தரம் வேண்டும் என்பது என் கருத்து.

ஒரு பக்கம் மோதி, அத்வானி, வாஜ்பாய் என்று சொல்லிக்கொண்டு இன்னொறு புறம் இந்த இரண்டு கூட்டங்களுடன் சேருவது என்ன நேர்மை என்று தெரியவில்லை.

பேசாமால் இடது சாரியுடன் சேர்ந்திருக்கலாம். பெரிய வித்யாசம் இல்லை. தேசத்துரோகம் என்று ஆகிவிட்டது. கொஞ்சம் பழைய தேசத் துரோகிகளுடன் சேர்ந்திருக்கலாம்.

ஒரு வேளை பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதில் தேசத் துரோகம் என்னும் கறை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமை அற்ற பெண்களின் கூட்டமடி..’ என்று பாரதியார் பாடியது பா.ஜ.க.பற்றித்தானோ ?

வெண்டி டோனிகர்

Imageவெண்டி டோனிகர் என்னும் பெண்மணி இந்து மதம் பற்றிய ஒரு நூல் எழுதினார். அதில் இந்து மதம் பாலியல் தொடர்பான ஒரு மதம் என்று அதனை முன்னிலைப் படுத்தி எழுதியுள்ளார். உடனே அதற்கு ஏதோ ஒரு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. உடனே பெங்குயின் என்னும் அந்த நூலின் பதிப்பகத்தார் அதனை விற்பனையில் இருந்து எடுத்துவிட்டனர்.

இது ஒரு விரும்பத்தகாத விஷயம் என்று நான் நினைக்கிறேன்.

1000 ஆண்டுகள் முகலாய / ஆப்கானிய அரசுகள் இருந்தும் அழியாத ஒரு வாழ்க்கை வழிமுறையை , 250 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியினாலும் அழிக்க முடியாத ஒரு அமைப்பை ஒரு அம்மையாரின் நூல் அழித்துவிடும் என்று நம்புவது பகுத்தறிவா ?

தர்க்கமும், வாதமும் இந்த மதத்தின் இரு கண்கள். உப-நிஷதம் முழுவதும் கேள்வி பதில் தானே ? இந்து மதம் ‘மாறாத ஒன்று’ மட்டுமே உண்மை என்று கூறுவதில்லை. உண்மை ஒன்று. அதனை அடையப் பல வழிகள் உள்ளன என்றே கூறுகிறது. இந்த வழிகளில் இது உயர்ந்த வழி, இது தாழ்ந்த வழி என்று ஒன்றும் இல்லை. எனவே தான் கர்ம யோகம், இராஜ யோகம், பக்தி யோகம் என்று பல வகைகளிலும் இறைவனை அடையலாம். அவரவர் சக்திக்கு உட்பட்டு, அவரவர் ஆற்றல் வழியில் இறைவனை அடைய முடியும். இதுவே இந்து மதம். இவை எல்லாம் தவிர தாந்திரிகம் என்னும் முறைப்படியும் இறைவனை அடைய முடியும் என்றும் நம்புகிறது இந்த வழிமுறை.

இந்துமதம் என்பதே ஒன்று இல்லை என்பதே உண்மை. ஆதி காலத்தில் வேறு மதங்கள் இல்லாத போது ஒரே வழிமுறையாக இது இருந்ததால் இதற்கு ‘சனாதன தர்மம்’ என்றே பெயர் இருந்தது. ஒரு ஊரில் கோபால் என்ற பெயரில் பலர் இருந்தால் அவர்களை அடையாளம் காண ‘குண்டு கோபால்’,’நெட்டை கோபால்’, ‘குள்ள கோபால்’ என்று அழைப்பது வழக்கம் தானே? ஆனால் கோபால் என்று ஒருவன் மட்டுமே இருந்தால் ? வேறு அடையாளங்கள் தேவை இல்லையே. அது போல் வேறு வாழ்க்கை வழி முறைகள் / மதங்கள் இல்லாத போது இருந்த ஒரே வழிமுறை ‘சனாதன தர்மம்’ என்று அழைக்கப்பட்டது. இந்து மதம் என்பது ‘சிந்து’ நதியின் மறு பக்கம் இருந்த மக்களை குறிக்கப் பயன்பட்ட ‘இந்து’ என்ற தொடரே ஆகும். அது நாளடைவில் மற்ற மதங்கள் தோன்றியபின் ‘இந்துமதம்’ என்று அழைக்கப்பட்டது.

அது எப்படி – ஒரு கடவுள் என்று இல்லையே ? ஒரு தலைவர் என்று இல்லையே ? எனவே இதனை மதம் என்று எப்படி அழைப்பது ? என்று கேள்வி எழுவது இயற்கையே. இந்த ஜன நாயகக் கடவுள் கொள்கை தான் இந்த தர்மத்தின் ஆணிவேர். உனக்கு எது பிடிக்கிறதோ அதுவே உன் கடவுள் என்று கொண்டது இந்த சனாதன தர்மம்.

“அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் ”

என்று நம்மாழ்வார் “அவர்வர் அறிவுக்கு ஏற்பவும், அறியும் வகையிலும், கடவுள் அமைவார்” கடவுளையே மக்கள் விருப்பத்திற்கு விடுகிறார்.

இதற்கு மேல் சென்று ‘கடவுளே இல்லை’ என்று சொல்லும் சார்வாகம் என்ற பிரிவும் இந்த தர்மத்தில் காணக்கிடைக்கிறது ( இது இராமசாமி நாயக்கரின் கண்டுபிடிப்பு அல்ல ).

இந்த தர்மமே இவ்வாறு இருக்கும் போது, இதன் ஒரு பிரிவு என்று ஒரு அம்மையார் கண்டுபிடித்துள்ள ஒன்றைப்பற்றி எழுதியுள்ளது என்ன தவறு?  தவறு என்று தெரிந்தால் மாற்றுக் கருத்து தெரிவிக்க வேண்டுமே ஒழிய இப்படி அரேபியா, சீனா முதலிய நாடுகள் போல் ‘துக்கிணி பிச்சம்’ முறையில் நடந்துகொள்வது அறிவு முதிர்ச்சி இன்மையைக் காட்டுகிறது.

‘இஸ்லாம் பற்றியோ, கிறித்தவம் பற்றியோ எழுதுவார்களா?’ என்று கேட்பது நியாயமாகத் தோன்றினாலும் அந்த சம்பிரதாயங்களில் தர்க்கம், வாதம் முதலியன இல்லை என்ற அடிப்படையான அறிவு வேண்டாமா ? ஆதி சங்கரர் சொன்ன ‘அத்வைதம்’ தவறு என்று மத்வர் ‘த்வைதம்’ கொண்டுவந்தார். இராமானுசர் ‘விஷிட்டாத்வைதம்’ கொண்டுவந்தார். இராமனுசர் தன் அத்வைத குருவான யாதவப் பிரகாசர்டமே வாதம் செய்தார். அதன் பின்னரே விஷிட்டாத்வைதம் என்ற சித்தாந்தம் ஏற்பட்டது. இது ஒரு பரிணாம வளர்ச்சி.அவ்வளவே.

ஒரே ஒரு பெண்மணி எழுதியுள்ள ஒரு நூல் ஒரு சம்பிரதாயத்தையே அழிக்கும் வல்லமை பெற்றதா என்ன ? அல்லது அந்த அம்மையாரின் எழுத்து மக்கள் மன உணர்வுகளைப் பாதிக்கும் என்று சொன்னால் படிக்காமல் இருக்க வேண்டியது தானே ? அல்லது அதை மறுத்து வேறு ஒரு நூல் எழுத வேண்டியது தானே ?

இவை எதையும் செய்யாமல் புத்தகமே வராமல் செய்தல் ஆண்மை அற்ற செயல் என்பது என் தீர்மானமான கருத்து.

ஸார்' வீட்டுக்குப் போகணும்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இறங்கி ‘ஸார்’ வீட்டுக்குப் போகணும்’ என்றால் வண்டிக்காரர்கள் மறு பேச்சு பேசாமல் உங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். ஸார் வீட்டிற்குப் போகணும் என்றால் பேரம் கூட பேச மாட்டார்கள்.

ஸார் – அப்படித்தான் அவரை அழைப்போம். எங்கள் தமிழ் ஆசிரியர் அவர். சக ஆசிரியர்கள் கூட அவரை ‘ஸார்’ என்று தான் அழைப்பார்கள். ஏனோ அப்படி அமைந்துவிட்டது.

அவரது வகுப்பு வரும் நாளில் ரொம்பவும் சேட்டை செய்யும் ரங்கு கூட அமைதியாக இருப்பான். நெற்றியில் விபூதி இட்டுக்கோண்டு வருவான்.

கடைசியாக போன வருஷம் தான் அவரைப் பார்த்திருந்தேன். ஒவ்வொரு வருஷம் லீவில் இந்தியா வரும்போதும் அவரைப் பார்க்காமல் இருந்ததில்லை. நேற்று தான் லண்டனிலிருந்து வந்தேன். ஸாரைப் பார்க்க இன்று வந்துவிட்டேன்.

அவரிடம் பாடம் கேட்டது என்னவோ இரண்டு வருஷம் தான். 11, 12ம் வகுப்புக்கு மட்டும் அவர் வருவார். ஆனால் பள்ளி முடிந்து இந்த இருபது வருஷம் ஆன பின்னும் ‘ஸார்’ என்றால் என் நினைவில் அவர் மட்டுமே வருகிறார்.

அன்று ரங்கு ஏதோ சேட்டை செய்திருந்தான். ஸார் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கிளாஸ் முடிந்தவுடன் ரங்கு அழுதபடியே அவரின் பின்னால் சென்று மன்னிப்புக் கேட்டான். ரங்கு மன்னிப்பு கேட்டது அவன் வாழ் நாளில் அவர் ஒருவரிடம் தான் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.

வகுப்பில் அவர் வந்தவுடன் எல்லாரும் எழுந்து நின்று ‘உலகம் யாவையும்..’ என்ற கம்பராமயண கடவுள் வாழ்த்துப் பாடல் பாட வேண்டும். பிறகு தான் வகுப்பு துவங்கும். ஆனால் பக்கத்துக் கிளாசில் ‘ஆய கலைகள்..’ என்று தொடங்கும் சரஸ்வதி பற்றிய கம்பன் பாடல் பாடச் சொல்வார். இது பற்றி நாங்கள் அவரிடமே கேட்டோம். பரம வைஷ்ணவரான அவர் சொன்ன பதில் எல்லாரையும் வாயடைக்கச் செய்தது. ‘இதோ பாருங்கோ, ‘ஆய கலைகள்..’ சரஸ்வதியப் பத்தி மட்டும் குறிப்பிட்டு இருக்கு. இந்த கிளாசுல 30 பேர் இருக்கிறீர்கள். உங்களோட காதர் பாட்சாவும் இருக்கான். அவனுக்கு ‘ஆய கலைகள்..’ பாடறது சிறிது சங்கடம். அவா சம்பிரதாயத்துல அல்லா ஒருத்தரத் தவிர வேற யாரையும் சேவிக்க மாட்டா. ‘உலகம் யாவையும்..’ பாட்டு பொதுவானது. கம்பன் எழுதினது தான். ஆனாலும் எந்தக் கடவுளையும் குறிப்பிடல்ல இல்லையா? பக்கத்து கிளாசுலே எல்லாரும் இந்துக்கள். அங்கே ‘ஆய கலைகள்..’ பாடறதுல பாதகம் இல்லை”, என்றார்.

மனிதர் இத்தனை உன்னிப்பானவரா என்று வியந்தோம்.

அவர் வகுப்பில் பாடம் நடத்தப்படுவது ஒரு 20 நிமிஷம் இருக்கும். மிச்ச 30 நிமிஷம் இலக்கிய உரை. கம்பன், வள்ளுவர், இளங்கோ, பிசிராந்தையார், நச்செள்ளையார் தொடங்கி பாரதியார் வரை எல்லாரும் வந்து சென்று விடுவார்கள். வகுப்பு முடிந்த பின்னும் ஒரு வித மயக்கத்தில் பலமுறை இருந்திருக்கிறேன். இவ்வளவு ஞானம் இருந்தும் இவர் ஏன் இன்னும் பள்ளியில் வேலை செய்கிறார் என்று. அவரிடமே ஒரு முறை கேட்டு விட்டேன். ‘சின்னப் பசங்கள்ளாம் அர்ஜுனன் மாதிரி. புத்தி தடுமாறுகிற வயசில் நல்ல விஷயங்களை அவர்கள் காதில் போட்டுவிட வேண்டும். விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு ஆயிரம் விஷயத்தில் ஒரு அஞ்சு அவன் காதுக்குள்ளே போகும். ஒண்ணு ரெண்டு அவன் புத்தியை எட்டும். அவன் வாழ்க்கை சிறப்படையும். குறைந்த பட்சம் தப்பு செய்யாமல் இருப்பான். அதுக்குத்தான் பள்ளிக்கூடமே சரின்னு இருந்துட்டேன்”, என்று சொல்லிவிட்டு , ‘வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா கேள்வி ஞானம் பத்தி ?”, என்று தொடர்ந்தார்.

அவர் வகுப்பு பலருக்கு வாழ்க்கையை மாற்றி அமைக்க உதவியுள்ளது. சொர்ணலட்சுமி என்று ஒரு மாணவி. செட்டியார் வீட்டுப் பெண். நல்ல பெரிய இடம். ஆனால் திருமண வாழ்வு சரியாக இல்லை. சில முறை தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஸார் நடத்திய ‘அசோக வனத்தில் சீதை பட்ட கஷ்டங்கள்’ பற்றிய பாடம் நினைவுக்கு வந்து அவளைக் காப்பாற்றியுள்ளது. பாடத்தில் ஒன்று இரண்டு பாடல்கள் தான் இருக்கும். ஆனால் ஸார் தனது பாண்டித்யத்தால் கம்பன், வால்மீகி என்று பலரது பார்வையில் சீதை பட்ட துன்பங்களை எங்கள் கண் முன் நிறுத்தியுள்ளார்.

நன்றாக நினைவு உள்ளது. கண்ணகி பற்றிய அவரது ஒரு வகுப்பு. ‘தேரா மன்னா செப்புவது உடையேன்..’ என்று சிலப்பதிகாரப் பாடல் பாடி அவர் வகுப்பு நடத்திய போது எங்கள் கண் முன் கண்ணகி நிற்பதைக் கண்டோம். அவ்வளவு உணர்ச்சியுடன் நாங்கள் ஒரு பாடத்தைக் கவனித்ததில்லை.

அவருக்கு இருந்த ஆழ்ந்த படிப்பு அவருக்கு வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர் உதவித் தலைமை ஆசிரியராகவே கடைசியில் ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன். நன்றாக நினவு இருக்கிறது. அவரை விட அனுபவம் குறைவான ஒரு ஆசிரியரைத் தலைமை ஆசிரியராகப் பணி அமர்த்தியது அரசு. அவர் கண்டு கொள்ளவில்லை.

என் தந்தை இது பற்றி அவரிடன் கேட்ட போது, “இப்போ எச்.எம். பதவி வராம இருக்கறதே நல்லது. ‘அஷ்டப்பிரபந்தத்தில் ஆழ்வார்களின் தாக்கம்’ என்று ஒரு டாக்டரேட் பண்ணிண்டு இருக்கேன். அதுக்கு இது இடைஞ்சலா இருக்கும்’, என்று கூறியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்னர் டாக்டரேட் முடித்தார். ‘மனுஷன் கீழே விழற வரைக்கும் படிச்சுண்டே இருக்கணும்’ என்று அடிக்கடி கூறுவார்.

ஒரு சீசனில் ‘துளசிதாஸ் ராமாயணம்’ புரிய வேண்டும் என்பதற்காக 50 வயதில் இந்தி கற்றுக் கொண்டார். ஆனாலும் அவரது இளமைப் பருவம் குறித்து எனக்குத் தெரியாமலேயே இருந்தது.

மெடிக்கல் காலேஜ் சேர்ந்த போது அவரிடம் சொல்லிவரச் சென்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ‘படிச்சுட்டு நம்ம ஊருக்கே டாக்டரா வந்துடுப்பா’ என்றார் வெகுளியாக.

95-ல் மும்பையில் எனக்கு ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அப்போது பார்த்து அவர் ஒய்வு பெற்று ஒரு மார்கழி மாதம் மும்பைக்கு ‘திருப்பாவை’ பற்றி உபன்யாசம் செய்ய வந்திருந்தார். ‘தனியா இருக்கேன். நீ முடிஞ்சா நான் இங்கே இருக்கற வரைக்கும் என்னோடயே தங்கிக்கோயேன்’ என்று கேட்டார். அந்த வாய்ப்பு எனக்குப் பல படிப்பினைகளைத் தரப்போவதை நான் உணர்ந்திருக்கவில்லை.

விடியற்காலை அவரது திருப்பாவை’ உபன்யாசம். வழக்கம் போல ஆண்டாள் முதல் அனைத்து ஆழ்வார்களும், சங்கப் புலவர்களும், வள்ளுவரும், பாரதியும், நாராயண பட்டத்ரீயும் அவரது நாவில் வந்து வெளுத்து வாங்கினர். மக்கள் அந்த மாதிரி மழையில் நனைந்தது இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஒரு நாள் இரவு அவருடன் அறையில் தங்கியிருந்த போது தான் அவரது இளமைப் பருவம் பற்றிப் பேசினார்.

“என்ன எப்பவும் போல ஒரு ஏழைப் பிராம்மணக் குடும்பம். அப்பா வேத பாராயணம். சொற்ப வருமானம். ரெண்டு தம்பி ஒரு தங்கை. ஒரு பருவத்துக்கு அப்புறம் தருமபுரம் தமிழ்க் கல்லூரில ‘புலவர்’ பட்டத்துக்காக படிச்சேன். அப்பா தவறிட்டார். ஆதீனத்துல தங்கறதுக்குக் காசு கிடையாது. சாப்பாடும் போட்டா. தமிழ் படிச்சேன். பல நேரங்கள்ளே சமயல்காரன் சாப்பாடு இல்லேன்னுடுவான். ஆதீனக் குளத்துத் தண்ணீர் தான் அன்னிக்கி.

பசங்க ஒண்ணா இருந்தா படிக்க முடியாதுன்னு அரை மைல் தள்ளி ஒரு அரச மரம் அடியிலே படிச்சிண்டிருப்பேன். வந்து பார்த்தா சாப்பாடு இருக்காது. வடிச்ச கஞ்சி மட்டும் இருக்கும். அன்னிக்கி அது தான் ஆகாரம். தம்பி முனிசிபல் பள்ளியில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தான். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று ஹாஸ்டலில் போடும் பொங்கலும் வடையும் கொண்டுவந்து தருவான். தான் சாப்பிட மாட்டான். அவனும் வாரச் சாப்பாடுதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ( வாரம் முழுவதும் ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுவது, ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு படிப்பது ).

ஆனால் எனக்கு வாழ்க்கை குடுத்தது ஆதீன காலேஜ் தான். படிச்சு பரீட்சை எழுதினேன். மாகாணத்துலே முதல்லே வந்துட்டேன்ன்னு சொன்னா. நான் நம்பல்லே. அப்புறம் பேப்பர்லே வந்தது. அப்புறம் வாத்தியார் வேலை. பிறகு பி.ஏ., எம்.ஏ, அப்புறம் பி.எச்.டின்னு போயாச்சு.

ஆனா சரஸ்வதி உன் நாக்குலே இருக்காடா என்று அகோர தீக்ஷிதர் சொன்னார். அது போலவே எது படிச்சாலும் ஒரு தடவையிலேயே பதிஞ்சுது. நன்னா பேசவும் வந்துது.

ஒரு தடவை ஸ்கூல் லீவு. மத்தியானம் கொஞ்சம் கண்ணை மூடிண்டிருந்தேன். ஒரு குழந்தை வந்து வந்து ‘நாக்கை நீட்டு, நாக்கை நீட்டுன்னு சொல்றமாதிரியே இருந்தது. குழந்தை தலைலே மயில் தோகை வெச்சிண்டிருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு ஒரு மலையாள நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். சுவற்றில் ஒரு படம் இருந்தது. குருவாயூரப்பன் அப்பிடின்னு சொன்னார். குழந்தை முகம் அப்படியே. அப்பத்தான் குருவாயூரப்பன்னு ஒரு தெய்வம் இருக்கறதே தெரியும்.

அந்த வாரமே குருவாயூர் போனேன். முதல் முறையா ‘நாராயணீயம்’ பாராயணம் பண்ணினேன். இது ஏதோ தெய்வ சங்கல்பம்னு தோணித்து. அதுலேர்ந்து இன்னிக்கி வரை சுமார் ஒரு ஆயிரம் முறை பாராயணம் பண்ணியிருப்பேன்”, என்றார். உடல் நிலை சரி இல்லாதவர்கள் வீட்டுக்குப் போய் நாராயணீயம் பாராயணம் செய்வார். அவர்கள் உடல் நலமடைவதை நேரில் கண்டுள்ளேன்.

அது மட்டும் அல்ல, அவருக்கு வால்மீகி ராமாயணம், கம்பன், துளசி ராமாயணம் என்று பலதும் தெரிந்திருந்தது. ஊரில் எந்தப் பட்டி மன்றம் என்றாலும் இவரைத்தன் நடுவராகப் போடுவார்கள். கம்பனில் ஆழ்ந்த ஆர்வம் இருந்ததால் தான் பிறந்த தேரழுந்தூரில் கம்பனுக்குக் கோட்டம் கட்ட வேண்டும் என்று அரசிடம் போராடி அதனைக் கட்ட வைத்தார்.

வருடம் தோறும் அந்த ஊரில் கம்பன் விழா நடத்தி மு.மு.இஸ்மாயில், கீரன், செல்வகணபதி முதலியோரை அழைத்துப் பட்டிமன்றம் நடத்தினார். கீரனும் இவரும் ஆதீனக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

மேலும் தொடர்ந்தார்,” என்ன, அங்கீகாரம் இல்லை. வருஷத்துக்கு ஒரு புஸ்தகம் போடுவேன். எல்லாம் கம்பன் பத்தித் தான். போட்ட புஸ்தகத்தை எடுத்துண்டு நான் உபன்யாசம் பண்ற எடத்துலே எல்லாம் தூக்கிண்டு போவேன். ஆனா விக்காது. போட்ட முதல் நஷ்டம் தான். நாம தெரிஞ்சுண்டது நாலு பேருக்கு போய்ச் சேரணும்னு ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் பட்டுண்டிருக்கேன். இப்போ ரிடையர் ஆகியாச்சு. இப்பவும் புஸ்தகத்தைத் தூக்கிண்டு போறேன். எனக்குப் பணம் வேண்டாம். புஸ்தகம் விக்கற பணத்துலே 75 % தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் திருப்பணிக்குன்னு வெச்சிண்டிருக்கேன்”, என்று சொல்லி சற்று நிறுத்தினார்.

புஸ்தகங்கள் அனைத்தும் ஆராய்ச்சி நூல்கள். ‘பரகாலன் கண்ட பரிமள அரங்கன்’, ‘அருள்மாரி கண்ட ஆமருவியப்பன்’, ‘வைணவம் தந்த வளம்’ – என்று பல வகையான ஆராய்ச்சி நூல்கள். ஆனால் வாழ்வின் எல்லாத் தரப்பும் பரிபூரணமாக வணிக மயமான நிலையில், மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வெறும் பணத்தை மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் அவர்களால் இந்த ஆய்வுகளைப் படிக்க முடியாது தான். அதனால் புஸ்தகங்களைக் கொள்வார் இல்லை. இருந்தாலும் விடாது அவர் புஸ்தகங்களுடன் உபன்யாசம் செய்துகொண்டிருந்தார்.

ஒருமுறை ‘தமிழ் சாரல்’ என்று ஒரு அமைப்பு அவரை ‘பரமக்குடி’ வரச்சொல்லி அழைத்திருந்தது. அன்று அமாவாசை. முந்தைய நாள் இரவே கிளம்பி பரமக்குடி சென்று சேர்ந்தார். கூடவே கட்டுக் கட்டாகப் புஸ்தகம். ஒரு வழியாக ‘தமிழ் சாரல்’ எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்துள்ளார். அமாவாசை என்பதால் குளித்து முன்னோர் கடன் ( தர்ப்பணம் ) செய்யாமல் எதுவும் சாப்பிடுவதில்லை. நேரம் மதியம் ஆகிவிட்டது. கடைசியாக வீட்டைக் கண்டுபிடித்தார். அது ஒரு ஒதுக்குப் புறமான ஓட்டு வீடு. வாசலில் ‘தமிழ் சாரல்’ என்று ஒரு ஒற்றைப் பலகை தொங்கியது. உள்ளே இருந்து கைலி கட்டிக்கொண்டு ஒரு நடுத்தர வயது ஆள் ‘என்னா வேணும்?’ என்று கேட்டபடி வந்துள்ளார். விபரம் சொன்னதும், ‘ஓ, நீங்களா ? ஒரு அரை மணி இருங்க. வரேன்’, என்று சொல்லிச் சென்றார். பின்னர் வந்து ‘வாங்க, போகலாம்’ என்று கூட்டம் ஏற்பாடு ஆகியிருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார். கடற்கரை ஓரம் வெற்றுத் திடல். வெயில் தகிக்கிறது.

‘இதான் சாமி, இங்கேதான் பேசப் போறீங்க. அதோ பாருங்க ஸ்பீக்கர் கட்றான் பாருங்க”, என்றார். சுற்று முற்றும் யாருமே இல்லை. தர்ப்பணம் செய்யவில்லை. சாப்பிடவில்லை.  அப்படியே மாலை ஆகியுள்ளது. கூட்டம் துவங்க வேண்டிய நேரம். எண்ணி நான்கு பேர் வந்துள்ளனர். ‘ஐயா, நேரம் போகப் போக ஆள் வரும்’ என்று விழா நடத்துபவர் கூறியுள்ளார். ஸாருக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்துள்ளது. நாள் முழுவதும் சாப்பிடாததால் தலை சுற்றியுள்ளது. அரை மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு அடுத்த பஸ் ஏறி மறுநாள் ஊர் வந்து சேர்ந்துள்ளார். சரியாக 36 மணி நேரம் பட்டினி. இப்படியாகிலும் கம்பன் புகழ் பரப்ப அலைய வேண்டுமா என்று கேட்டேன். ‘ஏதோ ‘தமிழ்ச் சாரல்’னு பேர் சொன்னான். சரி ஏதோ இலக்கியத் தொடர்பா இருக்கும்னு நினைச்சு அமாவாசைன்னு கூட பார்க்காம ரொம்ப கஷ்டப்பட்டுப் போனேன். சாப்பாடு இல்லே. ‘சரி, உங்கடவங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லி சந்த்ரஹாசன்னு ஒருத்தர் வீட்டுக்குக் அழைச்சுண்டு போறேன்னான். வேண்டாம்ப்பா, ஆளை விடுன்னு சொல்லி பஸ் பிடிச்சு வந்துட்டேன். புஸ்தகம் போட்டாச்சு நாலு பேர் கிட்டே போய்ச் சேர வேண்டாமா?’, என்றார்.

இது கூட பரவாயில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. நல்ல தமிழ்ப் பேராசிரியர்கள் தேவைப்பட்டுள்ளனர். வைணவம் குறித்து குறிப்புக்கள் பெற இவரிடம் வந்த பலர் நல்ல நிலையில் இருந்தாலும் இவரது பெயர் அனுப்பபட்டபோது முன் எடுத்துச் செல்லவில்லை. பல காரணங்கள் கூறினார்கள். உண்மையான காரணம் இவர் சார்ந்த சாதி என்று அவர் அறிந்திருந்தார். சாதி காரணமாகத் தமிழ் நாட்டில் பல வாய்ப்புகள் இவருக்கு அளிக்கப்படவில்லை.

தமிழ் நாட்டில் மட்டும் தான் அப்படி. பரோடா, மைசூர், நாக்பூர், தில்லி என்று பல இடங்களில் இவருக்கு நல்ல மரியாதை இருந்தது. இவரது உபன்யாசத்திற்கு தமிழ் நாடு சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் தவறாமல் வருவார்கள்.

‘ஜாதியால கௌவரம் கிடைக்கல்லேன்னு சொன்னா அது சரியா இருக்காது. ஜாதிக்குள்ளேயும் அப்பிடித்தான். அதல்லாம் உள்ளே போனா ரொம்ப நன்னா இருக்காது’, என்று நிறுத்திவிட்டார்.

வைணவர்களுக்குள் இருந்த தென்கலை, வடகலை பேதத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியும். இவர் எழுதிய ஒரு புஸ்தகத்தை ஒருமுறை காஞ்சிப் பெரியவர் முழுவதும் படித்து ஆசீர்வதித்தார் என்று கூறி ஆனந்தப்பட்டார்.
காஞ்சி ஆச்சாரியார் அந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளதால் அதில் குற்றம் கண்ட சில பெரியவர்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

‘இவா யாருக்குமே ஆன்மீகம்னா என்னன்னே தெரியல்ல’, என்று மனம் வருந்திப் பேசினார். “ராமாயணம் பத்தி பேசும்போது எதுக்கு ‘நாராயணீயம்’ எல்லாம் போகணும்னு கேக்கறா ? குருவாயூர் பத்திப் பேசக்கூடாதாம். ஏன்னா அது ஆழ்வார் பாடினது இல்லையாம். இங்கே ஆழ்வார் பாடின கோவில்கள் ஒரு விளக்கு ஏத்தற வசதி கூட இல்லாம இருக்கு. அங்க குருவாயூரப்பனை மலையாளம் பேசறவா எல்லாம் எப்படி கொண்டாடறா தெரியுமா ? இங்கே ‘ராமானுச தயா பாத்ரம்’ பாடினா தென்கலை சண்டைக்கு வரான். ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்’ பாடினா வடகலை சண்டைக்கு வரான். இவனுன்கள்ளாம் கோவிலுக்கு வர்ரதே சண்டை போடத்தான் போல இருக்கு. ஒரே துவேஷம். அப்பிடி இருக்கலாமாம் ஆனா குருவாயூரப்பன் பத்திப் பேசக்கூடாதாம்.

இன்னொண்ணு தெரியுமா ? திருக்குறள் பரம வைஷ்ணவமான புஸ்தகம். அதை நம்மவா படிக்கறதே இல்லை. நாஸ்தீகாள்ளாம் அது பத்திப் பேசறதால அதுவும் நாஸ்தீகப் புஸ்தகம்னு நினைச்சுக்கறா. வள்ளுவர் சொன்னதை விட யாரும் வைஷ்ணவம் பேசல்லே’ என்று திருக்குறள் பற்றி புதிய பரிணாமம் கொடுத்தார். உபன்யாசங்களில் அடிக்கடி திருக்குறள் வரும். தமிழ் ஆசிரியர் அல்லவா ? சரளமாக வரும்.

மனித வாழ்வின் பல அர்த்தமற்ற செயல்களை ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு தீர்க்க முனைந்தார். அதனால் பல பெரிய புள்ளிகளின் எதிர்ப்புக்கு ஆளானார். தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிகமாக ஆழ்வார் பாசுரங்களையும், திருக்குறளையும் பயன் படுத்தியதால் சம்பிரதாயம் சார்ந்த வைணவக் குழுக்களில் புறக்கணிக்கப்பட்டார். தமிழுக்கு இவ்வளவு செய்கிறாரே என்று தமிழ் அமைப்புக்கள் போற்றியதா என்றால் அங்கே அவர்கள் ஜாதி பார்த்தார்கள். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் ஆனது அவரது கதை.

1992-ம் ஆண்டு எப்படியோ ‘நல்லாசிரியர்’ விருது கொடுத்துவிட்டார்கள். அவருக்கே ஆச்சரியம் தான்.

அந்த வருடம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தன் மகனுக்கு ‘தமிழ்ச் சான்றோருக்கான’ இட ஒதுக்கீட்டில் பொறியியல் இடம் கிடைக்க வேண்டி அவரும் அவரது தம்பியும் இனி ஏறாத படியில்லை. கடைசிவரை இழுத்தடித்து இறுதியில் ரூ.25,000 கேட்டார்கள். அவரிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதை விட தான் அவமானப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தார்.

அந்த இடம் அரசியல் பின்புலம் உள்ள ஒரு ‘தமிழ்’ அறிஞர்’ பேரனுக்குக் கொடுக்கப்பட்டது என்பது வேறு கதை.

அவரது உபன்யாசங்கள் எங்கு நடந்தாலும் ஏதாவது புதுமையாகச் சொல்வார். சென்னையில் ஒருமுறை ‘குரு’ என்ற பதத்திற்கு விளக்கம் அளித்தார். குரு என்பவன் நம் உடலின் இடைப் பகுதி போன்றவர். இடுப்புக்கு மேல் பரமாத்மா; இடுப்புக்கு கீழே உள்ளது ஜீவாத்மா; ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பது இடைப் பகுதி; குரு என்பவர் அப்படி இடை போன்றவர்கள்; கீதையை உபதேசித்த கண்ணனும் ஒரு குருவே; அவனை ‘கீதாசார்யன்’ என்று அழைக்கிறோம் என்று கூறி ஒரு நிமிடம் நிறுத்தினார்.

‘இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். கண்ணன் இடையர் குலம். இங்கே இடையர் என்றால் சாதி அல்ல; குரு, ஆச்சாரியன் என்ற அளவில் பார்க்கவேண்டும். இதற்கு சமீப கால உதாரணம் கூட உண்டு. ‘எங்கிருந்தோ வந்தான் இடை சாதி நான் என்றான்’ என்று பாரதி இந்த நூற்றாண்டில் இதையே கூறினார்’, என்று பேசினார். கூட்டம் எழுந்து நின்று கை தட்டியது.

மும்பையில் மாதுங்காவில் ஒரு சிறந்த சொற்பொழிவு. ‘பகுத்தறிவு இல்லாதவர்கள்’ பற்றி ஒரு வித்தியாசமான விளக்கம் கொடுத்தார். ‘உலக வாழ்வு சார்ந்து பொருள் தேடும் முயற்சிக்கு மட்டுமே தனது அறிவைப் பகுத்து அளித்துவிட்டு ஆன்மீகத் தேடலுக்குத் தேவையான அறிவில்லாதவன் எவனோ அவனே பகுத்தறிவில்லாதவன்’, என்று கூறி அசத்தினார். அப்போது தான் ‘பகுத்தறிவு’ பற்றி சில தமிழகத் தலைவர்கள் வாய் கிழிந்து கொட்டியிருந்தார்கள்.

அதே உபன்யாசத்தில் ஆண்டாள் திருப்பாவை பற்றிய ஒரு பேச்சு வந்தது. ‘மார்கழித் திங்கள்..’ என்று தொடங்கும் பாடல் பற்றிப் பேசத் துவங்கினார். அதில் ‘பறை’ என்ற ஒரு சொல் வந்தது. அதற்கான விளக்கம், அந்தச் சொல் திருப்பாவையில் வேறு எங்கெல்லாம் வருகிறது, வேறு எந்த ஆழ்வார்களெல்லாம் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார்கள், அவற்றின் பொருள், ஒவ்வொன்றின் வரலாறு என்று பல விஷயங்கள். கூட்டம் வாய் பிளந்து ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தது.

ஒருமுறை பள்ளியில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பாராட்டுவிழா நடந்தது. அதில் இவர் பேசியுள்ளார். ‘வீடு வரை உறவு’ பாடல் பட்டினத்தார் பாடல் தழுவிக் கவிஞர் எளிமையாகப் பாடினார் என்று பேசினார். கூட்டத்தில் சலசலப்பு. ஏற்புரை ஆற்றிய கண்ணதாசன், ‘இதுவரை நான் பட்டினத்தார் பாடலை அடியொட்டியே எழுதினேன் என்று யாருக்கும் தெரியாது. இம்மாதிரி ஒரு ஆசிரியர் உங்கள் பள்ளியில் இருப்பது பள்ளிக்குப் பெருமை’ என்று பாராட்டியுள்ளார்.

இப்படிப் பல சம்பவங்கள்.

அடுத்த முறை அவரை நான் சந்தித்தபோது,” என்னப்பா நீ லண்டன்லேயே வேலைல இருக்கியாமே? ஏன் இங்கே மாயவரத்துல எல்லாருக்கும் உடம்பு நன்னா இருக்கா?” என்று கேட்டது ரொம்ப நாள் மனதில் இருந்தது. மாயவரத்தில்

ஒரு கிளினிக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வேலை, திருமணம், குழந்தைகள் என்று சில வருடங்கள் அவருடன் தொடர்பில் இல்லை.

போன வருடம் வந்திருந்த போது அவருக்குப் பக்கவாதம் வந்திருந்தது. வைத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் அவரால் வாய் பேச முடியவில்லை. வலது கை வர வில்லை. பதினெட்டு நூல்கள் எழுதிய கை எழுதவில்லை; பல பல்கலைக்கழகங்களில், ஆன்மீக மேடைகளில் இறைவன் புகழையும் தமிழின் அருமையையும் பேசிய நாக்கு பேசவில்லை.

அப்போதுதான் அவர் ஐந்து வருடம் முயன்று ஒரு மகத்தான நூல் ஒன்று எழுதியிருந்தார். ‘திருமால் திகழும் 108 திவ்யதேசங்கள்’ என்று 108 திவ்யதேசம் பற்றிய ஆழ்வார்கள் பாடல்கள் கொண்ட ஆய்வு நூல். பெரு முயற்சி செய்து எழுதியிருந்தார். ஆனால் பதிப்பாளர் வெறும் 15,000 ரூபாய்க்கு காப்புரிமையை எழுதி வாங்கிக்கொண்டுவிட்டார் என்று தெரிந்து கொண்டேன். ‘பெருமாள் என்ன கொடுக்கறாரோ அதை வாங்கிக்க வேண்டியது தான்’ என்று தனது நிலைப்பட்டைக் கூறியிருந்தார் என்று தெரிந்துகொண்டேன். இதைப்பற்றி அவரிடம் கேட்டேன். புரிந்துகொண்டார். இடது கையை ஆட்டி ,’இது ஒரு விஷயமே இல்லை’ என்பது போல் ஏதோ சொன்னார்.

அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு இவரது தம்பி கடும் முயற்சி செய்து காஞ்சீபுரத்தில் ஏற்பாடாகியிருந்தது. ‘ஹிந்து நாளிதழில்’ அழைப்பெல்லாம் கூட வந்து விட்டது. விழாவிற்கு இரண்டு நாள் முன்பு பக்கவாதம் ஏற்பட்டு அப்பொல்லொ மருத்துவமனியில் சேர்க்கப்பட்டார். விழா நடக்கவில்லை.

அதன் பிறகு இப்போதுதான் பார்க்க வருகிறேன்.

வீட்டின் உள்ளே நுழைந்த என்னை அவரது மகன் வரவேற்றார். ‘ஸார் எப்படி இருக்கார்?’ என்று கேட்டேன்.

‘சந்தோஷமாத்தான் இருப்பார்னு நினைக்கிறேன். ரூம்லெ போய்ப் பாருங்கோ’, என்றார் அவர் மகன்.

உள்ளே சென்றேன்.

உண்மை தான். ஸார் சந்தோஷமாகவே தெரிந்தார்.

சிரித்தபடியே இருந்தார் மாலை போட்ட படத்தில்.

இப்போதெல்லாம் மயிலாடுதுறையில் ‘ஸார்’ என்றால் வண்டிக்காரர்களுக்குத் தெரிவதில்லை.

உம்மாச்சி ஸ்லோகமும் சாதமும்

நல்ல ஆஜானுபாகுவான கரிய உருவம். பின்னாலிருந்து தான் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. எதிர் வீட்டுக்கு வாடகைக்கு வந்திருப்பார் போல என்று நினைத்துகொண்டிருந்தேன். கூட ஒரு சிறு பையனும் இருந்தான். எதிர் வீட்டில் வெளிப்புறச் சுவரை ஒட்டி ஒரு அறை வெறுமனே இருப்பதால் அதனை 1000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுவது வழக்கம்.

எதிர் வீட்டுப் பாட்டி பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் போல. ஆனால் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை. ஆனால் ஒன்று. அவர் சிரமப்பட்டுப் பேசுவது போல் இருந்தது. மெதுவாகப் பேசினார். நீண்ட நேரம் எடுத்துகொண்டு பதில் அளித்தார் போல் இருந்தது. பாட்டியின் உடல் பாஷை பொறுமையின்மையை உணர்த்தியது.

அரை மணி கழித்து அவர் மெதுவாக நடந்து போனார். ஏதோ ஒரு இயந்திரம் நடப்பது போல் தெரிந்தது. செதுக்கி வைத்த கட்டைகள் ஒரு வித ஒப்புக்கொள்ளப்பட்ட அசைவுகளுடன் நடந்தால் எப்படி இருக்கும் ? ரோபோட் போல் நடந்தார்.

பல நாட்கள் அவரைப் பார்க்கவில்லை. பின்னர் ஒரு நாள் மாலை ஒரு சின்ன வண்டியில் இருந்து இறங்கினார் அவர். மெதுவாக நடந்து சென்று எதிர் வீட்டுக் கதவைத் தட்டினார். ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. புரியவில்லை. ஆனால் ஒன்று. அவர் குடி வந்துவிட்டார் என்று தெரிந்தது. வயது ஒரு 40 இருக்கலாம் என்று ஊகித்தேன்.

அவரது  மகன் அடுத்த நாள் மாலை என் வீட்டு வாசலில் வந்து நின்றான். என் மகனைப் பார்த்துச் சிரித்தான். இரு குழந்தைகளும் விளையாடத் துவங்கின.

அந்த வாரம் காலனியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அவரைப் பார்த்தேன். சுவாமி விக்ரஹத்தை நகர்த்திக்கொண்டிருந்தார். ‘ஓ இவர் தான் அர்ச்சகர் போல ‘ என்று எண்ணிக்கொண்டேன். புதியதாக அர்ச்சகர் நியமிப்பதாகப் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது.

பிறகு பல முறை அவரைப் பார்த்தேன். ஆனால் ஒரு முறை கூட பேச முடியவில்லை. ஒரு நாள் சைக்கிளில் ஏற முயன்றுகொண்டிருந்தார் அவர். அப்போதுதான் கவனித்தேன் அவரது காலை மடக்க அவரால் முடியவில்லை. கையும் மடக்க முடியாத மாதிரியே இருந்தது. ஓடிச் சென்று உதவ எண்ணி அருகில் செல்ல எத்தனித்தேன். அதற்குள் அவரே சைக்கிள் மேல் ஏறி அமர்ந்துவிட்டார். என்னைத் தாண்டிச் செல்லும் முன் ஒரு புன்னகை மட்டும் புரிந்தார். ஏனோ அவர் ஒருவித வலியில் இருப்பதாகப் பட்டது. “ஏறும் போது கொஞ்சம் கஷ்டம்”, என்று சொன்னது போல் காதில் கேட்டது.

சில மாதங்களில் அவரைப்பற்றிய தகவல்கள் கிடைத்தன. செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமமாம். படிக்கவில்லையாம். கொஞ்சம் நிலம் இருந்துள்ளது. இப்போது அதுவும் கரைந்துவிட்டது. ஊரில் வேறு வேலை இல்லாததால் அருகில் இருந்த ஒரு பெருமாள் கோவிலில் ‘மடப்பளி’ வேலை என்று அழைக்கப்படும் ‘சமையல்’ வேலையில் எடுபிடியாக இருந்துள்ளார். பின்னர் ‘விஷ்ணு சஹஸ்ர நாமம்’ மட்டும் கற்றுக்கொண்டு சென்னையில் வாழ்க்கை தேடி வந்துள்ளார். எங்கள் காலனியில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அர்ச்சகர் கிடைக்காமல் திண்டாடியபோது இவரைப் போட்டுள்ளார்கள். சில மாதங்களில் ஒரு சில அர்ச்சனைகளையும் கற்றுக்கொண்டுள்ளார். சஹஸ்ரநாமம், சில அர்ச்சனைகள் தவிர வேறு ஒன்றும் தெரியாது.

காலம் ஓடியது. வேலை விஷயமாக நான் ஊர் சுற்றலில் இருந்தேன். இந்தியாவுக்கு எப்போதாவது வரும்போது இந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் இவரது நிலையில் சிறு வளர்ச்சி இருந்தது. தேர்ந்த அர்ச்சகருக்கு உண்டான கம்பீரம் முதலியன இவரிடம் இல்லாவிட்டாலும் அவரது வேலைகளில் ஒரு அக்கறையும் கரிசனமும் இருந்ததைக் கண்டிருக்கிறேன்.

இந்தமுறை சென்னை சென்றபோது இவரைப் பார்த்தேன். ‘வாங்கோ, எப்படி இருக்கேள் ? பையங்கள் எப்படி இருக்கா ? பெருமாள் தயவுல இங்கெ பக்கத்துல ஒரு வீடு வாங்கியிருக்கேன். அவசியம் ஆத்துக்கு வாங்கோ’, என்றார். பையனையும் அருகில் ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகக் கூறினார்.

உண்மையாகவே மன நிறைவாக இருந்தது. அவர் வந்து சேர்ந்தபோது எப்படி இருந்தார், அவர் குடும்ப நிலைமை என்ன ? என்பது நன்கு தெரிந்த எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. மேலும் நன்றாக வர வேண்டும் என்று பெருமாளைப் பிரார்த்தித்தேன்.

ஒரு நிமிடம் யோசித்தேன். இவர் இந்த நிலைமைக்கு வர சுமார் ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளது. பெரிய படிப்பெல்லாம் இல்லை; பணமும் இல்லை; கோவில் வேலையும் அவ்வளவாகத் தெரியாது; குடும்பம் வேறு; ஊரில் வறுமை; ஆனால் பிழைக்க வேண்டும். இன்னமும் கீழே செல்ல வழி இல்லை. மேலே எழும்பித்தான் ஆக வேண்டும். அதற்கான முயற்சி அவரிடம் இருந்தது.

இவர் தனது சொந்த முயற்சியாலேயே மேலே வந்துவிட்டாரா ? அல்லது இவர் வந்து சேர்ந்த சமூகம் அவரைப் பார்த்துக்கொண்டதா ? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நிச்சயமாக சமூகம் தான் காரணம். அவரிடம் விஷயம் இல்லை என்று நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவரைப் போஷித்தது அந்தச் சமூகம். அவரையும் அவரது குடும்பத்தையும் பட்டினி போடாமல் பார்த்துக்கொண்டது அது.

முன்னரெல்லாம் வேத பாட சாலை என்று உண்டு. வசதியற்ற பல எழைக்குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி விடுவார்கள். வேதம் படித்து வேதத்தை வாழ வைக்கவேண்டும் என்று எல்லாம் இல்லை. ஒரு வேளை கூட பிள்ளைகளுக்குச் சோறு போட முடியாத பிராம்மணக் குடும்பங்கள் பல உள்ளன. முன்னேறிய சமூகம் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் இந்த உலகில் பிழைக்க ஒரே வழி பாரம்பரிய மடங்கள் நடத்திய பாட சாலைகள்தான். ஏனெனில் அங்கே உணவும் உறைவிடமும் கல்வியும் இலவசம்.

ஒரு நியதி உண்டு. பிள்ளைக்குப் பூணூல் போட்டுக் கொண்டு விட வேண்டும் என்ற ஒரு நடைமுறை உண்டு. அதற்கும் வசதியில்லாத பல குடும்பங்கள் மடங்களின் ஆதரவில் ‘சமஷ்டி உபநயனம்’ என்று பல பிள்ளைகளுக்கு ஒரு சேரப் பூணூல் போட்டுப் பின்னர் வேத பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றனர். ( டாம்பீகமாக செலவு செய்து உப நயனம் செய்யும் வழக்க உள்ளவர்கள் ஒரு கணம் சிந்திக்கலாம்).

இன்னொரு வழக்கமும் உண்டு. பாட சாலைப் பிள்ளைகள் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் வீட்டில் உணவு உண்ண வேண்டும் என்றும் ஒரு வழக்கம் இருந்துள்ளது. நாங்கள் நெய்வேலியில் இருந்த போது அப்படி எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை ஒரு பையன் வந்து உணவு உண்டு செல்வான். அடுத்த நாள் இன்னொருவர் வீட்டில். வசதி இல்லாதவர்களை சமூகம் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு நியதி இருந்தது.

அப்படி ஒரு பிள்ளையிடம் பேசிக்கொண்டிருந்தேன். லீவு விட்டு விட்டார்களே, ஊருக்குப் போகவில்லையா என்று கேட்டேன். லீவு விட்டாலும் ஊருக்கு வராதே என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றும் வந்தால் அவர்களது ஒரு வேளை உணவும் பகிர்ந்துகொள்ள வேண்டும்; எனவே வர வேண்டாம் என்றும் கூறிவிட்டார் என்று சொன்னான். அந்தப் பையனுக்கு 7 வயது இருக்கலாம். அவன் அருகில் இன்னொரு வாண்டு வேஷ்டி கட்டிக்கொண்டிருந்தது. 5 வயது அதற்கு. ‘எங்கே என்னடா பண்றே?” என்று கேட்டு வைத்தேன். “உம்மாச்சி சுலோகம் கத்துத் தறா. சாதம் போடறா. எப்பயானும் கன்னமுது ( பாயசம் ) குடுக்கறா. அதான் இங்கே இருக்கேன்”, என்று மழலை மாறாமல் சொன்னது அது.

மனது கேட்கவில்லை. ஒரு 50 ரூபாயை அதனிடம் அளித்தேன். ‘அம்மா வைவா. யார் காசு குடுத்தாலும் வாங்கிக்க கூடாதுன்னு சொல்லியிருக்கா”, என்று சொல்லி வேஷ்டியைப் பிடித்துக்கொண்டே ‘அடுத்தது நான் தான் பாட்டிங்’ என்று ஓடியது.

அந்தப்பிள்ளை எந்த விதத்தில் ‘முன்னேறிய’ வகுப்பு என்று அரசாங்கம் கூறுகிறது என்று தெரிந்தவர்கள் கூறலாம்.

பாடசாலைப் பிள்ளைகள் கதைகள் ரொம்பவும் சோகமானவை. அவ்வப்போது அவர்களுடன் நேரம் செலவிடுவது வழக்கம். வெளி நாடுகளில் கிடைக்கும் சில பேனாக்கள் , கலர் பென்சில்கள் முதலியன வாங்கி வந்து அவர்களிடம் தருவது வழக்கம். அப்போது சிலரது குடும்பங்கள் பற்றி விசாரிப்பேன். ‘தான்’ என்ற அகங்காரம் கொண்டுள்ள யவரும் இந்தக் கதைகளைக் கேட்டால் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை ஒரு நொடியில் உணர முடியும். அதுவும் சின்னப் பிள்ளைகள் சொல்லக்கேட்டால் அதைவிட சன்யாசம் என்று ஒன்று தனியாக வாங்கிக்கொள்ள வேண்டாம்.

அர்ச்சகர் விஷயத்திற்கு வருவோம். இவர் சிங்கப்பூர் போன்ற ‘Meritocracy’ மட்டுமே சார்ந்த சமூகத்தில் இருந்திருந்தால் இவரது நிலை என்ன என்று எண்ணிப் பார்த்தேன். தூக்கம் வர வில்லை.

சிதம்பரம் தீக்ஷிதர்கள் விவகாரம்

சிதம்பரம் தீக்ஷிதர்கள் வழக்கில் கருத்துக் கூறியுள்ள ‘பெரியவர்கள்’ வழக்கம் போல் பழைய பல்லவியையே பாடியுள்ளனர். அதான் சார் ‘பார்ப்பன ஏகாதிபத்தியம்’ இன்ன பிற. இது உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்புக்குப் பின்னும் அப்படியே பேசியுள்ளனர்.

சரி, என்னதான் இவர்கள் பிரச்சனை ? தீக்ஷிதர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியா அல்லது நடராஜர் கோவில் முன்னேற வேண்டுமே என்று தவறுதலாக ஏதாவது அக்கறை வந்து விட்டதா ? அல்லது தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களையும் செம்மையாக உயர்த்தி விட்டோமே அது போல் சிதம்பரம் கோவிலையும் செம்மைப் படுத்த வேண்டும் என்று இந்து சமய அற நிலையத்துறைக்கு அக்கறை வந்துவிட்டதா என்றெல்லாம் நீங்கள் குழம்ப வேண்டாம்.

அது எப்படி பார்ப்பான் ஒரு கோவிலுக்கு ஏகோபித்த உரிமை கொண்டாடுவது என்ற ‘செக்யூலர்’ செக்கு மாட்டுச் சிந்தனை. வேறொன்றுமில்லை.

இதில் விசேஷம் என்னவென்றால் தீக்ஷிதர்கள் பார்ப்பனர்கள் என்று கருதப்படுவதில்லை. இவர்கள் மற்ற ப்ராம்மணர்களுடன் திருமணம் முதலிய உறவுகள் வைத்துக்கொள்வதில்லை. 3000 குடும்பங்கள் என்று அக்காலத்தில் இருந்துள்ளனர். தற்போது 350 குடும்பங்களே உள்ளனர். இருந்தும் மற்ற அந்தணக் குடும்பங்களுடன் அவர்கள் உறவுகளில் இல்லை.

இன்னொன்றும் கவனிக்க வேண்டும். மற்ற ப்ராம்மணர்களும் சிதம்பரம் கோவிலுக்குள் பூசை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சிதம்பரம் மட்டும் அல்ல. வேறு எந்தப் பாரம்பரியக் கோவிலிலும் கூட தீக்ஷை பெற்றவர்களே பூசை செய்ய முடியும். அதற்காக ஆகம சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தீக்ஷிதர்களை விடுங்கள். ஒரு பெருமாள் கோவில் பட்டாச்சாரியாரை எடுத்துக்கொண்டால் கூட அவரும் தன் குடும்பத்தில் வேறொரு பட்டாச்சாரியார் குடும்பத்தில் தான் திருமண சம்பந்தம் செய்துகொள்வாரேயொழிய மற்ற அந்தணக் குடும்பங்களில் செய்துகொள்ள மாட்டார். இதுஅவர்களுக்குள் உள்ள கட்டுப்பாடு.

இன்னொரு விஷயம். கோவிலில் மிகப் பெரிய செலவில் கும்பாபிஷேகங்கள் நடத்தும் பெரிய தனவந்தர்கள் கூட, அந்தணர்களாக இருப்பினும், கோவிலில் கர்ப்பக்கிருகத்துள் செல்லத் தடை உள்ளது. ஏனெனில் அவர்கள் தீக்ஷை பெறவில்லை என்பதே அது. தீக்ஷை பெற சாதி முக்கியமில்லை. ஆசார அனுஷ்டானங்கள் அவசியம். இது பற்றிப் பேசினால் அதற்கு என்று ஒர் தனிப் பதிவு போட வேண்டும்.

சிதம்பரம் கோவிலுக்கு வருவோம்.

தீக்ஷிதர்களிடமிருந்து கோவிலைப் பிடுங்க வேண்டும் என்று அரசாங்கங்கள் பல முறை முயன்றுள்ளன. ஆங்கில அரசு காலம் தொட்டே இந்த முயற்சிகள் நடந்துள்ளன. அக்காலம் தொட்டே வழக்குகள் மூலம் அரசு கோவிலை எடுத்துக்கொள்ளப் பார்தது. முதல் வழக்கு 1885-ல் போடப்பட்டதாக அறிகிறேன். அந்தத் தீர்ப்பு தீக்ஷிதர்களுக்கு எதிராக அமைந்தது. பின்னர் 1925-ல் இந்து அறநிலையத் துறை அமைக்கப்பட்டது. அது கோவிலைத் தன் ஆளுமையில் கொண்டுவர முயற்சி செய்தது. சில அதிகாரங்கள் அரசிடம் இருக்கும் என்று அறிவித்தது. பின்னர் 1951-ல் அரசு தனியார் கோவில்களை அரசுடைமையாக்க முயற்சி செய்தது. தீக்ஷிதர்கள் எதிர்த்தனர். 1959-ல் சென்னை உயர் நீதிமன்றம் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. அரசு எடுக்க முடியாது என்றும் தீக்ஷிதர்கள் தனியான அமைப்பினர் என்றும் அரசு எடுத்துக்கொள்வது மக்களின் வழிபாட்டுச் சுதந்திரத்தில் கை வைப்பது போன்றது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. கோவில் தப்பியது.

அரசு விடவில்லை. 1982-ல் மீண்டும் எடுக்க முயற்சி. 2009-ல் தி.மு.க. அரசு மீண்டும் எடுக்க முயற்சி. தீக்ஷிதர்கள் வழக்கு தொடர்ந்தனர். 2009-ல் சென்னை உயர்நீதி மன்றம் தீக்ஷிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. ஆனால் இது 1952-ல் தில்லி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இருந்தது. எங்காவது மாநில நீதிமன்றம் தில்லி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க முடியுமா ? தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும். ஆனால் 2014-ல் தில்லி உச்ச நீதி மன்றம் 2009 சென்னை நீதி மன்றத்தைக் கடுமையாகச் சாடி ஒரு தீர்ப்பளித்தது. ‘நீதிமன்ற ஒழுங்கீனம்’  (Judicial Indiscipline ) என்று கடிந்துகொண்டு கோவிலை அரசின் பிடியிலிருந்து விடுவித்தது.

இதில் பார்ப்பன சூழ்ச்சி எங்கே வந்தது ?

இது ஒரு நல்ல தீர்ப்பு. இதை ஒட்டி இன்னும் பல வழக்குகள் தொடரப்போவதாகத் தெரிவிதுள்ளார் திரு.சுப்பிரமணியம் சுவாமி. தெய்வம் நின்று தீர்ப்பு சொல்லும் என்று புரிகிறது.

இது ஏன் ஒரு நல்ல தீர்ப்பு ? ஒரு ஆழ்வார் மங்களாசாஸனம் செய்த கோவிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்களுடன் அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் ஒன்றை என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.

அரசு கோவிலில் இருந்து வெளியேறினால் கோவிலுக்கு நல்லது. ஏன் ?

  • கோவிலின் ‘ஈ.ஓ’ என்ற பெயரில் குப்பை கொட்டும் (உண்மையிலேயே குப்பை தான் ) ‘நல்லவர்’களுக்கு அவர்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் போட பணம் தர வேண்டியதில்லை.
  • தேர்த் திருவிழா மற்றும் உற்சவங்களுக்கு உள்ளூர் எம்.எல்.ஏ.க்களுக்கு ‘அழைப்பு’ தந்து அவர்களது பரிவாரங்களுக்கு ‘அழ’ வேண்டியதில்லை.
  • கோவிலில் பாழ் பட்டுக் கிடக்கும் குளத்தைக் கண்டு கொள்ளாத ‘அற’ நிலையத் துறை, நல்லவர்கள் கூடி குளம் வெட்டி நீர் நிறைந்த பின் மீன் ஏலம் விட மட்டும் வரும் போது பொங்கி எழுந்து இரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்ள வேண்டியதில்லை.
  • கோவிலில் ஒரு சின்ன மர வேலை செய்ய வேண்டும் என்றால் கூட கோவிலின் மரத்தை வெட்ட வனத்துறை முதல் உலக வங்கி வரை சென்று ‘அழ’ வேண்டியதில்லை.
  • வருடாந்திர உற்சவ அழைப்பிதழ்களில் எம்.எல்.ஏ, ஈ.ஓ. முதலான பேர்வழிகளின் திரு நாமத்தைப் போட வேண்டியதில்லை.
  • உற்சவ மூர்த்திக்கு இணையாக இவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டியதில்லை.

சரி. அப்படியென்றால் சிதம்பரம் கோவிலில் நிதி முறைகேடு முதலியன நடைபெறவில்லையா ? என்ற கேள்வி எழுவது இயற்கையே.

சான்றோர் குழு ஒன்று அமைக்கப்பட்டு அது கோவிலின் வரவு செலவுகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறது. அதன் வரவு செலவுக் கணக்கை ஆண்டுதோறும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்தால் போதாதா ? வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகள் இருந்தால் போதுமே ? தணிக்கை செய்தால் போதாதா ?

இது போகட்டும். தீக்ஷிதர்களின் சாதி விஷயம் வருவோம். ‘தில்லை வாழ் அந்தணர்கள்’ என்று கொண்டாடப்பட்ட இவர்கள் ஸ்மார்த்த பிராம்மணர்களா என்றால் இல்லையாம். இவர்கள் ஆதி சைவர்களாம். இப்படி ஒரு புத்தகம் கூறுகிறது. ‘திராவிட இயக்கம்’ கவனத்திற்கு.

ஆனால் ஒன்று. தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலைக் காக்க பல தியாகங்கள் செய்துள்ளனராம். 13-ம் நூற்றாண்டில் கோவிலுக்குள்ளேயே வைத்து கொல்லப்பட்டனர். அவர்கள் பல சிலைகளைக் கோவிலுக்குள் மறைத்து வைத்துத் தங்கள் உயிரைக்கொடுத்துக் காப்பாற்றினர் என்று சமூக ஆய்வாளர் அரவிந்தன் நீலகண்டன் கூறுகிறார். பின்னர் ஆங்கில அகழ்வாராய்ச்சியாளர்கள் அந்தச் சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர் என்று ஜாப் தாமஸ் என்பவர் எழுதிய ‘Thiruvenkaadu Bronzes; ( திருவெண்காடு வெண்கலங்கள் ) என்ற நூலில் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

ஆக திராவிட இயக்கங்கள் தீக்ஷிதர்களை ஆதரித்தால் யாருடைய கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று அறிந்துகொள்ள சிதம்பரம் நடராசர் அருள் புரிவாராக.

என்ன ? மற்ற மதங்களின் வழிபாட்டுத் தளங்களா ? அவற்றையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமா ? என்ன சார், அது மதச்சார்பின்மை இல்லயே ?

%d bloggers like this: