ஔரங்கஜீப் பணிந்த கதை

Image

“அரசனே, கோவிலைத் தகர்க்கும் முன் ஒரு முறை நின்று நிதானிக்கவும். பின்னர் விளைவுகளை எதிர் நோக்க மனதைத் திடப்படுத்திக் கொள்ளவும்”. 

இப்படி எச்சரிக்கப்பட்டவர் ஔரங்கஜீப் என்ற முகலாயக் கொடுங்கோலன்.

அப்படி எச்சரிக்கை வந்தவுடன், இந்தியாவின் முடிசூடா மன்னனாக இருந்த ஔரங்கஜீப் வாழ்க்கையில் முதல் முறையாகப் பின்வாங்கினான். பாரதத்தில் பல கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கிய முகலாயச் சக்கரவர்த்தி ஒரு நிமிடம் தன் வாளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். முகம் சிறிது வியர்த்திருந்தது.

சரி, அப்படி ஔரங்கஜீப்பையே எச்சரித்தவர் யார் ?

ஏதோ ஒரு இந்து அரசன் அல்ல. யார் என்று காணும் முன் வரலாற்றை சற்று பார்ப்போம்.

ஆந்திராவில் காக்கதீய மன்னர்கள் ஆண்டு வந்த நேரம். ஆண்டு கி.பி.1143.

மன்னன் வேட்டையாடிவிட்டு ஒரு கானகம் வழியாக வந்துகொண்டிருந்தான். அப்போது ‘ராம் ராம்’ என்று ஒரு புதரிலிருந்து குரல் வந்தது. மன்னன் என்னவென்று பார்க்க அந்தப் புதரிலிருந்து அனுமன் உருவம் ஒன்று தென்பட்டது. ‘ராம் ராம்’ என்ற நாம ஜபம் அந்த அனுமன் சிலையிலிருந்து வந்துகொண்டிருந்தது.

அதை அடுத்து அம்மன்னன் ஒரு கோவில் எழுப்பினான்.

நானூறு ஆண்டுகள் கழித்து மேலே சொன்ன ஔரங்கஜீப்பின் தளபதிகள் இந்தக் கோவிலை இடிக்க முயன்றனர்.

அவர்களால் கோவிலின் மதில் சுவரைக் கடந்து உள்லே செல்ல முடியவில்லை.

இந்தத் தகவல் ஔரங்கஜீப்பிற்குத் தெரிவிக்கப் படுகிறது.

திடுக்கிட்ட மன்னன் தானே படைக்குத் தலைமை வகித்துக் கோவிலைத் தகர்க்க முன்வந்தான்.

அப்போது தான் நாம் மேலே சொன்ன எச்சரிக்கை கேட்டது.

மன்னன் ஔரங்கஜீப் திடுக்கிட்டான். எச்சரிக்கை விடுத்தது யார் என்று விசாரித்தான்.

மனிதக் குரலாகத் தெரியவில்லை. ஏனெனில் அது ஒரு சிம்ம கர்ஜனையாக இருந்தது.

தன் படையில் இருந்த இந்து வீரர்களை உள்ளே அனுப்பி என்னவென்று பார்க்கச் சொன்னான்.

உள்ளே சென்று வந்த வீரர்கள் “உள்ளே யாரும் இல்லை, அனுமன் சிலை தவிர வேறு ஒருவரும் இல்லை”, என்று தெரிவித்தனர்.

நிலைமை தன் அறிவிற்குப் புலப்படாத சில விஷயங்களால் நிரப்பப்பட்டுள்ளது என்று அறிந்துகொண்டான் ஔரங்கஜீப். தனது மதம் கூறும் கடவுள் அமைப்பு தவிர்த்த பிற கடவுளர், அவை சார்ந்த பெரிய ஒரு கலாச்சாரம் முதலியனவும் ஆழ்ந்து இந்த மண்ணில் பொதிந்துள்ளது என்றும் அவன் அறிவிற்கு எட்டியது.

வாழ்வில் முதல் முறையாகப் பயம் அவனைப் பிடித்தது. தன் தந்தையையும், உடன் பிறந்தோரையுமே கொன்று ஆட்சியில் அமர முடிந்த அவன் தன்னுடைய உயிர் என்றவுடன் பின் வாங்கினான்.

பயம் அப்பிக்கொள்ள தன் படையுடன் வெளியேறினான்.

அந்தக் கோவில் இப்போதும் செக்குந்தராபாத் அருகில் உள்ளது. ‘கர் மன் காட்’ என்று அழைக்கபடுகிறது அந்தக் கோவில். அக்கோவிலின் விமானத்தில் சில சீன உருவங்களும் தென்படுகின்றன. அவை குறித்த வரலாறு தெரியவில்லை.

இன்னொரு புதுமை, விமானத்தில் யோக ஆஞ்சனேயர் உள்ளார். அவரது இரு புறங்களிலும் ஒட்டகங்கள் உள்ளன. அதன் பின் உள்ள வரலாறும் தெரியவில்லை.

கோவிலின் புராதனதைப் பறை சாற்றக் கருங்கல் மண்டபங்கள் உள்ளன. ஆனால் நமது ‘பகுத்தறி’வின் பரிணாம வளர்ச்சியால் அவற்றிற்கு மேல் ‘நெரொலக்’ (Nerolac ) பெயிண்ட் அடித்துள்ளோம். அதைவிட முக்கியமாக இந்த வாரம் ஒரு கபடி ஆட்டம் நடக்கிறது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியைப் பறைசாற்றும் சுவரொட்டிகளும் கோவிலின் சுவர்களில் காணப்பட்டன. நாம் குரங்கிலிருந்து வந்தவர்கள் தாம் என்பதை மனிதன் பல நேரங்களில் வெளிப்படுத்துகிறான். வாழ்க மானுடம்.

சரி. அது என்ன   ‘கர் மன் காட்’  என்று பெயர் ?  “मन्ढिर थोद्ना है राजन्, थो कर् मन् घट् ” என்று தான் அன்று அனுமன் சிலையிலிருந்து கர்ஜனை வந்ததாம். அதனாலேயே கோவிலுக்கு அந்தப்பெயர்.

இதெல்லாம் நமது வரலாற்றுப் புத்தகங்களில் இல்லையே அது ஏன் ?

மதச்சார்பின்மையின் மாகாத்மியங்களில் இதுவும் ஒன்று போல.

ஒரு மாபெரும் மன்னன் பணிந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடத்தில் சாதாரண மக்கள் தங்களது சாதாரணக் கவலைகளுக்கு விடை வேண்டிக் கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். கை ரேகை பார்க்கும் சோதிடர்களிடம் நிகழ்காலத்தில் தங்கள் கைகளைக் கொடுத்து, எதிர்காலம் வேண்டி நிற்பதைப் பார்க்க மனது பாரமானது.

ஆந்திரம் வந்தால் அவசியம் சென்று வாருங்கள் ‘கர் மன் காட்’ கோவில்.

%d bloggers like this: