நீட் வேண்டாம் என நவிலற்க

தமிழில், தமிழ் நாட்டில் சொல்லக்கூடாத சொல் ‘நீட்’ (#NEET). அப்படி என்ன பாவம் செய்தது அது? பாவம் செய்தர்வர்கள் ராஜாஜியின் அறிவுரைப்படி விஷக்கிருமிகளைப் பரவவிட்டவர்கள். அவர்களை விட்டுவிட்டு மாணவர்களின் பொதுவான கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்.

மருத்துவத்திற்கு நுழைவுத்தேர்வு தேவையா? 

மருத்துவத்திற்கு நுழைவுத் தேர்வு புதிதல்ல. சில ஆண்டுகள் முன்புவரை இருந்தது தான். நல்ல தரமான மருத்துவர்கள் உருவாக வேண்டும் என்பதாலும், திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதாலும் அந்த முறை உருவானது. அதனைக் கெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. தேர்வை ரத்து செய்தார். +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி என்று கொண்டுவந்தார். புரியாமலே பாடத்தைப் படித்து, மனப்பாடம் செய்து, அப்படியே தேர்வுத்தாளில் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் மாணவர்கள் செல்ல வழிவகுத்தார் கலைஞர்.

ஏன் மருத்துவத்திற்கு நுழைவுத்தேர்வு ரத்தானது?

மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டம் முதலியவற்றில் படித்து வரும் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. காரணம் அத்தேர்வில் மாணவர்களின் நினைவுத் திறன் சோதிக்கப்படவில்லை, அறிவாற்றல் சோதிக்கப்பட்டது. புரியாமல் படித்தாலும், மனப்பாடம் செய்து படித்தாலும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற முடியாது. இந்த நுழைவுத் தேர்வுக்கென்று நகர்ப்புறங்களில் தனியான பயிற்சிக் கூடங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் இந்தப் பயிற்சிக் கூடங்களில் நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்பதையும், குறித்த நேரத்திற்குள் சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் என்று பலவற்றைக் கற்றனர். இது கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாமலானது. இதனால் நுழைவுத் தேர்வை நிறுத்துகிறோம் என்று அரசு அறிவித்தது.

ஆனால் உண்மை அதுவல்ல.

பள்ளிகளில் ஆசிரியர்கள் நல்ல முறையில் பாடம் நடத்தியிருந்தால், மாணவர்கள் புரிந்து படித்திருந்தால் நுழைவுத்தேர்விற்கான பயிற்சிப் பள்ளிகளே தேவைப்பட்டிருக்காது. ஆசிரியர் நியமனம் முதற்கொண்டு அரசியல் தலையீடு காரணமாக ( அரசு மந்திரிகள், அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் நியமனங்கள் செய்ததால்), ஆசிரியர்களின் தரம் அதலபாதாளத்திற்குச் சென்றது.

பாடத்திட்டம் குப்பை என்று சொல்லும்படியான சமச்சீர் கல்வி என்னும் முறையில் கெடுக்கப்பட்டது. தமிழக அரசின் பாடத்திட்டம் சி.பி.எஸ்.சி ( நடவணரசப்) பாடத்திட்டத்திற்கு இணையாக ஆக்கப்படும் என்று கருணாநிதி அரசு அறிவித்து, பாடத்தின் தரம் குறைக்கப்பட்டது. 8-9 வகுப்புகள் வரை யாரையும் தோல்விபெறச் செய்யக் கூடாது என்று உத்தரவானது. இதனால், அடிப்படையே தெரியாத, புரியாத மாணவர் கூட்டமும், மாணவர்களுக்குப் போதிக்க வலுவற்ற ஆசிரியர் கூட்டமும் உருவானது.

நுழைவுத் தேர்வு ரத்து, பாடத்திட்டத்தின் தரம் குறைப்பு என்கிற இரு அஸ்திரங்களால் மாணவர்களை +2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கலாம் என்று ஆனது. இதனால் நாமக்கல், ஈரோடு போன்ற ஊர்களில் கோழிப்பண்ணைகள் போல் உறைவிடப் பள்ளிகள் தோன்றின. மாணவர்கள் கொடுமைப் படுத்தப்பட்டு படிக்க வைக்கப்பட்டார்கள். நாளொன்றுக்கு 14-15 மணி நேரம் படிப்பு, மனப்பாடம் மட்டுமே. விளைவு : 1200க்கு 1190 என்கிற அளவில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றார்கள். மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்தார்கள்.

ஆனால், கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு இதனாலும் எந்தப்  பலனும் இல்லை.

நாமக்கல், ராசிபுரம் மாணவர்களும் உழைத்துத் தானே படித்தார்கள்?

மனப்பாடம் செய்து படித்தார்கள். பாடத்திட்டம் எளிமை, தினமும் மனப்பாடம், தவறினால் பிரம்படி என்கிற அமைப்பில் அவர்கள் அளவுக்கதிகமான மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலத்தில் 200க்கு 199 என்றெல்லாம் மதிப்பெண்கள் காணக்கிடைத்தன. இப்பள்ளிகளில் சேர லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும்.

சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டமும், தேர்வுகளும் என்ன வாழ்ந்தன?

சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டமே மனப்பாடத்தின் அடிப்படையை ஒட்டியதல்ல. ஹாட்ஸ் (HOTS – Higher Order Thinking Skills) என்பன போன்ற நுண்ணறிவுத் திறன் அடிப்படையில் பல கேள்விகள் இடம்பெறும் வகையில் இப்பாடத் திட்டம் அமைகிறது. மாணவர்களின் மனப்பாடத் திறத்தை மட்டுமே நம்பி இப்பாடத்திட்டமும், தேர்வுகளும் இல்லை. இந்தப் பாடத்திட்ட மாணவர்களே உலகின் மிகக் கடினமான தேர்வான ‘ஐ.ஐ.டி-ஜெ-ஈ.ஈ’ தேர்வுகளில் முன்னணியில் நிற்கின்றனர். அதற்கான சிறப்புப் பயிற்சிகளும் எடுத்துக்கொள்கிறார்கள் என்றாலும், மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் இத்தேர்வில் பெருமளவில் வெற்றிபெறுவதில்லை. இதே போல் AIIMS என்கிற தேசிய அளவிலான மருத்துத் தேர்விலும் , AFMC ( Armed Forces Medical College) நுழைவுத் தேர்விலும், NDA – National Defence Academy நுழைவுத் தேர்விலும் இந்த மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

மேற்சொன்ன தேர்வுகளில் எந்த மாநிலத்தின் பாடத்திட்ட மாணவர்களும் வெற்றி பெறுவதில்லையா?

வெற்றி பெறுகிறார்கள். குறிப்பாக, ஆந்திரப் பாடத்திட்ட மாணவர்கள் வெற்றிபெறுகிறார்கள். அவர்களின் பாடத்திட்டம் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தை ஒத்திருக்கிறது. பீகார், ராஜ்ஸ்தான் முதலான பாடத்திட்ட மாணவர்களும் வெற்றி பெறுவதைக் காண் முடிகிறது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த, தமிழ் நாட்டுப் பாடத்திட்ட மாணவர்கள், குறிப்பாக தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் இத்தேர்வுகள் எதிலும் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. BITS- (Birla Institute of Technology and Science) நடத்தும் நுழைவுத் தேர்விலும் இதே நிலை தான்.

ஆக, பிரச்சினை, தமிழக அரசின் பாடத் திட்டம், அக்கறையில்லாத ஆசிரியர்கள், புகுந்து கெடுக்கும் அரசியல்வாதிகள். இவற்றால் பாதிக்கப்படுவது அப்பாவி மாணவர்கள்.

எல்லாருக்கும் ஏன் இலவசமாக சி.பி.எஸ்.ஈ. கல்வி கொடுக்கவில்லை? கொடுத்திருந்தால், எங்களாலும் போட்டியிட்டிருக்க முடியுமே?

Rajivநியாயமான கேள்வி. இதிலும் அரசியல் தான்.  ராஜீவ் காந்தி பிரமராக இருந்த போது ‘ஜவஹர் நவோதய வித்யாலயா’ என்று பாரதத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பள்ளி துவங்கினார். பள்ளிக்கூடம் கட்ட இடம் மட்டுமே மாநில அரசு தர வேண்டும். மற்ற அனைத்தையும் மத்திய அரசு செய்யும். அந்த மாவட்டத்தின் ஏழை மாணவர்களுக்குப் பொருளாதார, கல்வித் தகுதியின் அடிப்படையில் இலவசமான உறைவிடக் கல்வி வழங்க இது வழி செய்தது. பாரதத்தின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான மாவட்டங்களில் இப்பள்ளி உள்ளது. தமிழ், ஆங்கிலம் தவிர, ஹிந்தி மொழியும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், தமிழ் நாட்டில் இதற்கு அரசியல் வியாபாரிகள் இடம் அளிக்கவில்லை. எம்.ஜி.ஆர். கொண்டுவந்த மெட்ரிக் கல்விச் சாலைகளின் தனியார் உரிமையாளர்களின் நெருக்குதலாலும், எதிர்க்கட்சியான தி.மு.க.வின் எதிர்ப்பாலும் (ஹிந்தி காரணம் என்றார்கள்) நியாயமாகத் தமிழகத்திற்குக் கிடைத்திருக்க வேண்டிய தரமான சி.பி.எஸ்.ஈ. கல்வி கிடைக்காமல் ஆனது.

நவோதய வித்யாலயா – ஒரு கணக்கு

 1. மத்தியப் பிரதேசம் = 50
 2. சத்தீஸ்கர் = 17
 3. ஒரிசா = 31
 4. பஞ்சாப் = 21
 5. ஹிமாசல் பிரதேசம் = 12
 6. ஜம்மு காஷ்மீர் = 18
 7. தெலங்கானா = 9
 8. கர்னாடகா = 28
 9. கேரளா = 14
 10. புதுச்சேரி = 4
 11. அந்தமான் = 02
 12. லட்சதீப் = 01
 13. ராஜஸ்தான் = 34
 14. ஹரியானா = 20
 15. டெல்லி = 02
 16. உத்திரப் பிரதேசம் = 71
 17. உத்தராஞ்சல் = 13
 18. பீஹார் = 39
 19. ஜார்க்கண்ட் = 24
 20. மேற்கு வங்காளம் = 18
 21. மஹாராஷ்டிரம் = 33
 22. குஜராத் = 26
 23. கோவா = 02
 24. தமன் தையு = 02
 25. தாத்ரா நக ஹவேலி = 01
 26. மேகாலயா = 08
 27. மணிப்பூர் = 11
 28. மிசோரம் = 08
 29. அருணாச்சலப் பிரதேசம் = 16
 30. நாகாலாந்து = 11
 31. திரிபுரா = 04
 32. சிக்கிம் = 04
 33. அசாம் = 28
 34. தமிழ் நாடு = 0

ஒருவேளை தமிழ் நாட்டில் ஜவஹர் நவோதய பள்ளிகள் இருந்திருந்தால் எவ்வளவு பள்ளிக்கூடங்கள் கிடைத்திருக்கும்?

தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு ஒன்று என்றாலும், 32 பள்ளிகள் கிடைத்திருக்கும். 1986ல் இருந்து, ஆண்டுக்கு 100 மாணவர்கள் +2 முடித்து வெளியேறுகிறார்கள் என்று கொண்டால், கடந்த 30 ஆண்டுகளில் (30x32x100), குறைந்தது 96,000 ஏழைத் தமிழ் மாணவர்கள் இலவசமாக சி.பி.எஸ்.ஈ. கல்வி பெற்றிருக்க முடியும். இதற்க்குத் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லை.

சி.பி.எஸ்.ஈ.யில் படிக்க பெரும் பணம் தேவை இல்லையா?

இல்லை. மேற்சொன்ன நவோதயா கல்விக்குத் தமிழகம் இடம் அளித்திருந்தால், தரமான சி.பி.எஸ்.சி. கல்வி அனைத்து மாவட்டத்திற்கும் கிடைத்திருக்கும். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளில் அதிக அளவில் ஜவஹர் நவோதய பள்ளிகள் திறக்க ஆண்டுதோறும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.estt_nvs__1

தற்போது அரசாங்க மருத்துவர்களே நீட் வேண்டாம் என்று சொல்கிறார்களே?

சில மருத்துவர்களிடம் பேசினேன். நேர்மை இல்லை என்று மட்டும் சொல்வேன்.

நீட் இல்லாமல் ஆனால், யாருக்கு நன்மை?

பெரும் பண முதலைகளுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரி என்னும் பெயரில் பணம் அச்சடிக்கும் அரசியல் வியாபாரிகளுக்கும் பெரும் நன்மை. உதா: எஸ்.ஆர்.எம். பல்கலையின் வேந்தர் மருத்துவக் கல்விக்காகப் பல மாணவர்களிடம் கோடிக்கணக்கான பணம் பெற்று தற்போது சிறையில் இருக்கிறார். இன்னும் பலர் வெளியில் உள்ளனர்.

மாநிலப் பாடத்திட்டம் கேவலமா? யார் சொல்வது? 

இந்தக் காணொளியைப் பாருங்கள். முந்தைய மாணவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

நீட் தேர்வை முதலில் அமல் படுத்தியது யார்?

சென்ற காங்கிரஸ் அரசு. அந்த அரசு செய்த ஓரிரு நல்ல செயல்களில் ஒன்று ஆதார் அட்டை, இன்னொன்று நீட் தேர்வு.

நீட் – மோதி – தொடர்பென்ன? 

ஒன்றும் இல்லை. இப்போதைய அரசு முந்தைய அரசின் கொள்கை முடிவுகளை அமல்படுத்துகிறது. அவ்வளவுதான்.

நீட் விஷயத்தைல் சீமான், ஸ்டாலின் முதலானவர்கள் பங்கெடுத்துப் போராடுவது ?

ஒன்றுமறியா மாணவர்களைப் பலிவாங்கித் தங்களது அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள். விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அதே அழிவு வழிமுறை. நீட்டை ஆதரித்துக் கனிமொழி ராஜ்யசபையில் பேசியுள்ளார். (“There are a lot of problems with these medical colleges. We don’t have enough medical colleges and there is a problem of capitation and management fee and it is very high.” 01-ஆகஸ்டு-2016 அன்று கனிமொழி பேச்சு.)

தனது உடல் நலம் பேண ஸ்டாலின் லண்டன் சென்று வருகிறார். ஆனால், நீட் வேண்டாம் என்று போராடுகிறார்களாம். காங்கிரஸ் அரசுகளும், கம்யூனிஸ்ட் அரசுகளும் தங்கள் மாநிலத்தில் நீட் அமல் படுத்தியுள்ளன. ஆனால் இதே கட்சிகள் தமிழகத்தில் தேர்வு தேவையில்லை என்கின்றன. தமிழ்கம் தவிர்த்து அனைத்து மாநிலங்களும் நீட் முறைக்கு மாறியுள்ளன. மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்ற நுழைவுத் தேர்வுகள் விஷயத்தில் தமிழகத்தின் நிலை என்ன?

CLAT (Common Law Aptitude Test) – மத்திய அரசின் ஐ.ஐ.டி. போன்று, NLU ( National Law Universities) என்னும் 19 தேசிய சட்டப் பள்ளிகளுக்கான (இக்கல்லூரிகளில் இருந்து படித்து வெளியேறும் மாணவர்கள் பெரும்பாலும் பெரிஅ நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகப் பணியாற்றுகிறார்கள்) நுழைவுத்தேர்வு ஒன்று உள்ளது. ஆங்கிலம், கணிதம், சமூக அறிவு, சட்ட அறிவு முதலானவற்றில் தேர்வு. 2 மணி நேரத்தில் 200 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 2017ம் ஆண்டிற்கான, மாநில ரீதியிலான விண்ணப்பங்களின் எண்ணிக்கை இது.

 1. உத்திரப் பிரதேசம் = 9,764
 2. ராஜஸ்தான் = 4,377
 3. மத்தியப் பிரதேசம் =  4,312
 4. தில்லி =  4,283
 5. பீஹார் =  3,756
 6. ஹரியானா =  3,092
 7. மஹாராஷ்டிரம் =  2,563
 8. மேற்குவங்கம் =  2,041
 9. தமிழ் நாடு =  1,973
 10. கேரளம் =  1,904

தமிழ் நாட்டின் மக்கட்தொகை சுமார் எட்டு கோடி. மாநிலத்தில் இந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் வெறும் 1973 பேர் மட்டுமே. அதிலும் பலர் சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள். மிகச் சிறிய மாநிலமான தில்லியில் இருந்து தமிழ் நாட்டை விட இரண்டு மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.  ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய முத்த குடி’ தமிழ் மக்களுக்கு இது பெருமையா?

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

 1. தரமான கல்வி கேளுங்கள்.
 2. வகுப்பிற்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று கேளுங்கள்.
 3. தவறாமல் பள்ளிக்குச் சென்று +1, +2 இரண்டையும் நன்றாகப் படியுங்கள்.
 4. குறிப்பாக, மனப்பாடம் செய்யாதீர்கள். புரிந்து படியுங்கள்.
 5. டி.வி. பார்க்காதீர்கள். பலன் இல்லை.
 6. மாதா, பிதா, குரு, தெய்வம். நம் பாட்டியும் பாட்டனும் சொன்னதைக் கேட்டுப் படிக்க வேண்டும்.
 7. அவ்வளவுதான்.

தெய்வம் துணை நிற்கும். வந்தே மாதரம்.

Advertisements

அருண்

அருண் முழித்தான்.
 
‘என்ன மச்சி, ஒண்ணும் புரியல. நீ என்ன எழுதிக்கற?’ என்று என் நோட்டைப் பார்த்தான். பி.ஈ. முதலாண்டு, சேலம் பொறியியல் கல்லூரியில் நுழைவுத் தேர்வின் மூலம் சேர்ந்த நான், அருகில் அம்ர்ந்து, மேற்சொன்ன வார்த்தைகளைச் சொன்ன அருணை நம்ப முடியாமல் பார்த்தேன்.
 
‘ஆமாண்டா. புரொபசர் பேசறது ஒண்ணும் புரியல. முழுக்கவே இங்கிலீஷ்ல பேசுவாங்களாடா?’ என்றவனைக் கண்டு பரிதாபமே ஏற்பட்டது. ‘ஒண்ணு பண்ணு. நீ எழுதிக்கோ, ரூமுக்கு வந்து எனக்கு விளக்கிச் சொல்லு’ என்ற அருணை நினைத்து எனக்குக் கவலை பிறந்தது.
 
‘எங்கூர்ல வாத்யாருக்கே இங்கிலீஷ் தெரியாது. எனக்கு மட்டும் எப்பிடித் தெரியும்? முழுக்க தமிழ் மீடியம் தான்,’ என்று தலையணை போல் இருந்த இஞ்சினியரிங் பிசிக்ஸ் புத்தகத்தைப் பிரித்தான் அருண். ‘நாலு வருஷத்துக்குள்ள இந்த புக்க படிச்சுடலாமாடா?’ என்றவனிடம், அது முதலாண்டுக்கான ஒரு நூல் மட்டுமே என்று சொல்ல மனம் வரவில்லை.
 
இஞ்சினியரிங் பிசிக்ஸ் தலையணையை அவன் வாய் விட்டுப் படித்த அந்த நாள் ‘இவன் என்னிக்கிப் படிச்சு என்னிக்கி முடிக்கறது?’ என்று தோன்றினாலும், ‘நீ படிடா. புரியல்லேன்னா சொல்லு, நாம் சேர்ந்து படிக்கலாம்’ என்று சொன்ன என்னை நன்றியுடன் பார்த்தான்.
 
சேலத்தை அடுத்த சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த அருணின் பெற்றோர் ஒருமுறை ஹாஸ்டல் ரூமிற்கு வந்தனர். கண்டாங்கி சேலை கட்டிய அந்த அம்மையார் அருணின் தாய் என்றும், நான்கு முழம் வேட்டியும் அழுக்கேறிய சட்டையும் தோளில் துண்டும் போட்டிருந்த அந்த மனிதர் அவனது தந்தை என்று சத்தியம் செய்தாலும் நான் நம்பத் தயாராக இல்லை.
 
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நெய்வேலி நூலகத்தில் இருந்து நான் எடுத்து வரும் போர்ஸித், வோட்ஹவுஸ் நாவல்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், ‘இதெல்லாம் எனக்குப் புரியுமாடா?’ என்று கேட்ட போது நான் உள்ளுக்குள் அழுதேன் என்பது உண்மை. ‘சும்மா படிச்சுப் பாரு மச்சி’ என்று நான் அவனுக்குக் கொடுத்து, அவன் சில நாட்கள் போராடிப் பின்னர் திருப்பித் தந்து, மீண்டும் எடுத்துப் படிக்கத் துவங்கினான். ‘முழுசா புரியல. டிரை பண்றேன்,’ என்றவனை நினைத்துப் பரிதாபப்படுவதா, பாராட்டுவதா என்று தெரியாமல் நின்றிருந்தேன்.
 
ஹாஸ்டலில் ஹிந்து பேப்பர் வாங்குவது என்ற வழக்கத்தை ஏற்படுத்தினேன். நானும் இன்னொருவனும் (அசோக் என்று நினைவு) சேர்ந்து வாங்குவோம். பள்ளி நாட்களின் பழக்கம். ‘அருண், ஹிந்து படி. ரொம்ப இன்றஸ்டிங்கா இருக்கும்,’ என்ற என் பேச்சை நம்பாமல் பின்னர் தினமும் படிக்கத் துவங்கினான்.சில நாட்களில் ‘இன்னும் ஹிந்து வரலியாடா?’என்று பிடுங்கத் துவங்கினான்.
 
ELA – English Literary Association – என்கிற அமைப்பில் இணைந்தான் என்று நினைவு.அதற்கு என்னையும் சேர்த்து ஆறு பேர் வருவார்கள்.அங்கு ஆங்கில நூல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம்.
 
நான்கு வருட முடிவில் மெக்கானிக்கல் பிரிவில் கல்லூரியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, இன்று ஆஸ்திரேலியாவில் பெரிய பதவியில் இருக்கும் அருண் தற்போது எழுதும் ஆங்கிலம் பிரமிக்க வைக்கிறது.
 
அருண் இன்று தனது ஊருக்கும், சமூகத்துக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறான்.
 
அருணின் வெற்றி, விடாமுயற்சியின் வெற்றி,தோல்வியைத் தோற்கடித்த வெற்றி, கருணை மனம் கொண்ட பாரத தேவியின் வெற்றி.
 
#NEET