கம்பர் – ஒரு அறிமுகம்

தமிழ் நாட்டில் அரசுகளால் வெளியே காட்டப்படாத, முயற்சி செய்து மறைக்கப்பட்ட ஒரு கவிஞன் உண்டென்றால் அது கம்பன் தான் என்று அடித்துக் கூறலாம். ஏனென்றால் அவன் எழுதியவை அப்படிப்பட்டவை. மனிதனைத் தெய்வமாக்கும் அல்லது தெய்வ நிலைக்குத் தூண்டும் பல இலக்கியங்கள் அவன் செய்துள்ளான். நமக்குத் தெரிந்தது “கம்ப ராமாயணம்”. இன்னும் சில உள்ளன. அவை திருக்கை வழக்கம், ஏரேழுபது, சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி முதலியன.

நாம் கம்ப ராமாயணத்தை மட்டும் பார்ப்போம்.

“கம்ப ராமாயணம்” என்பதே தவறான சொல்லாக்கம். கம்பன் தனது காவியத்திற்கு வைத்த பெயர் “இராமாவதாரம்”. ஒருவேளை அதனால் தானோ என்னவோ நமது தமிழரசுகள் இது வெளியே தெரியவேண்டிய அளவு தெரியாமல் மழுங்கடிக்கச் செய்தன.

கம்பன் உண்மையில் யார்? கம்பன் என்பது அவனது இயற்பெயரா? இதற்கெல்லாம் சரியான பதில் இல்லை ஆராய்ச்சியாளர்களிடம். எங்கள் ஊர் தேரழுந்தூரில் கம்பன் பிறந்ததால் ஊரில் மிகவும் வயது முதிர்ந்த பலரிடம் பல வருடங்களாகவே பேசிப்பார்த்திருந்தேன். பெயர்க்காரணம் பல கிடைத்தன. சில பெயர்க்காரணங்கள் மட்டும் குறிப்பிடுகிறேன்.

கம்பர் “நாதசுரம்” வாசிக்கும் தொழில் பிரிவினர். கம்பினால் செய்யப்பட்ட நாதசுரம் வாசிப்பதால் அந்த இசை மரபினருக்குக் “கம்பர்” என்ற பொதுப்பெயர் வழங்கி வந்திருக்கிறது. நாளைடைவில் கம்பரது இயற்பெயர் மறைந்து தொழிற்பெயரே  நிலைத்துவிட்டது என்று ஒரு கருத்து உண்டு. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். தற்போது தேரழுந்தூரில் ஆமருவிப்பெருமாள் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் வசிக்கும் இடத்திற்கு சமீபத்தில் கம்பர் மேடு என்று கம்பர் வாழ்ந்த இடம் இருக்கிறது. இந்தக் காரணம் உண்மையாக இருக்கலாம். ( கம்பர் மேடு இன்று என்ன அழகில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப் படுகிறது என்று இங்கே பார்க்கவும் )

இதை விட நம்பத்தகுந்த விளக்கம் ஒன்று உள்ளது. கம்பர் நரசிம்ம பக்தர். அதனால் கம்பத்தின் ( தூணின்) உள்ளிருந்து வந்த பெருமாளை மனதில் கொண்டு தன் பெயரையும் “கம்பன்” என்று மாற்றிக் கொண்டார். இதற்கு ஆதாரம் கம்ப ராமாயணத்தில் உள்ளது. கம்பர் தான் எழுதிய ராமாயணத்தில் “இரணிய வதைப் படலம்” என்று நரசிம்மர் இரணியனைக் கொன்ற கதையை எழுதியுள்ளார். இந்த இரணியன் கதை வால்மீகத்தில் இல்லை. தான் ஒரு நரசிம்ம பக்தர் என்பதால் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மனை ராம காதையில் கொண்டு வந்தள்ளார்.

இரண்யன் பிரகலாதனிடம் அரியைக் காட்டு என்னும் விதமாக,

“உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகெங்கும் பரந்துகானைக்
கம்பத்தின் வழியே காணக் காட்டுதி காட்டிடாயேல்.. ”

என்று கூறுவதாக அமைந்துள்ளது. இதிலும் “கம்பத்தின் வழியே” என்று தூணைக் குறிக்கிறான்.

மேலும் வலு சேர்க்கும் விதமாக தேரழுந்தூரில் ஆமருவியப்பன் திருக்கோவிலில் கருவறையில் ஆமருவியப்பன் அருகில் பிரகலாதன் இருக்கிறார். எந்த வைணவக் கோவிலிலும் கருவறையில் பெருமாள் தவிர யாரும் இருப்பதில்லை. ஆனால் தேரழுந்தூரில் நரசிம்ம தொடர்புள்ள பிரகலாதன் எழுந்தருளியுள்ளார். இது ஒரு தொடர்பு என்றும் கொள்ளலாம். மேலும் சந்நிதியின் வெளியில் யோக நரசிம்ஹர் சந்நிதி உள்ளது. அவரது சிலை மிகவும் புராதமானது என்று பார்த்தாலே தெரிகிறது. கம்பன் மற்றும் அவரது மனைவியின் சிலைகள் ஆமருவியப்பனின் கோவிலில் ஒரு தனி சந்நிதியில் உள்ளன.

தேரழுந்தூரில் கம்பர்

ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பரும் அவர் மனைவியும்

வேறொரு விளக்கமும் உள்ளது. கம்பர் பிறந்தபோது பேச்சு வர வில்லையாம். குழந்தையைத் தற்போது கம்பர் மேடு இருக்கும் இடத்திற்கு மேற்கே உள்ள காளி கோவில் கம்பத்தின் முன் கிடத்தி இருந்ததாகவும் அதன் பின்னர் பேச்சு வந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. தற்போதும் அவ்விடத்தில் “கம்பர் காளி” என்று ஒரு காளி கோவில் இன்றும் உள்ளது.

சிவ பெருமானுக்குக் “கம்பன்” என்ற பெயர் உண்டு என்றும் சில தமிழ் அறிஞர்கள் கூறுவர். சுந்தரர் சிவ பெருமானைப் பாடும்போது ,”கண்ணும் மூன்றுடைக் கம்பன்”, “கங்கையாளின் கம்பன்”, ” கூத்தன் கம்பன்” என்று பாடுகிறார். சிவ பெருமானுக்கு ‘ஏகாம்பரன்” என்ற பெயர் உண்டு என்பதால் அது மருவி ‘ஏகம்பன்’ என்றும் “கம்பன்” என்றும் ஆனதாகக் கூறுகிறார் காலஞ்சென்ற தமிழ் அறிஞர் வையாபுரிப் பிள்ளை.

கம்பர் இளமையில் கரும்புக் கொல்லையைக் கையில் கம்புடன் காத்ததால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்கிறார் செல்வ கேசவ ராய முதலியார் என்னும் தமிழ் அறிஞர்.

இப்படிப் பல கதைகள் , இலக்கியச்சான்றுகள் இருந்தாலும் இதுதான் உண்மை என்று அறியமுடியவில்லை.

கம்பர் எப்படி ராமாவதாரம் எழுதினர் ? 10,000 பாடல்களுக்கு மேல் எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஒரு மனிதன் வேறு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு ஒரு மொழி சார்ந்த மூலக்கதையை எழுதவேண்டுமென்றால் அவனிடம் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் பற்றி எந்தக் கவலையும் இருந்திருக்க முடியாது. ஆக கம்பன் பெரும் செல்வந்தனா என்று ஆராய்ந்தால் அது இல்லை. “சோழ நாடு சோறுடைத்து” என்று சொன்னாலும் சோறு கிடைக்க வேண்டுமே!

கம்பனுக்கு அந்தக்காலத்திலேய ஒரு ஸ்பான்சர் கிடைத்தார். அவர் தேரழுநதூருக்கு சில மைல்கள் தொலைவில் இருந்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். பெயரைப் பார்த்தால் சைவராக இருந்திருக்க வேண்டு ( சடை சிவ பெருமானைக் குறிப்பது).இருந்தும் அவர் கம்பரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வைணவ நாயகனான ராமனைப் பற்றி ராமகாதை எழுதப் பொருளுதவி வழங்கியுள்ளார். இதைக் கம்பனே பின்வருமாறு கூறுகிறார்.

“தோமறு மாக்கதை சடையன் வெண்ணை நல்லூர் வியின் தந்ததே ”

( சடையப்ப வள்ளல் வாழ்ந்த வெண்ணை நல்லூரில் தங்கி இருந்து, குற்றமற்ற இப்பெருங்காப்பியத்தைப் பாடி முடித்தேன் )

சடையப்பர் சிவனைப் பற்றிப் பாடச் சொல்லி இருக்கலாமே! அந்நாளில் சைவ வைணவ பேதம் இருந்துள்ளது என்பது கம்பனின் இந்தப் பாடல் மூலம் தெரிகிறது

“அரன் அதிகன், உலகளந்த

அரி அதிகன்,  என்றுரைக்கும் 

அறிவில்லோர்க்குப் பரகதி அடைவரிய

 பரிசே போல் “

( சிவன் தான் பெரியவன்; இவ்வுலகை அளந்த திருமால்தான் பெரியவன்; என்று கூறுபவர்கள் அறிவற்றவர்கள்; அவர்கள் கடவுளையே வெறுப்பவர்கள்; அவர்களுக்கு உயர்ந்த கதி இல்லை; உயர்ந்த கதியை அடைய முடியாது )

கம்பனுக்கு ராம காதையைப் பாடவே விருப்பம். வால்மீகியால் உந்தப்பட்டான். எனவே கவியின் விருப்பத்திற்கிணங்க சடையப்பர் ராமாயணம் எழுத உதவியுள்ளார். ஆக, சமயம் சாராத ஒரு அணுகுமுறை சடையப்பரால் பின்பற்றப்பட்டது என்று அறிகிறோம். அக்கால மாந்தரின் வள்ளல்தன்மை வியக்க வைக்கிறது.

சரி, கம்பன் ஏன் ராமனைப் பாட வேண்டும் ? பணம் கிடைக்கும் என்பதற்காகவா ? இல்லை. அவனே கூறுகிறான் இவ்வாறு :

“ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்றுஇக்

காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ ”

( நான் ராமாயணத்தை யாருடைய தூண்டுதலின் பேரிலும் பாடவில்லை.குற்றமற்ற வெற்றியை உடைய இராமன் வரலாற்றில் உள்ள ஆசையினால் பாடினேன் )

தேரழுந்தூரில் பிறந்த கம்பன் வெண்ணை நல்லூரில் எழுதிய நூல் திருவரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருவரங்கன் சந்நிதி அருகில் நரசிம்மர் சந்நிதியில் பாடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அரங்கேறியபின் நரசிம்ம மூர்த்தியிடமிருந்து ஒப்புதல் போல் “ஆம்” என்ற சப்தம் வந்தது என்று எழுதிவைத்துள்ளார்கள்.

இங்கேயும் நரசிம்ம பக்தனான கம்பன் தன் ராம காவியத்தை நரசிம்மர் முன்னே அரங்கேற்றினான். அவனது  பெயர்க்காரணத்திற்கு இது வலு சேர்க்கிறது.

கம்பன் அரங்கேற்றம் குறித்து ஒரு தனிப்பாடல் உள்ளது. அது பின்வருமாறு:

“எண்ணிய சகாத்தம் எண்ணூற்று

ஏழின்மேல், சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர்

தன்னிலே, கம்ப நாடன்

பண்ணிய இராம காதை,

பங்குனி, அந்த நாளில்,

கண்ணிய அரங்கர் முன்னே

கவி அரங் கேற்றினானே”

( சடையப்ப வள்ளல் சிறந்து வாழ்ந்த வெண்ணெய் நல்லூரிலே இருந்து கம்ப நாடன் எழுதிய ராமகாதை, எண்ணப்பட்ட நூற்றாண்டு எண்ணூற்றேழிலே , பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரம் நிறைந்த நாளில் அரங்கன் முன் அரங்கேறியது ).

சரி. ஒரு வள்ளல் உதவி செய்தார். கம்பன் பாடினான். இதில் என்ன செய்தி ?

கம்பன் சடையப்பரை  மறக்கவில்லை. மேலே சொன்னபடி பல இடங்களில் சடையப்பரைப் போற்றுகிறான். “நன்றி மறப்பது நன்றன்று ” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சடையப்பரை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைக்கிறான். முடிவாக, ராம ராவண யுத்தம் முடிந்து ராம பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அப்பாட்டில் கம்பன் கூறுவதைக் கேளுங்கள் :

“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி”

( ராம பட்டாபிஷேகத்தில், அனுமன் அரியணையைத் தாங்கினான்; அங்கதன் உடை வாள் ஏந்தி நின்றான்; பரதன் குடை பிடித்தான்;.. வெண்ணை நல்லூர்ச் சடையன் குலத்தில் தோன்றிய அவனது முன்னோர் ஒருவர் மணிமுடியை எடுத்துக் கொடுக்க, வசிஷ்டர் ராமனுக்கு முடிசூட்டினார் )

வட நாட்டில் அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தில் வெண்ணை நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் முன்னோர் எப்படிச் சென்றனர் ? இப்படிப் பகுத்தறிவுடன் கேட்கலாம். ஆனால் கம்பனின் உள்ளத்தைப் பார்க்க வேண்டும் இதில். தன்னை வாழ வைத்த சடையப்பரையும், அவரது குலத்தையும் அவரது முன்னோர்களையும் தன் ஒரு வரியினால் இன்றளவும் வாழ வைத்து தன் நன்றிக்கடனைச் செலுத்தினான் கம்பன். நம் எல்லோருக்கும் வழி காட்டினான்.

அடுத்த பதிவில் “கம்பனுக்கு முன் ராமாயணம் தமிழகத்தில் இருந்ததா?” என்று பார்ப்போம்.