‘டேய், அப்பா இருக்காளாடா ?’, சைக்கிளில் இருந்தபடியே இரண்டு முறை இருமிவிட்டுக் கேட்டார் சி.எஸ். மாமா. (நெய்வேலியில் பலருக்கும் ஆஸ்துமா பிரச்சினை உண்டு.)
அவரை நாங்கள் அப்படித்தான் அழைப்போம். சி.எஸ். என்பது சந்திர சேகரன் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். ஆனால் யாரும் அவரை அப்படி அழைத்து நான் கேட்டதில்லை.
அப்பாவை விட பல வருஷங்கள் மூத்தவர். எப்போது பார்த்தாலும் மணித்வீபத்திலேயே இருப்பார். மணித்வீபம் என்பது நெய்வேலியில் ஒரு கோவில் போன்றது. கோவிலே தான். ஆனாலும் அத்துடன் ஒரு பஜனை மடமும் இருக்கும். பல பெரியவர்களும் வந்து உபன்யாஸங்கள் செய்வது வழக்கம்.
சி.எஸ். மாமா வேலைக்குச் சென்று நான் பார்த்தது கிடையாது.
அப்பா அவரை ‘ஸார்’ என்று தான் அழைப்பார். சி.எஸ். மாமா அழைத்தார் என்றால் மட்டும் அப்பா உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடுவார். பல வருஷங்கள் முன்னே அப்பா நெய்வேலியில் வேலைக்குச் சேர்ந்த போது அவருக்கு மேலதிகாரியாக இருந்தார் சி.எஸ்.மாமா என்று அப்பா ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
சி.எஸ். மாமாவைக் கண்டால் எங்களுக்குக் கொஞ்சம் பயம் தான். குரல் கொஞ்சம் கறாராக இருக்கும். நீண்ட நெடிய தோற்றம். தடிமனான கண்ணாடி அணிந்திருப்பார். மணித்வீபத்தில் எப்போதும் யாரையாவது விரட்டிக்கொண்டே இருப்பார்.ஏதாவது உபன்யாஸ ஏற்பாடாக இருக்கும் அல்லது ராதா கல்யாண விழாவாக இருக்கும்.
புலவர்.கீரன், கிருபானந்த வாரியார் முதலானோரது உபன்யாசங்கள் என்றால் மட்டும் சுமாரான வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டிருப்பார். மற்ற நேரம் எல்லாம் ஒரு அழுக்கான வேஷ்டியும் ஒரு அங்க வஸ்திரமும் தான். ஒரு நாளில் 18 மணி நேரம் மணித்வீபத்தில் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார்.
பிள்ளையார் சதுர்த்தியின் போது ரொம்பவும் ஓடுவார். பத்து நாட்கள் உற்சவம் நடக்கும். சதுர்த்தி அன்று இரவு பிள்ளையார் நகர்வலம் வருவார். பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வரும் போது தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் பிறந்த நாள் வரும். ‘ஸ்டோர் ரோடு’ என்ற சந்திப்பில் ஈ.வெ.ரா.வின் சிலை ஒன்று இருக்கும். அது மணித்வீபத்தைப் பார்த்தபடி இருக்கும். பிள்ளையார் சதுர்த்தியின் போது அந்தப் பத்து நாளும் ஈ.வெ.ராவின் பிறந்த நாளும் கொண்டாடப்படும். மேடை போட்டு, ஸ்பீக்கர் கட்டி வசை மழை பொழிவார்கள். சதுர்த்தி அன்று யாராவது பெரிய நாஸ்திகப் பேச்சாளரைக் கொண்டுவருவார்கள். பிள்ளையாருக்குப் பால் அபிஷேகம் நடக்கும் போது இவர்களிடமிருந்து வார்த்தைகளால் அர்ச்சனை நடக்கும்.
இத்தனைக்கும் நிலைமை சீர் குலையாத வகையில் சி.எஸ்.மாமா மணித்வீபத்தின் வெளியில் நின்றிருப்பார்.ஈ.வெ.ரா. கட்சிக்காரர்களும் எத்தனை தான் ஆவேசமாக இருந்தாலும் சி.எஸ்.மாமா நிற்பதால் அவரிடம் எகிற மாட்டார்கள். அவர்களில் பாதிப்பேர் சி.எஸ். மாமாவிடம் வேலை கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள். நெய்வேலியில் அது தான் விசேஷம். அனைவருக்கும் அனைவரையும் தெரியும்.
சி.எஸ். மாமா பணி ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் ஆகியும் மணித்வீபம் வேலையாக நெய்வேலியிலேயே தங்கியிருந்தார். நெய்வேலியின் அரசு வீடு காலி செய்ய வேண்டி இருந்ததால் மணித்வீபத்தின் உள்ளேயே ஒரு சிறு குடில் போல அமைத்துத் தங்கிக்கொண்டார். அப்போது 24 மணி நேரமும் ஆலயப் பணிதான்.
அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவருடன் அவரது மனைவியும் வயதான தாயாரும் இருந்தனர்.
இப்படிப்பட்ட சி.எஸ்.மாமா தான் அப்பாவைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்.
அப்பாவும் அவரும் பேசிக்கொண்டதில் ஒன்று புரிந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் நெய்வேலி வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதே அது.
அதன் பின் எவ்வளவு நாட்கள் கழிந்தது என்று தெரியவில்லை. ஒரு நாள் காலை 7 மணி அளவில் நெய்வேலி ஆர்ச் கேட் ( Arch Gate ) என்னும் நுழைவாயிலில் நாங்கள் திரண்டிருந்தோம். பெரிய அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தனர். போலீஸ் வாகனம் முன்னே வந்தது. பின்னே ஒரு திறந்த வேன் போன்ற வண்டியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயெந்திரர் முகம் முழுவதும் சிரிப்பாய், கையைச் தூக்கி ஆசீர்வதித்தபடி நின்றிருந்தார். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் என் செவிப் பறைகளைப் பிளந்தது. அது புதிய அனுபவமாக இருந்தது.
மணித்வீபத்தில் சாரதா தேவிக்கு ஒரு கோவில் கட்டியிருந்தார் சி.எஸ்.மாமா. அதன் கும்பாபிஷேக விஷயமாகவே சங்கராச்சாரியார் வந்திருந்தார். அவர் தங்கியிருந்த நான்கு நாட்களும் எங்களுக்கு அங்கே தான் உணவு. ஏனோ பள்ளிக்குச் செல்ல யாரும் வற்புறுத்தவில்லை.
இரவு வந்த கனவில் ஜெயேந்திரர் சிரித்தபடியே வந்தார். ஏதோ சொல்வது போல் பட்டது. 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் அந்த முறை தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பேன் என்று மட்டும் தோன்றியது.
இன்னொரு முறை சிருங்கேரி சங்கராச்சாரியார் வந்திருந்தார். அப்போதும் சி.எஸ். மாமா அலைந்துகொண்டிருந்தார்.
சி.எஸ். மாமாவுக்கென்று பெரிய செலவுகள் எல்லாம் இல்லை. எப்போதும் ஒரு கறை படிந்த வேஷ்டியுடனேயே இருப்பார். ஆனால் நெய்வேலியின் பல உயர் அதிகாரிகள் அவரிடம் அலுவலக விஷயமாக அறிவுரைகள் கேட்க வந்ததை நேரில் பார்த்திருக்கிறேன்.
இப்படியான ஒரு நாளில் தான் வடலூர் மாமி எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கையில் ஒரு அழுக்குப் பை வைத்திருந்தார். 50 வயது இருக்கும். சி.எஸ்.மாமா அனுப்பினார் என்று அப்பாவைப் பார்க்க வந்திருந்தார்.அவர் பெயர் இறுதி வரை எனக்குத் தெரியவில்லை.
‘எங்க ஆத்துக்காரர் நெய்வேலி லிக்னைட்லெ வேலைல இருந்தார். இப்போதும் இருக்கார். ஆனா எங்கே இருக்கார்னு தெரியல்லே. ஆத்துக்கே வரதில்லை. வேற யாரோடையோ இருக்கார்னு பேசிக்கறா. நீங்க கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லணும்’, என்று உருக்கமான குரலில் சொன்னார்.
அவரது கதை இது தான். அவரது கணவர் குடிகாரர். இரண்டு பெண்கள், ஒரு ஆண் என்று மூன்று பிள்ளைகள். மனைவியையும் பிள்ளைகளையும் நெய்வேலிக்கு அருகில் உள்ள வடலூரில் தங்க வைத்துவிட்டு இவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். வீட்டிற்கும் பணம் தருவதில்லை. வடலூர் மாமி வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்தும், சமையல் வேலை செய்தும் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். இவர்களது பெரிய பெண்ணிற்கு 18 வயது. கணவரின் பி.எஃப். பணம் தன் குடும்பத்துக்குத் தான் வேண்டும் என்று மேல் அதிகாரிகளிடம் கோர அப்பாவைப் பார்க்க மாமி அடிக்கடி வர ஆரம்பித்தார்.
மாமியின் கதை என் மனதை உருக்கியது. பள்ளி முடிந்து வந்த பல நாட்களில் மாலை வேளைகளில் மாமி தன் பையைத் தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டில் அமர்ந்திருப்பார். அப்பா வீட்டிற்கு வர 6 மணி ஆகும். பின்னர் சுமார் 8 மணி அளவில் நான் மாமியைக் கொண்டு பஸ் ஏற்றி விட்டு வருவேன்.
இந்த நிலையில் அவரது கணவரைப்பற்றி ஒரு தகவலும் இல்லாமல் போனது. ஓய்வு பெற்று விட்டார் என்று தெரிந்தது. ஆனால் ஆளைக் காணவில்லை.
பெரிய பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டிய காலம் வந்தது. அப்போது நான் 10-ம் வகுப்பு என்று நினைக்கிறேன். மாமியிடம் ஒரு காசும் இல்லை.
அப்போது தான் சி.எஸ்.மாமா ஒரு வழி சொன்னார். காஞ்சிபுரம் சென்று ஸ்வாமிகளைப் பார்த்து வரவும் என்று வழி காட்டினார். அப்பாவும் அந்த மாமியையும், அவரது பெண்ணையும் அவரது மகனையிம் அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்றார். நான் உடன் சென்றேன்.
அந்த நாள் என் வாழ் நாளில் ஒரு மிகத் திருப்புமுனையான நாள் என்று உணர்ந்திருக்கவில்லை.
காலை 8 மணிக்கு ஸ்வாமிகள் தரிசனம் என்று சொன்னார்கள். எங்களைப்போல் இன்னும் பலர் இருந்தனர்.
அனைவரும் அமர்ந்திருந்தோம். சங்கர கோஷம் அரங்கை நிறைத்தது. சிறிது நேரத்தில் ஸ்வாமிகள் வந்தார்.
அப்பாவைப் பார்த்ததும் ,’தேவநாத ஐயங்கார் சங்கர மடத்துக்கு வந்திருக்கேளே, வாங்கோ’, என்று கையைத்தூக்கி ஆசீர்வதித்தபடி ஆரம்பித்தார்.
‘இல்லே, ஒரு கல்யாண விஷயம்’, என்று சொல்லி அப்பா வடலூர் விஷயம் முழுவதும் சொன்னார்.
ஸ்வாமிகள் முகம் வாட்டம் கண்டது. ‘பெரியவாள தரிசனம் பண்ணிட்டு வாங்கோ’, என்று ஒரு ஊழியரிடம் ஏதோ சொன்னார். அவர் ‘பெரியவா’ என்று சொன்னது பரமாச்சாரியாரை. மனித உருவில் நடமாடிய தெய்வம் அப்போது ஒரு பத்து ஆண்டுகள் மௌன விரதம் பூண்டிருந்த காலம் அது.
பரமாச்சாரியாரைத் தரிசிக்கச் சென்றோம். மடத்தின் ஊழியர் பெரியவரின் காதுகளின் அருகே சென்று பவ்யமாக ஏதோ சொன்னார்.
பெரியவர் தலை தூக்கி எங்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். வலது கை அசைவினால் முன்னால் இருந்த ஒரு மாம்பழத்தை அந்தப் பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார். மாமி அழுதுவிட்டாள்.
பெரியவர் அப்பாவை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தார். தனது தடித்த கண்ணாடியின் வழியாக அவர் பார்த்தது பல ஆயிரம் ஆண்டுகள் முன்னிருந்து எங்களைப் பார்ப்பது போல் பட்டது. பாரத தேசத்தின் அனைத்து ஆன்மிக சக்தியும் ஒன்று திரண்டு அந்தக் கண்ணாடி வழியாக எங்கள் மீது விழுந்ததாக நினைத்துக்கொண்டேன்.
பின்னர் மீண்டும் ஜெயேந்திரரை சந்தித்தோம். அவரது உதவியாளர் ஒரு தட்டில் பழங்களுடன், சில பூக்கள் மத்தியில் ஒரு சின்ன பொட்டலம் போல் இருந்த ஒன்றை எங்களிடம் தந்தார்.
மாமி அதைப் பிரித்துப் பார்த்தார். ஒரு பவுனில் திருமாங்கல்யம் இருந்தது. அத்துடன் கல்யாண செலவுகளுக்காக 5,000 ரூபாய்க்கான ஒரு செக் இருந்தது.
‘ஒரு குறையும் வராது. சந்திர சேகரன் அனுப்பியிருக்கார் உன்னை. சந்திர சேகரர் கிட்டே ஆசீர்வாதமும் ஆயிடுத்து. அப்புறம் என்ன அழுதுண்டு?’, என்று சிரித்தபடியே கூறினார். அவர் இரண்டாவது முறை சந்திர சேகரர் என்று சொன்னது பரமாச்சாரியாரை என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
பின்னர் அப்பாவைப் பார்த்து,’ நீ பண்ற காரியம் ரொம்ப உசத்தியானது. பரோப காரார்த்தம் இதம் சரீரம். ஆசீர்வாதம். நாராயண நாராயண’, என்று கை நிறைய குங்குமம் அளித்தார்.
அதன் பிறகு சங்கர மடம் குறித்த என் பார்வை சற்று உன்னிப்பானது. அவர்களது பல நற்காரியங்கள் கண்ணில் பட்டன. கோ-சாலை பராமரிப்பு, கண் வைத்தியம் முதலியன என்னை ஈர்த்தன. அவற்றைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினேன்.
இப்படி இருக்கையில் ஒருமுறை சி.எஸ். மாமாவுக்கு உடம்பு முடியாமல் போனது. ஆனாலும் மணித்வீபத்தில் வளையவந்து கொண்டிருந்தார். வடலூர் மாமி கதை போல் இன்னும் எவ்வளவு பேருக்கு நல்லது செய்தார் என்று சி.எஸ். மாமாவுக்கு மட்டுமே தெரியும்.
‘இதென்னடா, நான் என்ன பண்றேன் ? கை காட்டி விடறேன். அனுக்ரஹம் இருந்தா தானா நடக்கும்’, என்று அதட்டலாக யாரிடமோ என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு வடலூராக இருக்கும் என்று அப்பா சொன்னார். இந்த முறை இருமல் சற்று கடுமையாக இருந்தது.
ஒவ்வொரு முறையும் ஆருத்ரா தரிசனம் அன்று மெனக்கெட்டு சிதம்பரம் செல்வார் சி.எஸ்.மாமா. அவரது சொந்த ஊரும் அது தான்.
சில வருடங்கள் கழித்து நான் பம்பாயில் வேலையில் இருந்தேன்.
அப்பா அழைத்திருந்தார். ‘சி.எஸ்.மாமா காலமாயிட்டார் டா. சிதம்பரம் போனார். அங்கேயே போய்ச் சேர்ந்துட்டார்’
காலண்டர் பார்த்தேன். அன்று ஆருத்ரா தரிசனம் என்று போட்டிருந்தது.