நியூ யார்க் அருங்காட்சியகம் சென்றிருக்க வேண்டாம் தான். என்னதான் இருக்கிறது என்று பார்த்துவரச் சென்றேன். சிட்டி வங்கி ஊழியன் என்பதால் இலவசமாக அனுமதி அளித்தார்கள்.
எகிப்திலிருந்து வந்திருந்த பல பண்டைய மன்னர்களின் மம்மி உருவங்கள், சமாதிக் கல்லறைகள் முதலியன தாண்டி சீன வரலாற்றுப பொருட்கள் கடந்து இந்தியக் கலைப் பொருட்கள் இருந்த இடம் நோக்கித் திரும்பினேன். அந்த அறை இருட்டாக இருந்தது. உள்ளே மனித நடமாட்டம் இல்லை. ஆனாலும் பேச்சுக்குரல் கேட்டமாதிரி இருந்தது. இருக்கட்டும் என்று உள்ளே சென்றேன்.
உள்ளே நுழைந்தவுடன் வரலாற்றில் கால் வைத்தது போல் இருந்தது. அறை இருளில் சில இடங்களில் மட்டும் ஒளியூட்டல் இருந்தது. ஒளியூட்டப்பட்ட இடங்களில் எல்லாம் அழகு திருமேனிகள். செப்புச் சிலைகள் அல்லது வெண்கலச் சிலைகள். எல்லாம் சோழர் கால வார்ப்புகள்.

பார்த்த முகமாக இருக்கிறதே என்று அருகில் சென்றேன். திருஞானசம்பந்தர் திரு உருவம். அம்மையிடம் ஞானப்பால் குடித்த அந்தக் குழந்தை இன்று அமெரிக்காவில் குளிரூட்டப்பட்ட அறையில் ஆடை இல்லாமல் நின்ற திருக்கோலம். தவக்கோலம் பூண்ட திருமேனியின் இன்றைய கோலம் அலங்கோலம். சிரித்த முகம். இடது கையில் பாலாடை என்னும் பால் புகட்டும் பாத்திரம் போல் தெரிந்தது. ‘செம்மொழி எல்லாம் வளர்த்த நீங்கள் இந்தப் பால யோகியை மறந்தீரே’, என்று கேட்டது போல் இருந்தது. கன்னத்தில் ஓர் அறை விழுந்த மாதிரி இருந்தது.
பால சன்னியாசிக்கு அருளமுதம் ஊட்ட வேண்டி அன்னை பார்வதியும் அருகிலேயே இருந்தாள். கி.பி. 10ம் நூற்றாண்டைச் சார்ந்த அவள் அபிராமி பட்டர் தற்போது தமிழகத்தில் இல்லாததால் அமெரிக்கா வந்துவிட்டேன் என்றாள்.

அம்மை இருந்தால் அப்பன் இல்லாமலா? அமெரிக்கர்கள் விஷயம் தெரியாதவர்களா என்ன ? அருகிலேயே அம்மையையும் அப்பனையும் சேர்த்தியாக அமர வைத்துள்ளனர். பெற்றோர் இருந்தால் பிள்ளை வேண்டாமா ? முருகனும் இருக்கிறான் இருவருக்கும் இடையில்.
அட, மூத்த மகன் இல்லையா என்றால் அவன் சற்று தள்ளி நிற்கிறான். என்ன இருந்தாலும் இளைய பிள்ளை செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒரு மகானுபாவன் 10 சென்ட் நாணயம் வைத்துச் சென்றிருக்கிறான். அதற்கு சந்தோஷப்பட்டுப புன்னகையுடன் நிற்கிறான் கணபதி.
தெய்வங்கள் இருந்தால் அடியார் இருக்கமாட்டாரா ? தலையாலேயே ஊர்ந்து கைலாயம் சென்ற அம்மையாருக்கு அமெரிக்கா எம்மாத்திரம் ? அவரும் இருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் கவனித்தபடி நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் எம்பெருமான் நாராயணன்.
‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’, சங்கோடும் சக்கரத்தோடும் அபய ஹஸ்தத்தோடும் சாந்த மூர்த்தியாய் நிற்கிறான் தனியாக. மூன்று வேளை ஆராதனமும், பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களும், வருடாந்திர உற்சவங்களும் காணாமல், ஒரு வேளை கூட அமுது இன்றி இன்னும் நின்றுகொண்டிருக்கிறான் எம்பெருமான்.
வார்ப்பில் தெரிகிறது இவன் எங்கள் ஊர்ப்பக்கம் தான் என்று. பிற்கால சோழர் வார்ப்பு. பிரயோக சக்கரம் உபயோகத்திற்குத தயாராகத தெரிகிறது. ஆனால் என்ன ஊர் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு திவ்ய தேசமாக இருக்கலாம். ஏதோ திவ்யதேசத்தில் நல்ல நிலையில் இருந்திருக்க வேண்டும் இவர். சிலையின் கீழ் உற்சவங்களின் போது புறப்பாடு செய்யப் பயன்படும் வகையில் பீடம் அமைந்துள்ளது.

வேலைக்காக பட்டாச்சாரியார்களும் சாப்ட்வேர் எழுத அமெரிக்கா போனதால் பெருமாளும் அவர்களைத் தேடிக்கொண்டு நியூ யார்க் வந்து விட்டானோ என்று நினைத்தேன். ஆனால் பெருமாள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அதே மௌனம் தான். ஏதோ கோபம் போலும் தெரிந்தது.
கோவில் ஒழுகில் இராமானுசர் என்ன உற்சவங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொன்னாரோ அவற்றில் ஒன்று கூட இல்லாமல், ஒரு வேளை தளிகை கூட இல்லாமல் தனியாகப் பல நூறு ஆண்டுகளாக நின்றுகொண்டிருப்பதால் கோபம் வராமல் என்ன செய்யும் ? என்றும் நினைத்தேன். ஆனால் மனம் தாளவில்லை. ஒரு காரியம் செய்தேன்.
ஆவது ஆகட்டும் என்று பெருமாள் அருகில் நின்றுகொண்டேன். கையைக் கூப்பிக்கொண்டு தேரழுந்தூர் பாசுரங்கள் ( ‘தேமருவு பொழிலிடத்து.., செங்கமலத் திருமகளும் புவியும்…, திருவுக்கும் திருவாகிய செல்வா.., தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ … ) பாடி னேன். கண் திறந்த போது என்னைச் சுற்றி ஒரு சிறு கூட்டம். சீனர்கள், அமெரிக்கர்கள் என்று 7-8 பேர் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தனர். ஏதோ ஒரு பழியைத துடைத்த பெருமிதம் எனக்கு. பெருமாளைப் பார்த்தேன். புன்முறுவல் போல் தெரிந்தது. எந்த நூற்றாண்டில் இவர் இப்பாசுரங்கள் கேட்டாரோ தெரியவில்லை. 21-ம் நூற்றாண்டில் கேட்டுவிட்டார். நானும் ஆழ்வாரானேன். அமெரிக்காவும் திவ்யதேசமாகியது.
கூட்டம் என்னையே பார்த்தது. நான் பெருமாளைப் பார்த்தேன். ‘என்னால் உன்னைப பாரதம் கொண்டு செல்ல முடியாது. கையாலாகாத பாவி நான். என்னால் முடிந்தது பாசுரம் பாடுவது தான். எனவே என்னை மன்னித்தருள்வீர் பெருமாளே’, என்று வேண்டியபடி நின்றிருந்தேன். ஒரு அமெரிக்கர் படம் எடுத்தார்.
கூட்டம் ஒரே இடத்தில் இருப்பது பார்த்த அருங்காட்சியக அதிகாரி ஒருவர் விசாரிக்க வந்தார். அதற்குள் நான் ‘யோக நரசிம்மர்’ சந்நிதிக்குச் சென்று விட்டேன். ஆமாம் அவரும் இங்கு தவக்கோலத்தில் இருக்கிறார். கம்ப இராமாயணத்தில் இரணிய வதைப் படலத்தில் இருந்து ‘சாணிலும் உளன் ஓர் அணுவைச சத கூரிட்ட கோணிலும் உளன்..’ என்ற பாடலையும், ‘ஆடியாடி அகம் கரைந்து ..’ என்ற திருவல்லிக்கேணி பாசுரத்தையும் பாடினேன். அதிகாரியும் பார்த்தபடி நின்றிருந்தார்.
விட்டு வைப்பானேன் என்று சிவன் பார்வதி அமர்ந்த கோலத்தில் இருக்கும் இடம் சென்று ‘பொன்னார் மேனியனே..’ பதிகம் பாடினேன். அதிகாரி ஒன்றும் சொல்லவில்லை.
அந்த அதிகாரியிடம் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒரு திருமால் சிலையில் சக்கரம் இடம் மாறியுள்ளதை சுட்டிக் காட்டினேன். அந்தச் சிலையையும் வெண்கலப் பெருமாள் சிலையையும் ஒப்பிட்டுக்காட்டி விளக்கினேன். அவர் குறித்துக் கொண்டார். ‘I am not an authority on these sculptures. But as you are a native of India, I take note of this and would make a report to the authorities’, என்று எழுதிச் சென்றார்.
அனாலும் பெருமாளின் இந்த இழி நிலை மனதை விட்டு நீங்க வில்லை. மீண்டும் ஒரு முறை வலம் வந்து பல படங்கள் எடுத்தேன். இதைக் காண்பவர்கள் யாராகிலும் உங்கள் ஊரில் பெருமாள் சிலைகள் 50 வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதா என்று சரி பார்க்க வேண்டுகிறேன். இந்தச் சிலையை John D.Rockfeller ( ராக் பெலலர் ) என்னும் அமெரிக்க பெருஞ்செல்வந்தர் இவ்வருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை. நம்மூரில் பெருமாளை விற்றவர் யார் என்று பார்த்தால் 40 ஆண்டுகளுக்குள் பதவியில் இருந்தவர்களில் யாராவது ஒருவராக இருப்பார்கள்.
40 வருட திராவிடக் கட்சிகளின் அழிச்சாட்டியத்தில் நமது பாரம்பரியம் கொள்ளை போனது. நமது வரலாறு நம் கண் முன்னே மெள்ள மூழ்கி அழிந்தது. நாம் மௌன சாட்சிகளாக இருந்தோம். வரலாறு அழிக்கப்பட்ட போது வேறு பக்கம் பார்த்தோம். ஒன்றும் நடவாதது போல் சினிமாவில் மூழ்கி இருந்தோம். சரோஜா தேவியும் தேவிகாவும் நமது இச்சைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவர்களாக இருந்தனர். எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் காதல் செய்ய விட்டு நமது சுய இச்சைகளை நிவர்த்தித்துக் கொண்டோம். ஆண்மை இழந்து நிற்பதை ஒரு பெருமையாகப் பேசினோம். அதற்கு ‘பகுத்தறிவு’ என்று பெயர் வைத்தோம். அல்லது ‘முற்போக்கு’ என்று முட்டாக்குப் போட்டு மூலையில் முடங்கினோம். ஆங்கிலக் கல்வி பயின்று அடிமாடுகளாக நிற்பதை ‘செக்யூலரிசம்’ என்று பெருமையாக மார்தட்டிக் கொண்டோம்.
ஜெயமாலாக்களின் மேனி வனப்பின் சூடு தணியும் முன்னர் சில சிலுக்குகளுக்குத் தாவினோம். ‘நேத்து ராத்திரி அம்மா’வைப பிள்ளைகள் முனகியபடி பாடக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தோம். வடிவேலுவின் உடல் சேட்டைகளையும் வட்டார வழக்கையும் நாம் பயன் படுத்துவதை ஒரு பெருமையாகப் பறை சாற்றினோம். நமீதாவின் உடலை அளவு எடுத்துக்கொண்டிருந்த போது அளவில்லாத நமது கலைச் செல்வங்கள் கொள்ளை போனது தெரியவில்லை. நயன்தாராவின் தொடர்புகளை ஆராய்ந்த போது நமது முன்னோருடன் நமக்கிருந்த தொடர்புகளை சிலைகள் திருட்டின் மூலம் இழந்தோம். சிம்ரனின் திருமணத்தில் நமக்கிருந்த அக்கறை சிலைகள் திருடுபோவதைத தடுப்பதில் இல்லை. குஷ்பூவிற்குக் கோவில் கட்டும் மும்முரத்தில் நமக்குக் காமாக்ஷியம்மன் கோவில் களவு போனது தெரியவில்லை. தமன்னாவின் கொள்ளை அழகால் நமது திருமால்கள் கொள்ளை போனது தெரிந்தும் வாய் மூடி இருந்தோம்.
‘கோமளவல்லி’ தாயார் நிலை தெரியாமல் ‘கோச்சடையான்’ பற்றிக் கவலை கொண்டோம். பெருமாளின் விஸ்வரூப தரிசனம் பாராமல் ‘விஸ்வரூபம்’ பிரச்சினை பற்றி அங்கலாய்த்தோம். 40 ஆண்டுகளாக மெதுவாக நபும்சகத் தன்மை ஊறப் பெற்றோம்.
இந்தக் காமாக்ஷிகளும், திருமால்களும் நியூ யார்க்கில் அடைக்கலம் தேடினர். இன்று நான் அவர்களை சந்தித்தேன். ஆறுதல் கூறிப பதிகம் பாடினேன்.
தமிழ் தெரிந்தவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் : நியூ யார்க் வரும் போது உங்கள் மதம், சாதி முதலியன தூர வைத்துவிட்டு சென்ட்ரல் பார்க் அருகில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் வாருங்கள். நமது தெய்வங்கள் முன்னர் சிறிது நேரம் நின்று மௌனமாக ஒரு பாசுரமோ பதிகமோ பாடுங்கள்.
சிறையில் இருக்கும் தெய்வங்கள் சந்தோஷப்படும்.
Like this:
Like Loading...