திருக்குறள் இந்துதுவ நூலா? தமிழகத்தை இந்துத்துவத்தில் இருந்து காப்பது எப்படி? 2013ல் பேசிய பேச்சு. 17 மணித்துளிகள். நக்கல் ஓவராக இருந்தால் மன்னிக்கவும். அப்போது அனுபவம் போதவில்லை.
https://amaruvi.podbean.com/e/is-thirukkural-a-hindutva-book/
திருக்குறள் இந்துதுவ நூலா? தமிழகத்தை இந்துத்துவத்தில் இருந்து காப்பது எப்படி?
திருக்குறள் இந்துதுவ நூலா? தமிழகத்தை இந்துத்துவத்தில் இருந்து காப்பது எப்படி? 2013ல் பேசிய பேச்சு. 17 மணித்துளிகள். நக்கல் ஓவராக இருந்தால் மன்னிக்கவும். அப்போது அனுபவம் போதவில்லை.
https://amaruvi.podbean.com/e/is-thirukkural-a-hindutva-book/
இலக்கிய வட்டக் கூட்டத்தில் இன்று பேரா.முருகரத்னம் ‘வள்ளுவரை அறிவோம்’ என்ற தலைப்பில் பேசினார். கூட்டம் வழக்கம் போல் இல்லாமல் பெரும் கலந்துரையாடலாக அமைந்தது. வள்ளுவர் சமய சார்பற்றவர் என்பதை நிறுவப் பலர் முயன்றனர். நான் கீழ்காணும் சான்றுகளைக் கூறி அவர் சைவ, வைணவ, வைதீக சமயத்தவர் என்று வாதிட்டேன்.
1. ‘இந்திரனே சாலும் கரி’
2. அடியளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு’
3. மஹாலக்ஷ்மி பற்றிய குறிப்பு
4. ஊழ் ( விதி ) பற்றிய குறிப்பு ( ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்..)
5. ஏழு பிறப்புகள் – ‘எழுமைக்கும் ஏமாப்புடைத்து’.)
6. தாமரைக் கண்ணன் உலகு..’
7. ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான்..’
8. ‘ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்..’ – பசு, அந்தணர் பற்றிய குறிப்பு
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்..’ எட்டு குணங்களை உடைய சைவ சித்தாந்தக் கடவுள்.
ஆனால் வள்ளுவரை எம்மதமும் சாராதவர் என்று காட்ட வேண்டிய கட்டாயம் இருந்ததாகவே இன்றைய விவாதங்கள் எனக்குக் காட்டின.
நம்மாழ்வாரை வைதீகர்கள் ஒதுக்கி வைத்தனர் என்றும், அவரை வைத்துத் தான் தென்கலை, வடகலை பேதங்கள் ஏற்பட்டன என்றும் பேராசிரியர் கூறினார். இது குறித்து Friedhelm Hardy என்னும் ஆங்கில அறிஞர் எழுதிய Nammazhwar – The untouchable saint என்னும் நூலில் இப்படிக் கூறியுள்ளார் என்றும் பேசினார். அதைத் தொடர்ந்து ‘நம்மாழ்வாரும் வள்ளுவரும்’ என்று ஒரு நூல் எழுதியுள்ளதாகத் தெரிவித்தார்.
என் கேள்விகள் :
நம்மாழ்வாரை யார் ஒதுக்கி வைத்தார்கள் ? திருமால், மஹாலக்ஷ்மி அதன் பின்னர் சடகோபன் என்கிற நம்மாழ்வார் என்றே வைணவ சம்பிரதாயம் வைத்துள்ளது.
‘என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு
யான் அடைவே அவர்குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் ந்ம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமாள் திருவடிகள் அடைகின்றேனே’ என்று வழிபடு முறையை ‘அதிகாரசங்கிரகம்’ என்னும் நூல் சொல்கிறது.
சடகோபன் என்கிற நம்மாழ்வாருக்குப் பின்னரே லட்சுமி குறிப்பிடப் படுகிறாள்.
அத்துடன், நம்மாழ்வார் வேளாளர். அவரையே தெய்வமாகப் போற்றிய இன்னொரு ஆழ்வார் மதுர கவி ஆழ்வார். இவர் அந்தணர். ஆனாலும் ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று நம்மாழ்வாரைப் பற்றி மதுரகவி சொல்கிறார். ‘எனக்கு வேறு எந்தத் தெய்வமும் தேவை இல்லை. குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் பெயரைச் சொன்னபடியே இருப்பேன்’ என்று சொல்கிறார்.
அந்தணரான மதுரகவி, வேளாளரான நம்மாழ்வாரை இவ்வாறு போற்றி இருக்கிறார். திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் ( நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.
மார்க்கட நியாயம், மார்ஜார நியாயம் என்று குரங்கு, பூனை நோக்கு என்கிற அடிப்படையில் தான் வடகலை, தென்கலைப் பிரிவுகள் உள்ளனவே ஒழிய, நம்மாழ்வாரை ஏற்றுக்கொள்வதனாலோ, கொள்ளாததனாலோ அல்ல.
நம்மாழ்வார் 7-9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். தென்கலை, வடகலைப் பிரிவுகள் 13-ம் நூற்றாண்டில் துவங்கின. தென்கலைக்குப் பிள்ளைலோகாச்சாரியாரும், வடகலைக்கு வேதாந்த தேசிகரும் தலைமை ஏற்றனர்.
இதுவும் தவிர், தமிழைத் தீட்டு மொழி என்று வைணவர்கள் சொன்னதில்லை. நம்மாழ்வாரின் பாசுரங்கள் வேதத்தின் சாரம் என்று ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்று போற்றப்படுகிறார்.
11-ம் நூற்றாண்டின் நாத முனிகள் எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களையும் தொகுத்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் இயற்றுகிறார். பிரபந்தங்கள் பாடாத வைணவக் கோவில்கள் உண்டா ?
அத்துடன் ஆழ்வார்களில் அந்தணரல்லாத ஆழ்வார்களே அதிகம். இப்படி இருக்க, நம்மாழ்வாரை மட்டும் ஒதுக்கினார்கள் என்று சொல்வது என்ன நியாயம் ?
உண்மை இப்படி இருக்க, வெள்ளையர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு நம்மாழ்வாரை வைதீகர்கள் ஒதுக்கி வைத்ததாகப் பெரியவர்கள் சொல்வது வருத்தம் அளிக்கிறது.
கம்பன் மதுவும் மாமிசமும் பற்றி என்ன கூறுகிறான் என்று பார்க்கும் முன், சில அதிர்ச்சிகளை எதிர்கொள்வோம். “அட, இப்படியும் இருந்திருக்குமா?”, என்று எண்ண வைப்பது அந்தச் செய்தி.
மதுவும் மாமிசமும் தமிழர் நாகரிகத்தில் இருந்தன, அன்றாட உணவில் இருந்து வந்துள்ளன என்றால் நம்புவது கொஞ்சம் கடினம் தான். ஆனால், சாமி.சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் இவை தமிழர் உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்துவந்துள்ளன என்று அடித்துக் கூறுகிறார்.
“பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கிய நூலகளில் மதுவும் மாமிசமும் கலந்து மணம் வீசுவதைக் காணலாம். பெரு மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள், அனைவரும் தம்மிடம் வந்த விருந்தினர்க்கும்,இரவலர்க்கும் வேண்டியமட்டும் மதுவும், மாமிசமும் அளித்து அயர்வு தீர்த்தனர்; என்று அந்த நூல்களில் காணப்படுகின்றன. பெரும் புலவர்களான ஔவையாரும், கபிலரும் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தனர்”, என்கிறார் சாமி.சிதம்பரனார்.
அதுபோலவே, “அறியப்படாத தமிழகம்” என்னும் நூலில் தொ.பரமசிவன் என்னும் நிகழ்கால ஆராய்ச்சியாளர், தமிழ்க் காவல் தெய்வங்களான சுடலைமாடன், கருப்பசாமி முதலிய தேவதைகளுக்கு மிருக பலி கொடுப்பதை விலாவாரியாகக் குறிப்பிடுகிறார். அவர் கூறும் சில முறை பலிகள் நாகரீக எல்லைக்குள்ளேயே இல்லை. ஆனால் அப்படியும் ஒரு காலம் இருந்துள்ளது தெரிகிறது. ஆனால் இது சங்க காலமா என்று தெரியவில்லை.
ஆனால் சங்க காலம் கழித்துத் தோன்றிய “சங்கம் மருவிய” கால நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிலும், திருக்குறள், சைவ வைணவ சமயக் கால நூல்களிலும் மதுவும் மாமிசமும் இழித்துக் கூறப்படுகிறது. ஆக, சமண, பௌத்த, சைவ, வைணவ மதங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் பதியும்வரை மதுவிற்கும் மாமிசத்திற்கும் தமிழ் மண்ணில் ஒரு ஏற்றம் இருந்துள்ளது தெரிகிறது.
வள்ளுவர் மாமிச உணவை மிகவும் பழிக்கிறார். மதுவையும் அப்படியே, எனவே “புலால் உண்ணாமை”, “கள் உண்ணாமை” என்று அதிகாரங்களே வைத்துள்ளார்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்” என்கிறார்.
( கொல்லா விரதத்தைக் கொண்டவனை, மாமிசம் உண்ணாதவனை இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் கை கூப்பி வணங்கும் )
இந்தக் காலங்கள் கழித்து 300 ஆண்டுகள் பின்பே கம்பன் காலம். அவனது எழுத்துக்களில் திருக்குறள், ஆழ்வார் பாசுரங்களின் பாதிப்பு தெரிகிறது. எனவே மதுவையும் மாமிசத்தையும் பழிக்கிறான் கம்பன்.
இதில் கவனிக்கத்தக்கது வால்மீகி ராமாயணம் மதுவும் மாமிசமும் வெறுக்கப்படாத காலத்தில் எழுத்தப்பட்டது. ஆனால் கம்ப ராமாயணமோ சமண, பௌத்த மதங்கள் தமிழகத்தில் வேரூன்றி அழிந்தபின் பக்தி இலக்கியக் காலங்களுக்குப் பின் எழுதப்பட்டது. எனவே தான் கதா பாத்திரங்களை மதுவும் மாமிசமும் உண்ணாதவர்களாகச் சித்தரிக்கிறான் கம்பன்.பின்னர் அதுவே சிறந்த ஒழுக்கம் என்று கருத்தப்படுகிறது.
கம்பன் இராமனைக் கனியும் கிழங்குகளும் உண்பவனாகவே காட்டுகிறான். இதைத் தவறாமல் குறிப்பிடுகிறான்.
இராமனும் சீதையும் கானகம் அடைகிறார்கள். அங்கு அவர்கள் உண்ணும் உணவு காட்டப்படுகிறது :
“காயும் கானில் கிழங்கும்கனிகளும்
தூய தேடிக்கொணர்ந்தனர்; தோன்றல் நீ
ஆயகங்கை அரும்புனல் ஆடினை,
தீயை ஓம்பினை செய்அமுது என்றனர்”
( காட்டில் கிடைக்கும் உண்பதற்கரிய காய்களையும், கிழங்குகளையும், கனிகளையும் நல்லனவாகத் தேடிக் கொண்டுவந்தனர். பெருமையுள்ள இராமனே, நீ சிறந்த உயர்ந்த கங்கையில் நீராடி, தீ வளர்த்து வேள்வியினை முடித்தபின் இவற்றை உண்டு களைப்பு தீருவாயாக, என்று வேண்டிக்கொண்டனர் )
இதில் நாம் காண வேண்டியது, இராமன் உணவு உண்ண வேண்டிய முறை பற்றியும் முனிவர்கள் கூறுவதுபோல் அமைத்துள்ளது. நீராடவேண்டும், தீ வளர்த்து தினப்படி ஆற்றவேண்டிய தெய்வீகச் திருச்சடங்குகள் செய்யவேண்டும், பின்னர் காயையும் கனியையும் உண்ண வேண்டும் ( “அமுது செய்ய வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகத்தை வைணவர்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர்).
கம்பன் இன்னொரு இடத்திலும் இராமன் உண்டது என்ன என்று கூறுகிறான்.இலக்குவன் தான் உண்டது என்ன என்று கூறுமாப்போலே அமைந்துள்ள பாடல் இது :
“பச்சிலை கிழங்கு காய் பரமன் துங்கிய
மிச்சிலே நுகர்வது, வேறுதான் ஒன்று நச்சிலேன்”
( இராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய்களின் மீதத்தையே நான் உண்பது வழக்கம். இதைத் தவிர வேறு ஒன்றையும் நான் விரும்புவதில்லை ).
யுத்தகாண்டத்தில், கம்பன் இராமனை வர்ணிக்கும்போது,
“கானிடைப் புகுந்து இரும்கனி காயொடு நுகர்ந்த
ஊன்உடைப் பொறை உடம்பினன் .. ” என்று கூறுகிறார்.
( காட்டில் அமைந்துள்ள பழங்களையும், காய்களையும் உண்ட ஊண் அமைந்த பாரமாகிய உடம்பை உடைய இராமன் .. )
மேலே காய் கனிகளை மட்டும் உண்டான் என்று தெரியும்படிக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.
விபீஷணன் நல்லவன் என்று இராமனுக்கு எடுத்துக் கூறும் அனுமன் பின்வருமாறு கூறுகிறான் :
“நிந்தனை நறவமும் நெறியில் ஊண்களும் தந்தன கண்டிலன் ”
(பழிக்கு ஆளாக்கும் மதுவும், நன்னெறிக்கு மாறான புலால் போன்ற உணவு வகைகளையும் இவன் – விபீஷணன்- சேர்த்து வைத்து நான் கண்டதில்லை )
மாமிச உணவு உண்ணாதவர்களை “சைவம்” என்று தற்காலத்தில் அழைக்கிறோம்.கொல்லா விரதம் கொண்டவர்கள் சைவர்கள் என்று அழைக்கப்படவேண்டிய காரணம் என்ன ? கம்பனை விட்டு சற்று விலகி, வேறு சில பழைய பாடல்களை ஆராய்வோம்:
திருமூலர் என்னும் சைவ சமயப் பெரியார்,
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே” என்று அன்பாக இருப்பதே சிவம், தெய்வத்தன்மையானது அன்பு என்னும் பொருள் படும்படிக் கூறுகிறார்.
மற்ற மனிதர்களிடத்து அன்பு செய்தலே சிவமா அல்லது எல்லா உயிரிடத்தும் அன்பு செய்வது சிவ நெறியா என்ற குழப்பம் தோன்றலாம்.
அதற்குத் தாயுமானவர் என்ற சைவப் பெரியவர் கூறுவது :
“எவ்வுயிரும் பராபரன்சந் நிதிய தாகும்
இலங்கும்உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் ”
(எல்லா உயிரும் இறைவனின் சன்னிதியே, இங்கு வாழும் உயிரினங்களின் உடலே இறைவன் வாழும் ஆலயம்).
ஆக அன்பு செய்தல் எல்லா உயிரிடத்தும் செய்தல் வேண்டும் என்பது சைவ சமயம்.
தாயுமானவர் மேலும்,
“கொல்லா விரதம் குவலயமெ லாமோங்க
எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே”, என்று பாடுகிறார்.
(உயிர்களைக்கொல்லாமை என்னும் விரதம் இந்த உலகெல்லாம் தழைத்து வளர எல்லாருக்கும் எடுத்துச்சொல்வதே என் ஆசை )
ஆக சைவ சமயம் பின்பற்றுபவர்கள் மாமிசம் உண்பது தவறு என்பது பல வகையிலும் சொல்லாமலே சொல்லப்பட்டுள்ளது காண்கிறோம்.
சிவன் வழிபாட்டு சமயம் சிவ-சமயம் என்றும், காலப்போக்கில் சைவ சமயம் என்று ஆகி இருக்க வேண்டும். அத்துடன் அன்புருவான சிவனை வழிபடுபவர்கள் மாமிச உணவைத் தவிர்த்ததால் சைவர்கள் ஆனார்கள் என்று வழக்கத்தில் வந்திருக்கலாம் என்று காலஞ்சென்ற தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தெரிவிக்கிறார்.
இந்த நேரத்தில், “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் ” என்று மஹாகவி பாரதியார் பாடியுள்ளது நினைவில் கொள்ளத் தக்கது.
கம்பனிடம் திரும்ப வருவோம்.
மது அருந்துவதை இழித்துக் கூறும் கம்பன் பரதன் கூறுவதுபோல் அமைத்துள்ள பாடல் ஒன்று உள்ளது
இராமனைக் கைகேயி காட்டிற்கு அனுப்பும்போது பரதன் அயோத்தியில் இல்லை.அவன் வந்தபிறகு அவனது உள்ளத்தை அறிய இராமனின் தாய் கோசலை ,பரதனிடம் ,”கைகேயி செய்த வஞ்சனை உனக்கு முன்னமே தெரியாதா?” என்ற பொருள் படும்படிக் கேட்டாள். அதைக்கேட்ட பரதன்,”என் அன்னை செய்த வஞ்சகச் செயலை முன்னரே அறிந்து நான் உடந்தையாய் இருந்திருப்பேனானால் நான் பின்வரும் மாபாதகச் செயலைச் செய்தவர் அடையும் பாவத்தை அடைவேன்”, என்று கூறுகிறான்.
“கன்னியை அழிசெயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினன்; பருகினோன் நறை ;
பொன்இகழ் களவினில் பொருந்தினோன், என
இன்னவர் உறுகதி என்னது ஆகவே”
(மணமாகாத கன்னிப்பெண்ணிடம் தவற நினைத்தவன்; குருவின் மனைவியைக் கெட்ட எண்ணத்துடன் பார்த்தவன் ; மது அருந்தியவன்; பொன்னைத் திருடிச் சேர்க்கும் இழிதொழிலில் ஈடுபட்டவன் ; இவர்கள் அடையும் கதியை நான் அடைவேன்).
மது அருந்துவதைப் பெண்ணிடம் தவறாக நடப்பதற்கும், ஆசிரியரின் மனைவியைப் பற்றித் தவறாக எண்ணுவதற்கும் ஒப்பிட்டுக் காட்டுகிறான் கம்பன்.
மேலும் மதுவின் தீய விளைவுகளைப் பட்டியல் போடுகிறான் சுக்ரீவனின் வாயிலாக. அது பின்வருமாறு:
“வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபில் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்
கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொள்வது அல்லால் நரகினை நல்காது அன்றே”
(மது அருந்துதல் வஞ்சகம், களவு, பொய்- இது மூன்றையும் செய்யத்தூண்டும்; மயக்கத்தை உண்டாக்கும்; முறையற்ற வழியில் அறிவை அலையச் செய்யும்; அடைக்கலம் அடைந்தவரை உதைத்துத் தள்ளச் செய்யும்; நல்ல குணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்; செல்வமும் நீங்கிவிடும்; கள் உண்பவர்களை அக்கள்ளில் உள்ள நஞ்சே கொன்றுவிடும் … )
உலகில் உள்ள அனைத்துப் பாவங்களுக்கும் மூல காரணமாக மதுவைக் கம்பன் மது அருந்தும் பழக்கம் உள்ள சுக்ரீவன் வாயிலாகவே சொல்லவைத்துள்ளான்.
சுக்ரீவன் மேலும் பேசுவான் :
“அய்யநான் அஞ்சினேன் இந் நறவினின் அரியகேடு
கய்யினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்”
(ஐயனே, நான் இந்த மதுவினால் வரும் பெரிய கேடுகளுக்கு அஞ்சினேன்; இனி என் கையால் மதுவைத் தீண்ட மாட்டேன்; உள்ளத்தாலும் நினைக்க மாட்டேன்; அதனை மனத்தால் நினைப்பதே தீமையாகும் )
மதுவிலக்கு, மாமிச விலக்கு முதலியன நல்ல ஒழுக்கங்களை அளிக்கும்; நம்மை உயர்த்தும். எனவே இக்கேடுகளை அறவே விலக்கிய ஒரு ஒழுக்க சமுதாயமே உயரும் என்ற கொள்கையில் கம்பன் பளிச்சிடுகிறான்.
இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். தற்காலச் சூழ் நிலையைப் பற்றி எண்ணினால் பாரதி சொன்னதுபோல,”நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று கோபம் கொப்பளிக்கப் பாட வேண்டியதுதான்.
தற்போது நாட்டில் அரசே கள் விநியோகம் செய்யும் காலத்தில்,மது பற்றிய கம்பன் பாடல்கள் நமது பாடங்களில் வராதது ஏன் என்று அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.
அடுத்த பதிவில் என்ன வரும் என்று தெரியாது !
இராமாயணத்தில் பல ஒழுக்கங்கள் காட்டப்படுகின்றன. அதுவும் கம்பன் பல அரிய விஷயங்களைக் காட்டுகிறான். அவை அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழ் நாட்டுப் பண்புகளுக்கு ஒத்து அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
முன்னமேயே கூறியது போன்று நாம் இராமன் பற்றிய கதை பேச இங்கு வரவில்லை. இராமனின் கதை நாம் அறிந்ததே. ஆனால் அறியாதது நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள நம் முன்னோர்களின் மாண்புகள் மற்றும் நெறிகள். அவற்றை நாம் கம்பன் மூலம் கண்டு வருவோம். துணைக்கு ஆழ்வார்களும், சங்க இலக்கியங்களும், நாயன்மார்களும் , வள்ளுவரும் இன்னும் சிலரும் அவ்வப்போது வருவார்கள்.
இப்போதெல்லாம் ஒழுக்கம் என்றால் ஏதோ ஒரு பிற்போக்குத்தனமான எண்ணம் என்றே பலரும் நினைக்கத் துவங்கிவிட்டார்கள். யாராவது ஒழுக்கம் என்று பேசத்துவங்கினால், எதிரில் இருப்பவர் கொட்டாவி விடுவதுபோன்று செய்வார். அந்த அளவுக்கு நாம் இதைக் கொண்டு சென்றுள்ளோம்.
இதைப் படிக்கும்போது கம்பன் வாழ்ந்த காலத்தையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். இங்கிலாந்து முதலியவை காட்டுமிராண்டிகளாய் அலைந்துகொண்டிருந்த காலம். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படவே இல்லை. அந்த நிலையில் இந்தியப் பண்பாடு இருந்த உயர்ந்த நிலை பிரமிக்க வைக்கிறது. அப்படி இருந்த நாம் தற்போது உள்ள நிலை நினைத்து எண்ண வேண்டும்.
கம்பன் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல ஒழுக்கங்களைத் தன் காப்பியம் மூலம் காட்டிவிட்டான். உதாரணமாக, இராமனைத் தேடிக்கொண்டு ஒரு பெரும் படை திரட்டிக்கொண்டு பரதன் கானகம் வருகிறான்.அங்கே படகோட்டும் குகனைச் சந்திக்கிறான். பரதனும் குகனுமே இராமனிடம் பெருத்த அன்புடையவர்கள். ஆதலால் பரதன் குகனிடம், இராமன் எங்கே படுத்திருந்தான் என்று கேட்கிறான். தர்ப்பைப்புல் மெத்தையும், தலை வைத்துகொள்ள ஒரு கல்லையும் காட்டி,”இதில் தான் இராமன் உறங்கினான்”, என்று அழுதவாறே சொல்கிறான் குகன்.
பின்னர் பரதன், “இலக்குவன் எங்கே படுத்திருந்தான்?” என்று கேட்கிறான்.
இங்குதான் கம்பன் காட்டும் தமிழ் நாட்டு ஒழுக்கம் தெரியும். குகன் கூறுவது போல் அமைந்துள்ள பாடல் பின்வருமாறு:
“அல்லைஆண்டு அமைந்த மேனி அழகனும் அவனும் துஞ்ச
வில்லைஊன் றியகை யோடும் வெய்துயிர்ப் போதும் வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள்நீர் சொரியக் கங்குல்
எல்லைகான் பலவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்”
(இருளை ஆட்சி செய்துகொண்டு கருமை பொருந்திய திருமேனியில் இணையற்ற அழகுடையவனாகிய இராமனும் அவளும் துயிலும்போது, இலக்குவன் தான் தூங்காமல், வில்லை ஊன்றிய கையோடு, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிய, இரவு முழுவதும் கண் இமைக்காமல் காவல் நின்றான். எனவே அவன் உறங்கவில்லை).
இதில் கவனிக்க வேண்டியது இலக்குவன் இராமனையும் சீதையையும் கண் இமைக்காமல் காத்தான் என்பது அல்ல.குகன் இராமனும் சீதையும் உறங்கினார்கள் என்பதை எப்படிக் கூறுகிறான் என்பதே.
இராமனின் அழகை “இருளை ஆட்சி செய்யும் கருமை பொருந்திய உடல் அழகை உடையவன்” என்று கூறுகிறான். ஆனால் சீதையை வர்ணிக்க வில்லை. சீதையை வெறுமே “அவள்” என்று கூறுகிறான். சீதை இன்னொருவன் மனைவி. எனவே அவளை வர்ணிக்கக் கூடாது என்ற தமிழர் ஒழுக்கத்தின் வழி நின்று ஓடம் ஓட்டும் குகன் மூலமாகக் கம்பன் மிக உயர்ந்த ஒழுக்கத்தைக் கூறுகிறான்.
குகன் காட்டில் வாழ்பவன். ஓடம் ஓட்டுபவன். மாமிசம் உண்பவன். நகரங்களில் வாழாதவன். படிப்பறிவில்லாதவன். ஆனாலும் அவன் வாயிலாகக் கம்பன் காட்டும் ஒழுக்கம் மிக மேலானது. ( மதுவும் மாமிசமும் உண்பது பற்றித் தமிழ் நூல்கள் கூறுவதைப் பின்னர் பார்ப்போம் )
கம்பன் சீதையின் அழகைப் பல இடங்களில் வர்ணனை செய்துள்ளான். அவை அவன் கவி என்ற வகையில் அவனுக்குப் பொருந்தும். ஆனால் குகன் வேறொரு ஆண்மகன். இன்னொருவன் மனைவியைப் பற்றிக் கூறும்போது தமிழ் மக்கள் ஒழுக்கத்தைப் பேணும் விதமாகக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.
பல ஒழுக்கங்களைப் பற்றிக் கம்பன் கூறியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒழுக்கமாகக் கருத்தப்படும் “பிறன் இல் விழையாமை ” என்னும் சீரிய பண்பு.
“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தமிழகத்தில் இருந்துவரும் பழைய மரபு. சங்க இலக்கியங்கள் முதல் பலவற்றிலும் இந்தச் சீரிய மாண்பு வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாகக் கம்பர் காட்டும் காட்சிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
இராமன் தன் “ஏக பத்தினி விரதம்” என்கின்ற நெறியை சீதையிடம் கூறியிருக்கிறான். அதை நினைவுபடுத்தும் விதமாக சீதை அனுமனிடம் பின்வருமாறு கூறினாள்:
“வந்த எனைக் கைப்பற்றிய வைகல் வாய்
இந்த இப்பிறவிக்கு இருமாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்”
( இராமன் மிதிலைக்கு வந்து என்னைக் கைப்பிடித்துத் திருமணம் செய்தபோது ஒரு உறுதி அளித்தான். இந்த இப்பிறவியில் இன்னொரு பெண்ணை உள்ளத்தாலும் தொடமாட்டேன் ..)
இங்கு நாம் காண வேண்டியது “இந்த இப்பிறவியில் ..” என்னும் தொடரை. “இந்தப் பிறவியில்” என்று கூறி இருக்கலாம். ஆனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக “இந்த இப் பிறவி ..” என்று இராமன் வாயிலாகக் கம்பன் கூறுவான்.
இதில் இன்னொரு நயம் உள்ளது. “சிந்தையாலும் தொடேன்..” என்பது , உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் நெருங்க மாட்டேன் என்று வாக்கு கொடுக்க வேண்டுமானால் கற்பின் நெறி இராமன் மூலமாக வலியுறுத்தப்படுவதே அந்த நயம். “கற்பு” என்பது உடல் மட்டுமே தொடர்பான ஒரு அணி அல்ல. உள்ளமும் தொடர்பான ஒரு அணி, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு அணி என்று அறிதல் பொருட்டு கம்பர் இவ்வாறு காட்டுகிறார்.
பாரதியும்,
“கற்பு நிலையென்றுசொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு நிலையைப் பொதுவாக வைத்துள்ளது இவ்விடத்தில் நோக்கத்தக்கது.
இராமன் வாழ்ந்த காலத்தில் பல தார மணம் வழக்கத்தில் இருந்துள்ளது. தசரதனே பல தார மணம் புரிந்தவன் தானே ? ஆயினும் அவனது மகன் இராமன் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக “ஒரு தார மணம் உயர்ந்த குணம்” என்று நமக்கெல்லாம் உணர்த்தியுள்ளான்.
இராவணன் நல்லவன் தான். ஆனால் பல தார மணம் கொண்டிருந்தான் என்று கம்பர் காட்டுகிறார்.
சூர்ப்பனகை இராவணனிடம் சீதையைக் கவர்ந்து வருமாறு சொல்லுமிடத்தில்,
“வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்
கிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே” என்கிறாள்.
( வள்ளல் தன்மை கொண்டவனே, உனக்கு மட்டுமே நான் நல்லவள். உன் மனையில் கிளியைப் போல் உரையாடும் உன் காதலிகளுக்கெல்லாம் நான் கேடு செய்தவளாவேன் )
இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் முன் தன் மாமனான மாரீசனை உதவுமாறு வேண்டுகிறான். அப்போது மாரீசன் கூறுவது :
“நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா
வாரம் கொண்டார், மற்றொருவர்க்காய் மனைவாழும்
தாரம் கொண்டார், என்றிவர் நம்மைத் தருமந்தான்
ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா !”
(நடு நிலைமை தவறியவர்கள், பிற நாட்டைப் பலவந்தமாகக் கவர்ந்தோர், ஒழுக்கமற்ற செயல்களில் ஆசை கொண்டோர், இன்னொருவனுக்கு உரியவளாக அவனது மனையில் இருப்பவளைக் கவர்ந்தவர் இவர்கள் அனைவரையும் தருமம் அழித்துவிடும் )
இவை இராவணன் மீது மிக்க அன்பு கொண்ட மாரீசன் கூறும் வார்த்தைகள். அவனே மாய மானாக மாறி சீதையைக் கவர உதவினான் என்றாலும், முடிந்தவரை அறத்தின்பால் நின்று இராவணனைத் தடுத்துப் பார்த்தான். “தர்மமே உன்னை அழித்துவிடும்”, என்று பயமுறுத்தினான். இவை அனைத்தையும் மீறி இராவணன் சீதையைக் கவர்ந்தான் என்பதால் இராவணன் பிறன் இல் விழையும் தன்மை உடையவன், பல தார மணமோ அல்லது பல பெண்டிர் தொடர்போ கொண்டவன் என்பது புலனாகிறது. (இதனால் தானோ என்னவோ தமிழகத்தில் பலர் தங்களை இராவணன் குலத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர்)
கம்பன் அத்துடன் நிற்கவில்லை. பிறன் இல் விழையாமையை மேலும் வலியுறுத்துகிறான்.
கும்பகருணன் ராவணனிடம் அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துள்ள பாடல் நக்கலும் நையாண்டியுமாகவும் அதே நேரத்தில் ஆணி அடித்தது போலவும் உள்ளது. அது பின் வருமாறு :
“ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் !
மாசில் புகழ் காதல் உறுவோம்! வலிமை கூரப்
பேசுவது மானம்! இடைப் பேணுவது காமம்,
கூசுவது மானுடரை! நன்று நம் கொற்றம்!”
(குற்றமற்றவர்களாக உள்ள மற்றவர் மனைவியரை எல்லாம் கொணர்ந்து நமது அழகிய சிறைகளில் அடைப்போம்; அச் செயலைச் செய்துவிட்டு, “எமக்கு மாசற்ற புகழ் வேண்டும்” என்று விரும்புவோம்; வெளியில் “எங்களுக்கு மானமே பெரிது” என்று உரைப்போம் ஆனால் அறிஞர் வெறுக்கும் காமத்தை விரும்புவோம். இப்படிப்பட்ட நமது வெற்றி வாழ்க, நம் புகழ் வாழ்க !)
மேலே கும்பகருணன் நேர்மை தெரிகிறது. அதே சமயம் இராவணன் சீதை தவிர மற்ற பலரது மனைவியரையும் சிறைப்படுத்தியுள்ளான் என்றும் அறிகிறோம். அதைக் கும்பகருணன் கேலியாக “நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோம், என்ன ஒரு பெருமை, என்ன ஓர் ஆட்சி !” என்று கூறுகிறான்.
இத்துடன் நிற்காமல், “சிட்டர் செயல் செய்திலை குலச் சிறுமை செய்தாய்” என்றும்,
“ஆயிரம் மறைப்போருள் உணர்ந்து,அறிவமைந்தாய் !தீவினை நயப்புருதல் செய்தனை ”
என்றும் கூறுவதன் மூலம்,” இவ்வளவு உயர்ந்த வேதப்போருளை எல்லாம் ஓதி உணர்ந்தவனே, என்ன செய்கை செய்திட்டாய், குலத்தின் பெருமையைக் கொன்றுவிட்டாயே”, என்று கும்பருணன் வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கம்பன் காட்டுகிறான்.
தன் சொந்த மாமனும், தம்பியுமே பிறன் இல் விழியும் தன்மையை இழித்துப்பேசியுள்ள நிலையில், இராவணனது நல்ல பண்புகளைப் பொருந்தாக் காமம் அழித்தது என்று கம்பன் கூறும் விதம் சாட்டையடி போல மனத்தில் விழுகிறது.
இராமன் வாலியிடம் கூறுவதாக அமைந்துள்ள பாடலில்,
“அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ?”
என்று, ” உனது அருமையான தம்பி சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து உனது பெருமை அழிந்து நிற்கிறாயே ..” என்று கூறுவதாக அமைத்துள்ளது நோக்கத்த்தக்கது.
சரி, ஒரு தாரமும், பிறன் இல் விழையாமையும் தமிழர் பண்பு என்று எப்படி அறிவது?
நம் தமிழ்த் தெய்வம் வள்ளுவர் “பிறன் இல் விழையாமை” என்று ஒரு அதிகாரத்தையே படைக்கிறார். அவர் இப்படிக்கூறுகிறார்:
“பிறர் பொருளால் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்கண் இல் ”
(மற்றவனுக்கு உரிமை உள்ள மனைவியை விரும்பி அவளிடம் செல்வது அறியாமை. இவ்வுலகில், அறம் இன்னது, பொருள் இன்னது என்று அறிந்தவர்களிடத்தில் இந்தத் தீய நெறி காணப்படுவதில்லை )
அது மட்டுமா ? இராவணன் பெரிய போர் வீரன் தான். “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் அவன் வீரத்தைப் புகழ்கிறார். ஆனால், பிறன் இல் விழைந்ததால் என்ன நேரும் என்று வள்ளுவர் சொன்னாரோ அதுவே அவனுக்கு நடந்துள்ளது.
“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி”
(இவளை அடைதல் அரியது என்று நினைத்து பிறன் மனையில் புகுகின்றவன் எப்போதும் நீங்காக் குடிப் பழியை அடைவான் )
வள்ளுவன் வாக்கு இன்றும் நிற்கிறது. பர தாரம் விழைபவனை இன்றும் கூட “ராவணன் போலே” என்று இழித்து அழைப்பது வழக்கமாகவே உள்ளது.
அதற்கும் மேல் :
“பிறன்மனை நோக்காத பேராண்மை, சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” என்கிறார் வள்ளுவர்.
(பிறன் மனைவியை விரும்பிப்பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறம் மட்டுமன்று, நிறைந்த ஒழுக்கமுமாகும் ).
“வாரணம் பொருத மார்பன்” என்று கம்பன் கூறினாலும், வள்ளுவர் அந்த ஆண்மையை விடப் பெரிய ஆண்மை ஒன்று உள்ளது; அது போரில் காட்டும் ஆண்மை அல்ல ; பிறனது மனைவியை நோக்காத ஆண்மை – பேராண்மை.போர் ஆண்மையை விடச் சிறந்தது பேராண்மை என்று கூறுகிறார். அந்த ஆண்மையை இராவணன் இழந்து நிற்பதாகக் காட்டுகிறார் கம்பர்.
ஒரு மனை அறம் பூண்ட இராமன் தமிழர் பண்பாட்டாளனா அல்லது பல தார மணம் , பல பெண்டிர் விழைதல் என்ற கொள்கையுடைய இராவணன் தமிழ்ப் பண்பாட்டாளனா என்று அறிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.
அடுத்த பதிவில் “மது, மாமிசம்” முதலியன பற்றிப் பார்க்கலாம்.