வாங்க பேசலாம் வாங்க

‘கதையும் காரணமும்’ என்னும் தலைப்பில் இராமாயணத்தின் காரணங்கள் குறித்து இன்று பேசினேன். தமிழ் மொழி பண்பாட்டுக்கழகப் பேச்சாளர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் இது நடை பெற்றது. வள்ளுவர், கம்பர், அகநானூறு, புறநானூறு, சிலம்பு முதலியவற்றில் இருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசினேன். நல்ல வரவேற்பு இருந்தது.

இன்று ரங்கப்பிரசாத்தின் வழக்கமான நகைச்சுவை இழையோடும் பேச்சில் ஸ்ரீரங்கத்திற்கே உரிய காவிரித் தண்ணீரின் உயர் நகைச்சுவைத் திறன் தென்பட்டது. அவரும், ராம்குமாரும் சிங்கையின் கிரேசி நாடகக் குழு துவங்கலாம். அவ்வளவு திறமை தெரிகிறது.

வாணியின் ‘மண்டலா’ என்னும் பேச்சு கோலம் போடும் கலை பற்றிய நினைவூட்டல். தமிழர்கள் ஸ்டிக்கர் கோலம் ஒட்டும் காலத்தில் கோலம் போடுதல் பற்றிப் பேசினார் அவர். கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட ஹேமா அருணகிரி நாதரின் ‘முத்தைத் திரு..’ பதிகத்தை ‘கவிதை ஆய்வு’ செய்தார். நல்ல முயற்சி.

அனு வெங்கட் ‘தமிழர் அறிவியல்’ என்னும் தலைப்பில் வள்ளுவர், பாரதி, சங்கப்பாடல்கள், திருவள்ளுவமாலை என்று மேற்கோள்களுடன் அசத்தினார்.  மஞ்சுநாதன் பேச்சு எப்போதும் போல் வட்டார வாசனையுடன் ரசிக்கும்படி இருந்தது. அஷோக் வழக்கம்போல் பொறுமையாகவும் நிதானமாகவும் அருமையாகவும் ‘முயற்சி’ பற்றிப் பேசினார்.

புதிதாக இணைந்த பல உறுப்பினர்கள் அசத்தினர். சௌராஷ்டிர மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கணினிப் பொறியாளர் நல்ல தமிழில் பேசினார். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று கடல்  நீர் சுத்திகரிப்பில் பணியாற்றும் இன்னொருவர் பல புதிய தமிழ்ச் சொற்களை சரளமாகக் கையாண்டார்.

தலைவர் ஹரிகிருஷ்ணனின் போலிப் பாசாங்குகள் அற்ற  யதார்த்தமான பேச்சு வழக்கம் போல் பயனளித்தது. நெறியாளர் வனிதா ‘நட்பு’ என்னும் இன்றைய கருப்பொருளை ஒட்டிப் பல செய்திகளை அவ்வப்போது சொன்னார். வசந்தம் ஒளிவழிக்காரர்கள் இவரை அணுகினால் நல்ல ஒரு அறிவிப்பாளினி கிடைக்கப்பெறுவர்.

நீங்கள் சிங்கையில் இருப்பவராயின், நல்ல தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச விழைந்தால் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகப் பேச்சாளர் மன்றத்தில் சேரலாம்.

வைணவத்தில் ‘நற்போதுபோக்கு’ என்று சொல்வார்கள்.  TLCS அவ்வகையானது.