ஸரீரம் அஸக்தமாக இருப்பதாகவே நானும் உணர்ந்தேன். ரொம்ப நாழிகை வார்த்தை சொல்லியாகிவிட்டது. தத்துவ விசாரம், பாரத ஞான மரபுத் தேடல்கள் என்றால் நேரம் போவதே தெரிவதில்லை.
கூட்டம் கலைந்தது. மீண்டும் அடுத்த பௌர்ணமி அன்று ஸதஸ் * வைத்துக் கொள்ளலாம் என்று பலரும் அபிப்ராயப்பட்டனர். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அதனால் ஒரு அறிவிப்பு செய்தேன்..
‘அடுத்த ஸதஸில் நாம் பாரத ஞான ஸம்பிரதாயத்தை மேலும் ஆராய்வோம். அது வரை பண்டிதர்கள் நமது மடத்திலேயே தங்கியிருந்து மடத்தின் ஓலைச் சேகரிப்பு பண்டாரத்தில் இருந்து வேண்டிய ஓலைச் சுவடிகளைப் பார்த்துக்கொள்ளலாம். பொது மக்களும் தங்கள் சந்தேகங்களை முன்னமேயே தெரிவிக்கலாம். பண்டிதர்கள் அவை குறித்தும் தயாராவார்கள். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் மற்றும் அவரது பரிவாரத்தினர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருக்கலாம்’.
ஸ்ரௌதிகள் தான் அருகில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்குச் சென்று வர விருப்பம் தெரிவித்தார்.
சாயங்கால அனுஷ்டானங்கள் முடிந்து அவற்றின் பின் ஸ்ரம பரிகாரம் செய்துகொண்டிருந்த போது கூரத்தாழ்வார் வந்திருந்தார்.
‘தேவரீர் ரொம்பவும் வருத்திக்கொள்கிறது. இந்த விவாதங்கள் இப்போது முடியப்போவதில்லை. சற்று ஓய்வாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று சொன்னார்.
‘சொல்வது சரிதான். ஆனால் ஆசார்யன் என்று ஒரு ஸ்தானம் வைத்துக்கொண்டு வழி சொல்லாமல் இருந்தால் எப்படி ? வேண்டிய மட்டும் அனைவரும் என்னிடமிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்ளட்டும். அதற்கு நானே தடையாக் இருக்க முடியாதே கூரா..நாளை கருட சேவை. அரங்கன் கருட வாகனத்தில் எழுந்தருளப் போகிறான். இந்த வருஷம் நான் சேவிக்கிறேன். அடுத்த வருஷம் எப்படியோ. எனவே இருக்கும் போதே முடிந்தவரை எல்லார் சந்தேகங்களையும் தீர்த்துவிட வேண்டும்’, என்று சொன்னேன்.
கூரன் விழுந்து ஸேவித்துச் சென்றார்.
நெடு நேரம் உறக்கம் வரவில்லை. பழைய நினைவுகள் வந்து சென்றன. அத்வைத ஸித்தாந்தத்தின் உயர்வு நான் கண்டு வியந்த ஒன்று தான். ஆதி சங்கரர் பௌத்த தத்துவத்தைஉம் தரிசனத்தையும் ஆழக் கற்று அதன் அடிப்படையிலேயே பௌத்த மதஸ்தருடன் வாதிட்டு பௌத்தர்களை வீழ்த்தினார். அவரது ‘விவேக சூடாமணி’ யில் பௌத்த மத கோப்புகள் உள்ளன. ‘சங்கர பாஷ்யம்’ பௌத்த ஸம்பிரதாயத்தை அதன் வழியிலேயே சென்று சாய்த்தது. இவரை ‘பிரஸன்ன பௌத்தர்’ என்றே அன்றைய அந்தணர்கள் அழைத்தனர்.
இளம் வயதில் என் முதல் ஆச்சார்யர் யாதவப் ப்ரகாஸர் அத்வைதியே. பெரும் ஞானஸ்தர். ஆனால் கொஞ்சம் முன்கோபி. ஆச்சாரிய நிந்தனை கூடாது தான். ஆனால் அவரது எண்ணங்கள் சரியானவை அல்ல. தனது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்பதில் அவர் உறுதியாயிருந்தார். ஆனால் நமது ஸம்பிரதாயம் எப்போதுமே வாதம், பிரதிவாதம், ஞான விசாரம் முதலியனவற்றை ஆதரித்தே வந்துள்ளன. ஒருபோதும் ஒரே கருத்தே முழுமை, உண்மை என்பது தவறு. உண்மை என்று தோன்றுவது சிறிது காலம் கழித்து உண்மை இல்லை என்று நிரூபணமாகும். பிறிதொரு தத்துவம் தோன்றும். பின்னர் அதுவும் மறையும். ஆனால் பிரும்மம் ஒன்று மட்டுமே மாறாது. இதுவே நமது பாரத சம்பிரதாயம்.
இன்று நடந்த ஸம்பாஷணைகள் மனதில் தோன்றின. ‘மீமாம்ஸை’ பற்றிக் கவனம் திரும்பியது. ஸ்ரௌதிகள் ‘ மோக்ஷம் பெற மீமாம்ஸங்களில் உள்ள வேள்விகள் தேவை இல்லையா?’ என்று கேட்டிருந்தார். இந்த ஒரு கேள்வியே அவரது அத்வைத ஸம்ப்ரதாயத்தை ஆட்டுவதாய் இருக்கிறது. அத்வைதிக்கு மீமாம்ஸை எதற்கு ? மீமாம்ஸையில் எந்தெந்த பலன் வேண்டி எந்தெந்த யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. எல்லாமே வேள்விகள் தான். மனிதனுக்கு என்ன தேவை என்றாலும் ஏதாவது ஒரு வேள்வி செய்தால் அந்த வேள்விக்குரிய தெய்வம் பிரத
யட்சம் ஆகும். அந்தந்த பலன்களை அளிக்கும். தெய்வங்களும் யாகத்துக்குக் கட்டுப்பட்டவை. அப்பலன்கள் ‘அபூர்வம்’ என்று அழைக்கப்படும். அபூர்வம்’ என்பது ‘பூர்வம் இல்லாதது’, ‘ முன்னே இல்லாதது’ என்று அர்த்தப்படும். ஆக, பலன்கள் வேண்டி செய்ய வேண்டிய யாகங்களைச் செய்தால் அந்தந்த தெய்வங்கள் அபூர்வமான பலன்களை அளிக்கும். இதுவே மீமாம்ஸையின் சாரம்.
இதற்கும் அத்வைதத்திற்கும் சம்பந்தம் என்ன ? ஒரு அத்வைதிக்கு தெய்வங்களே தேவை இல்லையே. எல்லாம் ஒரே பிரம்மத்தின் பிம்பங்கள் என்றால், அந்த பிரம்மத்தை அடைய வேண்டியது தான் ஒரே இலக்கு என்றால், மீமாம்ஸையில் கூறியுள்ள தெய்வங்களும் அவற்றிற்கான பலன்களும் ஏன் ? ஆக, ஒரு அத்வைதி வேள்விகளும், யாகங்களும் செய்ய வேண்டியது ஏன் ? அவச்யமே இல்லையே. எனவே மீமாம்ஸை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அவர்களுக்கு ?
இந்த தெய்வங்கள் எல்லாம் தேவை என்றால் அப்புறம் அத்வைதம் என்ன ? ஓருண்மை என்ன ? ஏகான்ம வாதம் என்ன ? அதெப்படி தத்துவம் ஒன்றாகவும் வழிமுறை வேறாகவும் இருக்க முடியும் ? தத்துவம் என்னவென்றால் ஓருண்மை, இரண்டில்லாதது என்பது. ஆனால் நடைமுறையோ பல தெய்வ வழிபாடு, இவ்வுலகத் தேவைகளுக்காகப் பல தெய்வ வேண்டுதல்கள், அதற்காக மீமாம்ஸை வேறு வேண்டுமாம்.
மீமாம்ஸை சொல்வது என்ன ? கர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் – இவை தானே மீமாம்ஸைகளில் உள்ளவை ? செயல், அதன் மூலம் பொருள், அப்பொருள் கொண்டு இன்பம் பின்னர் வீடு பேறு. இவை அனைத்தையும் அடைய வேள்விகள் என்னென்ன ? அவற்றின் தெய்வங்கள் யாவர் ? வேள்விகளின் போது ஓதவேண்டிய மந்திரங்கள் என்ன ? பலன்கள் என்ன ? இவை தானே பூர்வ மாமாம்ஸை என்பது ?
செயல்கள் அவற்றின், மூலம் நாம் அடையும் பலன்கள் – இவற்றை வலியுறுத்துவதால் இதன் பெயர் கூட ‘கர்ம மாமாம்ஸை’ என்று வழங்கப்படுகிறதே. பலன்கள் இந்த உலகத்தில் கிடைப்பதால் அந்தப் பலன்களும் மாயை தானோ ? மாயை என்பதால் அந்தப் பலன்களே தேவை இல்லையே. பலன்கள் தேவை இல்லை என்றால் அவற்றிற்கான தெய்வங்கள் தேவை இல்லை,வேள்விகள் தேவையே இல்லையே. இவை எதுவுமே தேவை இல்லை என்றால் பூர்வ மீமாம்ஸையே தேவை இல்லையே.
மீமாம்ஸையில் பிரும்மத்திற்கே ஏற்றம் இல்லை. அத்வைதியானால் மீமாம்ஸகராக இருக்க முடியாது; மீமாம்ஸகரானால் அத்வைதியாக இருக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க, அத்வைதிகள் மீமாம்ஸை பின்னர் செல்வது ஏன் ?
அடிப்படையே ஆட்டம் காண்கிறதே !
இப்படியே பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை.
கூரன் வந்து எழுப்பியவுடன் தான் பொழுது விடிந்து இருப்பதை உணர்ந்தேன்.
————————————————————————————
ஸதஸ் — கூட்டம், சபை, வாதம் நடக்கும் இடமும் வாதமும்.
‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’