கவிகளில் சிங்கம் போன்றவர், எந்தச் செயலையும் செய்ய வல்லவரான ஒருவர் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். விஜய நகரப் பேரரசின் ஆஸ்தான கவியாக வருமாறு அழைக்கப்பட்டார். போக மறுத்துக் காஞ்சியில் ‘வரதன் என் சொத்து, இதைவிடப் பெரிய சொத்து வேண்டுமா?’ என்று கேட்டு, அரச பதவியைத் தள்ளியவர் இன்று சிறையில் இருந்தவாறே இன்று தனது 750வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். (புரட்டாசி திருவோணம்)
ஆம். சிறையில் தான். அவர் ஏன் சிறை சென்றார் என்று பார்க்கும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
- அவதாரம்: பொ.யு. 1268
- திருநாடு: பொ.யு. 1369
- பிறந்த ஊர்: தூப்புல் ( காஞ்சிபுரம்)
- சென்ற ஊர்கள்: காஞ்சிபுரம் , ஸ்ரீரங்கம், மேல்கோட்டை, திருவஹீந்திரபுரம்
- தெரிந்த மொழிகள்: தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாளம்
- எழுதிய நூல்கள் : சுமார் 125.
- பட்டங்கள்: ஸர்வ தந்தர ஸ்வதந்திரர், கவிதார்க்கிக சிம்ஹம், கவிதார்க்கிக கேஸரி
- சாதனைகள்:
- மாலிக் கபூரிடமிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரைச் சுவர் எழுப்பிக் காத்தது
- பன்னீராயிரம் பேர் மடிந்து கிடந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிணம்போல் தானும் கிடந்து சுதர்சன சூரியின் ‘ஸ்ருதப் பிரகாசிகா’ நூலை அன்னியப் படைகளிடமிருந்து காத்தது
- சுதர்சன சூரியின் இரு பிள்ளைகளையும் காத்து ரட்சித்தது
- 125 நூல்கள் எழுதியது
- ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்களுக்கு ஏற்றம் அளித்தது
- உஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தது
- பரகால மடம் ஸ்தாபித்தது
இன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம். தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். ஆனால், தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார். நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. யாரும் கவிப்பேரரசு என்று கோலோச்சும் நாளில் இப்படிப்பட்ட பெரியவர்களையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்துவந்த தேசிகனை அரசவைக்கு அழைத்துத் துதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன், ‘என்னிடமா சொத்தில்லை? தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
தனது உஞ்சவிருத்தியின் போது அரிசியில் கலந்திருந்த தங்க நாணயங்களை ‘உணவில் புழுக்கள் உள்ளன’ என்று சொல்லி தர்ப்பைப் புல்லால் தள்ளிவிட்டுள்ளார்.

தேசிகனை ஏளனம் செய்ய விரும்பிய திருவரங்கப் பண்டிதர்கள் , திருமணத்திற்கு உதவி கேட்ட ஏழை பிரும்மச்சாரியை அவரிடம் அனுப்பி வைத்தனர். தேசிகன் திருமகளை நினைத்து ‘ஸ்ரீஸ்துதி’ பாட, தங்க மழை பொழிந்துள்ளது.
‘நீர் ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்பது உண்மையானால், கிணறு வெட்டுவீர்களா?’ என்று கேட்டவர்களுக்கு எதிரில் தானே கிணறு வெட்டியுள்ளார் ( திருவஹீந்திரபுரத்தில் இன்றும் காணலாம்).
மந்திரசித்தி பெற்றவரான தேசிகன் அற்புதங்கள் புரிந்ததாகவும் கர்ணபரம்பரைச் செய்திகள் உண்டு.
திருவரங்கனின் பாதம் பற்றி மட்டுமே ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி சாதனை நிகழ்த்தினார் தேசிகன். ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற பெயருடன் இன்றும் வைஷ்ணவர்களின் நித்ய அனுஸந்தானத்தில் ஒன்றாக உள்ளது இந்த நூல்.
மாலிக் கபூர் படையெடுப்பு நடந்ததா என்று பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ ‘அபீதிஸ்தவம்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். அதில் ‘Contemporary History’ என்னும் விதமாகத் துருஷ்கர்களால் ஏற்படும் பயம் நீங்க வேண்டும் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எழுதியுள்ளார்.
துருஷ்கர்கள் பற்றிய செய்தி வரும் ஸ்லோகம் இதோ:
கலிப்ரணிதிலக்ஷணை: கலிதஶாக்யலோகாயதை:
துருஷ்கயவநாதிபி: ஜகதி ஜ்ரும்பமாணம் பயம் |
ப்ரக்ருஷ்டநிஜஶக்திபி: ப்ரஸபமாயுதை: பஞ்சபி:
க்ஷிதித்ரிதஶரக்ஷகை க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||
அந்த ஸ்லோகத்தினால் விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவை :
स्वस्ति श्रीः बन्धुप्रिये शकाव्दे (शकाव्द १२९३)
i. आनीयानीलश्रृङ्गद्युतिरचितजगद्रञ्जनादब्जनाद्ने .
चेञ्चयामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुप्कान् तुलुष्कान् ।
लक्ष्मीक्ष्माभ्यमुभाभ्यां सह निजनगरे स्थापयन् रङ्गनाथंसम्यग्वर्या सपर्या पुनरकृत यशोद
र्पणो गोप्पणार्यः ||
विश्वेशं रङ्गराजं वृषभगिरितटात् गोप्पणक्षोणिदेवो
नीत्वा स्वां राजधानी निजबलनिहतोत्सिक्तौलुष्कसैन्यः ।
कृत्वा श्रीरङ्गभूमिं कृतयुगसहितां तं च लक्ष्मीमहीभ्यां
संस्थाप्यास्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्या सपर्याम् ||
‘அபீதிஸ்தவம்’ நூலின் தமிழாக்கத்திற்குப் புதுக்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் வழங்கிய முன்னுரையில் இந்தச் செய்தி வருகிறது என்று ரகுவீர தயாள் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் எழுதுகிறார்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவேண்டிய வழிகள் என்னவென்று விளக்கும் விதமாகவும் பல நூல்கள் இயற்றியுள்ள தேசிகன் இந்த நூல்களையும் எழுதியுள்ளார்.
தான் மிகவும் விரும்பிய திவரங்கனுக்கென்று பல ஆராதனங்களை ஏற்படுத்திய ஸ்வாமி தேசிகன் தற்போது பல திவ்ய தேசங்களிலும் சிலா ரூபமாக எழுந்தருளியிருந்தாலும், தான் மிகவும் உகந்த திருவரங்கத்தில் தனக்கென ஏற்பட்டுள்ள சன்னிதியில் சிறையில் இருக்கிறார். அவரால் தனது சன்னிதியை விட்டு வெளியே வர இயலாது. வரக்கூடாது என்று வைஷ்ணவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கூட்டத்தின் ஒரு பிரிவு இந்திய நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.
காரணம் : தேசிகன் வடகலைத் திருமண் அணிந்துள்ளாராம். திருவரங்கம் தென்கலைக் கோவிலாம். ஆகையால் அவர் தென்கலைத் திருமண் அணியும் வரை தனது சன்னிதிக்குள்ளேயே தான் இருக்க வேண்டும், உற்சவக் காலங்களில் கூட வெளியே வரக் கூடாது என்பது மிக உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து.
அற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பெருமாளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அமுது கண்டருளப்பண்ணக் கூட வழி இல்லாத நிலை பல இடங்களில் உள்ளது. அதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லை. ஆனால் வேதாந்த தேசிகர் திருமண் மாற்ற வேண்டும் என்று முன்னேறிய ஒரு கூட்டம் 1911ல் இருந்து ‘போராடி’ வருகிறது. அதற்கு முன்னர் இருந்த தேசிகர் விக்ரஹத்தில் தென்கலைத் திருமண் இருந்தது என்று வாதிடுகிறார்கள். நம் காலத்திற்கு மிகவும் அவசியமான பிரச்னை இல்லையா, அதனால் வாதிடுகிறார்கள்.
தேசிகர் கோவில் பிராகாரங்களில் எழுந்தருளக்கூடாது என்று 1911ல் நடந்த வழக்கு விகாரங்கள் இதோ.
1987ல் திருவரங்கக் கோவிலில் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் கட்டினார் தேசிகர் வழியைப் பின்பற்றும் அஹோபில மடத்தின் ஜீயர். அவர் கேட்டுக் கொண்டுமே தேசிகருக்கு மரியாதை அளிக்கத் தவறியது துவேஷக் கூட்டம். திருமண்ணை மாற்ற வேண்டும் என்று மீண்டும் வாதிட்டனர்.
இது தொடர்பான வழக்கு விபரங்கள் இங்கே.
அவர்கள் வாதிடட்டும். வாதிட்டு முடியும் வரை, இன்று அவர்கள் வாதிடும் கோவில், திருவரங்கன் முதலானோர் இன்றும் இருக்கக் காரணமான வேதாந்த தேசிகன், தான் காத்த கோவிலில், தன் சன்னிதியிலேயே சிறை இருக்கட்டும். அங்கேயே தனது 750வது பிறந்த நாளைக் கொண்டாடட்டும்.
நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
பி.கு: இந்தப் பதிவு, கலை வேறுபாடுகள் இன்றி ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்களைப் புரிந்துகொண்டு பிரபத்தி மார்க்கம் மட்டுமே வேண்டும் என்று பிரியப்படும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவ அன்பர்களுக்கானது. நடு நிலை வகிக்கிறேன் என்று பேசுபவர்கள் விலகி நில்லுங்கள். மணவாள மாமுனிகளை இழிவுபடுத்தும் வடகலையாரும் அவ்வாறே.
இணைப்பில் இருக்க : https://facebook.com/aapages