விசிட்டாத்வைத தத்துவத்திற்குள் புகும் முன் அதன் சமகால அல்லது சற்று முற்கால தத்துவங்கள் நிலை பற்றி சிறிது பார்ப்போம்.
மேலே செல்லும் முன்பு பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்.
பக்தி மார்க்க சமயங்களான சைவமும் வைணவமும் வேதத்தை முதலாக வைத்தன. ஜைனமும், பௌத்தமும் வேதத்தை மறுத்தன. கடவுள் மறுப்பை ஆதரித்தன. இவை இவற்றுக்கிடையே உள்ள முக்கிய சித்தாந்த ரீதியான வேறுபாடு.
உலகம் இரண்டு வகையாகப் பார்க்கப்பட்டது. ஒன்று – இவ்வுலகம் ஜடப் பொருட்களால் ஆனது. ஆகவே இவ்வுலகத்தைப் பொருள் ரீதியாகவே பார்க்க வேண்டும். இது பொருள் முதல் வாதம். இரண்டாவது – இவ்வுலகம் கருத்து ரீதியானது. ஒரு கருத்தை ( Philosophy, சித்தாந்தம்) முன் வைத்து இவ்வுலகத்தை அணுக வேண்டும். இது கருத்து முதல்வாதம். இவை இரண்டின் மூலமாகவும் நாம் நமது வைணவப் புரிதலை அணுகுவோம்.
சமணம் கூறுவது :
உலகம் இரண்டு தெளிவான பிரிவுகளை உடையது. உடல், உயிர். அவர்கள் உயிரை சீவன் என்றும் உடலை அசீவன் என்றும் அழைத்தனர். இவை இரண்டுமே அழிவில்லாதவை என்று வாதிட்டனர். சீவன் ஆத்மா என்று அழைக்கப்பட்டது. அது ஒன்றல்ல, பல என்றனர். ஒவ்வொறு ஆன்மாவும் ஏற்கும் பொருளின் அமைப்பையும் அளவையும் கொண்டுள்ளது என்றனர். எறும்பின் ஆன்மா யானையின் ஆன்மாவை விட சிறியது என்பது அவர்கள் தத்துவம். இவ்வான்மாக்கள் உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது அல்லல் படுகின்றன என்றனர். இதைப் புரிந்துகொள்வது ஞானம் என்றனர். சீவன் என்பது அறிவுள்ளது. அது அசீவனுடன் தொடர்பு கொள்ளும்போது கெட்டழிகிறது ; இதனைத் தவிர்த்துப் பரிபூரண அறிவைப் பெற வேண்டும். அதுவே முக்தி. இது தவிர கடவுள் என்பது இல்லை என்றனர்.
பௌத்தம் மூன்று உண்மைகள் பற்றிப் பேசுகிறது. முதல் உண்மை – புலன்களால் உண்டாகும் பற்றுகள் துன்பம் தருவன. இரண்டாவது உண்மை – துன்பம் விளைவதற்குக் காரணமானவற்றை உணர்வது. மூன்றாவது உண்மை – துன்பத்திலிருந்தும் அதன் காரணத்திலிருந்தும் விடுதலை அடைவதை அறிவது. இந்த மூன்றும் அறிந்து கடை பிடித்தால் துன்பமற்ற நிர்வாண நிலை அடையலாம். இதற்கு வேதம், கடவுள் முதலியன தேவை இல்லை.
பௌத்தம் கூறுவது :
இவ்வுலக நிகழ்ச்சிகள் எல்லாம் மூன்று தன்மைகளை உடையன. ஒன்று- நித்யம் – எல்லாம் மாறும் தன்மை கொண்டவை; எனவே நிலை அற்றவை. இரண்டு – துக்கம் – உலகம் துன்ப மயமானது. மூன்று – அநாத்மம் – இவ்வுலகில் ‘யான்’ என்று அழைக்க ஒன்றும் இல்லை. எனவே ஆன்மா என்பதே இல்லை.இது புத்தர் கூறியது.
ஆனால் பின்னர் வந்த மகாயானம், ஹீனயானம், தேரவாதம் முதலிய பௌத்த சமயங்கள் மக்களைக் குழப்பின. “தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை, நிலைத்தலும் இல்லை, நிலையாமையும் இல்லை, ஒருமையும் இல்லை, பன்மையும் இல்லை, உருவாவதும் இல்லை, அழிவதும் இல்லை. எல்லாமும் சூன்யமே. சூன்யம் எல்லை அற்றது. சூன்யம் மட்டுமே உள்ளது என்று போதித்தன.
இவை போதாதென்று உலகாயதம் என்னும் கருத்தும் நிலவியது. உலகாயதர்கள் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உலகில் நிகழ்வுகள் உள்ளன. கண்ணால் காணப்படும் பொருட்கள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்றனர். எனவே கடவுள், ஆத்மா, வேதம் முதலியன பொய் என்றனர். இதற்கு சார்வாகம் என்று ஒரு பெயரும் உண்டு.
‘சுவை ஒளி ஓசை உரு நாற்றம் இவ்வைநதின்
வகை தெரிவான் கட்டே உலகு” என்ற திருக்குறளும் இதன்படியே உள்ளதாக சில அறிஞர்கள் கூறுவர்.
இந்நிலையில் ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தம் வேறு பரிணாமம் அளித்தது.
சங்கரர் வேதாந்த வாதி. ( வேதாந்தம் = வேதத்தின் அந்தம், இறுதி ). வைதீக மரபைச் சார்ந்தவர். இவரது தத்துவம் அத்வைதம் ( அ + த்வைதம் ) – இரண்டில்லாதது என்பது பொருள். பிரம்மம் ஒன்றே. அது குற்றமில்லாதது. அது மட்டுமே உள்ளது. உலகம், உயிர்கள், ஜடப்பொருட்கள் எல்லாம் அந்த பிரும்மத்தின் பிம்பம், வெறும் தோற்றம். ஆகவே இவ்வுலகம், மனிதன், ஜடப்பொருட்கள் முதலியன வெறும் மாயை. இதுவே அவரது அத்வைத சித்தாந்தம்.
இது ஏற்றம் பெறக் காரணம் மன்னனும் அவனுடன் இருந்த உயர்குடி மக்களும். ஒரே ஒரு தலைவன் என்பதும், அவன் குற்றமிலாதவன் என்பதும் பிரும்மத்தை மட்டுமின்றி மன்னனையும் குறிப்பதாக இருந்தது. மன்னன் சிறப்பானவன். அவன் தவிர அனைவரும், அனைத்தும் சிறப்பிலாதவர்கள், முக்கியத்துவம் அற்றவர்கள் என்னும் விதமாக சமூகப் பார்வை கொண்டு பார்க்கப்பட்டது அத்வைதம். ஆனால் இது கை வினைஞர்கள், சிறு நில விவசாயிகள் முதலியோரிடம் எடுபடவில்லை.
அத்துடன் இவ்வுலகமும் இதன் பொருள்களும் உயிரினங்களும் மாயை என்பது மக்களுக்கு வியப்பளித்தது எனலாம். உலகமும், உயிர்களும், செல்வம் முதலியனவும் தோற்றம் என்றால் அதற்காக உழைக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை பாடுபட்டாலும் பண்ணையில் உழைத்தாலும் வரும் பொருளோ குறைவு. அதுவும் மாயை, உண்மை இல்லை என்று கொள்ள வேண்டும். ஆனால் பெருநிலக் கிழார்கள் நம் உழைப்பினால் நல்ல நிலையில் உள்ளனர்; அருசுவை உணவு கொள்கின்றனர்; சம்போகங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றனர்; அவை உண்மை இல்லையா? அதுவும் மாயையா? என்பது போன்ற குழப்பங்களில் சாதாரண மக்கள் ஆழ்ந்தனர் என்று நினைக்க இடமுள்ளது.
இதற்கு மாற்றாக வந்தது இராமானுசரின் விசிட்டாத்வைதம் ( விசிட்டம் + த்வைதம் ).இது பிரும்மத்தை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அது ஒன்று மட்டுமே மற்றதெல்லாம் மாயை என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் சித்தாந்தம் பிரும்மம் ஒன்று. அது பரமாத்மா என்றும் அறியப்படுகிறது. மற்றவை அனைத்தும் ஜீவன்கள். அவை ஜீவாத்மா. மரம், விலங்கு, மனிதன் அனைத்தும் ஒன்றே. ஏனெனில் அவற்றுள் உள்ள ஜீவாத்மா ஒரே குணமும் அளவும் கொண்டது. ஒரு விலங்கின் உள்ளே உள்ள ஆத்மாவும் மனிதனின் உள்ளே இருக்கும் ஆத்மாவும் ஒன்றே. அதனதன் பூர்வ ஜென்ம பலன்களால் அவை ஒரு தோற்றம் கொண்டு ஏதோ ஒரு உடலில் உள்ளன. எனவே ஆத்மா அளவில் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் வேறுபாடில்லை.
உதாரணமாக “எனது புத்தகம்” என்கிறோம். இங்கு “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. “எனது கை” என்னும் போதும் “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. அதுபோல, “எனது உடல்” என்னும்போது “எனது” என்பது எதைக் குறிக்கிறது ? அதுதான் “ஜீவாத்மா” என்னும் நமது ஆத்மாவைக் குறிக்கிறது. ஆக நான் என்பது உடல் அல்ல. ‘நான்’ வேறு ; உடல் வேறு என்று அறிவுறுத்தியது.அதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஆன்மா உள்ளது. அவை அனைத்து ஒரே அளவிலானது. ஆன்மா அளவில் வேறுபாடுகள் இல்லை; அந்தணன் ஆன்மாவும், பண்ணை அடிமை ஆன்மாவும், ஒரு மண் பாண்டத்தின் ஆன்மாவும் ஒன்றே என்பதே இராமானுச சித்தாந்தம்.
இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு உதாரணம் உண்டு. ‘ததிபாண்டன்’ என்னும் பானை செய்யும் தொழிலாளி கண்ணனிடத்தில் மிக்க பக்தி உடையவன். இறை நினைவாகவே பானைகள் செய்து வாழ்ந்து வந்தான். இறக்கும் சமயம் இறைவனிடம் அவன் தனக்கு மட்டும் மோட்சம் தேவை இல்லை என்றும் தனது பானைக்கும் மோட்சம் வேண்டும் என்றும் கேட்டான் என்று ஒரு கதை உண்டு. ஆக உயிரில்லாத ஒரு மண் பானைக்கும் ஒரு ஆத்மா இருப்பதாகக் கூறுவது வைணவத்தின் ஊடாக உள்ள விசிட்டாத்வைதம்.
இராமானுசர் ஆன்மா, பிரும்மம் முதலிய நிலைப்பாடுகளை ஒப்புக்கொள்வதால் கருத்து முதல் வாதியாகவும், உலகமும் உண்மை என்று ஒப்புக்கொள்வதால் பொருள்முதல்வாதியாகவும் ஒருசேரத் திகழ்ந்தார் என்றும் கருதலாம். எனவே கருத்துமுதல்வாதம் சார்ந்தவர்களையும் (அத்வைத மதத்தினர் , சைவர் ), பொருள்முதல்வாதம் சார்ந்தவர்களையும் (பௌத்தர், ஜைனர் ) முதலியோரை வைணவத்தின் பால் ஈர்த்தார் என்றும் கருத இடம் உள்ளது.
இராமானுசர் மேலும் கூறுவது – நமது உடல் நமது உயிரின்( ஆன்மாவின்) வீடு. அதுபோல் நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு. எனவே பிரும்மமும் உண்மை; உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதனை ‘த்ரயம்’ என்று வைணவம் கூறுகிறது. இதில் மாயை என்பதற்கு இடமே இல்லை. இவை சாதாரண மனிதனுக்குப் புரிவதாக இருந்தது.
இராமானுசரது இந்தக் கொள்கையைச் சற்று ஆராய்வோம். சாதி வேறுபாடுகளால், அடக்கு முறைகளால் பிளவு பட்டிருந்த ஒரு சமுதாயம். அந்த முறைகளை ஊக்குவிக்கும் அளவில் இருந்த சோழ, பாண்டிய அரசுகள். சமூகத்தின் அதிகாரத் தளங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பெருவாரியான மக்கள். இந்தச் சூழ்நிலையில் இவை அனைத்தையும் உடைத்தெறியும் நோக்கில் ஒரு புதிய சித்தாந்தம். அத்துடன் அது வைதீக மதத்தைச் சார்ந்தும் இருந்தது. இந்த சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவை இல்லை. அந்தணனாக இருக்க வேண்டாம், நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம், ஏழை-செல்வந்தன் வேறுபாடு இல்லை, பழைய குல அடையாளங்கள் மறைந்துவிடும், புதிய அடையாளமான ‘வைஷ்ணவன்’ என்ற ஒரே அடையாளம் கிட்டும் என்பது போன்ற திடீர் சமத்துவ நிலை மக்களை ஒரு பெரும் புயல் போலத் தாக்கியது. மக்கள் பெருமளவில் வைணவராயினர்.
இந்தப்பெரும் அதிர்ச்சி மன்னனையும் ஆட்கொண்டது. அவன் இராமானுசரைக் கொல்ல முனைந்தான். அவர் தப்பினார். இதுவும் ஒரு அடக்குமுறையை எதிர்க்கும் மனோபாவமாகக் கருத்தப்பட்டு வைணவத்தின் புகழ், ஈர்ப்பு அதிகரித்தது என்று கருத இடமுள்ளது.
பானை செய்பவரும், வேதம் ஓதுபவரும், சிறு வினைஞர்களும் ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சி சித்தாந்தமாகக் கிளம்பியது. அதற்கு ஏற்ப இராமானுசரும் பிள்ளை உறங்காவில்லி தாசர் போன்ற மல்லர் குலத்தைச் சார்ந்த ஒருவரைத் தன் பிரதான சீடராக வைத்துக்கொண்டது, பானை செய்யும் குலத்தைச் சார்ந்த திருப்பாணாழ்வார், வேளாளர் குலத்தின் நம்மாழ்வார், கள்ளர் மரபின் திருமங்கை ஆழ்வார் முதலியோரை மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலான அந்தணர் குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த ‘பாஞ்சராத்ரம்’ என்ற வழிமுறையைக் கொண்டுவந்தது போன்றவை பலரை ஈர்த்திருக்கக் கூடும் என்று நம்ப இடம் உள்ளது.
ஜீவாத்மா தன் பக்தியினால், நற்செய்கைகளால் பரமாத்மாவை அடைய முடியும், அதற்கு பக்தி ஒன்றைத் தவிர வேறு ஒரு தகுதியும் தேவை இல்லை, எனவே மன்னனாயினும், பண்ணைத் தொழிலாளியாயினும் பக்தியின் மூலம் இறைவனை அடைந்தது சமத்துவம் காணலாம் என்னும் தத்துவம் அதுவரை இருந்த அனுமானங்களை எல்லாம் அசைத்துப் பார்த்தது என்று நம்ப முடிகிறது.
இதனாலெல்லாம் நாம் அறிவது இதுதான் : விசிட்டாத்வைதம் என்னும் இராமானுச சித்தாந்தம் வைதீக சித்தாந்தமாக இருந்துகொண்டே தத்துவ அளவிலும் சமூக அளவிலும் மக்களிடம் ஒரு குழப்பமில்லாத மன நிலையையும் அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு வழியாகவும் அனைவரும் ஒன்றே என்ற உயரிய கருத்தையும் பறை சாற்றுவதாக இருந்ததால் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது என்று கருதலாம்.
1.352083
103.819836
Like this:
Like Loading...