The side that is not spoken about, generally.

‘எந்த ஜாதி, குலமா இருந்தாலும் பரவாயில்ல. வசதி குறைஞ்ச பெண்களுக்கு திருமாங்கல்ய (தாலி) தானம் பண்ணனும். தெரிஞ்ச ஆட்கள் இருந்தா சொல்லுங்க’ என்றார் பேராசிரிய நண்பர். ஒரு வேண்டுதல் விஷயமாக.

சேவாலயா பிரசன்னாவிடம் கேட்டிருந்தேன். யாருக்காவது உதவி குறித்த தகவல் வேண்டுமென்றால் பிரசன்னா ஆபத்பாந்தவன். அடுத்த அரை மணி நேரத்தில் ஆறு பெயர்கள் + அலைபேசி எண் + குடும்ப விபரம் என்று கொட்டிவிட்டார். இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருடனும் பேசி, சரி பார்த்து, பேராசிரியரிடம் சொல்ல வேண்டும் என்பதால் அந்த வேலையில் இறங்கினேன். அந்த முயற்சி காட்டப்போகும் பேருண்மைகளை அப்போது அறிந்திருக்கவில்லை.

முதலில் கோவில் பரிசாரகர். தன் பெண்ணை எம்.ஃபில். வரை வாசிக்க வைத்துள்ளார். கொரோனாவால் சொற்ப வருமானமும் இல்லை. மிகுந்த பணக்கஷ்டம். பெண்ணிடமும் பேசினேன். சூட்டிகையான பெண். சுடர்மிகும் அறிவு பேச்சில் தெரிந்தது. ஏதோ கல்வி நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை.

இரண்டாமவர் கணவனை இழந்த வீட்டுப் பணிப்பெண். மூன்று பெண்கள். அதில் முதல் பெண்ணிற்குத் திருமணம். கடும் ஏழ்மை.

மூன்றாமவர் கிராமக் கோவில் அர்ச்சகர். தனது மச்சினிக்குத் திருமணம் செய்கிறார். மனைவியின் குடும்பம் கடும் வறுமையில். எனவே மச்சினியின் திருமணத்தையும் இவர் நடத்துகிறார்.

நான்காவமர் மற்றுமொரு கிராமக் கோவில் பூசாரி குலம். கோவிலுகுப் பூ கட்டிக் கொடுக்கிறார். பெண் வீட்டின் சார்பாகத் தானே செலவு செய்து திருமணம் செய்து கொள்கிறார்.

ஐந்தாமவரும் அர்ச்சகரே. ஆறாமவர் ஆட்டோ டிரைவர்.

ஒரு வாரத்திற்குள் உதவி பெற்றவர்கள், அடுத்த மாதம் உதவி பெறப் போகிறவர்கள் என்று நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே வறுமைக் கோட்டிற்கு வெகு கீழே உள்ளனர். அரசின் பெரும்பாலான சலுகைகள் இன்றி, நவீனக் கல்வி வாய்ப்புகளின் சாரல் கூட படாமல் தட்டுத் தடுமாறி, நவீனப் பொருளாதாரச் சூழலில் மூழ்கிவிடாமல் தத்தளித்து வருகின்றனர்.

இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர் இருக்கலாம். இவர்களில் பெரும்பாலானோருக்கு அரசின் இட ஒதுக்கீடுகள் கிடையாது என்பதை விட, அவர்கள் அரசாங்கங்களை நம்பியே இருக்கவில்லை என்பதே உண்மை. யாரிடமும் கையேந்தாமல், போராட்டம் என்று காலங்கழிக்காமல் தங்களின் கைகளை ஊன்றிக் குட்டிக்கரணம் போட்டு வருகின்றனர். இவர்களைப் போன்றவர்களைக் காப்பது பாரதம் முழுவதும் வியாபித்துள்ள தர்மச் சிந்தனைகளே.

ஜாதி, குலத்தால் வேற்றுமை, ஏழ்மை, உழைப்பில் ஒற்றுமை. இவர்களே நாம் கைதூக்கிவிட வேண்டிய பாரதீயர்கள்.

இந்த முயற்சியில் ஈடுபட்ட போது எனக்குத் தோன்றியது: நம் இல்லங்களில் திருமணங்கள் நடைபெறும் போது, மற்றுமொரு திருமாங்கல்யத்திற்குத் தேவையான பணத்தை எடுத்து வைத்து விடுவது. அது தேவைப்படும் நமது குடும்பம் சாராத பெண்ணிற்குக் கொடுப்பது. திருமணச் செலவில் ஒரு திருமாங்கல்யம் கூடுதலாக வாங்குவது பெரிய செலவாகாது. பலருக்கு ஒரு திருமாங்கல்யத்தை வாங்குவதே மிகப்பெரிய செலவாக உள்ளதை நினைத்து இப்படிச் செய்யலாம்.

வாசகர்களே, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

Leave a comment