நடமாடும் காந்தி உரையாடல் பாகம் 2

கே: என்ன சார் இது ? அப்ப, கொள்கை இல்லைங்கறீங்களா ?

ப: ஹை, நான் எப்ப அப்டி சொன்னேன்? கொள்கை இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு இல்லியா ?

  • கே: ‘கமல் சார், போன வாரம் வந்திருந்தப்ப வேற கேள்வி கேக்கவே விடாம பதிலால திணற அடிச்சுட்டீங்க. இந்த வாரமாவது எதாவது கேள்வி கேட்கலாம்னு நினைக்கறேன்…’
  • ப: ‘கேள்வி கேக்க வேண்டியவங்களையே நீங்க கேக்கறதில்ல. ஆனா, எந்தக் கேள்விக்கும், கேள்வியே இல்லாம பதில் சொல்ற என்ன மட்டும் கேள்வி கேக்கறது என்ன நியாயம்னு நான் கேள்வி கேப்பேண்னு நினைக்கமாட்டீங்கன்னு நான் பதில் சொல்வேன்னு நினைக்கறீங்களா ?’
  • கே: பிரமாதம் சார். ஒண்ணும் புரியல. நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க. இப்ப கேக்க ஆரம்பிக்கட்டுமா?
  • ப: அப்ப இன்னும் கேக்கவே இல்லியா ? கேள்வி கேட்க வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இந்த நாட்டுல இருக்கு. ஆனா, கேக்காம இருக்கீங்க பாருங்க.. அதுனால தான் கோட்சே இன்னிக்கி ஆட்சி நடத்தறாருன்னு நான் சொல்வேன்னு நீங்க நினைக்கலாம். 
  • கே: ரொம்ப சரியாச் சொன்னீங்க. அப்ப நீங்க கோட்சே பிறந்த நாள் அன்னிக்கி பாராட்டினீங்களே ?
  • ப: ஹா ஹா.. மாட்டிவிடற மாதிரி கேட்டா நாங்க மாட்டிக்காம பதில் சொல்லுவோம். இது பால பாடம். நான் மத்திய ஆட்சியாளரச் சொன்னேன்ன்னு விளக்கிச் சொல்லுவேன்னு நினைக்கறீங்களா ?
  • கே: ஆக, நீங்க மாநில ஆட்சியாளரச் சொல்லல.. அதானே ?
  • ப: உங்க கேள்வியிலயே அதானி வாராரு பாருங்க. அதுதான் இந்த ஆட்சியாளர்களோட லட்சணம். கேள்வி பதில் கூட அதானி இல்லாமல் கேக்க முடியல இந்தக் காந்தி பிறந்த தேசத்துலன்னு நினைக்கற போது அந்தப் பொக்கை வாய்க் கிழவனோட பரிதாப நிலைய நினைச்சுக் கண்ணிர் உகுக்கற அவல நிலல இந்த நாடு இருக்கற நிலைய எண்ணி..ம்ம் ஹூம் ம்ம்
  • கே: அழாதீங்க கமல் சார். அடுத்த பாரதப் பிரதமர் உங்க ஆதரவு பெற்ற தமிழகத் தலைவர் தானே. அவர் ஏற்கெனவே தேசிய அரசியல்ல இருக்காரு பாருங்க.. அதால அவர் பிரதமர் ஆனப்புறம் சரி பண்ணிடலாம்.
  • ப: யாரு ? அவர் தேசிய அரசியல்ல இருக்காறா? யார் சொன்னா ? எப்பலேர்ந்து ?
  • கே: அட, பிறந்த நாள் விழாவுல அவரே சொன்னாரே, கேக்கலியா நீங்க ?
  • ப: ஓ அவரே சொன்னாரா? அப்ப சரியாத்தான் இருக்கும்னு சொல்ல வேண்டிய நிலைல நான் இருக்கேங்கறத நினைக்கற போது எங்கப்பா சிவாஜி என் காதோட சொன்னது நினைவுக்கு வருது.. அவர் என்ன சொன்னாருன்னா..
  • கே: சரி சரி, வேற கேள்விக்குப் போகலாம். மாற்றம் எப்போதும் உங்க வாழ்க்கைல இருந்துக்கிட்டே இருக்குமா ?
  • ப: என்ன கேக்க வர்றீங்கன்னு புரியாதுனு நினைக்காதீங்க. எதுவும் மாறும். ஆனா மாறாதது ஒண்ணுதான். அந்த ஒண்ணைத்தான் தேடிக்கிட்டே இருக்கேன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டீங்ன்னு தெரியும்னாலும் நீங்க விடாம அதையே கேட்பீங்கங்கறதால மேல ஒண்ணும் சொல்லாம, அடுத்த கேள்விக்குப் போங்க..
  • கே: ரொம்ப சரி. இப்ப என்ன நேரம் ஆகுது ?
  • ப: என்னவாவது கேட்டு, நான் நேரடியா டக்குனு பதில் சொல்லிடுவேன்னு நினைக்கறீங்கன்னு புரியாம இல்லைன்னு உங்களுக்கே தெரியுங்கறது எனக்கும் தெரிஞ்சாலும், நான் இப்ப நாலு மணி ஆக மூணு மணி நேரம் இருக்குன்னு சொல்லுவேன்னு நீங்க நினைச்சீங்கன்னா அது உண்மைதான்.
  • கே: எனக்கு நேரம் சரியில்ல. நாக்குல சனி. போகட்டும். உங்க கட்சி பத்தி..
  • ப: அதான் போன வாரமே சொன்னேனே. காந்தியப் பார்க்கவிடற கட்சி நம்ம கட்சி. புரிஞ்சுதா ? நேரடியா சொல்லிட்டேன் பார்த்தீங்களான்னு கேப்பேன்னு நினைச்சீங்கன்னா அது உங்க தவறுன்னு சொல்ல மாட்டேன்.
  • கே: என்ன கண்றாவி சார் இது. உங்க பேர் என்ன ? 
  • ப: அப்பா வெச்ச பேரச் சொல்லுவேன்னு நீங்க நினைப்பீங்கன்னு தெரியுங்கறது எனக்கும் புரிஞ்சிருக்கும்னு நீங்க நினைக்கலாம். ஆனா, அப்பா வெச்ச பேரைக் காட்டிலும் ‘பேர் சொல்லும் பிள்ளை’யா வளர்ந்தவன்ங்கறதாலயும், சகலகலா வல்லவனா இருக்கேன்னு பலரும் சொன்னத மனசுல வெச்சுக்கிட்டு தசாவதார வேலைகள் செஞ்சதால, மன்மத லீலைகள் பத்தின ஆராய்ச்சி அவதானிப்புல இதுக்கு மேலயும் சொல்றதுக்கு இருக்குன்னா அதுக்கு தேவர் மகனா இருக்கணும்ங்கற கணக்கெல்லாம் இல்லைங்கறதால சிங்காரவேலனுக்கு வேண்டிக்கலாம்னு களத்தூர்ல கண்ணம்மா வாக்குல பிறந்தவங்கற முறைல..
  • கே: என்ன கேக்கறதுன்னே தெரியல கமல் சார். தலை ரொம்ப கேரா இருக்கு..
  • ப: தலைல கேர் இல்லைன்னா, ஹேர் போயிரும்.. ஹெ ஹெ இப்பிடித்தான் ஒரு முறை சீமான் கிட்ட பேசிக்கிட்டிருந்த போது..
  • கே: ஓ.. அவர்கிட்டயும் பழக்கம் இருக்கா ? 
  • ப: குழப்பம் இல்லாம இருக்கணும்னு குழப்பத்துலயே இருக்கறவங்ககிட்ட பழக்கம் வெச்சுக்கறது நம்ம வழக்கம் தானேன்னு நீங்க நினைக்கலாம்னு நான் சொன்னா நீங்க ஏத்துப்பீங்களான்னு கேட்டா, அதுக்கு ஜெயமோகன் என்ன பதில் சொல்வார்னு எதிர்பார்க்கற ஒரு சாதாரண வாசகனா நான் ஓங்கிச் சொல்றது அந்த ஒரு விஷயம் தான்.
  • கே: என்ன விஷயம் ?
  • ப: விஷமமா கேள்வி கேக்கறீங்களேன்னு நான் கேட்பேன்னு நினைச்சா நான் பொறுப்பு இல்லைன்னு நீங்க நினைக்க வாய்ப்பு உண்டுங்கறது எனக்குத் தெரியுதுங்கறத மொத்தத் தமிழ்ச் சமுதாயமும் ஏத்துக்கும்னு எனக்குத் தெரியும்ங்கறதப் பத்தி நீங்க சொல்லப் போறதில்லைன்னு எனக்குத் தோணுதுன்னு நினைக்கறேன்னு வெச்சுக்குங்களேன் பரவாயில்லை.
  • கே: வாணி, சரிகால்லாம் ஏன் விலகினாங்கன்னு இப்ப புரியுதுங்க. அத்தோட, மய்யமே ஏன் குவியத்துக்குள்ள போயிட்டுதுன்னும் இப்ப புரிஞ்சு போச்சுன்னு நினைக்கறேன்னு தோணுது… சே. வியாதி தொத்திக்கிச்சே..
  • ப: இதுக்கும் நான் பதில் சொல்லணும்னு தோணாதுன்னு எனக்குத் தோணுதுன்னு வெச்சுக்கலாம்.
  • கே: சரிங்க, அடுத்து என்ன ?
  • ப: பிக் பாஸ் தான். எலெக்‌ஷனுக்கு ஒரு வருஷம் இருக்கே. அதுவரைக்கும் கலெக்‌ஷன் வாணாமா ? எப்டி நம்ம டைமிங்.. ஹெ ஹெ.
  • கே:  அடுத்த எலெக்‌ஷன் சமயத்துல சந்திக்கலாம். கொள்கை ரீதியா பேசுவோம்.
  • ப: இல்லாதத பத்தியெல்லாம் நாம் பேசறதில்லைங்கறது உங்களுக்குத் தெரியாதான்னு நான் கேட்க மாட்டேன். 
  • கே: என்ன சார் இது ? அப்ப, கொள்கை இல்லைங்கறீங்களா ?
  • ப: ஹை, நான் எப்ப அப்டி சொன்னேன்? கொள்கை இல்லைன்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன். ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு இல்லியா ?
  • கே: அதானே பார்த்தேன். எங்க நேரடியா பதில் சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன். 
  • ப: பயப்படாதீங்க. எனக்கு பயம்னாலே பயம். காலை பயம், மாலை பயம், இரவு பகல் எப்போதும் பயம் .. அடடே, இத பிக் பாஸ்ல சொன்னா எடுக்கும் போல இருக்கே..
  • கே: ஐயா சார். உங்களுக்குப் புண்ணியமா போகும். பக்கத்துல பஸ் ஸ்டாண்ட எங்க இருக்குன்னு சொல்லுங்க…
  • ப: வளையோசை கல கலன்னு சொல்லிக்கிட்டே கதவைத் திறந்து. உன்னால் முடியும் தம்பீன்னு ஓடினீங்கன்னா, ஆளவந்தான் தெருவுல திரும்பி அவ்வை..
  • கே: வேண்டாம் சார். நான் ஆட்டோ பிடிச்சே போயிடறேன். மறுபடியும் துவங்கிடாதீங்க. 
  • ப: துவக்கம்ங்கறது தமுக்கம் மைதானத்துல.. சரி சரி. ஓடாதீங்க. விழுந்துடப்போறீங்க..

நடமாடும் காந்தியுடன் ஓர் உரையாடல் – கப்ஸா டைம்ஸ் – 1

கப்ஸா டைம்ஸ் நாளிதழில் இன்னிக்கி கமல் ஸார் நம்மோட இருக்கார்.  அவர்கிட்ட நம்ம சந்தேகங்களக் கேக்கலாம். 

கே: கடைசில அங்க போய் சேர்ந்துட்டீங்களே..

ப: அங்க, இங்க, எல்லாம் ஒண்ணு தான். அங்கேருந்து பார்த்தா, இங்க அங்க மாதிரி தெரியும். சரி, இங்கேர்ந்து பார்க்கலாம்னு பார்த்தா, அங்க இங்க மாதிரி தெரியும். ஆனா, அங்க, இங்க எல்லாம் திங்க தான்னு புரியும் போது நமக்குள்ள ஏற்படற புரிதல், அதனை அவதானிப்பதால் கிடைக்கும் அற உணர்வு இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தா மட்டுமே தெரியும். கேள்வி கேக்கறது சுலபம். பதில் சொல்றது கஷ்டம். ஆனா, கஷ்டமான கேள்வி கேட்டு, சுலபமான பதில் பெறலாம்னு நினைச்சா, அதைவிடக் கஷ்டமான சுலபம் வேறொண்ணும் இருக்க முடியாதுன்னு நான் எம்.ஜி.ஆர். மடியில ஏறி விளையாடினப்ப அவர் சொன்னார். அது இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு.  

கே: நான் இன்னும் கேள்வி கேக்கவே துவங்கல்லையே..

ப: கேள்வி கேட்டவுடன் மட்டுமே பதில் தர வேண்டும் என்பது ஒற்றை இந்துத்துவ மன நிலைன்னு நண்பரும் எழுத்தாளருமான ஜெயமோகன் சொல்லியிருக்கறத நீங்க படிச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கல்ல, ஆனால் அப்பிடித்தான் நடந்திருக்கும்னு நம்ப வேண்டிய நிலைல இன்னிக்கி நம்ம நாடு இருக்குன்னு நீங்க புரிஞ்சுக்கணும். இதையே ஹென்றி டேவிட் துரோ இப்பிடிச் சொல்றார்..

கே: அது போகட்டுங்க. யாரோ என்னவோ சொல்லிட்டுப் போகட்டும். நீங்க என்ன சொல்றீங்க ?

ப: எதைப் பத்தி ?

கே: அதான், நான் கேள்வி கேக்கறதுக்குள்ளயே நீங்க பதில் சொல்ல ஆரம்பிச்சா எனக்கு கேள்வியே மறந்து போகுது. அதால..

ப: அப்ப, கேள்வி கேட்ட உடனே பதில் சொல்லணும்னு எதிர்பார்ப்பீங்க போல இருக்கே. காந்தி சொன்னதக் கேட்டு காந்தி நடக்கணும்னு சொல்றவங்க கூட்டத்தோட எனக்கு எந்த ஒட்டோ உறவோ கிடையாதுன்னு வெண்முரசு விழாவிலயே நான் சொல்லிட்டேன்னு ராஹுல் காந்தி சொன்னத நீங்க மறந்திருக்கலாம். ஆனா, நான் மறக்கற மாதிரியான சூழ்நிலைல இல்லேங்கறத எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தன்னோட ஃபேஸ்புக் பக்கத்துல சொல்லியிருப்பார்னு தெரியாதா உங்களுக்கு ?

கே: சரி, தெரியாம கேட்டுட்டேன். முகநூல்னு சொல்லாம ஃபேஸ்புக்னு சொல்றீங்களே, இதுல குறீயீடு எதாவது..

ப: சபாஷ். எனக்கு நூல் பிடிக்காதுன்னு உலகத் தமிழர்களுக்குக் குறியீடு மூலமா சொல்றதுக்கு வாய்ப்பு குடுத்தீங்க. அதுக்கு நன்றி. நான் எந்த நூல் பத்தி சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்னு நினைக்கறேன். ஒருத்தர் மட்டுமே போட்டுக்கலாம்னு இருக்கற நூல் எனக்குப் பிடிக்கறதில்ல. அதால நூல் எல்லாமே பிடிக்காதுன்னு சொல்ற அளவுக்கு எனக்குப் பரிணாமப் பின்னடைவு ஏற்படாம இருக்கறதுக்கு எங்கப்பா சிவாஜிதான் காரணம்னு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். 

கே: மன்னிச்சுக்குங்க. காந்தி பத்தி சொல்ல ஆரம்பிச்சு நூல்ல போய் முடிஞ்சுடுச்சு. காந்தி..

ப: காந்திக்கு நூலுக்கும் சம்பந்தம் இருக்கே. நானே பம்மல் கே சம்பந்தம்னு படத்துல நடிச்சிருக்கேனே. ஆனா, அதே நேரத்துல காந்தி பத்தியும் ஹே ராம் படம் எடுத்து, இந்தியாவோட முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து தான்னு சொல்ல வர்றதுக்கு முன்னாடி, பெங்காலி, மராத்தி, ஹிந்தி, தமிழ், இங்கிலீஷ்னு படம் முழுக்க பேசி சொல்ல வந்தத சொல்லாம விட்டுட்டேன்னு எனக்கு வருத்தம் உண்டுங்கறது காந்தியோட கொள்ளுப்பேரன் கோபாலகிருஷ்ண காந்திக்குத் தெரியும்னு எத்தனை பேருக்குத் தெரியும்கறதப்பத்தி நான் கவலைப்படமாட்டேன்னு நீங்க நினைக்காம இருக்கறது தான் காந்தி காட்டின வழின்னு எனக்குத் தெரியும்.

கே: கொஞ்ச நேரமா எதோ பேசறோம்னு தெரியுது. ஆனா, என்ன கேள்வி, என்ன பதில், எந்தக் கேள்விக்கு எந்த பதில், கேள்வி யார் கேக்கறாங்க, பதில் யார் சொல்றாங்கன்னு புரியறதுல ஒரு குழப்பம் இருக்கும் போல தெரியுதுன்னு தோணுது.. சே, உங்கள மாதிரியே பேசத் துவங்கிட்டேன்…

ப: ஆங். அதுதான் காந்தியோட மகிமை. காந்தி பத்திப் பேசறவங்க எல்லாருமே காந்தி தான். காந்தி கையெழுத்து புரியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா, காந்தி பத்தி பேசறவங்க என்ன பேசறாங்கன்ன்னு கேக்கறவங்களுக்கும் புரியாதுன்னு மட்டும் நினைக்காதீங்க, பேசறவங்களுக்கும் புரியாதுன்னு எனக்குப் புரிஞ்சதாலதான், நானுமே கூட காந்திதான்னு நினைக்க வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்பட்டிருக்குன்னு நினைக்க இடம் இருக்கற மாதிரி இந்த நாட்டு ஒற்றை இந்துத்துவா வழில பயணப்பட யத்தனிக்குதுன்னு நீங்க நினைக்கலாம். 

கே: சாரிங்க. நான் அப்படியெல்லாம் புரியாம நினைக்கறதில்லை. ஆனா, அடுத்த கேள்வி என்ன கேக்கறதுன்னு தெரியல..

ப: இதுக்கு என்ன பதில் சொல்லச் சொல்றீங்க? பதிலே இல்லாத கேள்விகள் இந்த நாட்டுல இருக்குங்கற சமூகக் கோவம் எனக்கு உண்டுங்கற மாதிரி, கேள்வியே இல்லாத பதில்களும் கூட இந்தச் சமூகத்துல உலவி வருதுன்னு நினைக்கவேண்டிய காலகட்டம் வந்துட்டதேன்னுதான் பெரியார் வேதனைப்பட்டார்னு எனக்குத் தெரியும். ஆனா, அதே வேதனை காந்தியும் பட்டார்னு உங்களுக்குத் தெரியுமா ? 

கே: ஒரு டீ குடிச்சுட்டு வந்துடறேன். தலையெல்லாம் கிர்ருனு சுத்துது..

ப: குடிப்பினும் குடியாத் தகையவே குடியால் குடிக்கப்படாத குடின்னு மலையாளத்துல எழுத்தச்சன் எழுதி வெச்சிருக்காருன்னு நேத்துதேன் பினரயி விஜயன் சொன்னார். எவ்வளவு பொருத்தமா இருக்கு பாருங்க. ஆனா, அந்த டீ குடிக்கறேன்னீங்களே, அதுக்குப் பின்னால இருக்கற மனிதக் கழிவிரகத்தின் ஒட்டுமொத்த வினியோகஸ்த உரிமை யார் கிட்ட இருக்குன்னு நினைச்சுப் பார்த்துட்டு, பின்னால டீ குடிச்சுட்டு வாங்க.

கே: வேணாம் கமல் சார். டீயே வேணாம். அடுத்த கேள்வி.. ஈரோடு இடைத் தேர்தல்..

ப: என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும். நீங்க ஏன் ஷாமியானால இருந்தீங்கன்னு தானே ? அதான் இல்ல. ஈரோடு எனக்கு தாத்தா வீடு இல்லியா ? எங்க பகலவன் வீட்டுத் திண்ணை இருக்க, ஷாமியானா நமக்கு எடுபடுமா ? அதுவும் நாம யாருக்காக போனோம் ? தாத்தாவோட பேரன் எனக்கு அண்ணன். அந்த அண்ணனோட தம்பியா அண்ணன் வீட்டுக்குப் போகக் கூடாதா என்ன ? அதான் போனேன். இதப் பொறுக்காத ஃபாசிஸ ஒற்றைப்படை ஆட்சியாளர்கள் இருக்கற வரைக்கும் நான் நூல் எதிரியாகவே தான் இருப்பேன்னு மீண்டும் உங்கள் வழியா அறிவிக்க வைக்காதீங்கன்னு கேட்டுக்கறேன். 

கே: நம்ம கட்சி என்ன ஆச்சு ? எங்க இருக்கு ?

ப: காந்தி எந்தக் கட்சியோ அதுவே நம்ம கட்சி. ஏன்னா, நானே காந்தி தானே ? நீங்க கூட காந்தி தான். இந்த நாட்டுல எல்லாருமே காந்தி தான். ஆனா ஒரே ஒரு கோட்சே தான். அது யாருன்னு உங்களுக்கும் தெரியும்னு எனக்குத் தெரியும். காந்திக் கட்சி நம்ம கட்சி. 

கே: ஆனா, காந்திக் கட்சி காங்கிரஸ் கட்சி இல்லையா ? மக்கள் நீதி மய்யம் என்ன ஆச்சு கமல் சார் ?

ப : உங்க கேள்வியில விஷமம் இருக்குன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறீங்க. நீதி மய்யம் போய் அதுக்கு சுய்யன், அதிர்ஸம், எள்ளுருண்டை எல்லாம் பண்ணி அனுப்பி வெச்சாச்சுன்னு உங்களுக்குத் தெரியாத மாதிரியே கேக்கறீங்க பாருங்க, அது தான் ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு அரசியல்ல எங்களோட நிலைப்பாடுன்னு தெரியாத வரைக்கும் காந்தியார் இருந்த தேசத்துகு நல்லதில்லை. புரிஞ்சுதா ? 

கே: ஆஹா. பிரமாதமா புரிஞ்சுட்டுது. அடுத்த உங்க பயணம் எங்க ?

ப: அடுத்து, காந்தி அழைச்சிருக்கார். பாரத் சோடோ யாத்ரான்னு வெளி நாடுகள்ல இருக்கற இந்தியர்கள் மத்தியில நடை பயணம் போகலாம்னு. 

கே: அப்ப, காந்தி காந்தின்னு சொன்னதெல்லாம் ராஹுல் காந்தியத் தானா ?

ப: நான் தான் முன்னாலேயே சொன்னேனே. . நாம எல்லாருமே காந்தி தான். அந்த ஒரு கோட்சேவத் தவிர எல்லாருமே காந்தி தான். அதுனால யாரோ ஒரு காந்தி கூட்ட்பிட்ட உடனே போயிடறேன். ஒரு ரகசியம் சொல்றேன். கூப்பிட்ட உடனே இல்ல. கூப்பிட மாட்டாங்களான்னு போயிருவேன். ஈரோடுக்குப் போகல்லியா ? கூப்பிட்டா போனேன் ?

கே: அப்ப, மக்கள் நீதி மய்யம் ?

ப: இல்லாத கடவுள நம்பாறதில்லைன்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, மக்கள் நீதி மய்யம் இல்லைன்னு அர்த்தமில்ல. இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன். 

கே: அதுக்கு என்ன அர்த்தம் ?

ப: பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது. 

கே: என்னது ? மக்கள் நீதி மய்யம் பழசாயிருச்சா ?

ப: ஹிந்து மதம் கூடதான் பழசு. ஆனா நீங்க இன்னும் இந்து மதத்த வெச்சுக்கலியா ? அதுபோலதான், மய்யம் பழசானாலும் புதுசானாலும் அது எப்பவும் இருக்கும். இதயத்துல அதுக்கு எடம் உண்டு.

கே: இதயத்துல எடமா ? யாரோட இதயத்துல ? 

ப: காந்தியோட இதயத்துல. ஏன்னா நீங்க, நான் எல்லாருமே காந்தி தானே ? 

கே: எத்தனை நாளா இப்பிடி ஆகியிருச்சு ? ஏன் இப்பிடி ஒரு மாதிரி பேசறீங்க ?

ப: ஒரு நிமிஷம். கெஜ்ரிவால் அழைக்கறார். சொல்லுங்க ஜி. வந்துடறேன். காந்தி குல்லா இருந்தா போதும். அதப் போட்டுக்கிட்டு எதப் பேசினாலும் எடுபடும். நம்ம ஹிந்து ராம் கூட வருவாரு. அவரு குல்லா போட்டுக்க மாட்டார். வாசகர்களுக்கு மட்டும் தான் போடுவார். நாங்க ரெண்டு பேரும் வந்து உங்க கட்சி கூட்டத்த நடத்திக் கொடுக்கறோம். பாவம் சிசோடியா வேற உள்ள இருக்காரு. உங்ககிட்ட கட்சி இருக்கு. எங்க கட்சில நான் மட்டும் இருக்கேன். பொருத்தம் நல்லா வருது. எதுக்கும் வைகோவையும் கேட்டுப் பார்க்கறேன்.. 

கே: கெஜ்ரிவால் பேசினாரா ? என்ன விஷயம் ?

ப: அவர் கட்சில எல்லாரும் உள்ள போயிட்டாங்களாம். எங்க கட்சில எல்லாரும் வெளில போயிட்டாங்க. வாங்களேன், காத்தாட நடந்துட்டு வரலாம்னு சொன்னாரு. அதான் போயிட்டு வரலாம்னு பார்க்கறேன்.

கே: அப்ப பாரத் சோடோ யாத்ரா ?

ப: காந்தி கூப்பிட்டா நான் போயிருவேன். இப்ப கெஜ்ரிவால் எனக்கு காந்தி. யார் மூலமா எனக்கு காந்தி வருதோ, அவங்கள்ளாம் எனக்குக் காந்தி தான். இப்ப நீங்க எனக்கு அம்பது காந்தி கொடுத்தீங்கன்னா, நீங்களும் எனக்கு காந்தி தான். ஹா ஹா..  

கே: ரொம்ப தேங்க்ஸ்ங்க. நேரம் ஆயிட்டுது. கடைசியா ஒரே ஒரு கேள்வி. உங்க தேர்தல் செலவுக் கணக்கு என்ன ஆச்சுது ? 2021 தேர்தல் முடிஞ்ச உடனே முதல்வரப் பார்த்தீங்களே, கணக்கு வழக்கு எல்லாம் சரியா சொன்னீங்களா ?

ப: கணக்கா ? அதுவும் காந்தி தான். காந்தி பத்தின கணக்கு தானே ? அதான் காந்தின்னு சொன்னேன். காந்தி கணக்கு. புரிஞ்சுதா?   

கே: ரொம்ப சாரி சார். தலை சுத்துது. பக்கத்துல எதாவது நல்ல ஆஸ்பத்திரி இருக்கா ?

ப: கீழ்ப்பாக்கத்துக்குப் போகணும்னா கொஞ்ச தூரம் போகணும். முடியல்லேன்னா பக்கத்துல இங்க எங்கியோதான் மய்யம் கட்சி ஆஃபீஸ் இருக்கு. ஒரு தரம் போய்ப் பாருங்களேன். நானே போய் ரொம்ப நாளாச்சு. அங்க யாராச்சு இருந்தா வந்து பார்க்கச் சொல்லுங்க.

அடுத்த முறை, இன்னொரு பிரபலத்துடன் நமது கப்ஸா டைம்ஸ் நாழிதழ் நேரகாணலில் சந்திப்போம்.

—ஆமருவி

கும்பகோணம் டு அமெரிக்கா – காஃபி வழிப் பார்வை

கல்யாணத்துக்குப் பார்க்கிற போது ‘பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. ஆனா, காஃபி மட்டும் ஒரு வேளை, ஒரே ஒரு வேளை தான் சாப்பிடுவான்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்ன காலம் நினைவில் உள்ளது. தற்போது காஃபிக்குப் பதில் வேறு பானம். 

‘கும்பகோணம் டிகிரி’ என்கிற வஸ்து இன்று லோக பிரசித்தமாயிருக்கிறது. 

எங்கே பார்த்தாலும் ‘கும்பகோணம் டிகிரி’ தான். 

சென்னையில் இருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் நூறு மீட்டருக்கு ஒன்றாக ‘டிகிரி’ நிற்கிறது. 

அதென்ன ஸ்வாமி, புது டிகிரியாக இருக்கிறதே என்று பல கல்லூரிகளிலும் கேட்டுப் பார்த்தேன். யாரும் அப்படியெல்லாம் டிகிரி தருவதில்லை என்று சொன்னார்கள். அரசியல்வாதி தனக்குத் தானே டாக்டர் பட்டம் வழங்குவது போல, நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் டிகிரிபோல என்று நினைத்தேன். 

பின்னர் தான் தெரிந்தது.  பீபரி காஃபி, ஏ-கொட்டை காஃபி என்கிற காலமெல்லாம் போய், இப்போது ‘கும்பகோணம் டிகிரி’ காஃபி என்கிற ஸ்திதி நடந்துவருகிறதாம். கலியுகாப்தம் என்பது போல் ‘கும்பகோண டிகிரி’யுகாப்தம் என்று பஞ்சாங்கத்தில் போடலாம் போல. எங்கும் ‘கும்பகோணம் டிகிரி’.

காஃபிக்கும் கும்பகோணத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால் ஒன்றும் இல்லை. கும்பகோணத்தில் காஃபி விளைவதில்லை. காஃபி எஸ்டேட் ஓனர்கள் கும்பகோணத்தில் இல்லை. கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர் என்னும் பிராமணர் காஃபி கிளப் வைத்து நல்ல காஃபி போட்டுக் கொடுத்திருக்கிறார். அது ஒரு ‘தரம்’ என்பதால், கும்பகோணம் ஐயர் டிகிரி காஃபி என்று துவங்கி, இப்போது நாம் ஜாதியை ஒழித்துவிட்டதால், கும்பகோணம் டிகிரி காஃபி என்று சுருங்கிவிட்டிருக்கிறது – தேசிகாச்சாரியார் ரோடு தற்போது தேசிகா ரோடு என்று ஆனதால் ஜாதி ஒழிந்தது போல. (டாக்டர்.நாயர் ரோடு பற்றி நினைக்காதீர்கள். திராவிடமாடல் போல குழப்பம் தான் மிஞ்சும்).

எது எப்படியோ, காஃபி விஷயத்திற்கு வருவோம். சில கேள்விகள் எழுந்தன. சமூக ஊடக வெளியில் உள்ள அறிவார்ந்த ஞானிகளிடம் கேட்டுவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலவற்றைப் பிரஸ்தாபிக்கிறேன். தேவரீர் தயை கூர்ந்து உத்தரம் கடாக்ஷித்தருளவேணும்.

1. கும்பகோணம் டிகிரி காஃபியைத் திருநெல்வேலிக்காரர் போட்டால் அதே ‘டிகிரி’ எஃபக்ட் வருமா ? 

2. கும்பகோணம் டிகிரி காஃபியைக் கும்பகோணம் ஐயங்கார், மத்வர், சோழியர்  போட்டால் அதே ‘டிகிரி’ எஃபக்ட் வருமா ? 

3. கும்பகோணம் டிகிரி காஃபி போட கும்பகோணத்தில் ஏதாவது டிகிரி வாசித்திருக்க வேண்டுமா ? 

4. கும்பகோணம் டிகிரி காஃபி என்று மதுரை சோழவந்தானில் ஒரு ஸ்தாபனம் உள்ளது. இடம் மாறினால் டிகிரியும் மாறுமா ? 

5. கும்பகோணம் தவிர, வேறு எங்கும் காஃபி போடுவதில்லையா ? 

6. ஸ்டார்பக்ஸ் கம்பெனிக்காரன் போடும் காஃபி கும்பகோணம் டிகிரி காஃபி ஸ்தானத்தைப் பிடிக்குமா? அல்லது அதை விட உயர்ந்ததா ? ஏனென்றால், வெள்ளைக்காரன் சொன்னால் தான் உண்மை என்று பஹுத்-அறிவில் நாம் தெரிந்துகொண்டுள்ளோம் அல்லவா ?

7. கப்புசினோ, காஃபே லாட்டே என்றெல்லாம் குழப்புகிறார்கள். இதெல்லாம் என்ன சங்கதிகள் ? ‘ஏகம் ஸத். விப்ர: பஹுதா வதந்தி’  போல பிரும்மமாகக் கும்பகோணம் டிகிரி காஃபி இருக்கிறது, அதனை அறிந்தவர்கள் கப்புசினோ, காஃபே லாட்டே என்று பலவாறாகக் கூறுகிறார்கள் என்று கொள்ளலாமா ? 

8. சிங்கப்பூர், மலேசியாவில் கோபி சி பொபொ, கோபி ஓ கொசோங், கோபி ஓ என்ற பல அவதாரங்களும் கும்பகோணத்தில் இருந்து எத்தனை டிகிரி ? அல்லது, 7-வது பார்வை போல் அல்லாமல் 8-வதாக அஷ்டகோணல் காஃபி என்று கொள்வதா ? 

மேற்சொன்னவை தவிர்த்து, கல்யாணக் காஃபி என்றொரு அவதாரம் உண்டு. அதற்கும் காஃபிக்கும் ஸ்நானப்ராப்தி இல்லாமல், காஃபியை ஆற்றினால் டிகாக்ஷன்  தனியாகவும், வெந்நீர் தனியாகவும் தெரிந்து த்வைத தரிசனத்தை முன்னிறுத்தும் வகையில் அமைந்திருக்கும் வஸ்து கல்யாணக் காஃபி.  

அத்வைதக் காஃபி பற்றி தெரியாதவர்கள் கொஞ்சம் அமெரிக்கா சென்றுவரலாம். பால் என்கிற கலப்பே இல்லாமல், வெறும் காஃபித் தண்ணியை லிட்டர் லிட்டராகக் குடிக்கிறார்கள். பரம்பொருள் இரண்டற்றது என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். ஒரு படி காஃபியைக் கொண்டு வந்து, மீட்டிங் முழுவதும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்களுக்கான அத்வைத நிலை அதுதான் போல என்று எண்ணியதுண்டு. 

விசேஷமாக, அமெரிக்காவில் de-caffeinated coffee என்றொரு பதார்த்தம் கண்டேன். காஃபின் இல்லாத காஃபியாம். பரம்பொருள் தன்மை இல்லாத பரம்பொருள் என்பது என்ன என்பதைப் பற்றி எண்ணிப்பார்த்துக் கைவிட்டதுண்டு. காஃபின் இல்லாத காஃபி குடிப்பதற்குப் பதில் வெந்நீர் குடித்தால் போதாதா ? என்ன லாஜிக் என்று அப்போது புரியவில்லை. ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுக்கு உதவி, ஜன நாயக நாடான பாரதத்தை உதாசீனப்படுத்தி, ஜன நாயகம் பற்றி உலகிற்குப் பாடம் எடுப்பது என்ன அமெரிக்க லாஜிக்கோ, அதே லாஜிக் தான் காஃபின் இல்லாத காஃபி குடிப்பது என்று புரிய சற்று நேரம் ஆனது.

கும்பகோணத்தில் ஆரம்பித்து, அமெரிக்காவில் நிற்கிறோம். ஏதோ குறியீடு போல தோன்றுகிறதா ? நிதர்ஸனமும் அது தானே ?

ரெண்டாம் டிகாக்ஷன் காஃபிக்கு இன்னொரு பெயர் உண்டு. கப-சுர-குடிநீர். அதுவும் பழம்பால் காஃபியும், காஃபி வகையறாவில் சேர்த்தி இல்லை.  ஜாதிப்ரஷ்டம்  ஆனவை.  

கல்யாணத்துக்குப் பார்க்கிற போது ‘பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. ஆனா, காஃபி மட்டும் ஒரு வேளை, ஒரே ஒரு வேளை தான் சாப்பிடுவான்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்ன காலம் நினைவில் உள்ளது. தற்போது காஃபிக்குப் பதில் வேறு பானம்.  சோஷியல் ட்ரிங்கிங் என்கிறார்கள். அந்தப் பழக்கம் இல்லாத பையனை ‘அம்மாஞ்சி’, ‘மடிசிஞ்சி’ என்று வகைப்படுத்தி, ‘பையன் ஃபார்வர்டு திங்கிங் இல்ல போல்ருக்கே’ என்கிறார்கள். ஃபார்வேர்டு கம்யூனிட்டி என்று பீத்தல் வேறு. நிற்க.   

ரயிலில் ‘டீ-காஃபி டீ-காஃபி டீ-காஃபி’ என்கிற பானம் விற்கப்படுவது நீங்கள் அறிந்ததே. சந்தியாவந்தனத்தில் ( அப்படி ஒன்று இருந்தது)  ஆசமனம் செய்யப் பயன்படுத்தும் நீரின் அளவே இருக்கும் அந்த ‘டீ-காஃபி டீ-காஃபி டீ-காஃபி’, டீயா காஃபியா என்று ஆராயப் புகுவது வியர்த்தம்.  இந்த ஆராய்ச்சிக்குப் பதிலாக ‘கருணைக்கடல் மாமன்னர் ஔரங்கசீப்பின் மத நல்லிணக்கம்’ பற்றி நூறு பக்கக் கட்டுரை ஒன்றை எழுதிவிடலாம்.

தேவன் கதைகளில் ‘கள்ளிச் சொட்டு காஃபி’ என்றொரு வஸ்து வருவதுண்டு. அடுத்த வேளை சாப்பிடுகிற வரை நாக்கை விட்டு நீங்காமல் இருக்குமாம். அவ்வகையான காஃபி மாயூரம் காளியாகுடியில் கிடைத்ததுண்டு. தற்போது அவ்விடத்திலும் ரயில் காஃபிதான். 

சமீபத்தில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் ஒரு கும்பகோணம் டிகிரி நின்றது. நப்பாசையில் இறங்கினேன். 80களில் நெய்வேலியில் மழை பெய்த பின் பழைய சைக்கிள் டயர்களில் தேங்கியிருக்கும் மழை நீரின் வாசனையை உணர வைத்தது அந்தக் கும்பகோணம் டிகிரி. ‘சைக்கிள் டயர் காஃபி’ என்று பெயர் வைத்திருக்கலாம். 

வாசித்தவுடன் கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். கவலையை விடுங்கள். காலாற நடந்து ஒரு கும்பகோணம் டிகிரி காஃபி சாப்பிட்டு மீண்டும் வாசியுங்கள்.  உங்கள் ‘கும்பகோணம் டிகிரி’ அனுபவம் குறித்து எழுதுங்கள். பயன்படும்.

—ஆமருவி

காஃபி விருத்தாந்தம் பற்றிய ஒரு வியாசம் எனது ‘நெய்வேலிக் கதைகள்’ நூலில் வருகிறது, தற்போதைய காலத்து எந்த வித விகாரமோ கலப்படமோ அற்ற 80களின் நெய்வேலி வாழ்க்கையின் எளிய நகைச்சுவைக் கதைகள் வாசிக்க ‘நெய்வேலிக் கதைகள்’ தொகுப்பை இங்கே வாங்கலாம். அமேஜானில் தான் வாங்குவேன் என்று அடம் பிடிப்பவர்கள் இங்கே வாங்கலாம்.

கல்யாண வீடியோக் கதைகள்

ஒரு மைசூர்ப்பாக எடுத்து ஒரு விள்ளல் வாய்ல போட்டுண்டப்பறம் இன்னொரு விள்ளல் கைல இருக்குமே, அதையே கேமராவுல ரெக்கார்ட் பண்ணிண்டிருந்தா என்ன கொடுமை ?

இதெல்லாம் ரொம்ப ஓவர். கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா ?

கல்யாண வீடுகள்ல வீடியோ எடுங்கோ, வேணாங்கல. பொண்ணு மாப்பிளைய எடுங்கோ.

ஆனா, சப்பிடற பந்தில வந்து, கைக்கும் வாய்க்கும் குறுக்க கேமராவை நீட்டினா எப்பிடி ? காராசேவ கவனிக்கறதா, கேமராவப் பார்க்கறதா ? 

அதுவும், ஏதோ எடுத்தமா போனமான்னு இல்லாம, ஒரு பதார்த்தத்த முழுக்க சாப்பிடற வரைக்கும் ரெக்கார்ட் பண்ணனும்னு என்ன வேண்டுதலோ தெரியல. எல்லா கல்யாண வீடுகள்லயும் இதே வழிமுறை.

பந்தி நடக்கறத ஒரு ஓரமா இருந்து படம் எடுத்துட்டுப் போனா போறாதா ? 

வீட்டுலதான் அத சப்பிடாத, இத சாப்பிடாதன்னு கொடைச்சல். கொஞ்சம் நிம்மதியா ஆற அமர குஞ்சாலாடு ரெண்டு, பாதுஷா ரெண்டு, அக்கார அடிசில் ரெண்டு தரம்னு சாப்பிடலாம்னா பொண்டாட்டி கண் கொத்திப் பாம்பா பார்க்கற மாதிரி, கேமராவ நீட்டினா என்ன சார் நியாயம் ? 

அதுலயும், ஒரு மைசூர்ப்பாக எடுத்து ஒரு விள்ளல் வாய்ல போட்டுண்டப்பறம் இன்னொரு விள்ளல் கைல இருக்குமே, அதையே கேமராவுல ரெக்கார்ட் பண்ணிண்டிருந்தா என்ன கொடுமை ? எவ்வளவு நேரம் தான் வாய்ல மைசூர்ப்பாகும், பல் தெரியற மாதிரி சிரிப்புமாவே கைல இன்னொரு விள்ளல வெச்சுண்டு அசடு வழிஞ்சுண்டு உக்காண்டிருக்கறது ? 

சரி, வீடியோ எடுத்துட்டேளா, அன்னண்ட போங்கோ, மிச்ச விள்ளலையும் வாயில போட்டுக்கணும்னு சொல்லலாம்னா, வாய்க்குள்ள ஏற்கெனவே ஒரு விள்ளல் இருக்கு. இப்பிடியே ஸ்லோ மோஷன்ல எத்தனை நாழிதான் உக்காந்துண்டே இருகக்றது ? 

இதுல வீடியோ எடுக்கறவருக்குக் கொடுக்காம சாப்பிடறதுனால வயத்த வலி எதாவது வந்துடுமோன்னு வேற பயமா இருக்கு. பயத்தோட சிரிக்கற மாதிரி போஸ் குடுக்கறதுக்கு ஆமருவி என்ன ‘விஸ்வரூபம்’ கமலஹாஸனா ? ஊமைக்குத்து வாங்கிண்டே சிரிச்சு மழுப்ப அவரால மட்டும்தான் முடியும்.

சாப்பிடறத வீடியோ எடுக்கறதுக்குப் பின்னாடி ஏதோ கான்ஸ்பிரஸி இருக்கும் போல இருக்கு. ஆமருவிங்கறவன் என்ன சாப்பிட்டான் ? எத்தனை லட்டு உருண்டைகளை உள்ள தள்ளினான் ? ஒரு ஆள் ஒரு லட்டு சாப்பிடறதுக்கு ஆவரேஜா எத்தனை நாழியாறது ? இவன் பேரலல் பிராஸசிங் கணக்கா, ஒரே சமயத்துல எத்தனை லட்டுகளை தள்ளறான்னு இப்பிடி எதாவது டேட்டா சயின்ஸ் பிரச்னை எதாவது இருக்குமோன்னு தோண்றது.

என்ன டேட்டா சயின்ஸ் பிரச்னையானாலும் இருக்கட்டும். எடுக்கற படத்த எடுத்துக்கோங்கோ. ஆனா அத பார்யாள் கிட்ட மட்டும் காட்டாதீங்கோ, நாளைக்குக் காஃபில தீர்த்தம் விளையாடிடும்னு சொல்லலாம்னு பார்த்தா அதுக்குள்ள அடுத்த இலைக்குப் போயிட்டார் வீடியோகிராஃபர். 

இனிமேலாவது கல்யாண வீடுகள்ல சாப்பிடறத வீடியோ எடுக்காதீங்கோ ப்ளீஸ். எடுத்தாலும், அந்த வீடியோவ லட்டுகள் சாப்பிட்டவனோட மனைவி கண்ல படாம பார்த்துக்கோங்கோ. 

லட்டு தின்னவன் (காஃபித்) தண்ணி குடிப்பான்னு தெரியாமலா சொன்னா நம்ம பெரியவாள்ளாம் ? 

–ஆமருவி
24-02-2023

அறம் நிலையாத் துறை ஒழிய வேண்டியது ஏன் ?

இந்து அறம் நிலையாத் துறை அழிய வேண்டிய ஒன்று. ஏனென்று அறிந்து கொள்ள மேலே வாசியுங்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை இந்து அறங்கெட்ட துறையில் சில ஊழியர்கள் நாசமாகப் போவார்கள் என்று சாபம் இட்டு எழுதியிருந்தேன். பின்னர் விளக்குகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இன்று எழுதுகிறேன்.

அறங்கெட்ட துறை ஒழிய வேண்டும் என்பது ஏனோ இன்று நேற்று கொடுக்கப்படும் சாபம் அன்று. பல கோவில்களில் துறை செயல்படும் விதம் பற்றி அறிந்தவன் என்பதாலும், இரண்டு கோவில்களின் குடமுழுக்கு, திருத்தேர்ப் பணிகளில் ஈடுபட்டவர்களுடன் பயணித்தவன் என்பதாலும் பல விஷயங்கள் நேரடியாகத் தெரியும்.

முதல் பத்தியில் உள்ள கோபம் குறித்து :

1000 ஆண்டுகால, சிறிய கோவில் அழிந்த நிலையில் இருந்தது. திருப்பணி செய்ய வேண்டும் என்று ஒரு குடும்பம் 40 ஆண்டுகளாக முயன்றது. ஆரம்பித்த பெரியவர் மறைந்தார். அவரது தம்பி மேற்கொண்டு முயன்றார். தொல்லியல், அ.நி.து. என்று அலைந்து, அவரும் மறைந்தார். கோவில் அப்படியே இருந்தது.

அவரது மகன் ராமு. தன் அப்பாவும், பெரியப்பாவும் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்தார். 6 ஆண்டுகள் முயற்சி. ஒரு வழியாக அ.நி.து. ஒப்புதல் அளித்தது.

பெரும் சிரமத்துடன் பணிகளைத் துவங்கிய அவர், பாலாலயம் செய்ய உத்தரவு கேட்டார். அ நி.து. தன் வேலையைக் காட்டத் துவங்கியது.

கோவில் உள்ள மாவட்ட அ.நி.து. ஒப்புதல் அளித்தது. மேற்கொண்டு உத்தரவு வழங்க சென்னைக்கு அனுப்பியது. சென்னைத் துறையின் உறக்கம் கலையவில்லை. மூல மூர்த்தியை நகர்த்தி வைக்க வேண்டும் என்பதால் சென்னை உத்தரவு தேவை.

ராமு பாலாலய வேலைகளுக்கு நாள் குறித்தார். சென்னை அலுவலகத்துக்கு நடக்கத் தொடங்கினார்.

நாள் நெருங்கிவிட்டது. உத்தரவு வரவில்லை.

ராமு பாலாலய ஏற்பாடுகளுக்காக ஊருக்கும் சென்னைக்கும் அலைந்துகொண்டிருந்தார். முழு நேர வேலையில் இருப்பவர் ராமு.

நாளை பாலாலயம். இன்று பந்தல் முதற்கொண்டு போட்டாகிவிட்டது. ஆட்கள் வந்துவிட்டனர். பாலாலயத்துக்கான பொருட்கள் வந்து இறங்கிவிட்டன.

ராமு சென்னையில், அ.நி.து. அலுவலகத்தில்.

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கமிஷனர் உத்தரவு வேண்டும், உங்கள் கடிதம் வந்து 15 நாட்கள் தான் ஆனது, எனவே மேலும் அவகாசம் தேவை என்று அலுவலர்கள் முகத்தில் அறைவது போல் சொல்கின்றனர்.

மாலை 5:00 மணி. உத்தரவு இல்லை.

மாலை 6:30. மாவட்ட அ.நி.து. அதிகாரியைத் தொடர்பு கொண்டு கெஞ்சுகிறார் ராமு. ‘நாளைக்குக் கார்த்தால ஊர்ல பாலாலயம். எப்படியாவது உத்தரவு வாங்கிக் கொடுங்க’ என்கிறார்.

மாவட்ட அதிகாரியும் சென்னையைத் தொடர்பு கொள்கிறார்.

மேலும் அவமானங்கள், இழுத்தடிப்புகள் என்று சுமார் எட்டரை மணி வரை போகிறது. இடையில் ராமு என்னிடம் உதவி கேட்க, நான் சில அலுவலர்களைத் தொடர்புகொண்டேன். பலனில்லை.

இரவு சுமார் 9:00 மனிக்கு ‘அனுமதி இல்லை’ என்று அறிவிக்கிறார்கள். பாலாலயம் நின்றுபோகிறது.

அந்த நிலையில் தான் நான் ‘அவரகள் நாசமாகப் போவார்கள்’ என்று எழுதியிருந்தேன்.

ராமு மீண்டும் அனுமதி கோருகிறார். ஒரு மாத அவகாசத்தில் அனுமதி கிடைக்கிறது. 40 நாட்கள் கழித்து பாலாலயம் நடக்கிறது.

வாங்கும் சம்பளத்திற்குக் கூட வேலை செய்யாத அரசு அலுவலர்களுக்கு நல்லது எப்படி நடக்கும் ? இவர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகளுக்கு என்ன நல்லது நடந்துவிடும் ? அவர்கள் மேல் உள்ள அரசியல்வாதிகளுக்கு ?

ஆகவே, இந்து அறம் நிலையாத் துறை கோவில்களில் இருந்து ஒழிய வேண்டும் என்பது சாபம் மட்டுமல்ல, நிதர்சனத் தேவையும் கூட. அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய ‘ஆடிட்’ வேலையை மட்டும் செய்யட்டும்.

மேலும் பேசுவோம்.

–ஆமருவி

19-02-2023

ராமு – பெயர் மாற்றம்.

திருச்சி கல்யாணராமன் – கண்டனம்

அப்பட்டமான அழுச்சாட்டியத்தை அந்த உபன்யாசகர் பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

தாம்பிராஸ் மீது எனக்கு என்றும் மரியாதை இருந்ததில்லை. நான் அதன் உறுப்பினன் அல்லன். 

அந்தச் சங்கம் நடத்திய கூட்டம் ஒன்றில், உபன்யாசகர் கல்யாணராமன் நாடார்கள் குறித்துப் பேசிய ஒரு நிமிடக் காணொளியைக் கண்டேன். அபத்தம். 

உபன்யாசம் செய்பவர் ஆசாரிய பீடத்தில் இருந்து பேசுகிறார். நொடி நேர ஹாஸ்யம் என்கிற அளவில் கூட அந்தப் பீடம் அவமதிக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உபன்யாசகரது கடமை. 

அப்படியிருக்க, அப்பட்டமான அழுச்சாட்டியத்தை அந்த உபன்யாசகர் பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 

பிராம்மணத்துவம் ஒரு உயர்ந்த நிலை. அதை அடைய முயல வேண்டும். பட்டா எழுதிக் கொடுப்பது போல் யாரும் உயர்ந்த பிராம்மணனாகப் பிறப்பதில்லை. இது அடிப்படை அறிவு. 

அந்த உபன்யாசகரை ஆன்மீக விழாக்களுக்கு அழைக்காமல் இருப்பதும், அவரது சிஷ்யர்கள் அவரைப் பகிஷ்காரம் செய்வதும் அவசியம். 

அவருக்கு வேண்டியவர்கள் தொண்டரடிப்பொடியாழ்வாரின் பின்வரும் பாசுரங்களை அவரிடம் வாசிக்கக் கொடுக்கலாம் :

அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப் பொழுதோர் ஆங்கே
அவர்கள் தான் புலையர் போலும் அரங்கமா நகருளானே 

(‘நான்கு வேதங்களை ஓதிய அந்தணர்களில் தலைவராக இருப்பினும், இழி நிலையில் உள்ள உங்களைப் பழித்து ஒரு சொல் சொன்னாலும் அந்த அந்தணரே புலையராக ஆவார் என்று சொன்னீரே அரங்க மாநகர் அப்பனே’)

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில்
கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே

(‘சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை’)

–ஆமருவி
12-02-2023

மாளிகாபுரம் – ஒரு பஹுத்-அறிவுப் பார்வை

பெரியாரீய தளிகையில் மார்க்ஸீய வெண்பொங்கலுடன் அம்பேத்காரீய அக்கார அடிசிலையும் அயோத்திதாசரீய அதியற்புத கருதுகோள்களைக் கலந்து உண்ணும் தமிழனின் மறப்பண்பு ? தியேட்டரில் ஈ ஓட்டக்கூட ஆளில்லாத நிலையில் அல்லவா இந்தப் படத்தைக் கடந்து சென்றோம் ?

‘மாளிகாபுரம்’ என்றொரு மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருந்தார்கள். தெரியாமல் பார்த்துவிட்டேன். 

என்ன கொடுமை சார் ? எட்டு வயதுப் பெண் குழந்தைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்று பகுத்தறிவில்லாத பாட்டி கதை சொல்கிறாள். அந்தப் பெண் குழந்தையும் ஐயப்பனைக் காணப் போவதாகக் கனவு காண்கிறது. 

கனவு கண்டால் போதாதா ? ஐயப்பனைத் தரிசிக்க அழைத்துச் செல்ல தன் தந்தையிடம் நச்சரிக்கிறது. பத்து வயதிற்குள் சென்று தரிசித்துவிட வேண்டுமாம். இல்லாவிட்டால் ஐம்பது வயது வரை காத்திருக்க வேண்டுமாம். இதெல்லாம் என்ன நம்பிக்கையோ ? அதுவும் எட்டு வயதுப் பெண் குழந்தைக்கு மனதில் உறைக்கும் படி பலர் இதையே சொல்லி வளர்க்கிறார்கள். 

பகுத்தறிவும், பெண்ணீயமும் தழைத்தோங்கும் கேரளத்தில் இம்மாதிரியான பிற்போக்குவாத விதைகளைக் குழந்தைகள் மனதில், பிஞ்சு உள்ளத்தில் விதைப்பது என்ன நாகரீகம் ? இந்த அழகில் கேரளம் கல்வியில் முன்னேறிய மாநிலமாம், இடது சாரி முற்போக்கு அரசு நடைபெறுகிறதாம்.. ஆனால் அதே மாநிலத்தில் இம்மாதிரியான பிற்போக்கு எண்ணங்களைக் குழந்தைகளின் மனதில் புகுத்தும் ஆர்.எஸ்.எஸ்.ஈய, பாஜகவீய, ஃபாசிஸ உடான்சுகளை அந்தச் சமூகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது ?

இப்படியான சனாதனத்தை வேர் அறுக்கவே நமது மாநிலத்தில் பொல்.வருமாஅழகன் வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளார் என்பது கொசுறு தகவல். 

நம் தமிழ் நாட்டில் பாருங்கள். இந்தப் படம் வந்ததோ, ஓடியதோ வெளியே தெரியாமல் எப்படிப் பாதுகாத்தோம் ? அதுதானே பெரியாரீய தளிகையில் மார்க்ஸீய வெண்பொங்கலுடன் அம்பேத்காரீய அக்கார அடிசிலையும் அயோத்திதாசரீய அதியற்புத கருதுகோள்களைக் கலந்து உண்ணும் தமிழனின் மறப்பண்பு ? தியேட்டரில் ஈ ஓட்டக்கூட ஆளில்லாத நிலையில் அல்லவா இந்தப் படத்தைக் கடந்து சென்றோம் ? இது யார் மண் தெரிகிறதா இப்போதாவது ? சங்கிகளே, சந்து பொந்துகளில் ஒளிந்துகொள்ளுங்கள்.

சரி. போகட்டும். சனாதனச் சகதியில் உழன்றுகொண்டிருக்கும் மறை கழன்ற சில வம்பன்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று பேட்டி, காணொளி என்று போட்டுள்ளார்கள். வீட்டில் வேலை இல்லாமல் வெட்டியாகப் படம் பார்த்துவிட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லிச் செல்வது பஹுத்தறிவுப் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட நமது தலை நிமிர்ந்த மாநிலத்தில் நடப்பது நமது சுயமரியாதை கலந்த சமூக நீதிச் சமூகத்திற்குக் கேடு தான். அந்தப் புல்லுருவிகளைக் களைந்திட, தீரா-விடப் போராளிகள் முன்னின்று செயல் ஆற்ற வேண்டும். ஆற்றுவீர்களா ? ஆற்றுவீர்களா ? 

சரி. படத்தில் காட்சிகள் அருமையாக உள்ளன. கேரளத்தின் இயற்கை அழகு கொப்பளிக்கிறது. படத்தில் வரும் சிறுவனும் சிறுமியும் அசாத்தியமாக நடித்துள்ளார்கள். பசப்பல் இல்லாமல், முற்போக்கு முகமூடிகள் இல்லாமல் நேரடியாக ஹிந்துக் கடவுள் பற்றிப் படம் எடுத்துள்ளார்கள். பாராட்டுகள். 

சிறுவர்கள் ஐயப்பனைத் தரிசித்தார்களா இல்லையா என்பது கதை. எப்போதாவது உங்கள் பன் டி.வி.யில், உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வெளிவரும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். நம் தலை எழுத்து அது தானே ?  

தமிழ்த் திரை உலகிற்கு வெட்கம், ரோஷம் இருந்தால், இம்மாதிரியாக ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியிடுங்கள் பார்க்கலாம். இன்றைய திரை நாயகர் யாராவது ஒருவர் உன்னி முகுந்தன் செய்த பாத்திரம் போலச் செய்யுங்கள் பார்க்கலாம். 

அப்போது ஒப்புக்கொள்கிறேன், நீங்கள் உணவில் உப்பு சேர்த்துக்கொள்கிறீர்கள் என்று.

ஒரு காந்தாராவால் கன்னடம் தன் ஆண்மையை நிரூபித்துவிட்டது. ஒரு மாளிகாபுரத்தால் மலையாளமும் அப்படியே. 

ஐயா தமிழ்த் திரை உலகே,  அப்ப நீங்க ? 

‘பத்மநாபா படுகொலை’ – நூல் விமர்சனம்

.. விடுதலைப் புலிகளை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் – jeyakanthan

 பத்மநாபாவையும் சேர்த்துப் பதினான்கு பேரைப் புலிகள் படுகொலை செய்தனர். செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஆறு தெரு தள்ளி நான் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தேன்.

பத்மநாபா என்றொருவர் இருந்தார், ஈழப் போரில் பெரும் பங்கு ஆற்றினார், விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்துகொள்ள மறுத்தார், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆகவே சென்னை கோடம்பாக்கத்தில் வைத்துப் புலிகள் அவரையும் வேறு 14 பேரையும் படுகொலை செய்தனர்.

மேற்சொன்ன தகவல்கள் அனேகமாக இப்போது யாருக்கும் நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒருவர் இருந்தார் என்பதே கூட பலருக்கும் தெரியாமல் இருக்கவே வாய்ப்புள்ளது. ஈழ விடுதலைப் போர் என்றால் ஏதோ விடுதலைப் புலிகள் மட்டுமே என்றொரு பிம்பமே தற்போது அனேகமாகப் பலருக்கும் உள்ளது. 

ஈழத்திற்கான போர் என்பதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் தவிர பல போராளிக்குழுக்கள் இருந்தன என்பதையே நம் தமிழ் மக்களுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறான சூழலில், ‘பத்மநாபா படுகொலை’ என்னும் நூல் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது. எழுதிய ஜெ.ராம்கி, வெளியிட்ட சுவாசம் பதிப்பகம் நீடூழி வாழ்க. 

இனி கொஞ்சம் வரலாறு. நிறைய  படுகொலைகள் என்று பயணிப்போம்.

பத்மநாபா படுகொலை என் மனதில் ஆழப் பதிந்த ஒன்று. அவர் கோடம்பாக்கத்தில் கொலையான அன்று, மாம்பலத்தில் என் மாமா வீட்டில் நான் தங்கியிருந்தேன். பொறியியல் நுழைவுத் தேர்வு எழுத சென்னை வந்திருந்தேன். அத்துடன், 1983 முதல் ஈழத்திற்கான போர் பற்றிய செய்திகள், போராளிக்குழுக்கள் பற்றிய தகவல்கள், இந்திய இலங்கை ஒப்பந்தம் என்று மிகவும் ஊன்றிப் படித்துக்கொண்டிருந்தேன். இந்திய அமைதிப் படை இலங்கை சென்ற போது மாலை 5:30 மணி அளவில் ஆல் இந்தியா ரேடியோவின் பிரத்யேக ஒலிபரப்பையும் விடாமல் கேட்டிருந்ததுண்டு. ஆகவே, இலங்கை நடவடிக்கைகள் அனேகமாக அத்துப்படி. ( ‘நெய்வேலிக் கதைகள்’ நூலில் இதைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன்). 

   விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், பிளாட், டெலோ, ஈபிஆரெல்எஃப் என்று பல போராளிக் குழுக்கள் அன்று செயல்பட்டு வந்தன. அனைத்துப் போராளிக்குழுக்களையும் அழித்தொழித்து, புலிகள் பயங்கரவாதக் குழுவாகப் பரிணாம உருமாற்றம் அடையத் துவங்கிய காலம் அது. ராஜீவ் காந்தி அப்போது உயிருடன் இருந்தார்.

பத்மநாபா இடதுசாரிச் சிந்தனை கொண்டவராக ஈபிஆர்எல்எப் இயக்கத்தை நடத்தி வந்தார். யுத்தம் என்பது எப்போதாவது நிறுத்தப் பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தவராக, ஒரு புள்ளியில் யுத்தம் நின்று சமாதானம் துளிர்த்தாலே மக்கள் அதிகாரம் பெற்று வாழ முடியும் என்பதை உணர்ந்தவராக, தன் போராளிக்குழு இளைஞர்களுக்கு ஒரு மார்க்கதரிசியாகத் திகழ்ந்தார் பத்மநாபா. யுத்தம் தீர்வல்ல என்பதை உணர்ந்தவராக இருந்த அவர், சமாதானம் துவங்க வேண்டிய கட்டம் எது என்பதையும் அறிந்திருந்தார். இதற்கு அவரது வாசிப்பு ஒரு காரணம்.

நிதர்ஸனத்தை உணர்ந்தவராக இருந்த பத்மநாபா தனது குழுவில் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்து, போராளிகளுக்கு அரசியல் பயணத்திற்கான வழி காட்டும் சிந்தனையாளராகச் செயல்பட்டு வந்தார். அதனாலேயே, ஆயுதப் போராட்டம் முடிவடைய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தார். 

ஆனால், அரசியல் பயணத்திற்குப் புலிகள் தயாராக இருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று அவர்கள் நம்ப வைக்கப் பட்டார்கள். இதற்கு, இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பண உதவி செய்துவந்த குழுக்கள் முக்கிய காரணம். யுத்தம் நின்றால் பணப்புழக்கம் நின்றுவிடும் என்று நம்பிய பல குழுக்கள் ஈழத்தில் யுத்தம் நிற்காமல் பார்த்துக் கொண்டன. அந்தச் சதியில் பத்மநாபா, உமா மகேஸ்வரன், பாலகுமார் முதலான தங்கள் சகோதரப் போராளிகளை ஹவிசுகளாக கொடுத்த புலிகள், இறுதியில் ஆத்ம சமர்ப்பணம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பத்மநாபா கொல்லப்பட்ட நேரத்தில் புலிகள் இலங்கை அரசுடன் சமாதானத்தில் இருந்தனர். பிரேமதாசா அரசுடன் கூட்டுச் சேர்ந்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் முறையால் ஆட்சிக்கு வந்த ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் அரசைக் கவிழக்க அனைத்து வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ‘சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள். இந்திய ராணுவத்துக்கு இங்கே என்ன வேலை’ என்று கேட்டு, கருணாநிதி அரசின் ஆசியுடன், முதுகெலும்பற்ற வி.பி.சிங் அரசின் நபும்ஸகத் தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ராணுவத்தைத் திருப்பி அனுப்பினர். 

இதன் பலன் : ஈபிஆர்எல்எஃப் அரசு முறிந்தது. தமிழர்களுக்குக் கிடைத்த ஒரே வெற்றியும் பறிபோனது. சகோதரர்கள் என்றும் பாராமல் சக போராளிகளைப் புலிகள் கொன்றனர். அதன் தொடர்ச்சியாக பத்மநாபா சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். 

பத்மநாபா சென்னையில் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னர், தமிழக முதல்வர் கருணாநிதி ‘புலிகள் தங்கள் நாட்டில் சுதந்திரமாக உலவி வருகின்றனர். அவர்கள் தமிழகத்தில் இருக்க வேண்டிய தேவை என்ன? தமிழ் நாட்டில் புலி என்று யாரும் இல்லை’ என்று பேட்டியளித்திருந்தார். 

பத்மநாபாவையும் அவரது கூட்டாளிகளையும் கோழைத்தனமாகக் கொன்ற கூட்டத்தின் சூத்திரதாரியான ஒற்றைக் கண் சிவராசன் பின்னர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும் காரணமானான். 

தேர்தல் மூலம் இலங்கையில் தமிழ் மாகாணங்களுக்குத் தமிழர் ஒருவர் ( வரதராஜ பெருமாள் ) முதல்வரானார். இதற்குக் காரணம் ராஜீவ் காந்தி மற்றும் எம்.ஜி.ஆர். இவர்களுக்குப் பிறகு, பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழு. ஆனால், அத்தனை முன்னேற்றங்களையும் தவிடு பொடியாக்கித் தங்களையும் தம் மக்களையும் அழித்தொழித்த பெருமை விடுதலைப் புலிகளுக்கு உண்டு. 

இந்தப் பின்புலத்தில் இருந்து ‘பத்மநாபா படுகொலை’ நூலை வாசித்துப் பார்த்தால் தற்கால இளைஞர்களுக்கு அன்னாளைய நிதர்ஸனச் சித்திரங்கள் புரிய வாய்ப்புண்டு. பத்மநாபா கொலைக்குப் பின் ஒற்றைக் கண் சிவராசன் முதலான புலிகள் எவ்வாறு தப்பினர், காவல் துறையின் அக்கறையின்மை மற்றும் செயல் அற்ற தன்மை, ஆயுதங்கள் போதாமை, முதல்வரின் அலட்சியம், அதனால் பின்னாளில் விளைந்த ராஜீவ் கொலை என்று வரலாற்றுப் பின்னணியை மனதில் நிறுத்தும் நூல் ‘பத்மநாபா படுகொலை’. 

பத்மநாபா படுகொலைக்குப் பின்னர் இரங்கல் கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசியது :

‘பத்மநாபாவைக் கொன்றவர்களைப் போராளிகள் என்றோ, புரட்சிக்காரர்கள் என்றோ உலகம் ஒப்புக் கொள்ளாது. அவர்கள் வெறும் வன்முறையை வழிபடுகிற ஃபாசிஸ்டுகள். அவர்களுக்குத் தேசம் இல்லை, இனம் இல்லை, மொழி இல்லை, தாய் இல்லை, தந்தையும் இல்லை.. கொள்கையும் கோட்பாடும் இல்லாத ஒரு கூட்டத்திடம் நம் இளைய சமுதாயம் பலியாவதும், அதை எதிர்த்தும் பலியாவதும் பரிதாபத்திற்குரியது. 

.. விடுதலைப் புலிகளை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும்’  

நூல்: ‘பத்மநாபா படுகொலை’. ஆசிரியர் : ஜெ.ராம்கி. சுவாஸம் பதிப்பகம். விலை: ரூ: 160. +91-81480-66645 www.swasambookart.com

இலங்கைத் தமிழர் விஷயமாக வந்துள்ள எனது பிற நூலாய்வுகள்.

https://amaruvi.in/2015/12/20/இந்தச்-சாவுகளுக்கு-மன்னிhttps://amaruvi.in/2015/12/20/இந்தச்-சாவுகளுக்கு-மன்னி//

  1. Still Counting the Dead – a review
  2. Rise and fall of Prabhakaran – a review
  3. A fleeting moment in my country – a review
  4. This divided island – a review

Godse Gandhi – ek Yudh review

Marathi plays have been bold. ‘Me Nathuram Godse Boltoye’ was one such.

In the same lines, yet another stage play with the name ‘Godse@Gandhi.com’- that deals with Godse’s reasoning of his killing Gandhi – has been made into a movie.

And this movie resembles its play version in full.

While seeking to paint the point of view from Godse’s perspective, the dialogues get repetitive with Godse accusing Gandhi of being against Hindus. Repetition makes the narrative irritating.

Gandhi’s much spoken about abstinence and his imposition of the same on his co-ashramites also becomes a point of discussion. Whether Gandhiji acceded to the request of his follower or not forms the second climax of the movie.

The idea of making Gandhiji and his assassin talk to each other and get to know each other’s points of view is an interesting angle to view from. However theatrical performance by the characters – Nehru, Kripalani, Patel and Ambedkar – spoil the movie quite a lot.

A welcome attempt that could have been better with tighter narration and better choice of actors.

சென்னை புத்தகக் கண்காட்சி – என் அனுபவம்

அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் ‘மோடி அரசின் கார்ப்பரேட் சனாதனத் திணிப்புகள் – கழுகுப் பார்வை’ என்னும் தலைப்பில் நூல் எழுதினால் அடையாறில் வீடு வாங்கலாம். அத்தனை பதிப்பகங்கள் வெளியிடும் என்று நேரில் தெரிந்து கொண்டேன்.#chennaibookfair

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தண்ணீர்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தொகுப்பில் எனது கட்டுரை ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

வேறு இரண்டு நூல்களும் வெளியீடு கண்டன.

அமைப்பாளர்கள் ஒரே ‘தோழர்’ மயம். புலிப் பணத்தில் இயங்கும் தேசவிரோதக் கட்சியொன்றின் ஏதோ அணியின் பொறுப்பாளரும் வந்திருந்தார் என்பது அவர்கள் பேசிக்கொண்டதில் தெரிந்தது.

பெண் தோழர் ஆண் தோழரைத் தோழர் என விளிக்க, ஆண் தோழர் பெண் தோழரைத் தோழர் என விளிக்க, எங்கெங்கு காணினும் தோழரடா என்னும் அந்தச் சம தர்ம சமுதாயக் கனவு கண்ணெதிரில் நனவானதை உணர்ந்தேன்.

சூழல் ஒவ்வாமை. அரங்கில் இருந்து வெளியேறி, கண்காட்சி அரங்கில் நுழைந்தேன்.

அடடா.. என்னே காட்சி ! தோழர் தவிர, புலித் தம்பி, நீலத் தம்பி, கறுப்புத் தம்பிகள், சிவப்புத் தம்பி தங்கைகள், கண் பட்ட இடமெல்லாம் சு.வெ.யின் ‘வேள்பாரி’ நூல் என பொதுவுடமைப் பின்புலத்தில் தமிழ்த் தேசிய நிறம் மிளிர்ந்த பதாகையில் அம்பேத்கரியத்தில் ஊறி உப்பிய ராமசாமி நாயக்கரீயப் பாவனைகள் பரந்து தெரிந்தன.

இரண்டில் மூன்று கடைகள் இவ்வகையிலானவை.

உ.வே.சா. நூல் நிலையப் பதிப்பகக் கடை ஒரு ஓரத்தில் யாருமற்ற தனிமையில் நின்றிருந்தது. ‘என் ஆசிரியப்பிரான்’ வாங்கினேன்.

விஜயபாரதம் தற்போது ‘பிரசுரம்’ என்கிற பெயரில் துயில்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெற்றிடம். ஆயினும் பல நூல்கள் இல்லை. மா.வெ.எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பசும்பொன் தேவர்’ எனும் நூல் வாங்கினேன்.

சுவாசம் பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னா வழக்கம் போல் படு பிசியாக யாருக்கோ நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓரிரு மணித்துளிகள் பேசிவிட்டு, சுதாகர் கஸ்தூரி, ஜெயமோகன், எழுதிய சில நூல்களை வாங்கினேன். பிரசன்னா மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார் என்று என் எழுத்தாள நண்பர்கள் கூறியிருந்தனர். அதை அவரிடம் தெரிவித்தேன்.

பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் தேமே என்று கால் நீட்டி அமர்ந்திருந்தார். அவரை விழுந்து வணங்கி, அவர் கையால் அவரைப் பற்றி எஸ்.ஜி.சூர்யா எழுதிய நூலை வாங்கினேன்.

சின்மயா மிஷன் அலுவலர் ‘உப-நிஷத்’ புஸ்தகம் எல்லாம் இருக்கு. பாருங்கோ என்றார். கடையில் அவரும், சின்மயானந்தரும் மட்டும் இருந்தனர். ‘ஹிந்து’ ஸ்டாலில் நாலைந்து பேர் திருப்பதி காஃபி டேபிள் புஸ்தகம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்காட்சிக்கு மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அவர்களுடன் பெற்றோரும். அரங்க ஏற்பாடுகள், வசதிகள் நன்றாக இருந்தன.

நான்கு முறை அனைத்து அரங்குகளையும் சுற்றி வந்தேன். பெயர் குறிப்பிட விரும்பாத அரங்கு ஒன்றில் தொகுப்பாசிரியர் ஒருவர் ‘இவர் தான் ஆமருவி. நான் சொன்னேனே, அந்த கட்டுரை எழுதினது இவர் தான்’ என்று என்னை ஒரு பதிப்பாளரிடம் அறிமுகம் செய்தார். வேஷ்டி, ஜிப்பாவில் பக்கவாட்டில் மட்டுமே தெரிந்த என்னை நேரில் காண எழுந்து வந்த அவர், கைகொடுத்துப் பின் நெற்றியைப் பார்த்ததும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் ‘மோடி அரசின் கார்ப்பரேட் சனாதனத் திணிப்புகள் – கழுகுப் பார்வை’ என்னும் தலைப்பில் நூல் எழுதினால் அடையாறில் வீடு வாங்கலாம். அத்தனை பதிப்பகங்கள் வெளியிடும் என்று நேரில் தெரிந்து கொண்டேன்.

#சென்னைபுத்தகக்கண்காட்சி#Chennaibookfair

%d bloggers like this: