தமக்கென முயலா நோந்தாள்

‘மாப்பிள்ளை ஸ்வாமிக்கு அனேக ஆசீர்வாதம். இந்தக் கடுதாசி கொண்டுவரும் ராமசாமி ரொம்பவும் ஏழ்மையில் இருக்கிறார். இவரது தகப்பனார் எங்கள் கிராமத்தில் பால் கறந்து விற்றுவந்தார். அகால மரணம். ஆகவே, தேவள் தயை கூர்ந்து நெய்வேலியில் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யப் பிரார்த்திக்கிறேன்’

வில்லிவலத்தில் இருந்து தாத்தா வேங்கடாச்சார் ஸ்வாமி கொடுத்தனுப்பிய கடிதத்துடன் வந்திருந்த ராமசாமியின் கண்களில் கனவு, பெரும் எதிர்பார்ப்பு. அப்பா ஆஃபிஸில் இருந்து வந்துருக்கவில்லை. நானே கடிதத்தைப் பிரித்துப் பார்த்து ‘அம்மா, வில்லிவலம் தாத்தா லெட்டர் குடுத்து அனுப்பி இருக்கார்’ என்று அம்மாவிடம் ஓடினேன்.

நெய்வேலி நிறுவனத்தில் ராமசாமி வேலைக்குச் சேர்ந்தார். தற்சமயம் பணி ஓய்வு பெற்று நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார்.

கண்ணில் கோளாறு இருந்த, தன் தந்தையை இழந்த, கோபாலுக்குப் பிரும்மப் பிரயத்னம் செய்து நெய்வேலி நிறுவனத்தில் ஏதோ ஒரு பணி வாங்கிக் கொடுத்தார் அப்பா.

இப்படியாகப் பல கிராமத்துப் பசங்களுக்கு வேலை ஏற்பாடு ஆனது. பிரதிபலன் என்கிற பேச்சுக்கே இடம் இருந்ததில்லை.

குடிகாரக் கணவன் கைவிட்ட பெண் ஒருவர் வடலுரில் இருந்து கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றார். கணவன் இருக்கும் இடம் தெரியவில்லை. நெய்வேலியில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, தன் பி.எஃப். பணத்தில் பெருமளவில் எடுத்து, குடித்து, அழித்து, மொத்தமாக ஆளே காணாமல் போனாவனின் மனைவி, தன் பெண்களுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் என்று உதவி கோரினாள். காஞ்சி சங்கராச்சாரியாரிடம் திருமாங்கல்யம் பெற்று, பணம் வசூல் பண்ணி அந்த அம்மாளின் பெண்களுக்குக் கல்யாணம் நடத்தி வைத்தார் அப்பா.

அபலைப் பெண்கள் கல்யாணம் எனில் செலவுகளுக்குப் புரவலர்களைத் தேடிப் பிடித்து, முன்நின்று நடத்தி, அப்பா செய்துவைத்த கல்யாணங்கள் நானறிந்து ஐந்து. இது தவிரவும், முறியும் நிலையில் இருந்த கல்யாணங்கள் குறித்த பஞ்சாயத்துகள் பலதையும் அப்பா நடத்திவைத்துப் பார்த்துள்ளேன். இன்று பேரன் பேத்திகளுடன் இருக்கும் பலரது கல்யாணத்தைக் காப்பாற்றிக் கொடுத்தவர் அப்பா. குறிப்பாக, தன்னிடம் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றிய வெள்ளந்தி மனிதர் அல்லா பிச்சை அவர்களின் அகால மறைவிற்குப் பிறகு, அனாதரவாக விடப்பட்ட குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் பலவற்றையும் தானே முன்நின்று தீர்த்து வைத்தார்.

1980களில் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் வௌவால் பறக்கும். அர்த்த மண்டபத்தில் எரியும் குண்டு பல்பு வெளிச்சத்தில் கண்ணன் பட்டாச்சாரியார் அமர்ந்துகொண்டு, பழைய கிரந்தங்களை வாசித்துக்கொண்டிருப்பார். அழுது வடியும் கோவில் மேற்பாவை அறம் நிலையாத் துறை என்பது தமிழ் நாட்டு நியதி. வருஷாந்திர உற்சவங்கள் ஒன்றொன்றாக நின்றுபோகத் துவங்கிய நேரம். வைகாசி மாச பிரும்மோற்சவம் நடத்தப் பணம் இல்லை என்று அறம் நிலையாத் துறை சொல்லிவிட்டது. அன்றிரவு ‘கோஸக பக்த சபா’ என்னும் ஸ்தாபனம் உருவானது. அதன் வடிவம், செயல்பாடுகள் முதலியவற்றை எழுதியவர் அப்பா. ஊர்ப் பெரியவர்கள், காலஞ்சென்ற ரங்கராஜன், காலஞ்சென்ற பட்டாச்சார், காலஞ்சென்ற பேராசிரியர் கோஸகன் முதாலானோர் தலைமையில் அப்பா செயலாளராக சபா உருவானது.

வருஷந்தோறும் நெய்வேலி, சென்னை என்று வீடு வீடாக வசூல் ( ரூ 1, 2 என்று ) செய்து உற்சவங்கள் நடக்க ஆரம்பித்தன. விட்டுப்போன பல உற்சவங்களைக் கோஸக ஸபா நடத்தத் துவங்கியது. இன்று பெரிய அளவில் வைப்பு நிதி உள்ள ஸபாவிற்கு அன்று அஸ்திவாரம் போட்டவர்களில் அப்பா முதன்மையானவர்.

தேரழுந்தூர் அஹோபில மடம் இடிந்த நிலையில் பல்லாண்டுகள் இருக்க, உற்சவங்கள் பலதும் இல்லாமல் ஆயின. அவற்றை மீட்டு, ஆதிவண் சடகோபர் உற்சவம், தேசிகர் உற்சவம் என்று பலதையும் மீண்டும் புழக்கத்தில் கொண்டுவந்தவர் அப்பா. இந்தப் பணிகளில் 1998 வாக்கில் வந்து இணைந்து, சபாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, 10 ஆண்டுகள் வழி நடத்திய தேரழுந்தூர் ரங்கநாதன் என்னும் பெருமகனாருடன் இணைந்து, சபாவின் செயலாளராகச் செயல்பட்டார் அப்பா. இந்தக் குழுவின் சீரிய பணியின் விளைவு : தேரழுந்தூரில் 1952ல் எரிக்கப்பட்ட தேர், மீண்டும் 2005ம் ஆண்டு உயிர் பெற்று வந்தது. தேரைக் கட்டியதில் பெரும் உடல் உழைப்பையும், பொருள் சேகரித்தலில் பெரும் உழைப்பையும், அரசுடன் பணியாற்றி, தேரை ஓட்டிய பெருமை அப்பாவினுடையது. கோஸக சபா இல்லையெனில் தேர் இல்லை.

2010ல் தேரழுந்தூர் கோவிலின் புனருத்தாரணம் நடைபெற்றது. சபா, முக்கியமாக அப்பா அதில் களத்தில் இறங்கிப் பணியாற்றினார். தேரழுந்தூர் ரங்கநாதன், ரங்கராஜன், அப்பா என்று மூன்று பெருமகன்களின் ஹிமாலயப் பிரயத்னம். தற்சமயம் கோவில் பொலிவுடன் விளங்குகிறது. புஷ்கரணி என்பதில் தண்ணீர் என்கிற வஸ்து இருக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்தியதில் அப்பாவின் பெருமுயற்சி உள்ளது.

நெய்வேலியில் ஸ்மார்த்தர்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ‘பிக்‌ஷாவந்தனம்’ என்றொரு நிகழ்வைச் செய்வர். ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று நடைபெறும் இந்த நிகழ்வைப் போல, அஹோபில மடத்தின் 44 வது ஜீயரின் ஆணைப்படி, ஆண்டு தோறும் ஆகஸ்டு 15 அன்று அஹோபில ஜீயர் பாரதத்தில் எங்கு எழுந்தருளியிருந்தாலும் அவ்விடத்திற்குச் சென்று அன்றைய நாளன்று மடத்தின் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு பெருமாளுக்கு உண்டான அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்வது என்று நடத்தினார் அப்பா. 52 ஆண்டுகள் நடந்த இந்த நிகழ்வு 2019ல் மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்சமயம் மடமே நடத்திக்கொள்கிறது.

தேரழுந்தூர் பெருமாளுக்குத் தன் செலவில் பெரிய திருமஞ்சனமும், திருக்கல்யாணமும் செய்துவைக்க வேண்டும் என்று பிரியப்பட்டார் அப்பா. 53 நாட்கள் சென்னையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர், தேரழுந்தூரில் இந்த உற்சவங்கள் நடந்துவிட்டன என்பதை மானசீகமாக அறிந்து மறு நாள் காலை 13-04-2024 அன்று விடியற்காலையில் ஆசார்யன் திருவடி சேர்ந்தார்.

அப்பா – ஶ்ரீ.உ.வே.தேவநாதாசார்யர். ( 1941-2024)

எனது ‘பழைய கணக்கு’ சிறுகதைத் தொகுப்பில் ‘பழைய கணக்கு’, ‘ஒரு தேரின் கதை’, ‘தரிசனம்’ முதலிய கதைகளின் நாயகன் இவரே. சமீபத்தில் வெளியான ‘வந்தவர்கள்’ நாவலில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;அன்ன மாட்சி அனைய ராகித்தமக்கென முயலா நோன்தாள்பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

பு

3 thoughts on “தமக்கென முயலா நோந்தாள்

  1. ஓம் ஷாந்தி. ஞானபூமியின் புண்ணிய ஆத்மா. அநேக நமஸ்காரங்கள். 

    Liked by 1 person

  2. தங்கள் மனத்தை முழுவதுமாக வியாபித்து தங்கள் சிறுகதைகளுக்கும் நாவலுக்கும் நாயகனாக விளங்குகிற மதிப்புக்குரிய தங்கள் தகப்பனாரை அழகாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். இந்த blogஐ வாசிக்க எவ்வளவோ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அறிமுகம் கிடைத்தும், அவரை இவ்வுலகில் சந்திக்க இயலாதே என்ற குறை ஒன்று தான். அன்புடன் Partha Desikan

    Like

    1. ஆமாம் ஸ்வாமி. ஆஸ்திக உலகிற்குப் பெரிய இழப்பு. அடியோங்கள் குடும்பத்திற்கும்.

      Like

Leave a comment