வந்தவர்கள் – ஓர் வாசிப்பனுபவம்

இயற்பியல் பேராசிரியர் முனைவர் உத்ரா துரைராஜன் அவர்கள் ‘வந்தவர்கள்’ நாவல் பற்றித் தனது வாசிப்பு அனுபவத்தை இரண்டு பதிவுகளாகப் பதிவுசெய்துள்ளார். தனது நேரத்தைச் செலவழித்து வாசித்து, தனது வாசிப்பு அனுபவத்தை எழுதிய பேராசிரியருக்கு நன்றி.

https://www.facebook.com/share/p/aB9pmSMqjtXHY4qe/?mibextid=xfxF2i

“வந்தவர்கள்” – புத்தக வாசிப்பு அனுபவம் – book review 1/2

If you are from Chengalpattu,villivalam, Navalpakkam, Siruthaamoor, Madhuranthakam or anywhere near Kanchipuram and /or belong to Iyengar clan, you want to know how difficult things went in 1900s, challenges they had to face even to eat, why your parents were so strict about your focus on your education (rather marks), how many from middle or lower middle class had to struggle, you seek closure for many scenes unfolded in your family, please buy and READ the novel Vandhavargal, by ஆ பக்கங்கள். Swasam Publications

A small review here in Tamil

(Disclaimer : நாவலைப் படிக்காமல், இங்கு எழுதப் பட்டுள்ளதை தங்கள் கற்பனையில் பெரிதாக்கி யாரும் தயவு செய்து இங்கு பூட்டை ஆட்ட வேண்டாம்)

1. வட தமிழக ஐயங்கார் என்பது களம், அவ்வளவே!

வானம் பார்த்த நம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வந்தவாசி, திண்டிவனம் மக்கள் யாரும் இதோடு ஒன்ற முடியும். இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம் வீட்டின் யாராவது ஒருவரை / பலரை ( மாமா, அத்தை, பெரிப்ப, சித்தப்பா…) அப்படியே பிரதி பலிக்கிறது. யார் படித்தாலும் நெஞ்சம் உருகும் ( கையில் kerchief இருப்பது நல்லது. )

2. புத்தகத்தை எடுத்த பின் வைக்க முடியாது. சமையல்/ அவசர ஜோலியை முடித்தபின் படிக்கவும். ஆசிரியர் ஆமருவி விட்டாலும் ஜானகியும், சுதர்சனமும் ராமஞ்சுவும் ராகவனும் நம்மை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள். பூசாரி கதைக்குள் வந்தபின் புத்தகத்தை கீழே வைக்க வாய்ப்பே கிடையாது.

3. ஐயங்கார் குடும்பங்களில் பிறந்துள்ள ஒவ்வொருவரும் அவசியம், நம் மூதாதையர்கள் பட்ட பாடு என்னவென்று நம் பிள்ளைகளுக்குச் சொல்ல, நிச்சயம் நாம் தெரிந்து கொள்ள, “வந்தவர்கள் ” அனுபவம் உதவும்.

4.”How to explain this gen Z about our ancestory or heritage, when even we don’t know much. I lost touch with my ancestors long back…they did not tell us anything. Sadly, we don’t maintain any records” என்று குறைபடாமல் இருக்க, நீங்கள் படிக்க வேண்டியது “வந்தவர்கள்”. Coz , author has searched so many documents and made that job easy for you. Hats off to him for this humongous effort. Not easy sir, thank you.

5. வீழ்வேன் என நினைத்தாயோனு சுதர்சனம் முழு நாவல்லயும் நமக்கு நின்னு காமிக்கிறார். எத்தனை வறுமைலயும், ஒரு இடத்துலயும் அழுமூஞ்சித்தனம் கிடையாது. ஏழை , ஏழ்மைன்னா ஆகாத்தியம், அழுகைனு narrative set பண்ற

சினிமாக்காரன் கத்துக்கனும்

– no way. சாப்பாட்டுக்கு, குழந்தை பாலுக்கு சிரமம், ஆனாலும் மெல்லிய உணர்வுகளை புரிந்து கொள்ளும் அழகான Romance, ஜனகிக்கும் சுதர்சனத்துக்கும் இடையே உள்ள

ஒத்திசைவு – அழகு, மெச்சிகனும் . அதுதான் அடுத்த தலை முறைய காப்பாத்த உதவரது.

6. நார்மடியோட வலி, பாதுகாப்புக்காக தானா அந்த வலிய சுமக்க வேண்டிய கட்டாயம், அதுக்காக யாரையும் அவ தூத்தல, அழல, Finger point பண்ணி பயன் இல்ல, அத accept பண்ணிடுட்டா… ஜானகி stands TALL. லட்சுமி மாமி, அந்த பாட்டி – சுதந்திரத்துக்காக , நாட்டுக்காக ஆயுதம் ஏந்திய ஆண்கள் காணாமல் போன குடும்பம்…இவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம். வீரமங்கறது தைரியமா ( பயம் இருந்தாலும்) சவால்களை சந்திக்கிறது தான், “பெருமாள் மேலே பாரத்தை போட்டுட்டு உன் வேலைய பண்ணு” positivity, focus at work, belief, trust – இந்தப் பெண்கள் வாழ்ந்து காட்டியவர்கள்.

https://www.facebook.com/share/p/QZ8pjoxmzeejdVEj/?mibextid=xfxF2i

வந்தவர்கள் – நாவல் – ஆ பக்கங்கள் , Haran PrasannaSwasam Publications எண்ண ஊற்று – 2/2

ஒரு தாயாக ஆசிரியையாக நான் இந்த நாவலில் பெற்றது, பிறருக்கு பகிரப் போவது …

1. “இப்ப இருக்கிற ஸ்திதியில.. ஆனா, அதுக்காக இது இப்படியேதான் இருக்க போறதுன்னு நினைச்சுண்டு உக்காண்டு இருந்தோம்னா இன்னும் கீழேதான் போகணும். இப்ப இதுக்கு மேல கீழ போறதுக்கு வழி இல்ல”

2. “நம்மால முடியற அளவைவிட ஒரு படி மேலே ஏற பாக்கணும். அப்பதான் இருக்கிற இடத்துலயாவது நிக்க முடியும் “

3. “அம்மா ரொம்பவே முன்னாடி யோஜிக்கிறா இவ மட்டும் நாலு எழுத்து வாசிச்சிருந்தா…” – அழகு

4.”காலம்தான் மாறுகிறது. சாரம் ஒன்றுதான். ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கைப் பாதையை கடந்து செல்லும் வழியில் உள்ள பல ஆபத்துகளில் ஒன்று கணவன் திடீரென மரணிப்பது. அதிலும் கட்டுப்பட்டியான பிராமண பெண்கள் அல்லல்படுவது இம்மாதிரியான நிகழ்வுகளில் வீழ்ந்த பிறகுதான். கல்யாணம் என்கிற பந்தத்தில் இருந்து ஒரே வெட்டாக வெட்டி அன்னியப்படுத்தி விடுகிறது…

…என்ன கொடுமையானாலும் எந்த தருணத்திலும் தங்கள் சுயத்தை இழக்காமல் அப்பளம் விற்று சாணி தட்டி விறட்டி விற்று, பால் கறந்து விற்று ஒரு மாதிரியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டே செல்கின்றனர். ஒரே வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. காலமும் இடமும் தான் வேறு. வாழ்க்கை இவ்வளவுதானா? ஒரே அவலம் மீண்டும் மீண்டும் பலருக்கு நிகழ்வது தான் வாழ்க்கையா ?

இந்த நிலை பிராமணப் பெண்களுக்கு மட்டும் தானா? மற்ற ஜாதிகளில் எப்படி உள்ளது? அந்தப் பெண்களின் நிலை என்ன? அவர்கள் நிலைமையை எப்படி சமாளிக்கிறார்கள்?..” –

மிக ஆழமான வரிகள். காயத்தின் வலி நம்மையும் தாக்குகிறது.

நிலை ஓரளவு மாறியுள்ளது என்றாலும், பழைய வழிகளை பிடித்துக் கொண்டு தொங்கும் மக்களும் இருக்கிறார்கள். ஜனத்தொகை பெரிதாக இருக்கும் நம் நாட்டில் எல்லாருக்கும் விடிவு எந்நாளோ? ஊறுகா அப்பளத்தையும் சாணத்தையும் கேலி பேசும் முன் அது யாருக்கோ கஞ்சி ஊத்துகிறது எனும் எண்ணம் வந்தால் சமூகம் உருப்படும்.

5. ‘லட்சுமி மாமி கிட்ட இத போய் சொல்லாதேயும். அவ மனசுல அவ ஆத்துக்காரர் வாழ்ந்து கொண்டே இருக்கட்டும். அவர் இருக்கிறதாகவே மாமி நினைச்சுண்டு இருக்கட்டும். நீ அவளோட கற்பனையை கெடுக்காதே ” – கண்ணில் குளம்….

6.”நீலகண்ட பிரம்மச்சாரி என்று ஒருத்தன் அடிக்கடி வருவான். வாசல்லயே நிப்பான். அவன பார்த்த உடனே இவர் கிளம்பிடுவார், எங்க போறார் என்ன பண்றார் எப்ப வருவார் ஒன்னும் தெரியாம நாங்கல்லாம் இருப்போம் ….

….பையன் இங்கிலீஷ் படிப்பும் படிச்சிருந்தார்.. கல்யாணம் பண்ணினோம். அப்புறம்தான் தெரிஞ்சது மாமனாரும் மாப்பிள்ளையும் சுதேசிகளாம். பையனுக்கு வெடிகுண்டு அது இதுன்னு பண்ண தெரியுமாம். மாமனார் மாப்பிள்ளை ரெண்டு பேரையும் தேடிண்டு போலீஸ்ல இருந்து வர ஆரம்பிச்சா….”

“அது ஒரு ஆஹுதி மாதிரின்னு சொன்னான் வள்ளுவன். தேசம்ங்கற யாகத்துக்கு எங்காத்துலேர்ந்து மூணு தலைமுறைக்கு ஆஹுதி கொடுக்கணும்னு விதி…”

– இப்படிப் பெற்ற சுதந்திரம்…வந்தே மாதரம். அவசியம் புத்தகத்தை படியுங்கள்.

7.”எங்க ஆத்துக்காரர தேசத்துக்கான ஹவிர்பாகமா கொடுத்துட்டேன். ஹவிசுக்கு பலன் குடுன்னு கேட்க மாட்டேன் அம்மா ரொம்ப நாளைக்கு முன்னாடியே சொல்லிட்டா…” தியாக பென்ஷன் வேண்டாம் எனச் சொன்ன செல்லம்மா பாட்டி…

8.” அடடா…. நான் பார்த்துக்கறேன். நீங்க விசனப்படாதீங்கோ. நான் கொஞ்ச நாள் இங்க இருந்து, கஸ்தூரிக்கு நம்மாத்துப் பழக்கமெல்லாம் சொல்லிக் கொடுத்து எங்காத்து பொண்ணா ஆக்கிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்கோ ஸ்வாமி” – அஹா..என்ன ஒரு வாத்சல்யம் …இது இருந்தா போதுமே…ஜானகி மாமி மாறி 100 பேர் இருந்தா அத்தனை பொண்களுக்கும் போதும்…

9. ஐயங்கார் பாஷை, அதுவும் இந்த காஞ்சிவரம் பக்கத்து slang, swear words, கிண்டல் கேலி, கொஞ்சம் வம்பு – என்னோட தாத்தாவும் பழைய காலத்து மனுஷாலும் வந்து போனா… nostalgia

10. மிக கனமான விஷயத்தை , சவாலான ஒன்றை அழுகை, over reaction இல்லாமல் அழுத்தமாக எழுதியுள்ள ஆமருவிக்கு நன்றிகள். Thanks to Publishers.

நூல் வாங்க : சுவாசம் பதிப்பகம் +91-81480-66645 அழைக்கவும்.

தமக்கென முயலா நோந்தாள்

‘மாப்பிள்ளை ஸ்வாமிக்கு அனேக ஆசீர்வாதம். இந்தக் கடுதாசி கொண்டுவரும் ராமசாமி ரொம்பவும் ஏழ்மையில் இருக்கிறார். இவரது தகப்பனார் எங்கள் கிராமத்தில் பால் கறந்து விற்றுவந்தார். அகால மரணம். ஆகவே, தேவள் தயை கூர்ந்து நெய்வேலியில் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யப் பிரார்த்திக்கிறேன்’

வில்லிவலத்தில் இருந்து தாத்தா வேங்கடாச்சார் ஸ்வாமி கொடுத்தனுப்பிய கடிதத்துடன் வந்திருந்த ராமசாமியின் கண்களில் கனவு, பெரும் எதிர்பார்ப்பு. அப்பா ஆஃபிஸில் இருந்து வந்துருக்கவில்லை. நானே கடிதத்தைப் பிரித்துப் பார்த்து ‘அம்மா, வில்லிவலம் தாத்தா லெட்டர் குடுத்து அனுப்பி இருக்கார்’ என்று அம்மாவிடம் ஓடினேன்.

நெய்வேலி நிறுவனத்தில் ராமசாமி வேலைக்குச் சேர்ந்தார். தற்சமயம் பணி ஓய்வு பெற்று நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார்.

கண்ணில் கோளாறு இருந்த, தன் தந்தையை இழந்த, கோபாலுக்குப் பிரும்மப் பிரயத்னம் செய்து நெய்வேலி நிறுவனத்தில் ஏதோ ஒரு பணி வாங்கிக் கொடுத்தார் அப்பா.

இப்படியாகப் பல கிராமத்துப் பசங்களுக்கு வேலை ஏற்பாடு ஆனது. பிரதிபலன் என்கிற பேச்சுக்கே இடம் இருந்ததில்லை.

குடிகாரக் கணவன் கைவிட்ட பெண் ஒருவர் வடலுரில் இருந்து கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றார். கணவன் இருக்கும் இடம் தெரியவில்லை. நெய்வேலியில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, தன் பி.எஃப். பணத்தில் பெருமளவில் எடுத்து, குடித்து, அழித்து, மொத்தமாக ஆளே காணாமல் போனாவனின் மனைவி, தன் பெண்களுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் என்று உதவி கோரினாள். காஞ்சி சங்கராச்சாரியாரிடம் திருமாங்கல்யம் பெற்று, பணம் வசூல் பண்ணி அந்த அம்மாளின் பெண்களுக்குக் கல்யாணம் நடத்தி வைத்தார் அப்பா.

அபலைப் பெண்கள் கல்யாணம் எனில் செலவுகளுக்குப் புரவலர்களைத் தேடிப் பிடித்து, முன்நின்று நடத்தி, அப்பா செய்துவைத்த கல்யாணங்கள் நானறிந்து ஐந்து. இது தவிரவும், முறியும் நிலையில் இருந்த கல்யாணங்கள் குறித்த பஞ்சாயத்துகள் பலதையும் அப்பா நடத்திவைத்துப் பார்த்துள்ளேன். இன்று பேரன் பேத்திகளுடன் இருக்கும் பலரது கல்யாணத்தைக் காப்பாற்றிக் கொடுத்தவர் அப்பா. குறிப்பாக, தன்னிடம் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றிய வெள்ளந்தி மனிதர் அல்லா பிச்சை அவர்களின் அகால மறைவிற்குப் பிறகு, அனாதரவாக விடப்பட்ட குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் பலவற்றையும் தானே முன்நின்று தீர்த்து வைத்தார்.

1980களில் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் வௌவால் பறக்கும். அர்த்த மண்டபத்தில் எரியும் குண்டு பல்பு வெளிச்சத்தில் கண்ணன் பட்டாச்சாரியார் அமர்ந்துகொண்டு, பழைய கிரந்தங்களை வாசித்துக்கொண்டிருப்பார். அழுது வடியும் கோவில் மேற்பாவை அறம் நிலையாத் துறை என்பது தமிழ் நாட்டு நியதி. வருஷாந்திர உற்சவங்கள் ஒன்றொன்றாக நின்றுபோகத் துவங்கிய நேரம். வைகாசி மாச பிரும்மோற்சவம் நடத்தப் பணம் இல்லை என்று அறம் நிலையாத் துறை சொல்லிவிட்டது. அன்றிரவு ‘கோஸக பக்த சபா’ என்னும் ஸ்தாபனம் உருவானது. அதன் வடிவம், செயல்பாடுகள் முதலியவற்றை எழுதியவர் அப்பா. ஊர்ப் பெரியவர்கள், காலஞ்சென்ற ரங்கராஜன், காலஞ்சென்ற பட்டாச்சார், காலஞ்சென்ற பேராசிரியர் கோஸகன் முதாலானோர் தலைமையில் அப்பா செயலாளராக சபா உருவானது.

வருஷந்தோறும் நெய்வேலி, சென்னை என்று வீடு வீடாக வசூல் ( ரூ 1, 2 என்று ) செய்து உற்சவங்கள் நடக்க ஆரம்பித்தன. விட்டுப்போன பல உற்சவங்களைக் கோஸக ஸபா நடத்தத் துவங்கியது. இன்று பெரிய அளவில் வைப்பு நிதி உள்ள ஸபாவிற்கு அன்று அஸ்திவாரம் போட்டவர்களில் அப்பா முதன்மையானவர்.

தேரழுந்தூர் அஹோபில மடம் இடிந்த நிலையில் பல்லாண்டுகள் இருக்க, உற்சவங்கள் பலதும் இல்லாமல் ஆயின. அவற்றை மீட்டு, ஆதிவண் சடகோபர் உற்சவம், தேசிகர் உற்சவம் என்று பலதையும் மீண்டும் புழக்கத்தில் கொண்டுவந்தவர் அப்பா. இந்தப் பணிகளில் 1998 வாக்கில் வந்து இணைந்து, சபாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, 10 ஆண்டுகள் வழி நடத்திய தேரழுந்தூர் ரங்கநாதன் என்னும் பெருமகனாருடன் இணைந்து, சபாவின் செயலாளராகச் செயல்பட்டார் அப்பா. இந்தக் குழுவின் சீரிய பணியின் விளைவு : தேரழுந்தூரில் 1952ல் எரிக்கப்பட்ட தேர், மீண்டும் 2005ம் ஆண்டு உயிர் பெற்று வந்தது. தேரைக் கட்டியதில் பெரும் உடல் உழைப்பையும், பொருள் சேகரித்தலில் பெரும் உழைப்பையும், அரசுடன் பணியாற்றி, தேரை ஓட்டிய பெருமை அப்பாவினுடையது. கோஸக சபா இல்லையெனில் தேர் இல்லை.

2010ல் தேரழுந்தூர் கோவிலின் புனருத்தாரணம் நடைபெற்றது. சபா, முக்கியமாக அப்பா அதில் களத்தில் இறங்கிப் பணியாற்றினார். தேரழுந்தூர் ரங்கநாதன், ரங்கராஜன், அப்பா என்று மூன்று பெருமகன்களின் ஹிமாலயப் பிரயத்னம். தற்சமயம் கோவில் பொலிவுடன் விளங்குகிறது. புஷ்கரணி என்பதில் தண்ணீர் என்கிற வஸ்து இருக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்தியதில் அப்பாவின் பெருமுயற்சி உள்ளது.

நெய்வேலியில் ஸ்மார்த்தர்கள் காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ‘பிக்‌ஷாவந்தனம்’ என்றொரு நிகழ்வைச் செய்வர். ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று நடைபெறும் இந்த நிகழ்வைப் போல, அஹோபில மடத்தின் 44 வது ஜீயரின் ஆணைப்படி, ஆண்டு தோறும் ஆகஸ்டு 15 அன்று அஹோபில ஜீயர் பாரதத்தில் எங்கு எழுந்தருளியிருந்தாலும் அவ்விடத்திற்குச் சென்று அன்றைய நாளன்று மடத்தின் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு பெருமாளுக்கு உண்டான அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்வது என்று நடத்தினார் அப்பா. 52 ஆண்டுகள் நடந்த இந்த நிகழ்வு 2019ல் மடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்சமயம் மடமே நடத்திக்கொள்கிறது.

தேரழுந்தூர் பெருமாளுக்குத் தன் செலவில் பெரிய திருமஞ்சனமும், திருக்கல்யாணமும் செய்துவைக்க வேண்டும் என்று பிரியப்பட்டார் அப்பா. 53 நாட்கள் சென்னையில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர், தேரழுந்தூரில் இந்த உற்சவங்கள் நடந்துவிட்டன என்பதை மானசீகமாக அறிந்து மறு நாள் காலை 13-04-2024 அன்று விடியற்காலையில் ஆசார்யன் திருவடி சேர்ந்தார்.

அப்பா – ஶ்ரீ.உ.வே.தேவநாதாசார்யர். ( 1941-2024)

எனது ‘பழைய கணக்கு’ சிறுகதைத் தொகுப்பில் ‘பழைய கணக்கு’, ‘ஒரு தேரின் கதை’, ‘தரிசனம்’ முதலிய கதைகளின் நாயகன் இவரே. சமீபத்தில் வெளியான ‘வந்தவர்கள்’ நாவலில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;அன்ன மாட்சி அனைய ராகித்தமக்கென முயலா நோன்தாள்பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

பு

‘அன்னபூரணி’ விமர்சனம் அல்ல

‘என்ன சாமி, இந்தியா போனப்பறம் மறந்துட்டீரே’ என்று சூடாக ஆரம்பித்தார் அண்ணாச்சி, ஃபோனில். அண்ணாச்சி பழைய நண்பர். சிங்கப்பூரர்.

‘சவுக்கியங்களா அண்ணாச்சி?’ என்றேன், ஆபீசில் கணினியைப் பார்த்தபடியே.

‘சித்த பேசலாம்னு அடிச்சேன்’ என்றார். சிங்கப்பூரர்கள் ஃபோனில் அழைப்பதை ‘அடிப்பது’ என்பர். ‘சொல்லுங்க அண்ணாச்சி’ என்று ஃபோன் பேசும் பிரத்யேகக் கூண்டிற்குள் நுழைந்தேன்.

‘என்னய்யா செய்யறீரு நீரு ? ஐயங்கார் பத்தி நாவல் எழுதினதா இங்க வாசகர் வட்டத்துல பேசிக்கறாங்க. ஆனா ஐயங்கார் பொண்ணு பத்தி படம் எடுத்திருக்கானுவோ, நீரு ஒண்ணுமே எளுதல்லியே?’ என்றார். கொஞ்சம் உஷ்ணம் தெரிந்தது.

‘புரியல அண்ணாச்சி’ என்றேன்.

‘யோவ் சவத்தெளவு. அன்னபூரணி பார்த்தீரா இல்லியா? அது என்னன்னாவது தெரியுமா?’ என்றார்.

‘சாளக்கிராமப் பொட்டில சின்ன விக்ரஹமாட்டு இருக்கும். அதானே?’ என்றேன், சற்று சிந்தனையுடன்.

‘போம்யா. நீரு புஸ்தகம் எளுதி பாளாப்போகும். தென்கலை ஐயங்கார் பொண்ணு, அதுவும் ஶ்ரீரங்கம் கோவில் மடப்பளி பரிஜாரகர் பொண்ணு, முஸ்லிம் முறைப்படி தொழுகை பண்ணிட்டு, அசைவ பிரியாணி பண்றாளாம். கேட்டா உணவுக்கு மதம் இல்லியாம். ஆனா தொழுகை பண்ணிட்டு பிரியாணி பண்ணினா, ஐயங்கார் பொண்ணு பண்ணினா, பிரியாணி நல்லா வருதாம். நீரு புஸ்தகம் எளுதுறீரு..’ என்றார்.

‘அண்ணாச்சி, நான் சினிமா பார்க்கறதில்ல. தெரியல. ஆனாலும், நீங்க சொல்ற கான்செப்ட் பிரமாதமா இருக்கு’ என்றேன்.

‘என்னைய்யா வளக்கம் போல கொளப்புதீரு?’ என்றார். கோபம் தெரிந்தது.

‘உணவுக்கு மதம் இல்லதானே ? யாரு சமைச்சாலும் சாப்பாடு ஒண்ணுதானே’ என்றேன்.

‘யோவ், நீரு என்ன ஹிந்து பேப்பர்ல வேல செய்யுதீரா ? கம்யூனிஸ்டு ஐயங்காரா மாறிட்டீரா என்ன?’ என்றார் அண்ணாச்சி.

‘ஹிந்துவுல என்னைய எடுக்க மாட்டாங்க. போகட்டும். நான் சொல்லுகதுல என்ன தப்பு ? ஐயங்கார் பிரியாணி பண்ணினா ஆவாதா ? அடுப்பு எரியாதா ? அதே போல முஸ்லிம் பொண்ணு அக்கார அடிசில் பண்ணட்டும். புளியோதரை பண்ணட்டும். கார்த்தால எழுந்து கோலம் போட்டு, தீர்த்தாமாடி, நெத்திக்கி இட்டுண்டு, பெருமாள சேவிச்சுட்டு புளியோரை பண்ணினா ஆகாதா என்ன ? செக்யூலரிஸம் அண்ணாச்சி’ என்றேன்.

‘சுத்தமா கொழம்பிட்டீரு நீரு. இதெல்லாம் சாத்தியமா? அப்பிடி படம் எடுத்துடுவாங்களா தமிளு நாட்டுல?’ என்றார்.

‘ஆங்.. இது கேள்வி. ஐயங்கார் பொண்ணு, கருப்பு டிரெஸ் போட்டு பிரியாணி சமைக்க உரிமை உண்டுங்கற மாதிரி, முஸ்லிம் பொண்ணு ஐயங்கார் முறைப்படி உடை, பாவனைகள் செஞ்சு புளியோதரை பண்ணற மாதிரி எடுக்க எங்க தமிழ் டைரக்டர்களுக்கு தில் இல்லேங்கறீங்களா ? நாங்கள்ளாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே..’

‘போதும்யா. உங்க டைரக்டர்கள் லட்சணம் தெரியாதா ? “இது நம்ம ஆளு” படம் எடுக்க முடியும், “விஸ்வரூபம்” படம் எடுத்து வெளியிட முஸ்லிம் அமைப்புகள் கிட்ட பர்மிஷன் வாங்கணும். “வேதம் புதிது” எடுக்க முடியும். ஆனா “ஒரே ஒரு கிராமத்திலே” படம் வெளியிட மெனக்கெடனும். இதானே உங்க தமிளு நாட்டு டைரக்டர் லட்சணம்?’ என்றார் எகத்தாளத்துடன்.

‘போங்க அண்ணாச்சி. எங்க செபாஸ்டியன் சைமன் இருக்காரு. கருத்துரிமைக் காவலர் பா.ரஞ்சித் இருக்காரு. மாரி செல்வராஜ் இருக்காரு. இவ்வளவு ஏன், பாரதிராஜாவே கூட இருக்காரு. இவங்கள்ளாம் சேர்ந்து, முஸ்லிம் பொண்ணு மடிசார் கட்டிண்டு, திலகம் இட்டுண்டு அக்கார அடிசில் சமைச்சு, திருப்பாவை சொல்லிண்டே நைவேத்யம் பண்ற மாதிரி அவசியம் படம் எடுப்பாங்க. அதுல சத்தியராஜ், கரு.பழனியப்பன், சித்தார்த், எல்லாரும் நடிப்பாங்க. அவங்கள்ளாம் அவ்வளவு தைரியமானவங்க மட்டுமில்ல, கருத்துச் சுதந்திரத்துக்காக உயிரையும் குடுப்பாங்க. சரி ஒரு வேளை அவங்களுக்கு தைரியம் இல்லேன்னா, எங்க உலக நாயகன் கமல் பத்து ரோல் பண்ணி எடுப்பாரு. ஏன்னா, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துன்னு கண்டுபிடிச்ச ஞானி அவரு. இல்லேங்கறீங்களா ? தோசைலயே ஜாதி கண்டுபிச்ச அறிவாளிகள் வாக்கிங் போயிட்டு இருக்காங்க இங்க மெரீன பீச்சுல. திருவள்ளுவரே கிறிஸ்தவர்னு கண்டுபிடிச்சு பி.எச்.டி. வாங்கினவங்க நாங்க.. போவீங்களா.. ‘ என்றேன்.

‘காவேரில தண்ணி வரும். தமிழ் நாட்டுல நவோதயா ஸ்கூல் வரும். நீட் பரீட்சை அவசியம் வேணும்னு சின்னவரு போராட்டம் நடத்துவாரு. இதெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு. ஆனா உங்க சினிமாக்காரங்களுக்கு முதுகெலும்புன்னு ஒண்ணு எப்பவுமே கிடையாது’ என்றார் தீர்க்கமாக.

ரஜினிக்கும் கமலுக்கும் முதுகெலும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது என் வேலை இல்லை என்பது எனக்குத் தெரியும் என்பதால் ஃபோனை வைத்தேன்.

#அன்னபூரணி #Annapoorani

‘வந்தவர்கள்’ – நூல் வெளியீடு

2016ம் ஆண்டு சிங்கப்பூரில் எழுத்தாளர் ஜெயமோகன் நடத்திய காவிய முகாமில் இந்த நூலுக்கான விதை போடப்பட்டது.

அப்போது ‘நான் இராமானுசன்’ நூல் வெளிவந்த நேரம். அதைப் பற்றிப் பேசும் போது ஜெயமோகன் சொன்னது “சமூகங்களுக்கான இடப்பெயர்வுகள் சரியாக வரலாற்றில் பதியப்படவில்லை. சமூகங்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும். உதாரணமாக, நீங்க பிராமணர்கள் இடப்பெயர்வு பத்தி யோசிக்கலாம். அவரவர்கள் தங்கள் குடும்பம், சமூகம் பற்றி கொஞ்சம் விசாரிச்சு, முன்னோர்கள் இருந்த இடங்களுக்குப் போய்ப் பார்த்து எழுதினாலே சமூக வரலாறு கிடைச்சுடும். வரலாற்றுல ஆவணமா இருக்கும்’ என்றார்.

அந்த விதை, 7 ஆண்டுகள் வளர்ந்து தற்போது ‘வந்தவர்கள்’ என்கிற பெயரில் நாவலாக வந்துள்ளது. இதற்காக நான் பலரிடம் பேசி, சில ஊர்களுக்குச் சென்று முனைந்து எழுதினேன். தாது வருஷப் பஞ்சம், பின்னர் 1940 களில் நடந்த பஞ்சங்கள், இதனால் ஏற்பட்ட பிராமணர்களின் இடப்பெயர்வுகள் என்பதை அடிப்படையாக வைத்து எழுதிக்கொண்டிருந்தேன். தற்போது நூலாக வந்துள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் அறிமுகம் செய்தார். முதல் பிரதியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் எழுத்தாளர் சுமதி அவர்கள் பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ‘வாசிப்போம் தமிழிலக்கியம்’ குழுவின் நிறுவனர் திரு. மந்திரமூர்த்தி அழகு அவர்கள் பெற்றுக்கொண்டார். சுவாசம் பதிப்பகம் வெளியிடு. அட்டைப்படம் ஜீவா.

நூல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. நூல் பிரதி வேண்டுவோர் கீழ்க்கண்ட வகைகளில் பெறலாம்.

ஆன்லைன் மூலம் பெற இங்கே சொடக்கவும்.

தொலைபேசியில் அழைத்து ஆர்டர் செய்ய +91-81480-66645 அழைக்கலாம். வாட்ஸப் வழியும் உண்டு.

நூலை வாங்கி, வாசித்துக் கருத்துரையுங்கள்.

எழுதுவது..

2014ல் ‘நான் இராமானுசன்’ தொடர் எழுதிக்கொண்டிருந்தேன். நூலாக ஆக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அந்த அம்மையார் ஃபோன் பண்ணினார்.

‘சார், உங்க தொடர படிச்சுக்கிட்டு இருக்கேன். நல்ல ரீச் குடுக்க முடியும். ஒரு முறை சிங்கப்பூர் லிட்டரரி மீட்டிங்ல பேச வாய்ப்பு கொடுத்தீங்கன்னா, இங்க நல்ல ரீச் இருக்கற பப்ளிஷர்ஸ் கிட்ட கொண்டு சேர்க்க முடியும்’

‘…’

‘நீங்களும் தொடர் எழுதறதுக்கு வாய்ப்பு வாங்கித் தர முடியும். இப்ப இருக்கற இண்டாலரன்ஸ் சிச்சுவேஷன் பத்தி எழுதுங்க. இந்த நாலு பத்திரிக்கைலயும் எழுத வாய்ப்பு வாங்க முடியும்’ என்று அந்த நான்கு பத்திரிக்கைகளின் பெயர்களைச் சொன்னார் அந்தப் பெண்மணி.

‘…’

‘ஃபாஸிஸத்த எதிர்த்து, பூர்ஷ்வா எண்ணங்கள எதிர்த்து எழுதுங்க. நீங்க நிறைய படிக்கறீங்க. அதால சொல்றேன். நிறைய பிரிண்ட் வாய்ப்பு தரமுடியும். பிரைம் மினிஸ்டர் பத்தியோ, குஜராத் பத்தியோ ஒரு பத்தியாவது இருக்கணும். கல்ச்சுரல் எக்ஸ்க்ளூசிவிட்டி, இண்டாலரன்ஸ் அப்பப்ப. நல்ல ரீச் குடுக்கலாம்’

நான் ஒப்புக்கொண்டிருந்தால் ‘நான் இராமானுசன்’ இன்று என்.சி.பி.ஹெச்., பென்க்குவின் என்று வந்திருக்கும். லிட் ஃபெஸ்ட்களில் பேசிக்கொண்டிருந்திருப்பேன். அனேகமாக ரிடையர் ஆகும் அளவிற்குப் பணம் வந்திருக்கும், வந்துகொண்டும் இருக்கும்.

ஆனால், மனசாட்சியை அடமானம் வைத்தவனாக ஆகியிருப்பேன். ‘நமஸ்தே ஸதா வத்ஸலே’ சொன்ன நாக்கு பழுதாகியிருக்கும் என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை.

இருந்தாலும், புதிதக எழுத வருபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது :

யார் வாய்ப்பு கொடுத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சித்தாந்தச் சார்பு இல்லாமல் எழுதப் பழகுங்கள். நீங்கள் உண்மை என்று நம்புவதை எழுதுங்கள். யாருக்காகவும் எழுதாதீர்கள். உங்கள் மனதிற்காக எழுதுங்கள். ஒரு கட்டத்தில் சித்தாந்தச் சாய்வு வரும். அது இயல்பாக வருவது. உண்மையை அறிந்துகொள்ள முயலும் முயற்சியால் வருவது. அதனைத் தடுக்காதீர்கள். போலியாக எழுதாதீர்கள். உண்மையான எழுத்து உங்களை ஒரு இடத்தில் கொண்டு வைக்கும். அந்த இடம் பெரிய இடமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பொய்யான நடிப்பு எழுத்து உங்களுக்கு எந்த அடையாளத்தையும் அளிக்காது, நீங்கள் எழுதுவது உங்களுக்கு மன நிறைவைத் தராது.

ஆக, உங்களுக்கு மன நிறைவைத் தருவதை எழுதுங்கள். நீங்கள் உண்மையாக நம்புவதை எழுதுங்கள். அது நீங்கள் சார்ந்த சாதி, மத, இன, வர்க்க நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் நீங்களே அதனை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். ஆனால், அப்போது நீங்கள் எழுதுவது உண்மையாக, உங்கள் மனசாட்சியுடம் ஒத்திசைவாக இருக்க வேண்டும்.

இது என் பார்வை. நான் எழுதுவது இதைத்தான்.

பிடித்திருந்தால் பகிருங்கள். முடிந்தால் பின்பற்றுங்கள்.

நன்றி

ஆமருவி

01-01-2024

கொடியின் கதை

‘போதும்யா உங்க அறுவை. சொன்னா கேளுங்க. ஜெய்லர், வாரிசுன்னு எவ்வளவோ இருக்கு. அத விட்டுட்டு, பழம்பஞ்சாங்கத்தப் பேசினா என்ன பண்றது? ‘ என்றார் நண்பர்.

‘சார். ஒரே ஒரு நிமிஷம். சமீபத்துல ஒருத்தர் வீட்டு முன்னாடி இருந்த கொடிக் கம்பத்த போலீஸ் ஏன் அகற்றினாங்க ? அவர் எதாவது பாகிஸ்தான் கொடிய ஏத்தினாரா ?’ என்றேன்.

‘ஓ.. அந்தக் கதையா.. சுவாரஸ்யமா இருக்கும் போல இருக்கே.. சொல்லுங்க’ என்று வலைக்குள் விழுந்தார்.

‘அதுக்கு முன்னாடி, இன்னொருத்தர் கொடி ஏத்தி, அதனால ஜெயிலுக்குப் போனார். அதப் பேசிட்டு இதப் பேசுவோம்’ என்றேன். தலையை ஆட்டினார்.

எருக்காட்ட்

எருக்காட்டூர் குப்புசாமி ஐயங்கார் பணக்காரர். மிராசு. இப்பேர்ப்பட்ட அப்பாவுக்கு பாஷ்யம்னு ஒரு பிள்ளை பிறந்தான். சிறு வயதில் ஜாலியன்வாலா பாக் படுகொலை பத்தின போராட்டத்தில் கலந்துகொண்ட பாஷ்யம் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினான். (பாஷ்யத்தின் உறவினர் கோபாலசாமி ஐயங்கார் மெட்ராஸ் சிவில் சர்வீஸ் ஆஃபீஸர். பின்னாளில் காஷ்மீரின் திவானாகவும், சுதந்திர பாரதத்தின் ரயில்வே மந்திரியாகவும் இருந்தார்.)

பிறகு சைமன் கமிஷன் வந்தது. அதை எதிர்த்துக் கல்லூரி மாணவர்களைத் தூண்டிப் போராட்டம் நடத்தினான் பாஷ்யம். திருச்சி கல்லூரி முதல்வர் பாஷ்யத்தைக் க்ல்லூரியில் இருந்து நீக்குவதாகப் பயமுறுத்தினார். படிப்பை உதறிவிட்டுத் தேச சேவையில் குதித்தான் பாஷ்யம்.

1932ல் வெலிங்டன் துரை செய்த கொடுமைகளை எதிர்த்து ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கொதித்துக்கொண்டிருந்த பாஷ்யம், தடாலடியாக ஓர் முடிவை எடுத்தான். அதை, சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனிடம் தெரிவித்தான். வெள்ளை அரசைத் தலை குனிய வைக்க ஒரே வழி இதுதான் என்று முடிவெடுத்தான் பாஷ்யம். இப்போது அவன், அவர் ஆகிறார்.

வேணுகோபாலன் அதிர்ச்சி அடைந்தாலும், மகிழ்ச்சியே அடைந்தார். ஆனாலும், அதில் இருந்த ஆபத்துகளையும் விளக்கினார். விபரம் வெளியானாலோ அல்லது நிகழ்வு நடந்ததற்குப் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டாலோ அதோகதிதான் என்பதை பாஷ்யமும் உணர்ந்தே இருந்தார்.

ஜனவரி 26, 1932 அன்று பூர்ண ஸ்வதந்திர நாள் என்று காங்கிரஸ் முடிவெடுத்திருந்தது. அந்த நாள் தான் பாஷ்யத்தின் பிறந்தநாளும் கூட.

ஜனவரி 25 இரவு 9:30 மணிக்கு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருகில் இருந்த எலிஃபின்ஸ்டன் தியேட்டரில் ஆங்கில ராணுவ வீரர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு வந்தனர். அவர்களைப் போலவே உடை அணிந்து, அவர்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்த்தார் பாஷ்யம்.

படம் முடிந்து வீரர்கள் கோட்டைக்குள் சென்றனர். அவர்களுடன் ஒருவராகப் பாஷ்யமும் உள்ளே சென்றார். 200 அடி உயரம் உள்ள வயர்லெஸ் கம்பத்தில் ஏறி, அதில் பறந்துகொண்டிருந்த ஆங்கிலக் கொடியை இறக்கி, சர்க்கா உள்ள மூவர்ணக் கொடியைப் பறக்க விடுவது என்று திட்டம். வேணுகோபாலன், கோட்டை ரயில் நிலையத்தில் நின்றபடி, யாரும் வருகிறார்களா என்று கண்காணிக்க வேண்டியது. யாராவது வந்தால், விசில் மூலம் தெரியப்படுத்துவது என்று ஏற்பாடு.

200 அடிக் கம்பத்திற்கு 148 அடி வரை படிகள் உண்டு. அருகில் இருந்த லைட் ஹவுஸ் ( கலங்கரை விளக்கம்) ஒளி தன் மீது படும் போதெல்லாம் குனிந்தும், மறைந்தும் நின்ற பாஷ்யம், ஒளி படாத போது படிகளில் ஏறினார். 150 அடிகளுக்குப் பிறகு வழுக்கு மரம் போல் இருந்தது. பனி பெய்து, எண்ணெய் தடவிய தேக்கு மரம் போல இருந்தது மரம். கழைக்கூத்தாடிகள் மட்டுமே ஏறக்கூடிய வகையில் இருந்த மரத்தில், அதில் பயிற்சி இல்லாத பாஷ்யம் துணிந்து ஏறினார்.

தன் இரு கால்களைப் பின்னிக் கொண்டும், இரு கைகளால் மரத்தைப் பற்றிக் கொண்டும் மேலேறிய பாஷ்யம், லைட் ஹவுஸ் வெளிச்சம் தன் மீது படாமல் பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. கீழே பாரா காவலர்கள் கண்ணில் பட்டால் ஒரு நொடியில் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக வேண்டியது தான்.

பல்லி போல் மேலேறிய பாஷ்யம், யூனியன் ஜாக் கொடியை அகற்றி, மூவர்ணக்கொடியைக் கட்டினார். மிகவும் கவனமாகக் கீழே இறங்கினார்.

மறு நாள் சென்னை திமிலோகப்பட்டது. ஆங்கில அரசு தலை கவிழ்ந்தது. கோட்டைக் காவல் ராணுவ அதிகாரிகளுக்கு அரசு கடுமையான உத்தரவுகளை வழங்கியது. பலருக்கும் தண்டனை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீஸார் கையில் சிக்கினார் பாஷ்யம். கடுங்காவல், துன்புறுத்தல் என்று தன் உடலில் பல விழுப்புண்களுக்கு இடம் கொடுத்தார்.

நேதாஜியின் தலையீட்டால் பாஷ்யத்திற்குத் தனிச் சிறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, விடுதலைப் போராளிகள் இருந்த சிறைப்பகுதிக்கு இட மாற்றம் கிடைத்தது.

Bashyam (a) Arya

முன்னர் பகத் சிங் வழக்கில் அவருக்குத் துணை போன போராளி ஒருவருக்கு 30 கசை அடி கொடுத்தான் ஓர் ஆங்கில அதிகாரி. சட்டை கிழிந்து, உடல் முழிவதும் புண்ணாகக் கிடந்த அந்த வீரனை எண்ணியபடியே இருந்த பாஷ்யம், அந்த ஆங்கில அதிகாரியைப் பழிவாங்க நினைத்தார். ஒரு நிகழ்வவில் கலந்துகொண்ட அந்த அதிகாரியைத் தன் காலணியால் மூன்று முறை அடித்து அவமானப்படுத்தினார் பாஷ்யம்.

பழைய போராளிக்குக் கிடைத்த அதே தண்டனை இப்போது பாஷ்யத்திற்குக் கிட்டியது. 30 கசையடிகள். சதைகள் பிய்ந்து, இரத்தம் சொட்ட, உடல் தளர்ந்து ஊர்ந்து வந்த பாஷ்யம், ஆங்கில அதிகாரிகளைப் பார்த்து பாரதியாரின் இந்தப் பாடலை உரக்கப் பாடினார் :

ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. 

பயனுண்டு பக்தியினாலே – நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. 

புயமுண்டு குன்றத்தைப் போலே – சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. 

ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. 

1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் துவங்கியது. பாஷ்யம் தனது பழைய வழிக்குத் திரும்பினார். சென்னையில் ரயில் நிலையத்தில் இருந்த போர் வீரர்களுக்கான தனி ரயில் பெட்டியில் தீ வைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படை, தீயை அணைத்தது.

அதன் பின்னர், பம்பாயில் இருந்து ராம்நாத் கோயங்கா மூலம் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் என்று வரவழைத்து, சிறிய ரயில் பாலங்களில் குண்டு வைக்கவும், சில வெள்ளை அதிகாரிகளைக் கொல்லவும் தலைப்பட்டார். அதற்காக, விடுதலைப் போராளிகளுக்குச் சென்னைக்கு அருகில் இருந்த காடுகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார் பாஷ்யம். சீர்காழி சதி வழக்குடன் தொடர்புடையது இது. அச்சமயத்தில் காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்பதால் இந்தத் தீவிரவாதச் செயல்களை முடித்துக்கொண்டார் பாஷ்யம்.

அதன் பின்னர், 1946ல் காந்தி ஹிந்தி பிரச்சார சபைக்கு வந்த போது, அவர் அருகில் அம்ர்ந்துகொண்டு அவர் உருவத்தை ஓவியமாக்கினார் பாஷ்யம். விடுதலைக்குப் பின்னர், காந்தியின் சிலைகள், ஓவியங்கள், பாரதியாரின் உருவ ஓவியங்கள் முதலியவற்றை உருவாக்கினார் பாஷ்யம்.

பாஷ்யம் உருவாக்கிய காந்தி சிலை தற்போது தக்கர் பாபா வித்யாலயாவில் உள்ளது. ரிப்பன் மாளிகையில் உள்ள சத்தியமூர்த்தியின் சிலையைச் செய்தவரும் பாஷ்யமே ஆவார். நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் முண்டசு கட்டிய பாரதியின் படத்தை வரைந்தவரும் அவரே.

விடுதலைப்போரில் ஈடுபட்ட தியாகிகளுக்கு அரசு பென்ஷன் தந்தது. பாஷ்யம் (எ) ஆர்யா அதனை மறுத்துவிட்டார்.

ஜாலியன்வாலாபாக் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தனது தியாக வாழ்க்கையைத் துவக்கிய பாஷ்யம், 1999ம் ஆண்டு மறைந்தார். அந்தப் படுகொலையை ஆதரித்த ஒரே அரசு அன்றைய சென்னை மாகாணத்தின் ஜஸ்டிஸ் கட்சி அரசு. இன்று ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக்கு நாம் சிலை வைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் வழித் தோன்றல் கட்சிகளின் கொடி ஊர் முழுக்க பறக்கிறது.

சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் ‘பாஷ்யம்’ என்கிற நிறுவனத்தின் பெயர் இருந்தது. ஜஸ்டிஸ் கட்சியின் வழித்தோன்றலான வை.கோபாலசாமி என்னும் அரசியல்வாதி, ‘யார் அந்த பாஷ்யம்? அவர் தமிழ் நாட்டிற்குச் செய்த தொண்டு யாது?’ என்று வீராவேசமாகப் பேசினார்.

அவருக்குத் தெரியாதது – ரயில் நிலையப் பெயர் ஒரு கம்பெனியுடையது என்று. அவருக்கும், அவரது சக-கட்சிக்காரர்களுக்கும் தெரிந்தது – ஜாதித்துவேஷம் மட்டுமே.

‘சார், அந்த பாஷ்யம் பத்தி நம்ம புஸ்தகங்கள்ல இல்லியே’ என்றார் நண்பர்.

‘அதுதான் மதச்சார்பின்மை, செக்யூலரிஸம், தமிழ்நாடு.’

‘சரி. பாஷ்யத்துக்குக் கொடி எங்கே கிடைத்தது?’ என்றார் நண்பர்.

‘கொடி வேண்டி, திருவல்லிக்கேணி காதி பண்டார் போனார் பாஷ்யம். அவர் கேட்ட அளவில் கொடி இல்லை. ஆகவே, தன் கதர் வேஷ்டியில் மூவர்ணச் சாயம் செய்து, ‘இன்றிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது’ என்று எழுதி அதையே கொடியாக ஏற்றினார் பாஷ்யம். சரி, இப்ப அந்த மற்றொரு கொடிக்கம்பம் பத்திப் பேசலாம்’ என்றேன்.

‘அவசியமா பேசணுமா?’ என்பது போல் பார்த்த நண்பரின் கண்கள் பனித்திருந்தன.

#Azadikaamritmahotsav

பத்மாசனி அம்மாள் கதை

‘இந்தக் கதை எல்லாம் தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம் ?’ என்று நினைப்பவர்கள் மேலே வாசிக்க வேண்டாம். ஐ.பி.எல். மேட்ச் பார்க்கச் செல்லலாம்.

என்ன ? வாசித்தே ஆவேன் என்று வருகிறீர்களா ? சரி. அப்புறம் உங்கள் இஷ்டம்.

ஶ்ரீவில்லிபுத்தூர் சுந்தராஜ ஐயங்கார், தன் மகள் பத்மாசனியை 1900களிலேயே பள்ளிக்கு அனுப்பினார். அந்தப் பெண் எழுத்தறிவு பெற்றாள். மதுரை தமிழ்ப் பண்டிட் ஶ்ரீனிவாசவரதனை மணந்தாள்.

கல்வியறிவு இருந்ததால் பாரதியின் பாடல்களைப் பாடத்துவங்கினாள் பத்மாசனி. கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து பாரதியின் பாடல்களைத் தெருவெல்லாம் பாடினர். கணவன் கள்ளுக்கடை மறியல், தேசபக்தன் இதழில் எழுத்தர் என்று தேச சேவை செய்ய, பிரிட்டிஷ் அரசு அவரைக்கைது செய்கிறது. பத்மாசனி அம்மாள் தன் கணவருக்கு நெற்றித் திலகம் இட்டு சிறை செல்ல வழியனுப்புகிறார்.

கணவன் சிறைக்குச் சென்றால் என்ன என்று தானே களத்தில் இறங்குகிறார் பத்மாசனி. காந்தியடிகளின் ஆணைப்படி அன்னிய நாட்டுத் துணிகள் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகிறார் பத்மாசனி. அனேகமாக விடுதலைப் போருக்காகச் சிறை சென்ற முதல் தமிழ்ப் பெண்ணாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஊர்ஜிதம் இல்லை.

கணவனும் மனைவியுமாக தேச சேவை செய்த பத்மாசனிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து ஓராண்டுக்குள் மரிக்கின்றன. தேசம் தேசம் என்று ஓடினால், குழந்தைகளை யார் பர்த்துக்கொள்வது ?

மூன்றாவதாகக் கருவுரும் பத்மாசனி, கதர் போராட்டத்தில் கைதாகிச் சிறை செல்கிறார். கரு கலைகிறது. நான்காம் முறை கர்ப்பம் தரிக்கும் பத்மாசனி, சுப்பிரமணிய சிவாவின் காவிரி நடைப் பயணப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். சிவாவின் பாப்பாரப்பட்டியில் குழந்தை பிறந்து இறக்கிறது.

எப்போதுமே தேச சேவை என்கிற எண்ணத்திலேயே இருக்கும் பத்மாசனி அம்மாள், உப்பு சத்தியாக்கிரஹம், கதர் பிரச்சாரம் என்று பலதிற்காகவும் சிறையில் இருக்கிறார்.

வசதியானவரான பத்மாசனி அம்மாள், மூணாம்பட்டி என்னும் இடத்தில் ‘பாரதி ஆசிரமம்’ அமைக்க 10 ஏக்கர் நிலம் தானம் கொடுகிறார். கணவர் ஶ்ரீனிவாச வரதன், பாரதியார் பத்திரிக்கை நடத்தத் தேவையான போதெல்லாம் பண உதவி செய்துவந்தார் என்பது உபரித் தகவல்.

பத்மாசனி அம்மாள் ‘சகோதரிகள் சங்கம்’ என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இன்னும் சில பெண்களுடன் சேர்ந்து, கதர் பிரச்சாரம், அன்னிய துணி பகிஷ்கரிப்பு, பாரதியின் பாடல்களைப் பிரபலப்படுத்துவது என்று மதுரையைக் கலக்கியுள்ளார்.

பெல்காம் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தமிழகத்தின் சார்பாகச் சென்று வீர உரை ஆற்றியுள்ள பத்மாசனி அம்மாள், மானாமதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பள்ளி நிறுவியுள்ளார்.

சென்னையில் கொடுங்கோலன் நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு நிதி வேண்டும் என்கிற நிலை வந்த போது, தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்த பத்மாசனி அம்மாள், 1936ல் ஆஸ்துமா நோயால் காலமானார். நீல் சிலை நீக்கம், பார்ப்பன சதி என்று அன்றைய ஜஸ்டிஸ் கட்சி அரசு அறிக்கை விட்டு, தனது ஆங்கிலேய விஸ்வாஸத்தைக் காட்டிக்கொண்டது.

மதுரை ஹேப்ரங்கால் பள்ளிக்கு அருகில் ‘பத்மாசனி பார்க்’ என்று ஒன்று 70களில் இருந்தது. இன்று பழைய மர, இரும்புச் சாமான்கள் போட்டுவைத்துள்ளார்கள் என்று இணையத்தில் தெரிகிறது.

#azadikaamritmahotsav

லட்சுமண ஐயர் தெரியுமா சார் ?

லட்சுமண ஐயரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் 2011ல் மறைந்தார். அவர் மறைவுக்கு 20 பேர் வந்திருந்தனர்.

380 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அனாதை போல் இறந்தது அதிர்ச்சி அளிக்கலாம். கொஞ்சம் அதிர்ச்சியைப் பாக்கி வையுங்கள்.

அப்பா ஶ்ரீனிவாச ஐயர் கொபிச்செட்டிப் பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினர். மகனும் கோபிச் செட்டிப் பாளைய மன்றத் தலைவராகப் பணியாற்றியவர் தான். இருந்தாலும் வெறும் 20 பேர் தான் அவர் மரணத்துக்கு வந்தார்கள் என்றால் அது தான் தமிழ் நாடு. #திராவிடமாடல் என்பது அதுதான்.

லட்சுமண ஐயர், அவர்தம் மனைவி என்று குடும்பமாக சிறையில் இருந்த நேரம் உண்டு. இப்போது போல் ஊழல் வழக்கெல்லாம் இல்லை. விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை சென்றார். மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம். கோவை, பவானி, அலிப்பூர், பெல்லாரி என்று சிறை.

1931ல் காந்தியடிகள் சொன்னபடி,தன் வீட்டில் ஹரிஜனங்களைச் சேர்ந்த்தார் லட்சுமண ஐயர். ஜாதிப் பிரஷ்டம் செய்தார்கள்.

ராஜாஜி சொன்னதற்காக நரிக்குரவர் இனச் சிறுவன் ஒருவனைச் சேர்த்துக்கொண்டு ஒரு மாணவர் விடுதி துவங்கினார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி அது.

1944ல் வார்தா செல்கிறார் லட்சுமண ஐயர். ‘நீ பிராமணனா?’ என்று கேட்கிறார் காந்தி. ‘விடுதலைப் போருக்குப் பலர் இருக்கிறார்கள். நீ உன் ஊருக்குப் போய் ஹரிஜன சேவை செய்’ என்று ஆணை இடுகிறார். காந்தியடிகள் சொல்படி லட்சுமண ஐயர் கோபியில் ஹரிஜனங்களுக்கான குடியிருப்புகள் கட்டுகிறார்.

1952, 56 ஆண்டுகளில் கோபி குடிநீர் திட்டம் கொண்டுவருகிறார்.

1986ல் கோபி நகரமன்றத் தலைவராகிறார் ஐயர். மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றுவதைத் தடை செய்ய வழிவகுக்கிறார். உலர் கழிவறைகள் இல்லாமல், நீர் உள்ள கழிவறைளைக் கட்ட உதவுகிறார்.

கோபியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஐயர் தானகாமக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்டவை.

2011ல் ஐயர் மறைந்தார். அவர் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்படவில்லை.

ஐயர் மறைந்த அன்று ஒரு தலித் பெண் மட்டும் பெரும் குரலுடன் ஒப்பாரி வைக்கிறாள். ஐயர் உதவியில் பட்டதாரியான பெண் அவள் என்று கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தன் நூலில் எழுதுகிறார்.

ஐயர் மறைந்த அன்று மாவட்ட கலெக்டர் அந்த ஊர் வழியாகச் செல்கிறார். ஆனால் அஞ்சலி செலுத்த நேரமில்லை. தேசத்திற்காக உழைக்க வேண்டாமா சார் ?

ஒரு மந்திரி வரவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வரவில்லை. ஒரு கவுன்சிலர் வரவில்லை.

ஆங்.. மறந்துவிட்டேனே. கோட்டாட்சியர் வந்தார். அஞ்சலி செலுத்த அல்ல. தியாகி மறைவு என்றால் ரூ 2000 கொடுக்குமாம் அரசு. அதைக் கொடுக்க வந்தார். அவரது குடும்பத்தினர் அதையும் ஹரிஜன சேவைக்கு வழங்கிவிட்டனர்.

380 ஏக்கருக்குச் சொந்தக்காரரான ஐயரின் மகன்களுக்கு என்று விட்டுச்சென்றது அவர் வாழ்ந்த அவரது வீடு மட்டுமே.

அடடா மறந்துவிட்டேனே. ஐயர் இறந்த போதுதான் யாரும் வரவில்லை. ஆனால் அவர் இருந்த போது, ராஜாஜி, ராமசாமி நாயக்கர், காமராஜர் போன்றவர்கள் அவர் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். நண்பரின் வீட்டிற்கு வராமல் இருப்பார்களா என்ன ?

சரிதான் போங்கள். இதையும் மறந்துவிட்டேன். ஐயரின் கண்களையும் தானமாகக் கொடுத்துவிட்டாராம், ஊரையே தானமாகக் கொடுத்த வள்ளல் லட்சுமண ஐயர்.

இவரைப் பற்றி எந்த வரலாற்று நூலிலும் தேட வேண்டாம். இருக்காது. அதுதான் #திராவிடமாடல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சுபம்.

ஆமருவி

தீபாவளிக்கு வாழ்த்து சொல்வது எப்படி ?

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லுவதைப் போல கஷ்டமான செயல் இன்னொன்று இருக்க முடியாது போல.

உதாரணம் : “ஶ்ரீராமஜயம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் ‘ என்று எழுதினால், ராமரைக் கண்ட குரங்குக் கூட்டம் போல ‘தீபாவளிக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம், சங்கி, மங்கி’ என்று ஒரு குரங்குக் கூட்டம் எழுந்து குதிக்கிறது. ‘என்ன எழுதினாலும் ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று சொல்லும் சங்கிக் கூட்டத்தை வேரறுப்போம் என்று மூளையில்லாதோர் முன்னேற்றக் கழகம் அறிக்கை விடுகிறது.

‘அதில்லை ஸ்வாமி, தீபாவளி அன்றே ஶ்ரீராமர் ஜயம் அடைந்தார் என்கிற பக்தி சார்ந்த நம்பிக்கை உள்ளதே’ என்று பேசிப்பார்த்தால், ‘அதாவதுங்காணும். ஶ்ரீராமர் என்று ஒருவர் கற்பனைப் பாத்திரம் என்று எமது சர்க்காரைச் சார்ந்த அம்பிகா சோனி சொல்லியுள்ளார். அதிலும், தீபாவளியில் தீபாவிற்கும் பண்டிகைக்கும் சம்பந்தம் இருக்கலாமே தவிர, ஶ்ரீராமருக்கும் பண்டிகைக்கும் என்ன சம்பந்தம்’ என்கிறார் அந்தக் காங்கீரஸ ஸ்வாமி.

அந்த நேரத்தில் பத்திரிக்கைகளில் நமது அக்ராசனர்களின் செய்திகளையும் வாழ்த்துகளையும் தேடிப்பார்த்தேன். அவர்களுக்கு எழுத நேரம் இருக்கது என்பதால், அவர்கள் சார்பாக நானே எழுதிவிடுகிறேன்.

கமலஹாஸ உவாச:

நாங்கள் ராமர் இருப்பதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், ராமர் என்றொருவர் இருந்தார் என்பதை நம்ப வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளித்தது யார் என்கிற கேள்வியை என்று ஒருவன் கேட்டானோ அன்றே, இந்தியாவின் முதல் தீவிரவாதி கொண்டாடியது தான் தீபாவளி என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நான் தெரிந்துகொண்டேன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை நம் தோழர்கள் கண்டுகொள்ளும் நேரம் தான் உண்மையான தீபாவளியாக இருக்கும் என்று இந்தியாவின் முதல் காந்தி சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.

சப்பர் ஸ்டார் கஜினி நாத் :

ஹ ஹா.. எல்லாருகும் வணக்கம். ஹ ஹா. எப்ப வேணா வருவேன்னு சொல்லாம, ரெகுலரா வருது பாருங்க, அதுதான் தீபாவளி.. ஹ ஹா. அடுத்த படம் வர வரைக்கும் ஜெய்லரப் பார்த்து பாக்கெட்ட காலி பண்ணுங்க. ஹ ஹா. வர்ட்டா ?

ஸைடலின் உவாச :

ஒன்றே தீபாவும் ஒருவனே அவள் கணவனும் என்னும் பெயர்-அறிஞர் சொல்லிற்கு இணங்க, ‘தீபா’ என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்று அன்றே சொன்ன எங்கள் தலைஞர் வழியில், ‘தீபாவை நம்புபவன் பேக்கு; தீபாவிடம் பேசுபவன் அசடு; தீபாவைக் பார்ப்பவன் பார்ப்பான்’ என்று முழங்கிட்ட எங்கள் தன்மான டுபுக்கறிவுத் தந்தையின் வழியில், மத்திய ஆளும் ஃபாசிஸ ஃபைனான்ஸியர்களிடம் இருந்து இந்த ஒன்றியத்தைக் காக்கிறார்களோ இல்லையயோ, புழலில் தனிமையில் உள்ள அணில் பிழைத்திட, தன்முடி தன் முடியைக் காத்திட, இதுவரை ஒன்றும் நேராத நேரு பிழைத்திட, கட்டுக்கட்டாக மாட்டியுள்ள பகத்ராக்‌ஷன் வெளிவந்திட, ஏவி வேலை வாங்கியவர் முழி பிதுங்கி, ஏவா வேலையாகியும் தொடர்ந்து அழாமல் பேசிட இந்த நன்னாளில், விடுமுறைத் திருநாளில், உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக வாழ்த்துகிறேன்.

மோனியா சாந்தி உவாச :

வெங்காய பச்சடி செய்வதில் இருந்து, லாரியில் கிளீனர் வேலை வரை செய்தும் சரியான வேலை கிடைக்காத மகன்களுக்கு வேலை கிடைக்கட்டும். கல்யாணம் ஆகாத பிள்ளைகளுக்கு இந்த தீபாவளிக்குப் பின் நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கட்டும். கால் கட்டு போட்டாலாவது பிள்ளைக்கு புத்தி வருமா என்று ஏங்கும் தாய்மார்களின் துயரைத் துடைக்க இந்த நாள் உதவட்டும்.

காஜுல் சாந்தி உவாச :

பாலஸ்தீனில் துயரப்படும் மக்களுக்குக் கூட இந்த ஆட்சியால் பயன் இல்லை. ஆகவே உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அதானி உட்பட.

தனிமொழி உவாச :

வேங்கைவயல், நாங்குனேரி, கள்ளச்சாராய மரணங்கள் தவிர அனைத்து நிகழ்வுகளையும் எதிர்த்துப் போராட இந்த விடுமுறை நாளில் உறுதி ஏற்போம்.

அதயகதி ஸைடலின் உவாச :

தண்ணாமலை எல்லாம் இதைப் பற்றிப் பேசத் தகுதி இல்லை. அவரெல்லாம் யாருன்னே தெரியாது. எதாவது எக்ஸாம் எழுதிட்டு பாஸ் பண்ணினவரா இருப்பாரு. நாங்கள்ளாம் எப்பவுமே எங்கயுமே எக்ஸாம் எழுதினதே இல்லை. இப்ப அதாலதான் நீட்விலக்கு வேணும். சந்தானம் நல்ல நடிகர். நான் சந்தானத்தைப் பத்தி பேசினது பேசினது தான். சந்தானத்த ஒழிக்கணும். இந்த லீவு நாள்ல அதுக்கான உறுதி மொழி எடுக்கவே இங்கே கூடியிருக்கோம். சந்தானம் ஒழிக. சந்தான நீட் நாள் வாழ்த்துகள்.

திறமர் கோதி உவாச :

காங்கிரஸை இந்தியாவில் இருந்து ஒழிப்போம் என்று கூறினேன். 100% முடியாமல் ஆனது. ஓரிரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளார்கள். அதாவது, விட்டுவைத்துள்ளோம். போனால் போகட்டும் என்று. பரிவார் வாத் என்னும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும். ஆகையால் கர்நாடகத்தில் எட்டியூரப்பாவின் மகனைக் கட்சியின் தலைவர் ஆக்கியுள்ளோம். சப் கா ஸாத் சப் கா விகாஸ் என்னும் பரந்த நோக்கின்படி, இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

சமித் ஷா உவாச :

நாட்டில் இன்னும் ஓரிரு மாநிலங்களில் காங்கிரஸ் என்னும் வைரஸின் ஆதிக்கம் உள்ளதைக் கண்டு திடுக்கிடுகிறேன். அந்த வைரஸைப் பூரணமாக நீக்குவோம் என்று திறமர் கோதியின் அறிவுரைப்படி தீபாவளி வாழ்த்துகள் சொல்கிறேன்.

தண்ணாமலை உவாச :

முமுக ஃபைல்ஸ் 3 வெளியீடு விரைவில். அத்துடன் முமுகவின் முடிவும் ஆரம்பம் ஆகும். தரியார் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது. ஆனால், பொதுப்படையாக மரியாதை இல்லை என்று சொல்லவில்லை. ஆகையால், அவரது சிலைகளை அவரவர் வீடுகளுக்கு முன்னால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், தரியார் சிலைகளை எதிர்த்தவர். ஆகையால் அவருக்குச் சிலை வைப்பதே சரியாகும். ஈபிஎஸ் பற்றி ஓபிஏஸ் சொல்வார். எனக்கு பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது. அடுத்த நடைப்பயணம் போக வேண்டும்.

நைகோ உவாச :

என்னதான் ஈழத்தில் கொடுங்கொலை நடந்து அதனைத் தலைஞர் ஆதரித்திருந்தாலும், நான் ஈழ ஆதரவாளன் என்பதால் தலைஞர் மகனை ஆதரிக்கிறேன். முன்னர் பல முறை தலைஞர் மகன் லாயக்கற்றவன் என்கிற ரீதியில் மரியாதையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், தற்போது பேங்க பேலன்ஸ் கம்மியாக உள்ளது. புலிகளும் இல்லை. ஆகவே, தலைஞர் மகன் வாழ்க. ஒரு ரெண்டு சீட் பார்த்துப் போட்டுக் கொடுப்பார் என்று என் தமிழ் உள்ளுணர்வு சொல்கிறது என்பதால் திறமர் கோதியைக் கண்டித்து, இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன்.

தாம் நமிழர் டைமன் :

யாருக்கு தீபாவளி கொண்டாடறே ? ஹெ ஹெ.. வாய்ப்பே இல்ல ராசா.. ஹெ ஹெ. எங்கப்பா தேவரும், ஐசக் அசிமோவும் சொன்னது தான். தீபாவளி தீபாவுக்கு உண்டான வலி. நமக்கென்ன? என்ன நான் சொல்றது ? ஹெ ஹெ.. என் தம்பிகள் சும்மா இருக்காங்கன்னு நினைக்காதே. நான் தான் சும்மா இருக்கேன். என்ன புரியுதா ? ஹெ ஹெ. இதுக்கு மேல பேச வெக்கதே.. புரியுதா ? முடிச்சுக்கறேன். தாம் நமிழர். தாம் நமிழர்.

தங்கராஜ் பாண்டே :

எங்கம்மா ஆண்டாள் அருளால நாம நல்லா தீபாவளி கொண்டாடுவோம். ஆனா, அதுக்குன்னு கிறிஸ்துமஸ் கொண்டாடுவீங்களான்னு கேப்பீங்களா என்ன ? ஏன்? கொண்டாடினா என்னங்கறேன் ? அண்ணன் டைமன், அண்ணன் நைகோ எல்லார்கிட்டயும் நான் இதையே சொல்லியிருக்கேன். தீபாவளி வாழ்த்துகள்.

தில்லி ஜாரபோகாலன் :

இன்னிக்கி உங்க சேனல் நேயர்கள் கிட்ட சொல்லிக்கறதுக்கு பெருமைப் படறேன். நாளைக்கு தீபாவளின்னு எனக்கு கன்ஃபர்ம்டு நியூஸ் கிடைச்சிருக்கு. இதை தில்லியிலேர்ந்து உங்ககிட்ட சொல்றதுக்கு ரொம்ப பெருமைப் படறேன். அடுத்தது தரை மருகன் வீட்டுலதான் தீபாவளியாம். எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

சாரிமாஸ் யூடியூபர் :

‘நான் ஏன் தீபாவளி கொண்டாடுறேன்’ அப்புடீன்னு ஒரு புக் எழுதியிருக்கேன். நீங்க வாசிக்கலாம். தீபாவளி வாழ்த்துகள் சரியா 7:30 மணிக்கு வீடியோல சொல்றேன். புரியுதா ?

எழுத்தாளர் தயஜோகன் :

தீபாவளிங்காது பத்தி நான் 1980லயே என்னோட ‘பென்சில்’ நாவல்ல எழுதியிருக்கேன். எண்பதுகள்ள வந்த ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாட்டுலயே இதுக்கான குறியீடு எல்லாம் இருக்கு. தீபம் என்பது நம் அகவயமான எண்ணத்தின் புறவயமான வெளிப்பாடு. அதோட பேருருன்னு சொல்லலாம். எனக்கு தீபாவளி எல்லாம் கிடையாது. ஏன்னா இந்த ஒற்றை ஹிந்துத்துவ எதிர்ப்பு மன நிலைல இருக்கறதால நான் அப்பிடிக் கொண்டாடறதில்ல. ஆனா இதைப்பத்தி கமலஹாசன் கிட்ட பேசிக்கிட்டிருந்த போது அவர் சொன்னது இது : ‘தீபம் ஏற்றலாம். மெழுகுவத்தியும் ஏற்றலாம். ஏன், எலக்ட்ரிக் லைட் கூட போடலாம். ஆனா, இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்த மூணையும் செய்யாம துப்பாக்கிங்கற சுடர எடுத்தான். அது தான் ஒற்றைப்படை இந்துத்துவப் பார்வை’. இதெலேர்ந்து நாம நம்ம உள்ளுணர்வால புரிஞ்சுக்கக் கூடியது ஒண்ணு உண்டு. தீபம் என்பது சுடர் அல்ல. ஏன்னா, சுடர் என்று ஒன்று இல்லை. அங்க சுடர்தல் அப்படீங்கற நிகழ்வு மட்டுமே இருக்கு. இப்படியான ஞானத்த நாம அடையணும்னா தண்முரசு முதலான நாவல்கள மீண்டும் மீள் வாசிப்பு செய்யணும். அதையும் கூட்டா செய்யணும். அதுக்காக ஊட்டியில ஒரு முகாம் நடத்தலாம்னு இருக்கோம். புதிய வாசகர்கள் தீபாவளியப் பத்தி தெரிஞ்சுக்க இது பயன்படும்னு பலர் எழுதறாங்க. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

கவர்னர் பவி :

தீபாவளி என்பது வெள்ளைக்காரர்கள் நம்ம கிட்ட இருந்து எடுத்த ஒரு விஷயம். இதை இங்க இருக்கறவங்களே அவங்களுக்கு எடுத்துக் கொடுத்தாங்க. இதைத்தான் பால்டுவெல் வழி வந்தவர்கள் நம்மகிட்டேயிருந்து மறைக்கறாங்க. அதனால உங்கள் எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அடுத்த வருஷம் தமிழ்லயே வாழ்த்து சொல்றேன்.

கவர்னர் இசைத்தமிழ் :

தீபாவளி பத்தி சங்கத் தமிழ்ல இருக்கறதா தமிழ்ச் சங்கத்துல சொல்றாங்க. அதனால அது தமிழர் பண்டிகை தான். இதை நான் ஒரு வேற்று மாநில கவர்னரா சொல்லல. வேற்று மாநிலத்துக்கு கவர்னரா இருந்தாலும் தமிழ் நாட்டுலயே இருக்கறதால தமிழ் நாட்டுலேர்ந்தே சொல்றேன். வாழ்த்துகள்.

டபுக்கு பங்சர் :

இந்தவருஷம் தீபாவளி பட்டாசு வாங்கறதுல பல நூறு கோடி ஊழல் நடந்திருக்குன்னு எனக்கு கமிஷ்னர் ரகசியமாச் சொல்லியிருக்கார். இதுவும் முதலமைச்சருக்குத் தெரியாமயே நடந்திருக்குன்னு நான் ஆணித்தரமா சொல்றேன்.

தீபாவளி வாழ்த்து சதகம் சம்பூர்ணம்.

சிவன் சன்னிதி முன் நந்தியை நீக்கிவிடலாமா ?

ஶ்ரீரங்கம் ரங்கனாதர் கோவிலில் உள்ள ராமானுஜர் சன்னிதியின் முன் ஹரிப்ரியா என்கிற ஸ்தலத்தார் தாமரைக் கோலம் போட்டுள்ளார். இதனை இந்து அறம் நிலையாத் துறை அதிகார் அழித்துள்ளார். காரணம்: தாமரை பா.ஜ.க.வின் சின்னமாம். ஆதாரம்: 29-7-2023 தினமலர் நாளிதழ்.

சுய / சொந்த புத்தி இல்லாத தற்குறிகளை மட்டுமே வேலைக்கு வைப்பது அறம் நிலையாத் துறையின் கொள்கை என்றால் ஆஸ்திகர்களுக்கு ஆட்சேபனை இல்லை.

துறைக்குச் சில கேள்விகள் :

  1. தாயார் திருக்கையில் தாமரை மொட்டு உள்ளது. அதை என்ன செய்வது ?
  2. பெருமாள் அபயஹஸ்தம் ‘கை’ சின்னம் போல் உள்ளதே. ஆகவே அபயஹஸ்தத்தையும் மூடி விடுவீர்களா ?  
  3. தேரழுந்தூரில் உற்சவர் அருகில் மாடு, கன்று உள்ளது. பழைய காங்கிரஸ் சின்னம் என்று அதை நீக்கிவிடுவீர்களா ?
  4. ஶ்ரீரங்கத்தில் கோவிலில் யானை உள்ளது. பஹுஜன் சமா கட்சியின் சின்னம் என்று அதையும் காட்டில் விட்டு விடுவீர்களா ? பழனிவேல் ராஜன் மதுரை யானைக்கு நீச்சல் குளம் கட்டிக் கொடுத்துள்ளார். கோபித்துக்கொள்வார்.
  5. சிவன் கோவில்களில் பெருமான் முன்னர் நந்தி தேவர் ( காளை ) அமர்ந்துள்ளார். இரட்டைக் காளை என்பது பழைய காங்கிரஸ் சின்னம். நீக்கிவிடலாமா ? 
  6. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அருவாள் சுத்தியல். கருப்பு சாமியைத் தமிழர்கள் அருவாள் வடிவிலேயே வழிபடுகின்றனர். அதையும் தடை செய்து விடலாமா ?
  7. பெருமாள் கோவில்களில் துளசி தளம் பிரசாதமாகத் தருகிறார்கள். பல நேரங்களில் அது இரட்டை இலை போல் உள்ளது. தடை செய்துவிடலாமா ? 
  8. ஜன சங்கத்தின் சின்னம் தீப விளக்கு. ஆகவே, கோவில்களில் தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்லிவிடலாமா ? 
  9. லோக் தளம் கட்சியின் சின்னம் மூக்கண்ணாடி. ஆகவே, மூக்குக் கண்ணாடி அணிந்த யாரும் கோவிலுக்கு வரக்கூடாது என்று சட்டம் போடுவீர்களா?
  10. சமாஜ்வாதிக் கட்சியின் சின்னம் சைக்கிள். கோவில் வாசலில் யாரும் சைக்கிள் விடக்கூடாது என்றும் சொல்வீர்களோ ?
  11. ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம். ஆகவே, கோவிலுக்குள் துடைப்பம் கொண்டு பெருக்கக் கூடது என்றும் உத்தரவாகுமோ உங்கள் #திராவிடமாடல் ஆட்சியில் ?
  12. கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்’ என்பது திருப்பள்ளி எழுச்சிப் பாசுரம். சிகரம் அருகில் உள்ள சூரியன் பற்றி வருகிறது. ஆகவே, திமுக சின்னம் உதயசூரியன் போல் உள்ளதால், திருப்பள்ளி எழுச்சிப் பாசுரம் பாடத் தடை வருமோ ?
  13. கோவில்களில் பெருமாளுக்கு மாம்பழம் நைவேத்யம் செய்யலாமா ? பாமக சின்னம் அதுவல்லவா ?

அறம் நிலையாத் துறை மேற்சொன்ன கேள்விகளுக்கும் விடை அளித்தால் சௌகர்யமாக இருக்கும்.