தீபாவளிக்கு வாழ்த்து சொல்லுவதைப் போல கஷ்டமான செயல் இன்னொன்று இருக்க முடியாது போல.
உதாரணம் : “ஶ்ரீராமஜயம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் ‘ என்று எழுதினால், ராமரைக் கண்ட குரங்குக் கூட்டம் போல ‘தீபாவளிக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம், சங்கி, மங்கி’ என்று ஒரு குரங்குக் கூட்டம் எழுந்து குதிக்கிறது. ‘என்ன எழுதினாலும் ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று சொல்லும் சங்கிக் கூட்டத்தை வேரறுப்போம் என்று மூளையில்லாதோர் முன்னேற்றக் கழகம் அறிக்கை விடுகிறது.
‘அதில்லை ஸ்வாமி, தீபாவளி அன்றே ஶ்ரீராமர் ஜயம் அடைந்தார் என்கிற பக்தி சார்ந்த நம்பிக்கை உள்ளதே’ என்று பேசிப்பார்த்தால், ‘அதாவதுங்காணும். ஶ்ரீராமர் என்று ஒருவர் கற்பனைப் பாத்திரம் என்று எமது சர்க்காரைச் சார்ந்த அம்பிகா சோனி சொல்லியுள்ளார். அதிலும், தீபாவளியில் தீபாவிற்கும் பண்டிகைக்கும் சம்பந்தம் இருக்கலாமே தவிர, ஶ்ரீராமருக்கும் பண்டிகைக்கும் என்ன சம்பந்தம்’ என்கிறார் அந்தக் காங்கீரஸ ஸ்வாமி.
அந்த நேரத்தில் பத்திரிக்கைகளில் நமது அக்ராசனர்களின் செய்திகளையும் வாழ்த்துகளையும் தேடிப்பார்த்தேன். அவர்களுக்கு எழுத நேரம் இருக்கது என்பதால், அவர்கள் சார்பாக நானே எழுதிவிடுகிறேன்.
கமலஹாஸ உவாச:
நாங்கள் ராமர் இருப்பதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், ராமர் என்றொருவர் இருந்தார் என்பதை நம்ப வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளித்தது யார் என்கிற கேள்வியை என்று ஒருவன் கேட்டானோ அன்றே, இந்தியாவின் முதல் தீவிரவாதி கொண்டாடியது தான் தீபாவளி என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நான் தெரிந்துகொண்டேன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை நம் தோழர்கள் கண்டுகொள்ளும் நேரம் தான் உண்மையான தீபாவளியாக இருக்கும் என்று இந்தியாவின் முதல் காந்தி சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.
சப்பர் ஸ்டார் கஜினி நாத் :
ஹ ஹா.. எல்லாருகும் வணக்கம். ஹ ஹா. எப்ப வேணா வருவேன்னு சொல்லாம, ரெகுலரா வருது பாருங்க, அதுதான் தீபாவளி.. ஹ ஹா. அடுத்த படம் வர வரைக்கும் ஜெய்லரப் பார்த்து பாக்கெட்ட காலி பண்ணுங்க. ஹ ஹா. வர்ட்டா ?
ஸைடலின் உவாச :
ஒன்றே தீபாவும் ஒருவனே அவள் கணவனும் என்னும் பெயர்-அறிஞர் சொல்லிற்கு இணங்க, ‘தீபா’ என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்று அன்றே சொன்ன எங்கள் தலைஞர் வழியில், ‘தீபாவை நம்புபவன் பேக்கு; தீபாவிடம் பேசுபவன் அசடு; தீபாவைக் பார்ப்பவன் பார்ப்பான்’ என்று முழங்கிட்ட எங்கள் தன்மான டுபுக்கறிவுத் தந்தையின் வழியில், மத்திய ஆளும் ஃபாசிஸ ஃபைனான்ஸியர்களிடம் இருந்து இந்த ஒன்றியத்தைக் காக்கிறார்களோ இல்லையயோ, புழலில் தனிமையில் உள்ள அணில் பிழைத்திட, தன்முடி தன் முடியைக் காத்திட, இதுவரை ஒன்றும் நேராத நேரு பிழைத்திட, கட்டுக்கட்டாக மாட்டியுள்ள பகத்ராக்ஷன் வெளிவந்திட, ஏவி வேலை வாங்கியவர் முழி பிதுங்கி, ஏவா வேலையாகியும் தொடர்ந்து அழாமல் பேசிட இந்த நன்னாளில், விடுமுறைத் திருநாளில், உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக வாழ்த்துகிறேன்.
மோனியா சாந்தி உவாச :
வெங்காய பச்சடி செய்வதில் இருந்து, லாரியில் கிளீனர் வேலை வரை செய்தும் சரியான வேலை கிடைக்காத மகன்களுக்கு வேலை கிடைக்கட்டும். கல்யாணம் ஆகாத பிள்ளைகளுக்கு இந்த தீபாவளிக்குப் பின் நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கட்டும். கால் கட்டு போட்டாலாவது பிள்ளைக்கு புத்தி வருமா என்று ஏங்கும் தாய்மார்களின் துயரைத் துடைக்க இந்த நாள் உதவட்டும்.
காஜுல் சாந்தி உவாச :
பாலஸ்தீனில் துயரப்படும் மக்களுக்குக் கூட இந்த ஆட்சியால் பயன் இல்லை. ஆகவே உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அதானி உட்பட.
தனிமொழி உவாச :
வேங்கைவயல், நாங்குனேரி, கள்ளச்சாராய மரணங்கள் தவிர அனைத்து நிகழ்வுகளையும் எதிர்த்துப் போராட இந்த விடுமுறை நாளில் உறுதி ஏற்போம்.
அதயகதி ஸைடலின் உவாச :
தண்ணாமலை எல்லாம் இதைப் பற்றிப் பேசத் தகுதி இல்லை. அவரெல்லாம் யாருன்னே தெரியாது. எதாவது எக்ஸாம் எழுதிட்டு பாஸ் பண்ணினவரா இருப்பாரு. நாங்கள்ளாம் எப்பவுமே எங்கயுமே எக்ஸாம் எழுதினதே இல்லை. இப்ப அதாலதான் நீட்விலக்கு வேணும். சந்தானம் நல்ல நடிகர். நான் சந்தானத்தைப் பத்தி பேசினது பேசினது தான். சந்தானத்த ஒழிக்கணும். இந்த லீவு நாள்ல அதுக்கான உறுதி மொழி எடுக்கவே இங்கே கூடியிருக்கோம். சந்தானம் ஒழிக. சந்தான நீட் நாள் வாழ்த்துகள்.
திறமர் கோதி உவாச :
காங்கிரஸை இந்தியாவில் இருந்து ஒழிப்போம் என்று கூறினேன். 100% முடியாமல் ஆனது. ஓரிரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளார்கள். அதாவது, விட்டுவைத்துள்ளோம். போனால் போகட்டும் என்று. பரிவார் வாத் என்னும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும். ஆகையால் கர்நாடகத்தில் எட்டியூரப்பாவின் மகனைக் கட்சியின் தலைவர் ஆக்கியுள்ளோம். சப் கா ஸாத் சப் கா விகாஸ் என்னும் பரந்த நோக்கின்படி, இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
சமித் ஷா உவாச :
நாட்டில் இன்னும் ஓரிரு மாநிலங்களில் காங்கிரஸ் என்னும் வைரஸின் ஆதிக்கம் உள்ளதைக் கண்டு திடுக்கிடுகிறேன். அந்த வைரஸைப் பூரணமாக நீக்குவோம் என்று திறமர் கோதியின் அறிவுரைப்படி தீபாவளி வாழ்த்துகள் சொல்கிறேன்.
தண்ணாமலை உவாச :
முமுக ஃபைல்ஸ் 3 வெளியீடு விரைவில். அத்துடன் முமுகவின் முடிவும் ஆரம்பம் ஆகும். தரியார் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது. ஆனால், பொதுப்படையாக மரியாதை இல்லை என்று சொல்லவில்லை. ஆகையால், அவரது சிலைகளை அவரவர் வீடுகளுக்கு முன்னால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், தரியார் சிலைகளை எதிர்த்தவர். ஆகையால் அவருக்குச் சிலை வைப்பதே சரியாகும். ஈபிஎஸ் பற்றி ஓபிஏஸ் சொல்வார். எனக்கு பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது. அடுத்த நடைப்பயணம் போக வேண்டும்.
நைகோ உவாச :
என்னதான் ஈழத்தில் கொடுங்கொலை நடந்து அதனைத் தலைஞர் ஆதரித்திருந்தாலும், நான் ஈழ ஆதரவாளன் என்பதால் தலைஞர் மகனை ஆதரிக்கிறேன். முன்னர் பல முறை தலைஞர் மகன் லாயக்கற்றவன் என்கிற ரீதியில் மரியாதையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், தற்போது பேங்க பேலன்ஸ் கம்மியாக உள்ளது. புலிகளும் இல்லை. ஆகவே, தலைஞர் மகன் வாழ்க. ஒரு ரெண்டு சீட் பார்த்துப் போட்டுக் கொடுப்பார் என்று என் தமிழ் உள்ளுணர்வு சொல்கிறது என்பதால் திறமர் கோதியைக் கண்டித்து, இந்த நன்னாளில் வாழ்த்துகிறேன்.
தாம் நமிழர் டைமன் :
யாருக்கு தீபாவளி கொண்டாடறே ? ஹெ ஹெ.. வாய்ப்பே இல்ல ராசா.. ஹெ ஹெ. எங்கப்பா தேவரும், ஐசக் அசிமோவும் சொன்னது தான். தீபாவளி தீபாவுக்கு உண்டான வலி. நமக்கென்ன? என்ன நான் சொல்றது ? ஹெ ஹெ.. என் தம்பிகள் சும்மா இருக்காங்கன்னு நினைக்காதே. நான் தான் சும்மா இருக்கேன். என்ன புரியுதா ? ஹெ ஹெ. இதுக்கு மேல பேச வெக்கதே.. புரியுதா ? முடிச்சுக்கறேன். தாம் நமிழர். தாம் நமிழர்.
தங்கராஜ் பாண்டே :
எங்கம்மா ஆண்டாள் அருளால நாம நல்லா தீபாவளி கொண்டாடுவோம். ஆனா, அதுக்குன்னு கிறிஸ்துமஸ் கொண்டாடுவீங்களான்னு கேப்பீங்களா என்ன ? ஏன்? கொண்டாடினா என்னங்கறேன் ? அண்ணன் டைமன், அண்ணன் நைகோ எல்லார்கிட்டயும் நான் இதையே சொல்லியிருக்கேன். தீபாவளி வாழ்த்துகள்.
தில்லி ஜாரபோகாலன் :
இன்னிக்கி உங்க சேனல் நேயர்கள் கிட்ட சொல்லிக்கறதுக்கு பெருமைப் படறேன். நாளைக்கு தீபாவளின்னு எனக்கு கன்ஃபர்ம்டு நியூஸ் கிடைச்சிருக்கு. இதை தில்லியிலேர்ந்து உங்ககிட்ட சொல்றதுக்கு ரொம்ப பெருமைப் படறேன். அடுத்தது தரை மருகன் வீட்டுலதான் தீபாவளியாம். எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
சாரிமாஸ் யூடியூபர் :
‘நான் ஏன் தீபாவளி கொண்டாடுறேன்’ அப்புடீன்னு ஒரு புக் எழுதியிருக்கேன். நீங்க வாசிக்கலாம். தீபாவளி வாழ்த்துகள் சரியா 7:30 மணிக்கு வீடியோல சொல்றேன். புரியுதா ?
எழுத்தாளர் தயஜோகன் :
தீபாவளிங்காது பத்தி நான் 1980லயே என்னோட ‘பென்சில்’ நாவல்ல எழுதியிருக்கேன். எண்பதுகள்ள வந்த ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாட்டுலயே இதுக்கான குறியீடு எல்லாம் இருக்கு. தீபம் என்பது நம் அகவயமான எண்ணத்தின் புறவயமான வெளிப்பாடு. அதோட பேருருன்னு சொல்லலாம். எனக்கு தீபாவளி எல்லாம் கிடையாது. ஏன்னா இந்த ஒற்றை ஹிந்துத்துவ எதிர்ப்பு மன நிலைல இருக்கறதால நான் அப்பிடிக் கொண்டாடறதில்ல. ஆனா இதைப்பத்தி கமலஹாசன் கிட்ட பேசிக்கிட்டிருந்த போது அவர் சொன்னது இது : ‘தீபம் ஏற்றலாம். மெழுகுவத்தியும் ஏற்றலாம். ஏன், எலக்ட்ரிக் லைட் கூட போடலாம். ஆனா, இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்த மூணையும் செய்யாம துப்பாக்கிங்கற சுடர எடுத்தான். அது தான் ஒற்றைப்படை இந்துத்துவப் பார்வை’. இதெலேர்ந்து நாம நம்ம உள்ளுணர்வால புரிஞ்சுக்கக் கூடியது ஒண்ணு உண்டு. தீபம் என்பது சுடர் அல்ல. ஏன்னா, சுடர் என்று ஒன்று இல்லை. அங்க சுடர்தல் அப்படீங்கற நிகழ்வு மட்டுமே இருக்கு. இப்படியான ஞானத்த நாம அடையணும்னா தண்முரசு முதலான நாவல்கள மீண்டும் மீள் வாசிப்பு செய்யணும். அதையும் கூட்டா செய்யணும். அதுக்காக ஊட்டியில ஒரு முகாம் நடத்தலாம்னு இருக்கோம். புதிய வாசகர்கள் தீபாவளியப் பத்தி தெரிஞ்சுக்க இது பயன்படும்னு பலர் எழுதறாங்க. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
கவர்னர் பவி :
தீபாவளி என்பது வெள்ளைக்காரர்கள் நம்ம கிட்ட இருந்து எடுத்த ஒரு விஷயம். இதை இங்க இருக்கறவங்களே அவங்களுக்கு எடுத்துக் கொடுத்தாங்க. இதைத்தான் பால்டுவெல் வழி வந்தவர்கள் நம்மகிட்டேயிருந்து மறைக்கறாங்க. அதனால உங்கள் எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அடுத்த வருஷம் தமிழ்லயே வாழ்த்து சொல்றேன்.
கவர்னர் இசைத்தமிழ் :
தீபாவளி பத்தி சங்கத் தமிழ்ல இருக்கறதா தமிழ்ச் சங்கத்துல சொல்றாங்க. அதனால அது தமிழர் பண்டிகை தான். இதை நான் ஒரு வேற்று மாநில கவர்னரா சொல்லல. வேற்று மாநிலத்துக்கு கவர்னரா இருந்தாலும் தமிழ் நாட்டுலயே இருக்கறதால தமிழ் நாட்டுலேர்ந்தே சொல்றேன். வாழ்த்துகள்.
டபுக்கு பங்சர் :
இந்தவருஷம் தீபாவளி பட்டாசு வாங்கறதுல பல நூறு கோடி ஊழல் நடந்திருக்குன்னு எனக்கு கமிஷ்னர் ரகசியமாச் சொல்லியிருக்கார். இதுவும் முதலமைச்சருக்குத் தெரியாமயே நடந்திருக்குன்னு நான் ஆணித்தரமா சொல்றேன்.
தீபாவளி வாழ்த்து சதகம் சம்பூர்ணம்.

Leave a comment