2014ல் ‘நான் இராமானுசன்’ தொடர் எழுதிக்கொண்டிருந்தேன். நூலாக ஆக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அந்த அம்மையார் ஃபோன் பண்ணினார்.
‘சார், உங்க தொடர படிச்சுக்கிட்டு இருக்கேன். நல்ல ரீச் குடுக்க முடியும். ஒரு முறை சிங்கப்பூர் லிட்டரரி மீட்டிங்ல பேச வாய்ப்பு கொடுத்தீங்கன்னா, இங்க நல்ல ரீச் இருக்கற பப்ளிஷர்ஸ் கிட்ட கொண்டு சேர்க்க முடியும்’
‘…’
‘நீங்களும் தொடர் எழுதறதுக்கு வாய்ப்பு வாங்கித் தர முடியும். இப்ப இருக்கற இண்டாலரன்ஸ் சிச்சுவேஷன் பத்தி எழுதுங்க. இந்த நாலு பத்திரிக்கைலயும் எழுத வாய்ப்பு வாங்க முடியும்’ என்று அந்த நான்கு பத்திரிக்கைகளின் பெயர்களைச் சொன்னார் அந்தப் பெண்மணி.
‘…’
‘ஃபாஸிஸத்த எதிர்த்து, பூர்ஷ்வா எண்ணங்கள எதிர்த்து எழுதுங்க. நீங்க நிறைய படிக்கறீங்க. அதால சொல்றேன். நிறைய பிரிண்ட் வாய்ப்பு தரமுடியும். பிரைம் மினிஸ்டர் பத்தியோ, குஜராத் பத்தியோ ஒரு பத்தியாவது இருக்கணும். கல்ச்சுரல் எக்ஸ்க்ளூசிவிட்டி, இண்டாலரன்ஸ் அப்பப்ப. நல்ல ரீச் குடுக்கலாம்’
நான் ஒப்புக்கொண்டிருந்தால் ‘நான் இராமானுசன்’ இன்று என்.சி.பி.ஹெச்., பென்க்குவின் என்று வந்திருக்கும். லிட் ஃபெஸ்ட்களில் பேசிக்கொண்டிருந்திருப்பேன். அனேகமாக ரிடையர் ஆகும் அளவிற்குப் பணம் வந்திருக்கும், வந்துகொண்டும் இருக்கும்.
ஆனால், மனசாட்சியை அடமானம் வைத்தவனாக ஆகியிருப்பேன். ‘நமஸ்தே ஸதா வத்ஸலே’ சொன்ன நாக்கு பழுதாகியிருக்கும் என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை.
இருந்தாலும், புதிதக எழுத வருபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது :
யார் வாய்ப்பு கொடுத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சித்தாந்தச் சார்பு இல்லாமல் எழுதப் பழகுங்கள். நீங்கள் உண்மை என்று நம்புவதை எழுதுங்கள். யாருக்காகவும் எழுதாதீர்கள். உங்கள் மனதிற்காக எழுதுங்கள். ஒரு கட்டத்தில் சித்தாந்தச் சாய்வு வரும். அது இயல்பாக வருவது. உண்மையை அறிந்துகொள்ள முயலும் முயற்சியால் வருவது. அதனைத் தடுக்காதீர்கள். போலியாக எழுதாதீர்கள். உண்மையான எழுத்து உங்களை ஒரு இடத்தில் கொண்டு வைக்கும். அந்த இடம் பெரிய இடமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பொய்யான நடிப்பு எழுத்து உங்களுக்கு எந்த அடையாளத்தையும் அளிக்காது, நீங்கள் எழுதுவது உங்களுக்கு மன நிறைவைத் தராது.
ஆக, உங்களுக்கு மன நிறைவைத் தருவதை எழுதுங்கள். நீங்கள் உண்மையாக நம்புவதை எழுதுங்கள். அது நீங்கள் சார்ந்த சாதி, மத, இன, வர்க்க நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் நீங்களே அதனை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். ஆனால், அப்போது நீங்கள் எழுதுவது உண்மையாக, உங்கள் மனசாட்சியுடம் ஒத்திசைவாக இருக்க வேண்டும்.
இது என் பார்வை. நான் எழுதுவது இதைத்தான்.
பிடித்திருந்தால் பகிருங்கள். முடிந்தால் பின்பற்றுங்கள்.
நன்றி
ஆமருவி
01-01-2024
Leave a comment