‘அன்னபூரணி’ விமர்சனம் அல்ல

‘என்ன சாமி, இந்தியா போனப்பறம் மறந்துட்டீரே’ என்று சூடாக ஆரம்பித்தார் அண்ணாச்சி, ஃபோனில். அண்ணாச்சி பழைய நண்பர். சிங்கப்பூரர்.

‘சவுக்கியங்களா அண்ணாச்சி?’ என்றேன், ஆபீசில் கணினியைப் பார்த்தபடியே.

‘சித்த பேசலாம்னு அடிச்சேன்’ என்றார். சிங்கப்பூரர்கள் ஃபோனில் அழைப்பதை ‘அடிப்பது’ என்பர். ‘சொல்லுங்க அண்ணாச்சி’ என்று ஃபோன் பேசும் பிரத்யேகக் கூண்டிற்குள் நுழைந்தேன்.

‘என்னய்யா செய்யறீரு நீரு ? ஐயங்கார் பத்தி நாவல் எழுதினதா இங்க வாசகர் வட்டத்துல பேசிக்கறாங்க. ஆனா ஐயங்கார் பொண்ணு பத்தி படம் எடுத்திருக்கானுவோ, நீரு ஒண்ணுமே எளுதல்லியே?’ என்றார். கொஞ்சம் உஷ்ணம் தெரிந்தது.

‘புரியல அண்ணாச்சி’ என்றேன்.

‘யோவ் சவத்தெளவு. அன்னபூரணி பார்த்தீரா இல்லியா? அது என்னன்னாவது தெரியுமா?’ என்றார்.

‘சாளக்கிராமப் பொட்டில சின்ன விக்ரஹமாட்டு இருக்கும். அதானே?’ என்றேன், சற்று சிந்தனையுடன்.

‘போம்யா. நீரு புஸ்தகம் எளுதி பாளாப்போகும். தென்கலை ஐயங்கார் பொண்ணு, அதுவும் ஶ்ரீரங்கம் கோவில் மடப்பளி பரிஜாரகர் பொண்ணு, முஸ்லிம் முறைப்படி தொழுகை பண்ணிட்டு, அசைவ பிரியாணி பண்றாளாம். கேட்டா உணவுக்கு மதம் இல்லியாம். ஆனா தொழுகை பண்ணிட்டு பிரியாணி பண்ணினா, ஐயங்கார் பொண்ணு பண்ணினா, பிரியாணி நல்லா வருதாம். நீரு புஸ்தகம் எளுதுறீரு..’ என்றார்.

‘அண்ணாச்சி, நான் சினிமா பார்க்கறதில்ல. தெரியல. ஆனாலும், நீங்க சொல்ற கான்செப்ட் பிரமாதமா இருக்கு’ என்றேன்.

‘என்னைய்யா வளக்கம் போல கொளப்புதீரு?’ என்றார். கோபம் தெரிந்தது.

‘உணவுக்கு மதம் இல்லதானே ? யாரு சமைச்சாலும் சாப்பாடு ஒண்ணுதானே’ என்றேன்.

‘யோவ், நீரு என்ன ஹிந்து பேப்பர்ல வேல செய்யுதீரா ? கம்யூனிஸ்டு ஐயங்காரா மாறிட்டீரா என்ன?’ என்றார் அண்ணாச்சி.

‘ஹிந்துவுல என்னைய எடுக்க மாட்டாங்க. போகட்டும். நான் சொல்லுகதுல என்ன தப்பு ? ஐயங்கார் பிரியாணி பண்ணினா ஆவாதா ? அடுப்பு எரியாதா ? அதே போல முஸ்லிம் பொண்ணு அக்கார அடிசில் பண்ணட்டும். புளியோதரை பண்ணட்டும். கார்த்தால எழுந்து கோலம் போட்டு, தீர்த்தாமாடி, நெத்திக்கி இட்டுண்டு, பெருமாள சேவிச்சுட்டு புளியோரை பண்ணினா ஆகாதா என்ன ? செக்யூலரிஸம் அண்ணாச்சி’ என்றேன்.

‘சுத்தமா கொழம்பிட்டீரு நீரு. இதெல்லாம் சாத்தியமா? அப்பிடி படம் எடுத்துடுவாங்களா தமிளு நாட்டுல?’ என்றார்.

‘ஆங்.. இது கேள்வி. ஐயங்கார் பொண்ணு, கருப்பு டிரெஸ் போட்டு பிரியாணி சமைக்க உரிமை உண்டுங்கற மாதிரி, முஸ்லிம் பொண்ணு ஐயங்கார் முறைப்படி உடை, பாவனைகள் செஞ்சு புளியோதரை பண்ணற மாதிரி எடுக்க எங்க தமிழ் டைரக்டர்களுக்கு தில் இல்லேங்கறீங்களா ? நாங்கள்ளாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே..’

‘போதும்யா. உங்க டைரக்டர்கள் லட்சணம் தெரியாதா ? “இது நம்ம ஆளு” படம் எடுக்க முடியும், “விஸ்வரூபம்” படம் எடுத்து வெளியிட முஸ்லிம் அமைப்புகள் கிட்ட பர்மிஷன் வாங்கணும். “வேதம் புதிது” எடுக்க முடியும். ஆனா “ஒரே ஒரு கிராமத்திலே” படம் வெளியிட மெனக்கெடனும். இதானே உங்க தமிளு நாட்டு டைரக்டர் லட்சணம்?’ என்றார் எகத்தாளத்துடன்.

‘போங்க அண்ணாச்சி. எங்க செபாஸ்டியன் சைமன் இருக்காரு. கருத்துரிமைக் காவலர் பா.ரஞ்சித் இருக்காரு. மாரி செல்வராஜ் இருக்காரு. இவ்வளவு ஏன், பாரதிராஜாவே கூட இருக்காரு. இவங்கள்ளாம் சேர்ந்து, முஸ்லிம் பொண்ணு மடிசார் கட்டிண்டு, திலகம் இட்டுண்டு அக்கார அடிசில் சமைச்சு, திருப்பாவை சொல்லிண்டே நைவேத்யம் பண்ற மாதிரி அவசியம் படம் எடுப்பாங்க. அதுல சத்தியராஜ், கரு.பழனியப்பன், சித்தார்த், எல்லாரும் நடிப்பாங்க. அவங்கள்ளாம் அவ்வளவு தைரியமானவங்க மட்டுமில்ல, கருத்துச் சுதந்திரத்துக்காக உயிரையும் குடுப்பாங்க. சரி ஒரு வேளை அவங்களுக்கு தைரியம் இல்லேன்னா, எங்க உலக நாயகன் கமல் பத்து ரோல் பண்ணி எடுப்பாரு. ஏன்னா, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துன்னு கண்டுபிடிச்ச ஞானி அவரு. இல்லேங்கறீங்களா ? தோசைலயே ஜாதி கண்டுபிச்ச அறிவாளிகள் வாக்கிங் போயிட்டு இருக்காங்க இங்க மெரீன பீச்சுல. திருவள்ளுவரே கிறிஸ்தவர்னு கண்டுபிடிச்சு பி.எச்.டி. வாங்கினவங்க நாங்க.. போவீங்களா.. ‘ என்றேன்.

‘காவேரில தண்ணி வரும். தமிழ் நாட்டுல நவோதயா ஸ்கூல் வரும். நீட் பரீட்சை அவசியம் வேணும்னு சின்னவரு போராட்டம் நடத்துவாரு. இதெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு. ஆனா உங்க சினிமாக்காரங்களுக்கு முதுகெலும்புன்னு ஒண்ணு எப்பவுமே கிடையாது’ என்றார் தீர்க்கமாக.

ரஜினிக்கும் கமலுக்கும் முதுகெலும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது என் வேலை இல்லை என்பது எனக்குத் தெரியும் என்பதால் ஃபோனை வைத்தேன்.

#அன்னபூரணி #Annapoorani

எழுதுவது..

2014ல் ‘நான் இராமானுசன்’ தொடர் எழுதிக்கொண்டிருந்தேன். நூலாக ஆக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அந்த அம்மையார் ஃபோன் பண்ணினார்.

‘சார், உங்க தொடர படிச்சுக்கிட்டு இருக்கேன். நல்ல ரீச் குடுக்க முடியும். ஒரு முறை சிங்கப்பூர் லிட்டரரி மீட்டிங்ல பேச வாய்ப்பு கொடுத்தீங்கன்னா, இங்க நல்ல ரீச் இருக்கற பப்ளிஷர்ஸ் கிட்ட கொண்டு சேர்க்க முடியும்’

‘…’

‘நீங்களும் தொடர் எழுதறதுக்கு வாய்ப்பு வாங்கித் தர முடியும். இப்ப இருக்கற இண்டாலரன்ஸ் சிச்சுவேஷன் பத்தி எழுதுங்க. இந்த நாலு பத்திரிக்கைலயும் எழுத வாய்ப்பு வாங்க முடியும்’ என்று அந்த நான்கு பத்திரிக்கைகளின் பெயர்களைச் சொன்னார் அந்தப் பெண்மணி.

‘…’

‘ஃபாஸிஸத்த எதிர்த்து, பூர்ஷ்வா எண்ணங்கள எதிர்த்து எழுதுங்க. நீங்க நிறைய படிக்கறீங்க. அதால சொல்றேன். நிறைய பிரிண்ட் வாய்ப்பு தரமுடியும். பிரைம் மினிஸ்டர் பத்தியோ, குஜராத் பத்தியோ ஒரு பத்தியாவது இருக்கணும். கல்ச்சுரல் எக்ஸ்க்ளூசிவிட்டி, இண்டாலரன்ஸ் அப்பப்ப. நல்ல ரீச் குடுக்கலாம்’

நான் ஒப்புக்கொண்டிருந்தால் ‘நான் இராமானுசன்’ இன்று என்.சி.பி.ஹெச்., பென்க்குவின் என்று வந்திருக்கும். லிட் ஃபெஸ்ட்களில் பேசிக்கொண்டிருந்திருப்பேன். அனேகமாக ரிடையர் ஆகும் அளவிற்குப் பணம் வந்திருக்கும், வந்துகொண்டும் இருக்கும்.

ஆனால், மனசாட்சியை அடமானம் வைத்தவனாக ஆகியிருப்பேன். ‘நமஸ்தே ஸதா வத்ஸலே’ சொன்ன நாக்கு பழுதாகியிருக்கும் என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை.

இருந்தாலும், புதிதக எழுத வருபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது :

யார் வாய்ப்பு கொடுத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சித்தாந்தச் சார்பு இல்லாமல் எழுதப் பழகுங்கள். நீங்கள் உண்மை என்று நம்புவதை எழுதுங்கள். யாருக்காகவும் எழுதாதீர்கள். உங்கள் மனதிற்காக எழுதுங்கள். ஒரு கட்டத்தில் சித்தாந்தச் சாய்வு வரும். அது இயல்பாக வருவது. உண்மையை அறிந்துகொள்ள முயலும் முயற்சியால் வருவது. அதனைத் தடுக்காதீர்கள். போலியாக எழுதாதீர்கள். உண்மையான எழுத்து உங்களை ஒரு இடத்தில் கொண்டு வைக்கும். அந்த இடம் பெரிய இடமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பொய்யான நடிப்பு எழுத்து உங்களுக்கு எந்த அடையாளத்தையும் அளிக்காது, நீங்கள் எழுதுவது உங்களுக்கு மன நிறைவைத் தராது.

ஆக, உங்களுக்கு மன நிறைவைத் தருவதை எழுதுங்கள். நீங்கள் உண்மையாக நம்புவதை எழுதுங்கள். அது நீங்கள் சார்ந்த சாதி, மத, இன, வர்க்க நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் நீங்களே அதனை மாற்றிக் கொள்ளவும் செய்யலாம். ஆனால், அப்போது நீங்கள் எழுதுவது உண்மையாக, உங்கள் மனசாட்சியுடம் ஒத்திசைவாக இருக்க வேண்டும்.

இது என் பார்வை. நான் எழுதுவது இதைத்தான்.

பிடித்திருந்தால் பகிருங்கள். முடிந்தால் பின்பற்றுங்கள்.

நன்றி

ஆமருவி

01-01-2024

நெல்லை கண்ணன் – அஞ்சலி

காலஞ்சென்ற நெல்லை கண்ணன் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்.

சிங்கப்பூர் இலக்கிய நாட்களில் இருந்து பழக்கம். கம்ப ராமாயணம் குறித்து சில மின் அஞ்சல் தொடர்புகள் உண்டு. பல பாடல்களை மீண்டும் வேறு நடையில் எழுதி அனுப்பி, பொருள் சரியாக வருகிறதா என்று அவர் கேட்டிருந்த காலங்கள் உண்டு.

அவருடனான முதல் தொடர்பு அவரை ஒர் இலக்கிய விழாவிற்காக வரவேற்று நான் எழுதியிருந்த சில குறள் வெண்பாக்கள் வழியாக. ஒரு வெண்பா ‘ நீவா சனி’ என்ற முடிந்ததாக நினைவு. இதை எழுதியது யார் என்று கேட்டு, கூப்பிட்டுப் பாராட்டினார். கிரேஸி மோகன் வடமொழிச் சொற்கள் கொண்டு வெண்பா இயற்றுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

நெல்லை கண்ணன்

‘ஆமருவி’ என்பதை ஏதோ புனைபெயர் என்று நினைத்து ‘பெற்றோர் இட்ட பெயர் என்ன?’ என்றார். இயற்பெயரே அதுதான் என்றதும், சொந்த ஊர் தேரழுந்தூர் என்றதும் முக மலர்ச்சியுடன் பேசத் துவங்கினார் கண்ணன். ‘ திருமங்கையாழ்வார் பாசுரம் ஒண்ணு சொல்லுங்க’ என்றவர் நான் காலணியைக் கழற்றிவிட்டு சொல்லத் துவங்கிய போது தானும் எழுந்து நின்று கேட்டார். கையைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் துளிர்க்க ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி. வைணவர்கள் எங்கே போனாலும் பிரபந்தம்னா இளகிடுவாங்க’ என்று மனம் உருகிப் பேசிக்கொண்டிருந்தார்.

மதுரை ஆதீனம் வழக்கில் களப்பணி ஆற்றிய பெருமை உடையவர்.

பின்னாளில் கடுமையான சாதீயப் பார்வை கொண்டவராகவும், பெரும் மோதி எதிர்ப்பாளராகவும் தன்னைக் குறைத்துக் கொண்டார் என்பது பெரும் வருத்தமே.

அரசியலில் பல அணிகளில் பல நேரங்களில் இருந்தவரான நெல்லை கண்ணன், சமயத்துக்குத் தகுந்த அரசியல் நிலை எடுப்பது என்பதால் தனது மாண்பைக் குறைத்துக் கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இருக்கவில்லை. அவரது அரசியல் நிலைகளும், பேச்சில் நிதானம் இன்மையும் காரணங்கள்.

தொடர்ந்து நல்லாசிரியராக இருந்து இளைய தலைமுறையினர் பலருக்கும் வழி காட்டியாக இருந்திருக்க வேண்டியவர் தன் நிலையில் இருந்து தாழ்ந்து, பலரது மதிப்பில் இறங்கி, மறைந்தார்.

பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலி.

Writer A.P.Raman

It is with great sadness that I came to know today about the passing away of Shri.A.P.Raman of Singapore in Feb 2022.

The octogenarian writer, journalist, dramatist and businessman, despite his rather advanced age, used to participate in almost all weekly Tamil events in Singapore, encouraging youngsters to excel in their forte.

He was a father figure to writers and speakers in Singapore. No literary event would be complete without him.

Having been associated with Shri.Raman from 2009 till 2019, I was indeed blessed to have been guided on many occasions on my different articles on Singapore. As recently as 2020, even after I had moved out of Singapore, Shri.Raman called to congratulate me on a detailed analytical essay that I had written for a magazine, on water management in Singapore.

I can’t forget the number of review comments that he would have posted in this site on my different articles. He was the first reader and reviewer of my first book ‘Pazhaiya Kanakku’. He had gotten a copy from the publisher directly and had called me to pass on his review comments.

I last met Shri.Raman a day before I left Singapore in the Sri Srinivasa Perumal Temple in Little India where I had gone to attend a discourse. He blessed me for a last time.

Inspite of his advanced age, Shri.Raman was a quick learner and easily adapted to the new age tech and wrote prolifically in Facebook.

Not many know that Shri.A.P.Raman had hosted M.G.Ramachandran in Singapore before the latter launched his political party, the AIADMK. A close friend of the late Chief Minister, Shri.Raman was on speaking terms with the former President of Singapore Shri.Nathan. Despite all these connections, Shri.Raman presented a low profile demeanour and moved with ease with all and sundry.

Singapore Literary scene has indeed lost a great supporter and connoisseur of arts.

சிங்கப்பூர் பிரதமரின் கருத்து சரியானதா?

‘50% இந்திய எம்.பி.க்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்’ என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளது தவறானது. ராஜ்ய சபாவை விட்டுவிட்டுப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நக்கல் அடித்துவிட்டுச் செல்வது எளிதான செயல். ஆனால், நாம் அப்படிச் செய்யப்போவதில்லை.

அவர் மற்றொன்றும் சொல்லியிருக்கலாம். சிங்கப்பூரில் பிரதமர், அமைச்சர்கள் முதலியோரின் கல்வித் தகுதி, அவர்களது தொழில், நிர்வாக அனுபவங்கள், சம்பளம் முதலியனவற்றையும் சொல்லியிருக்கலாம். அமெரிக்க அதிபரின் சம்பளத்தை விட தனது சம்பளம் அதிகம் என்பதையும் சொல்லி, நாட்டின் அளவிற்கு ஏற்ற சம்பளம் தானா என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள ஊடகங்கள் எத்தனை, மற்ற ஜனநாயகங்களில் எத்தனை என்பதையும் பேசியிருக்கலாம்.

சிங்கப்பூரில் பிரதமரையோ, மந்திரிகளையோ, அரசின் கொள்கைகளையோ எதிர்த்து ஃபேஸ்புக் பதிவிட்டவர்கள் மன நல மருத்துவமனைக்குச் செல்வது ஏன் என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம். அவர் குறிப்பிட்டுள்ள ஜனநாயகங்களில் அப்படி நடைபெறுகிறதா என்பதையும் சொல்லியிருந்திருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசத் தந்தை அமரர் லீ குவான் யூ அவர்கள் ஜவகர்லால் நேருவைப் பற்றிச் சொன்னதையும் சொல்லியிருந்திருக்கலாம்.

நேருவின் சோஷலிசக் கொள்கைகள் பற்றிச் சொல்லும் போது “It was my good fortune that I had several of these failed economies to warn me of this danger before I was in a position to do any harm in government,’ என்கிறார் லீ குவான் யூ. நேருவின் இந்தியாவை இன்றும் கொண்டிருந்தால் கியூபாவிடம் பிச்சை எடுக்க வேண்டியது தான்.

நேருவின் சோஷலிசம் பற்றி மேலும் சொல்லும் போது, “Like Nehru, I had been influenced by the ideas of the British Fabian society. But I soon realized that before distributing the pie I had first to bake it. So I departed from welfarism because it sapped a people’s self-reliance and their desire to excel and succeed. I also abandoned the model of industrialization through import substitution. When most of the Third World was deeply suspicious of exploitation by western MNCs (multinational corporations), Singapore invited them in. They helped us grow, brought in technology and know-how, and raised productivity levels faster than any alternative strategy could,” என்கிறார் லீ.

தேசம் சோஷலிசத்தில் தூங்காமல் இருந்திருந்தால், இன்று முழுமையான வல்லரசாகியிருக்கலாம். சோஷலிசத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டதால் சிங்கப்பூர் இன்று ஒளிர்கிறது. இதையும் பிரதமர் லீ சியன் லூங் கருத்தில் கொண்டு பேசியிருக்கலாம்.

இஸ்ரேலில் தற்போது பல கட்சிகள் சேர்ந்துமே கூட அரசு அமைக்க முடிவதில்லை என்பதைச் சொல்லியுள்ள பிரதமர், சிங்கப்பூரில் எத்தனை முறை எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன என்பதைப் பற்றியும் சொல்லியிருந்திருக்கலாம்.

ஒப்பீடு செய்வது என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஒப்பிட வேண்டியது தானே சரி?

என்னதான் சொன்னாலும், சிங்கப்பூர் போன்றதொரு தேசம் மற்றொன்று இவ்வுலகில் இல்லை. தண்ணீர் முதல் சகலத்தையும் இறக்குமதி செய்யும் தேசம் இன்று வளமான தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு அந்த தேசத்தின் தலைவர்கள் ஊழல் கறை படியாதவர்கள் என்பதே காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு ஊழல் கறை படியாமல், தேர்ந்த வல்லுநர்கள் மட்டுமே அரசில் பங்குகொள்ள முடியும் என்றும், ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய போரையே அமரர் லீ குவான் யூ நடத்தினார் என்பதையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்வது அவசியம்.

ஊழலுக்கு எதிரான அம்மாதிரியான போரைத் தற்போது நரேந்திர மோதி நடத்தி வருகிறார் என்பதையும் நாம் நினைவில் நிறுத்தி, சிங்கப்பூர் பிரதமரின் கருத்தைக் கவனிக்க வேண்டும்.

பிரதமர் லீ சியன் லூங்கின் கருத்து அவர் பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தில் ஒரு உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டதே தவிர, உள் நோக்கம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் சொன்னதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது என்பதையும் நமது எம்.பி.க்கள் உணர வேண்டும்.

உயில் எழுதுவது எப்படி?

‘சிங்கப்பூர் ஆஃப்ஷோர் அக்கவுண்ட்ல இருக்கற ஒன்றரை கிராண்ட், சாங்கி பார்க்ல காண்டோ, அடையார்ல போட் கிளப் வீடு, ஏ.ஐ.ஜி.ல கேஷ் டெபோசிட்ஸ், எஸ்.ஜி.எக்ஸ்.ல செக்யூரிட்டீஸ் அக்கவுண்ட், எஸ்.பி.ஐ. இன்னபிற சில்லறை லட்சங்கள், தேரழுந்தூர்ல வீடு .. அடடா இப்பிடி எதுக்குமே உயில் எழுதாமப் போயிட்டியேடா.’யாரோ அருகில் இருந்து சொல்வது போல் ஒலித்தது. மனசாட்சியாக இருக்கலாம்.

அடித்த 103 டிகிரி ஜுரத்தில் நான் தான் சொன்னேனா, இல்லை யாரோ அருகில் இருந்து சொன்னார்களா என்று தெரியவில்லை. அதுவும் ராத்திரி 2 மணிக்குப் பினாத்தினால் நினைவு எப்படி இருக்கும் ?காலம் முடிந்துவிட்டதா? இனிமேல் அவ்வளவுதானா? வீட்டிற்குள் வைப்பார்களா இல்லை நேரே… இன்னொரு மனம் கேட்டது. பதில் தான் இல்லை.

எப்டியாவது எழுந்து இந்த உயில் சமாச்சாரத்தை முடிச்சுடலாமே. ப்ளீஸ். எழுந்திருக்கப்பார்ரா ஆமருவி. எழுந்திரு. எஸ்.யூ.கேன். எஸ்.யூ.கேன். ஒபாமா தோன்றிச் சொன்னார்.

நீங்களே வக்கீல் தானே. சார், நீங்க கொஞ்சம் எழுதிடறீங்களா? டயம் முடிஞ்சுடும் போல இருக்கே.’அப்பாரண்ட்லி நீங்க ப்ராப்பர்ட்டீஸ் டாக்குமெண்ட்ஸ் மூணு காப்பி கொடுங்க. மிஷல் செக் பண்ணி சொல்லுவா. ஒரு வாரத்துல முடிச்சுடலாம்.’

‘ப்ளீஸ். இன்னிக்கே முடிஞ்சுடும் போல இருக்கே. ஒரு வாரமெல்லாம் தாங்காதே’ ஹீன ஸ்வரத்தில் கெஞ்சியது யாரோ எங்கோ சொல்வது போல கேட்டது.

‘அது பரவாயில்ல. ஆஸ் பர் அமெரிக்கன் லா, வீடியோ வில் ஈஸ் வாலிட். இப்ப ஒரு வீடியோ எடுத்துக்கலாம். இவர்கிட்ட ஒரு ஆத்தரைசேஷன் சைன் வாங்கிக்கலாம். அப்பறம் ஃபில் பண்ணி நோட்டரைஸ் பண்ணிக்கலாம். ஹௌ ஈஸ் தட்?’ என்று கேட்டுத் தனது நட்சத்திரப் புன்னகையை உதிர்த்தார்.

‘யோவ், இங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கேன். எல்லா எலும்பு மேலயும் லாரி ஓடின மாதிரி வலிக்குது. என் கைய வெச்சே கேஸ் அடுப்ப பத்தவைக்க முடியும் போல கொதிக்குது. சீக்கிரம் எழுதிக்குடுய்யா’

‘ஆக்சுவலி, த பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் தான் அமெரிக்க கான்ஸ்டிட்யூஷனோட ஆதார நம்பிக்கை. யூ நோ. ஃபவுண்டேஷனல் பிலீஃப். ஈவன் மிஷல் வில் அக்ரீ. வோண்ட் யூ டியர்?’

‘யோவ், பொண்டாட்டிய அப்பறம் கொஞ்சிக்கோய்யா. சீக்கிரம் எழுதுய்யா.’ நான் சொல்வது காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

ஒருவேளை முடிந்தேவிட்டதா? நான் எங்கே கிடக்கிறேன்?

‘அந்த ப்ராப்பர்டீஸ் சொல்லுங்க?’ ஒபாமா கேட்பது புரிந்தது.

‘சிங்கப்பூர் ஆஃப்ஷோர் அக்கவுண்ட்ல இருக்கற ஒன்றரை கிராண்ட், சாங்கி பார்க்ல காண்டோ, அடையார்ல போட் கிளப் வீடு, ஏ.ஐ.ஜி.ல கேஷ் டெபோசிட்ஸ், எஸ்.ஜி.எக்ஸ்.ல செக்யூரிட்டீஸ் அக்கவுண்ட், எஸ்.பி.ஐ. இன்னபிற சில்லறை லட்சங்கள், தேரழுந்தூர்ல வீடு’ தடவித் தடவிச் சொன்னேன்.

‘போறுமே. தேரழுந்தூர் தவிர மத்ததெல்லாம் சம்பாதிக்க வேண்டாமா? எழுந்து புழுங்கரிசிக் கஞ்சிய சாப்டுட்டு, கனவை கண்டினியூ பண்ணுங்கோ’

அடிக்கடி கேட்ட குரலாக இருந்தது.

ஒபாமாவும் மிஷலும் இருந்த இடத்தில் உள் துறை மந்திரி நிற்க, புழுங்கல் அரிசிக் கஞ்சிக்கு வாய் திறந்தேன்.

பி.கு.: பிரதமர் மோதி இரண்டு வாக்ஸின் கொடுத்தாரோ, பிழைத்து இதை எழுதுகிறேன். வாழ்க நீ எம்மான். PMO India

சிங்கப்பூர் நீர் மேலாண்மை – வலம் கட்டுரை

‘You know, you can drink the water direct from the tap.’ டாக்ஸி ஓட்டுநர் லிம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.

‘What lah? See ghost already ya? Why mouth open so wide?’ லிம் மேலும் கேட்டதும் திறந்த வாய் மூடிக்கொண்டது. ‘Yes, I mean what I say lah. You drink water from tap and fall ill, I pay you $100’ என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது. இன்னும் பலப்பல ஆச்சரியங்கள் என்னை ஆட்கொள்ளப்போவதை உணராமல் மோன நிலையில் அமர்ந்திருந்தேன்.

‘சிங்கப்பூரில் எத்தனை ஆறுகள் உள்ளன?’ என்று கேட்டவுடன் திரும்பிப் பார்த்த லிம் ஒரு விரலைக் காண்பித்தார். ரஜினிகாந்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலே என் நினைவுக்கு வந்தது.

‘ஆறுகள் எவ்வளவு?’ என்றேன் மறுபடியும்.

‘ஒன்லி ஒன்’ என்றார் ஒற்றை விரலை மீண்டும் ஆட்டியவாறே.

‘அது போதுமா?’ என்றேன் ஆச்சரியத்துடன்.

‘போதாது. ஆனால் அதுவும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் தண்ணீரை மலேசியாவில் இருந்து வாங்குகிறோம்’ என்றார் சிரிப்புடன். ‘காற்று தவிர அனைத்தும் வாங்குகிறோம். அதுதான் சிங்கப்பூர்’ என்று சொல்லி மகிழுந்தை நிறுத்தினார்.

சிங்கப்பூர் முழுவதற்குமான நீர்த் தேவை நான்கு குழாய்களில் இருந்து பெறப்படுகிறது. அவையாவன:

1. வெளி நாட்டு நீர் – மலேசியாவில் இருந்து பெறப்படும் நீர், சுத்திகரிக்கப்பட்டு, உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

1961 மற்றும் 1962ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் மலேசியா இடையே இரு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. 99 ஆண்டுகள் நிகழ்வில் இருக்கும் ஒப்பந்தங்களால் மலேசியாவின் ஜோஹோர் மாநிலம் சிங்கப்பூருக்கு நீர் வழங்கும். சிங்கப்பூர் நீரை சுத்திகரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நடந்தது வேறு. சுத்திகரித்த நீரைத் தனது பயன்பாடு போக மலேசியாவிற்கே விற்றுப் பணம் பார்த்தது சிங்கப்பூர். இல்லாத ஒன்றை வாங்கி, பயன்படுத்தி, மீதம் உள்ளதை விற்றவருக்கே விற்பது திறமையன்றி வேறென்ன?

மலேசியாவிலிருந்து ஒரு நாளைக்கு 250 மில்லியன் கேலன் நீரை, ஆயிரம் கேல்ச்ன் மூன்று செண்ட் என்னும் விலையில் பெற்று, சுத்திகரித்து, தனது பயன்பாட்டுக்குப் போக, பெற்றுக்கொண்டதில் 12% சுத்திகரிக்கப்பட்ட நீரை மலேசியாவிற்கு ஆயிரம் கேலன் ஐம்பது செண்ட் என்னும் விலையில் விற்க வேண்டும் என்பது உடன்பாடு. இதற்கான கட்டமைப்புகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீரை இறைக்கும் இயந்திரக் கட்டமைப்புக்கள் என்று கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டு அதற்கான பெரும் பகுதி செலவையும் ஏற்றுக்கொண்டது.

1990ல் சிங்கப்பூர் லிங்கூ அணையைக் கட்டியது. இது மலேசியாவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஜோஹோர் ஆறு வற்றிவிடும். இதனால் கடல் நீர் உட்புகுந்துவிடும். அதைத் தடுக்க, ஆண்டுதோறும் பொழியும் மழை நீரை லிங்கூ அணை தேக்கி வைக்கிறது. கோடைக்காலத்தில் நீரை ஜோஹோர் ஆற்றில் விடுகிறது. இதனால் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து நீர் கிடைக்க வழி செய்யப்படுகிறது. முன்னோக்கிச் செயல்படுவது என்பது இதுவே.

மலேசியாவிடமிருந்து பெறும் நீர் மட்டுமே சிங்கப்பூரின் நீர் ஆதாரமன்று. 721 சதுர கிமீ அளவே உள்ள நாட்டில் 8000 கிமீ அளவிற்கு நீர் சேகரிப்பு வாய்க்கால்கள் அமைத்துள்ளார்கள். இவை மழை நீரை நீர்த்தேக்கங்களுக்குச் கொண்டு செல்கிறார்கள். வானிலிருந்து விழும் ஒவ்வொரு மூன்று துளி மழை நீரில் இரண்டை சிங்கப்பூர் சேமிக்கிறது என்கிறார் தற்போதைய பிரதமர் லீ ஸியன் லூங். உலக வரைபடத்தில் ஒரு சிறு சிவப்புப் புள்ளி என்று அழைக்கப்படும் சிங்கப்பூரில் 17 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. தெருவில் நடந்து செல்லும்போது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கு துவங்குகிறது’ என்னும் வாசகங்கள் கண்ணில் தென்படுகின்றன. மழை நீரைச் சேகரிக்கும் புதைகுழாய் உள்ளதை நினைவுபடுத்துவன.

நீர்த்தேக்கங்கள் மட்டும் தானா? இன்னும் வேறென்னவெல்லாம் உள்ளன?

2. மழை நீர் – 720 சதுர கிமீ அளவுள்ள நாடு தனது மொத்த அளவையும் மழை நீர்ப் பிடிப்பு பகுதியாகப் பாவிக்கிறது. வானில் இருந்து விழும் நீர் ஒவ்வொன்றும் நிலத்தடிக் குழாய்கள் முலம் 17 நீர்த்தேக்கங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு சுத்திகரிக்கப்பட்டு நாட்டு மக்களின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீர்த்தேக்கங்களில் நீரின் சுத்தத்தை இடைவிடாமல் கண்காணித்த வண்ணமே உள்ளனர். நீரில் உள்ள உப்பின் அளவு, நீரில் இயற்கையாக உள்ள பாசிகள் மற்றும் நுண் உயிரினங்கள் என்று அனைத்தையும் ரோபோக்கள் மூலம் கண்காத்து வருகின்றனர். ரோபோக்கள் வாத்து வடிவில் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கங்களில் அங்குமிங்கும் அலந்துகொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவற்றின் காலுக்கடியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு நீரின் அளவு, வெள்ள அபாய அறிவிப்புகள் முதலியனவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். நாட்டில் தெருவோரங்களில் உள்ள நீர்ப் பிடிப்பு ஜல்லிக் கம்பிகளின் மீது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கிருந்தே துவங்குகிறது’ என்ற வாசகம் தென்படுகிறது. இவ்வகையாக, ஒரு தேசமே நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள நிலை உலகில் வேறேங்கும் இல்லை எனலாம்.

நீர்த்தேக்கம் பாழடைந்தும், செடிகள், விழுதுகள் நிறைந்தும், சமூகக் கேடான செயல்கள் நடைபெறும் இடமாகவும் இருப்பதைப் பல இடங்களில் கண்டிருந்த எனக்கு, பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் வீடு இருக்கிறது, பார்க்கிறீர்களா என்று கேட்ட அந்த வீட்டு முகவரிடம், ‘நீர்த்தேக்கம் இருந்தால் கொசு முதலியவை இருக்கலாம். எனவே வேறிடம் பார்க்கலாமே’ என்றிருந்தேன். முகவர் ஆச்சரியத்துடன் நோக்கினார். ‘நீர்த் தேக்கம் இருந்தால் கொசுக்கள் இருக்க வேண்டுமா? என்ன நியாயம் இது?’ என்றவர், மேலும் தொடரவில்லை. ‘பண்டான் தேக்கத்தின் அருகில் அருமையான அரசு குடியிருப்பு இருக்கிறது. காட்டுகிறேன். சுற்றுப்புறம் பிடிக்கவில்லையென்றால் வேறு வீடு பார்க்கலாமே’ என்றவரிடம் அரை மனதாக ஒப்புக்கொண்டேன்.

மகிழுந்து பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் சென்றது. ஒரு நொடியில் சுற்றுச் சூழலே மாறிவிட்டிருந்ததை உணர்ந்தேன். கீழிறங்கிப் பார்க்கையில் கதிரவன் கீழிறங்கிக்கொண்டிருந்தான். சுமார் நான்கு தொடர் ஓட்டக் குழுவினர் என்னைக் கடந்து சென்றனர். மிதிவண்டியில் வந்த விளையாட்டு வீரர்கள் போல் தோற்றம் அளித்த சிலர் பண்டான் ஏரியில் படகுப் போட்டிகள் நடத்தும் குழுவினராம். ஏரி எப்படியுள்ளது என்று பார்க்கலாமா என்று முகவரிடம் கேட்க, அவர் பாதை காண்பித்தார். ஏரியைச் சுற்றி பெரிய மதில் சுவர்கள் அமைத்திருந்தனர். மதிகளில் புற்செடிகள், அவற்றின் ஊடே படிக்கட்டுகள். படிகளின் மீதேறினால் 6 கி.மீ. சுற்றளவுள்ள ஏரியின் பிரும்மாண்டம். மறையும் கதிரொளி, செக்கர் வானம், மாபெரும் ஏரியின் கொள்ளளவு முழுவதும் கொண்ட ததும்பும் நீர். பூமித்தாயின் கருணைக் கொடை பேருருக்கொண்டு என்னை வரவேற்றதாக உணர்ந்தேன். அத்துணைத் தண்ணீரை அவ்வளவு அருகில் நான் கண்டிருக்கவில்லை. மீன்கள் துள்ளிக் குதிக்கும் பேரெழில். சடாரெனப் பறந்து வந்து மீனைக் கொத்திச் செல்லும் நாரைகள், மகிழ்ச்சியுடன் மதகின் மீது ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள், ஆங்காங்கே பாதுகாப்புக்கான அறிவிப்புகள், ‘மீன் பிடிக்கத் தடை’ வாசகங்கள் என்று அத்துணைக் காட்சிகளையும் ஒருசேர உள்வாங்கிக்கொள்ளத் தடுமாறினேன் என்பது உண்மை.

சற்றே நடந்து சென்றால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் பூங்கா, அதன் அருகில் நீர்த்தேக்கத்திற்கு மழை நீரை எடுத்து வரும் கால்வாய்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், கால்வாயின் மீதுள்ள சிறு குப்பைகளை நீக்கும் காற்றடித்த ரப்பர் குழாய்கள், கால்வாயில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் (நீரின் அளவு, குப்பைகளை வலைகளைக் கொண்டு அகற்றுதல் முதலிய பணிகளைச் செய்வர்) என ஒரு மாய உலகம் என் கண் முன் விரிந்தது. இந்த இடத்தையா வேண்டாம் என்றோம் என்று சற்று வெட்கப்பட்டேன். பண்டான் அருகில் இருந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தேன்.

நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் வினோதமான பறவைகள் வருவதுண்டு. அவை மலேயா பகுதியின் பூர்வகுடிப் பறவைகளாம். தினமும் இவற்றுடன் உரையாடியிருக்கிறேன். இவை தவிரவும் நீர் நாய்கள், மீன்கள் என்று தினமும் இயற்கைக் காட்சிகளால் நிரம்பியதாகவே எங்கள் வாழ்க்கை அமைந்தது. வேடிக்கை என்னவென்றால் அவை அனைத்துமே செயற்கையாக அமைக்கப்பட்ட இயற்கை.

ஓரிருமுறை மலேய உடும்பைக் கண்டு முதலையோ என்று பயந்திருக்கிறேன். ‘No lah, we don’t have crocodiles in our reservoirs. They are mostly garden lizards. However, stay away from them for your own safety’ என்று தனது ஓட்டத்தினூடே சில மணித்துளிகள் நின்று அறிவுரை கூறிச் சென்ற சீன மூதாட்டி தற்போது நினைவிற்கு வருகிறார்.

ஆச்சரியப்படத்தக்க இன்னொரு செய்தியும் உள்ளது. 1960, 70களில் சிங்கப்பூரின் வணிக மையங்களான நியூட்டன் சர்க்கஸ், ஆர்சர்ட் சாலை முதலியன வெள்ள நீரில் மூழ்கின. காரணம் இவை கடல் மட்டத்தை விடத் தாழ்வான பகுதிகள். இயற்கையின் இந்த தடையையும் சிங்கப்பூர் தகர்த்தெறிந்தது. ‘Storm Water Storage’ என்னும் திட்டத்தால் அப்பகுதிகளில் உள்ள உபரி நீரைப் பூமிக்கு அடியில் உள்ள குழாய்கள் மூலம் சற்று தூரத்திற்கு எழுத்துச் செல்லப்படுகின்றன. குழாய்கள் சற்று சரிந்த நிலையில் அமைக்கப்பட்டன. இதன் மூலம் உபரி நீரைப் பூமியின் புவியீர்ப்பு சக்தி மூலமே தேசத்தின் ஒரு பகுதில் இருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கே தனியாக அமைக்கப்பட்டிருந்த வெள்ள நீர் சேகரிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு. பின்னர் பூமிக்கு மேலே மோட்டார் பம்புகள் மூலம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து நீர்த்தேக்கங்களுக்கான கால்வாய்களுக்குள் செலுத்தப்படுகின்றன. வெள்ளத்தை வென்றதாகவும் ஆயிற்று, வெள்ள நீரைத் தேக்கியதாகவும் ஆயிற்று.

மரீனா கால்வாய் மரீனா நீர்த்தேக்கமாக மாறிய கதையைச் சொல்லாமல் சிங்கப்பூரின் நீர் மேலாண்மையைக் கடந்து செல்லவியலாது. இங்கு கடலுக்கே அணை போடப்பட்டுள்ளது. மரீனா கால்வாய் வழியே மேலதிக மழை நீர் கடலைச் சென்றடையும். அந்த நீரைத் தேக்கினால் என்னவென்று சிந்தித்தார் சிங்கப்பூரின் தந்தையும் முதல் பிரதமருமாகிய லீ குவான் யூ. மரீனா கால்வாக்குக் அணை கட்டுவது சாத்தியமா என்று ஆராயத் தனது பொறியாளர்களை ஊக்குவித்தார். விளைவு, மரீனா கால்வாய் வழியே கடலுக்குச் செல்லும் நீர் தடுக்கப்பட்டது. சுமார் 10,000 ஹெக்டேர் நீர்ப்பிடிப்புப் பகுதி உருவானது. அதிக மழையின் போது சிங்கப்பூரின் சைனா டவுன், ஜலன் புசார் முதலிய பகுதிகளில் பொழியும் மழை நீர் இக்கால்வாய் வழியே கடலைச் சென்றடையும். தற்போது தடுக்கப்பட்ட நிலையில் நீர் வீணாகவில்லை. அதிக மழை பொழிந்து, அதே நேரம் கடல் வற்றமும் (low tide) ஏற்பட்டால், மரீனா அணைக்கட்டின் 9 மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கடலில் கலக்கிறது. உயர் அலை (high tide) நேர்ந்தால், ராட்சத நீர் இறைப்பான்கள் மூலம் உபரி நீர் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. அப்படியாயினும் மரீனா நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு ஒரே அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் அதிக அளவில் படகு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு, மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் இவ்வணைக்கு அமெரிக்கச் சூழியல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மாதிரியான பெருவியப்பளிக்கும் பொறியியல் சாதனைகளைப் பெரும் முயற்சி செய்தாவது செயலாக்க வேண்டிய தேவை என்னவென்ற கேள்வி எழலாம். அதற்கு நாம் 1965ம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி நாடான போது, அப்போதைய மலேசியத் தலைவர் துன்கு அப்துல் ரஹ்மான் இங்கிலாந்து தூதரிடம் சொன்னது: ‘மலேசியா நினைப்பதைச் சிங்கப்பூர் செய்ய வேண்டும். இல்லையெனில் நீரை நிறுத்திவிடுவோம்’. இந்த அச்சுறுத்தல் தன் தலை மீது தொங்கும் கத்தியென்றுணர்ந்த லீ குவான் யூ, தனி நாடான உடனேயே நீர் ஆதாரங்களில் தன்னிறைவை அடையும் வேலைகளில் இறங்குவிட்டார். அதற்கு மரீனா தடுப்பணை ஒரு உதாரணம். ஆங்கிலத்தில் ‘Leaving no stone unturned’ என்றொரு வாசகம் உண்டு. அவ்வகையானவையே சிங்கப்பூரின் நீர் ஆதாரப் பெருக்கத்திற்கான முயற்சிகள்.

பொழியும் மழையைத் தேக்கி வைக்கலாம். ஆனால், மழை பொழிய வேண்டுமே. சிங்கப்பூரின் தந்தை லீ குவன் யூ தடாலடியானதொரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இனி யாரும் மரம் வெட்டக் கூடாது. மரம் வெட்டினால் சிறை மற்றும் கடும் அபராதங்கள், சாலை விபத்துக்களில், சாலையோர மரங்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால் கடும் அபராதங்கள்’ என்று அதிரடி நடவடிக்கைகளை எழுத்தார். பலன்: நாடு பூங்காவானது. சாலையில் வாகனங்களில் செல்கையில் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தவிர பொட்டல் வெளிகள் என்று கிஞ்சித்தும் இல்லாதபடி நாடே பச்சை மயனானது. இதனால் மழை தவிரவும் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று, நாட்டின் வெப்பம் இரண்டு டிகிரி அளவிற்குக் குறைந்தது; அதனால் சில தொற்று நோய்க் காய்ச்சல்கள் குறைந்தன. இரண்டு, வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட மாசு கணிசமாகக் குறைந்தது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்தார் காலஞ்சென்ற பிரதமர் லீ. காற்று மாசடைவதைத் தடுக்கவும் நாட்டின் வெப்பத்தைக் குறைக்கவும் லீ சிங்கையைப் பசுமையாக்க முனைந்தார். அதன் பலனாக மழையும் பொய்க்காமல் வாரி வழங்குகிறது. அதனால் ஆண்டுதோறும் பெறும் 2400 மிமீ மழையை அனேகமாக முழுவதுமாகவே தேக்கி வைக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரைப் பசுமையாக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் பூமத்திய ரேகையின் மீதும் அதன் அருகிலும் அமைந்திருக்கும் நாடுகளுக்கு விஜயம் செய்தனர். அந்த நாடுகளில் என்னென்ன மரங்கள், தாவரங்கள் வளர்கின்றன என்று கண்டறிந்து, அவற்றைச் சிங்கப்பூரில் வளர்க்கத்துவங்கினர். ஏனெனில் சிங்கப்பூரும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள தேசம் என்பதால்.

3. கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம்: இதன்மூலம் தேவையான அளவு கடல் நிரைக் குடி நீராக்கித் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மார்ச் 2019 வரை மூன்று கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை சிங்கப்பூரின் நீர்த் தேவையில் 30% வரை அளிக்கின்றன. 2020ம் ஆண்டிற்குள் மேலும் இரண்டு நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அரசு இயற்றியுள்ள முன்வரைவுத் திட்டத்தின் படி 2060ம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையில் 30 விழுக்காடாவது கடலில் இருந்தே பெறப்பட வேண்டும். அரசும் தனியார் நிறுவனங்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

தற்போதுள்ள மூன்று சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஒன்றைக்காட்டிலும் மற்றொன்றில் நவீனத் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்க மிக அதிகமான அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. இதனைக் குறைக்கும் விதமாக முடிந்த இடங்களில் எல்லாம் சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளை நிறுவியுள்ளது சிங்கப்பூர். ‘எலக்ட்ரோ-டிஅயொனைசேஷன்’ என்னும் முறையைக் கண்டறிந்து, கடல் நீரை மின்காந்த அலைகளின் ஊடே செலுத்தி, அதன் மூலம் அதில் உள்ள உப்புகளைக் களைய முற்பட்டு அதனைத் தனது துவாஸ் சுத்திகரிப்பு மையத்தில் பொதுப் பயனீட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது.

அத்துடன் கடலோரத்தில் உள்ள மாமரங்கள் கடல் நீரிலிருந்து நன்னீரை எப்படிப் பிரித்தெடுக்கின்றன என்று கண்டறிந்து ‘பயோமிமிக்’ முறையில் செயற்கையாக அதனைச் செய்ய இயலுமா என்றும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது அரசு. அத்துடன் இயூரிஹலின் மீன் வகைகள் ( பல வகையான நீர் நிலைகளிலும் வாழும் மீன்கள்) எவ்வாறு உப்பு நீரை நல்ல நீராக்குகின்றன என்று கண்டறீயும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. இம்மாதிரியான இயற்கை முறைகளைக் கையாண்டால் குறைந்த மின்சாரச் செலவில் கடல் நீரைச் சுத்திகரிக்க இயலும் என்பதால் அம்முறைகளைக் கற்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.

ஒரு க்யூபிக் மீட்டர் அளவு சுத்திகரிப்பு நீரை உற்பத்தி செய்ய ஐம்பது காசுகள் முதல் ஒரு டாலர் வரை செலவாகிறது என்று கணக்கிட்டுள்ளார்கள். இந்தச் செலவையும் குறைக்கவே மேற்சொன்ன நடைமுறைகள்.

4. கழிவு நீர் சுத்திகரிப்பு: நாட்டு மக்கள் பயன்படுத்தி நீரை, உலகிலேயே மிகவும் அதிகமான தரக்கட்டுப்பாடுகள் கொண்ட சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு குடிநீராக மாற்றி அதனைப் பயன்படுத்துவது. மனிதர்கள் பருகும் தரத்தில் இருந்தாலும் தற்போது வரை இது மக்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இவ்வாறாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர், இரண்டாம் குழாயான நீர்த்தேக்கங்களுக்குச் சிறிய அளவில் அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வினியோகிக்கப்படுகிறது.

மக்கள் பயன்படுத்திய நீர் என்பதால் அந்த நீரும் மூன்றடுக்கு முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மெம்ப்ரேன் எனப்படும் மெல்லிய நீர் சலிப்பான்கள் மூலம் பலமுறை சுத்தப்படுத்தப் படுகிறது. இதன் மூலம் திடக் கழிவுகள், நுண் கழிவுகள் முதலியன நீக்கப்படுகின்றன. பின்னர் அந்த நீரின் ஊடாக அல்ட்ரா வயலட கதிர்கள் செலுத்தப்படுகின்றன. இதனால் பாக்டீரியா, வைரஸ் முதலான நுண் கிருமிகள் நீக்கப்படுகின்றன. இம்மாதிரிப் பல முறைகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் 2060ம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.

இவ்வகையாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றி அதன் தொழில் துறைப் பயன்பாட்டாளர்கள் கூறுவதைத் தெரிந்துகொண்டாலே அந்த நீரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள இயலும். இதற்காக அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என். சிங்கப்பூரில் உள்ள பயன்பாட்டாளர்களைப் பேட்டி கண்டது. இவ்வகையான நீரைப் பெரிய அளவில் பயன்படுத்தும் Systems on Silicon நிறுவனத் தலைவர் சி.வி.ஜெகதீஷ் சொல்வது, ‘சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை எங்கள் தொழிற்சாலையில் தொழில் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறோம். அரசு நிறுவனமான பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB – Public Utilities Board) அளிக்கும் இந்த நீரை நாங்கள் மூன்று முறைகள் மறு சுழற்சி செய்து பயன்படுத்திப் பின்னரே கழிவு நீர் வாய்க்காலில் விடுகிறோம்’ என்கிறார்.

இம்முறையில் பெறப்படும் நிரைப் பற்றி தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ கொள்கை ஆய்வுக் கழகத்தின் (Lee Kuan Yew School of Public Policy) பேராசிரியர் அசித் பிஸ்வாஸ், ‘சிங்கப்பூரின் இந்த மறுசுழற்சி முறைகளை உலக நாடுகள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கடைசிச் சொட்டு நீரையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும். இவ்வாறு மறுசுழற்சி செய்வதற்குப் பெரிய அளவிலான மின்சக்தி தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் குறைந்த மின்சக்தியில் நகழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதைப் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்’ என்கிறார்.

‘NeWater’ – ‘புதுநீர்’ என்றழைக்கப்படும் மறுசுழற்சி நீரை ஒரு க்யூபிக் மீட்டர் அளவு உற்பத்தி செய்ய முப்பது முதல் ஐம்பது சிங்கப்பூர் காசுகள் செலவாகிறது என்கிறது அரசு.

1974ல் புது நீருக்கான முயற்சிகள் துவங்கியிருந்தன. ஆனால், தொழில் நுட்பச் செலவுகள் மிக அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அது மீண்டும் துவக்கப்பட்டு 2002ம் ஆண்டு நனவானது. ‘புது நீர்’ குறித்துப் பேசுகையில் லீ குவான் யூ சொன்னது: ‘இதைச் சாதிக்கத் தேவையான தொழில்நுட்பம் எப்போதாவது ஏதாவது வகையில் உருவாகும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது.’ காலஞ்சென்ற தீர்க்கதரிசியின் நம்பிக்கை தற்போது உயிர் பெற்று நடமாடிக்கொண்டிருக்கிறது.

2061ம் ஆண்டு மலேசியாவுடனான நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் காலாவதியாகும் வரை காத்திருக்காமல், நீர் ஆதாரங்களின் தன்னிறைவை எட்டிவிட முயல்கிறது சிங்கப்பூர். 2014ம் ஆண்டு நாட்டின் நீர்த்தேவையில் 30% மறுசுழற்சி நீரால் ஈடுகட்டப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.

நீரைக் கொணர்வது, சுத்திகரிப்பது என்பது வரை சரி. ஆனால், உபயோகம் எப்படி? அங்கே சிக்கனம் பேணப்படுகிறதா? என்றால் அங்கும் பெருவியப்பே காத்திருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிற்கும் நீர்மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் கடந்த மாதம் பயன்படுத்தியுள்ள நீரின் அளவு, தேசம் முழுமைக்குமான சராசரிப் பயன்பாட்டின் அளவு முதலியன மாதாந்திர அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு குடும்பம் தான் அதிகமாகப் பயன்படுத்திய மாதங்கள் யாவை என்று அறிந்து, அதற்கேற்றாற்போல் பயன்பாட்டை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தற்போது வீடுகளில் கழிவறை, சமையல் அறை முதலிய இடங்களில் உள்ள குழாய்களிலும் நீர்மானிகள் பொருத்தப்படுகின்றன. நீராடுவதற்கு, கழிப்பிடப் பயன்பாட்டிற்கு, சமையலுக்கு என்று தனித்தனியாக எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது. உலகில் வேறெந்த நாட்டிலும் சிங்கப்பூர் அளவிற்கு நீர் மேலாண்மை செய்யப்படுகிறதா என்பது கேள்வியே.

நீர் மேலாண்மையில் தான் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மையில் திறன் வாய்ந்த நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது சிங்கப்பூர். அவற்றின் மூலம் மத்தியக் கிழக்கு நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள், பாரதத்தின் குஜராத், ராஜஸ்தான் முதலிய மாநிலங்கள் முதலியவற்றில் நீர் ஆதாரங்களைப் பெருக்கும் முயற்சிகளிலும், உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. உதா: சிங்கப்பூரின் ஹைஃபளக்ஸ் என்னும் நீர் மேலாண்மை நிறுவனம் ஜப்பானிய நிறுவனமான இத்தோச்சுவுடன் இணைந்து குஜராத்தின் பாருச் பகுதியில் நாளொன்றுக்கு 88 மில்லியன் கேலன் அளவிற்குக் கடல் நீரிலிருந்து நன்னீர் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றினாள் தனக்கு அன்னியச் செலாவணி கிடைக்க வழி செய்வதுடன், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்னும் கருதுகோளின் வழி தனக்குத் தெரிந்த, தன்னிடமுள்ள திறமையை உலகமும் பயன்படுத்திக் கொள்ளத் தன்னிடமுள்ள 180 நீர் மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் 26 நீர் தொடர்பான ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் வழிசெய்து வருகிறது சிங்கப்பூர். நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கங்கள், நீர் மேலாண்மை குறித்த புத்தாய்வுகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நீர் தொடர்பான தொழில் முனைவோருக்கான பயிலரங்குகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்று உலகில் பல நாடுகளையும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கச் செய்துவருகிறது சிங்கப்பூர்.

இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத நாடு இன்று உலகின் மற்றெல்லா நாடுகளுக்கும் பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. நீர் மேலாண்மை அவற்றில் ஒன்று. அவ்வளவே.

சுட்டிகள்:

https://www.financialexpress.com/opinion/water-management-heres-how-most-cities-in-india-can-meet-domestic-needs/1626613/

https://www.pub.gov.sg/watersupply/fournationaltaps/newater

https://www.cnbc.com/video/2017/03/22/how-singapore-reuses-its-water-.html

https://www.eco-business.com/news/lee-kuan-yew-the-architect-of-singapores-water-story/

https://www.sciencedirect.com/science/article/pii/S0958211812700927

வலம் இதழில் வெளிவந்த கட்டுரை

காஃபி – ஒரு அம்மாஞ்சிப் பார்வை

நல்ல காபியும் நல்ல வெற்றிலையும் கிடைப்பது துர்லபம். இரண்டும் ஒருங்கே நல்லதாகக் கிடைத்துவிட்டால் அது ஜென்ம சாபல்யம்.20% இங்கிரிமெண்ட் வந்தது என்று வைத்துக்கொள்ளலாம்.


காபியை காஃபி என்றோ, காப்பி என்றோ அழைப்பது அவரவர் சார்ந்த சமுதாயத்தின் மேட்டுக்குடித் தன்மையைக் காட்டும் என்பது என் தியரி. தோசைக்கு க்ளாஸ் இருக்கும் போது காபிக்கு இருக்கலாகாதா என்ன?


‘காஃபி’ ஆங்கில வாடை உடையதாகத் தங்களை மாந்தர்கள் காட்டிக் கொள்ளும் போது, பொது வெளியில் உதிர்ப்பது. இவர்களே வீட்டிற்குள் வந்தால் ‘அம்மா காப்பி குடேம்மா’ என்பர். இருப்பது ஒன்றே, ஆனால் அழைப்பது வேறு பெயர்களில் (ஏகம் சத். விப்ர: பஹுதா வதந்தி).


காபி ஹோட்டல்கள் என்று இருந்த காலத்தில் அந்த ஸ்தாபனங்களில் நிஜமாகவே நல்ல காபி கிடைத்தது. முழு சிரத்தையுடன் விடியற்காலையில் குளித்து, விபூதி இட்டுக்கொண்டு, வேஷ்டியுடன் வென்னீர் போட்டு, அதைக் காபிப் பொடி போட்ட ஃபில்டரில் வட்டமடித்து இறக்கி, ஃபில்டர் மூடியைக் கொண்டு ஃபில்டரை லேசாக ஒரு தட்டு தட்டிப் பின்னர் மூடி, சுமார் 20 நிமிடத்துக்குப் பிறகு டிகாஷன் என்னு திரவத்தின் நறுமணம் பரவி, ஒரு கரண்டி டிகாஷன், நாலு கரண்டி பால் (நீர் கலவாதது), இரண்டு ஸ்பூன் சர்க்கரை என்று கலந்து, லேசாக இருமுறைகள் ஆற்றி, பித்தளை டம்ப்ளர் டபராக்களில் டேபிளின் மேல் வைப்பர்… அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அந்தச் சுவையை உணர்வர்.


அந்தக் காபியை வாயில் விட்டுக்கொண்டால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு வேறெதையும் சாப்பிட எண்ணம் வராது என்று ஒரு காலம் உண்டு. ஏனெனில், அந்தக் காபியின் சுவை நாவில் ஊறி, செல்களில் இறங்கி அவ்விடமே தங்கியிருந்து இளைப்பாறி, அந்த சுகானுபவத்தில் லயித்திருக்கும் போது வாயில் நல்ல வார்த்தைகளே வரும் என்பதால் பெரும்பாலும் பிள்ளைகள் தங்கள் ரிப்போர்ட் கார்டுகளை அப்படியாக அமர்ந்திருக்கும் அப்பாக்களிடம் கொண்டு காட்டுவர். 09 மார்க் என்பது, காபியின் கிறக்கத்தால் 90 என்று தெரிந்து, ‘பேஷ், ரொம்ப நன்னா படிக்கறயே’ என்று முதுகில் ஷொட்டு வாங்கியபடி நமுட்டுச் சிரிப்புடன் செல்லும் சிறுவர்கள் இருந்த காலம் உண்டு.


பிராமணாள் காபிக் கடை என்றோ, அம்பி ஐயர் காபி ஹோட்டல் என்றோ தென்பட்டால் காலை 5 மணிக்கு அவ்விடத்தில் மேற்சொன்ன காபி தயாரிப்பு நிகழ்வுகளைக் காணலாம். ஒரு சமயம் உப்பிலியப்பன் கோவில் செல்லும் போது விடியற்லை 5 மணிக்கு இப்படியான ஒரு கடை முன் பஸ் நிற்க, பெருமாளை மறந்து அனைவரும் காபி தயாரிப்பையே பார்த்து அமர்ந்திருந்தது நினைவிற்கு வருகிறது. தற்போதெல்லாம் அம்பியையும் விரட்டி, அவர் போடும் காபியையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி கப்புசினோ, கபே லாட்டே, கபே மோக்கா என்று கொடுமையோ கொடுமை. இதற்கும் ஆனை விலை, குதிரை விலை என்று ஏகத்துக்கு விற்கிறார்கள்.


மாயூரத்தில் அம்பி ஐயர் காபிக்கடை என்று ஒன்று திரு இந்தளூரில் பெரியப்பா வீட்டிற்கு அடுத்தபடி இருந்தது. அம்பி ஐயர் பாலக்காடு. நாலரை மணிக்கெல்லாம் உயிர்பெறும் அந்த நிறுவனம் முதலில் காபியைத்தான் துவங்கும். பிள்ளையார் சுழி போல. லீவுக்கு மாயவரம் போகும் போது வாசல் திண்ணையில் அமர்ந்து அம்பி ஐயர் காபி வாசனையைப் பிடிப்பது சுகானுபவம். போய்ச் சாப்பிட முடியாது. போனால் முதுகில் டின் கட்டிவிடுவார்கள். ‘கிளப்புல சாப்பிடணுமா? படவா’.


மாயூரம் காளியாகுடி ஹோட்டல் என்பது இன்றைய ஸ்கேலில் மாயூரத்தில் மட்டுமே இருக்கும் ஸ்டார்பக்ஸ் போன்றது. அவன் போடும் காஃபியை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்தே வர வேண்டும். அது அந்த ஓனரின் கைவண்ணமா அல்லது அந்த இடத்தின் வாகா என்று தெரியாமல் பட்டிமன்றம் நடத்த சாலமன் பாப்பையா ஒப்புக்கொள்வார். மாயூரத்த்ல் மயூரநாதர் கோவிலுக்குப் பிறகு பிரசித்தி பெற்று விளங்கியது காளியாகுடி ஹோட்டல். தற்போது கை மாறி, சோமாரியாக உள்ளது.

தற்போதெல்லாம் டிகிரி காபி என்கிறார்கள். ஒருவேளை டிகிரி எதாவது வாசித்தவர்கள் போடும் காபியோ என்னவோ. ஆளுக்கு வேண்டுமானால் டிகிரி இருக்கலாம், ஆனால் காபி தண்டம். ஒருவேளை தற்காலத்திய டிகிரிகளும் தெண்டம் என்பதைக் குறியீடாகச் சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன்.

சிங்கப்புரில் இருந்த 10 வருஷத்தில் காஃபியை மலாய் பாஷையில் அனுபவித்தேன். ஆம். அனுபவித்தேன் என்பதே உண்மை. ‘காஃபி ஓ’ என்பது வெறும் காஃபித் தண்ணீர் மட்டும். ‘காஃபி ஓ கொசோங்’ என்பது காஃபித்தண்ணீர் சர்க்கரை இல்லாமல். ‘காஃபி சி’ என்பது பாலுடன் சேர்ந்த காஃபி. இம்மாதிரியாகப் பல பரீட்சைகள் செய்து எனக்கான காஃபியாக ‘காஃபி சி போ போ’ – நீர் அதிகம் உள்ள பால் சேர்த்த, சர்க்கரை போட்ட காஃபி. இது ஓரளவு இந்தியக் காஃபியுடன் ஒத்துவந்தது. ஆனால் அமெரிக்கர்கள் பட்டணம் படி கணக்கில் நாள் முழுதும் தீர்த்தமாடும் காபி எனக்கு ஒத்துவந்ததில்லை.

பின்னர் பாரதம் வரும்போதெல்லாம் இரண்டு கிலோ காஃபிக் பொடி வாங்கிச் செல்வது என்று வழக்கம் வைத்துக்கொண்டேன். தற்போது மயிலாப்பூரில் எந்தக் கடையில் வாங்கினால் ஒத்துவருகிறது என்று பரீட்சை செய்ததில் சிவசாமி ஸ்கூலுக்கு எதிரில் உள்ள கீதா காபி சரிப்பட்டு வந்துள்ளது. அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. 300 பீபரி + 200 ஏ காபி என்கிற சதவிகிதத்தில் அறைத்து வாங்கி வருகிறேன். நீங்களும் முயன்று பார்க்கலாம்.


பாரதத்தின் தேசிய பானம் டீ என்கிறார்கள். இவர்கள் காபிச் சுவை அறியா மாந்தர். ஏனெனில் டீ எந்தக் கொடுமையாக இருந்தாலும் குடித்துவிடலாம். ஆனால், காபிக்கு மெனக்கெட வேண்டும். பல நேரங்களில் எல்லாம் சரியாக இருந்து ஃபில்டர் மக்கர் பண்ணும். ஃபில்டரைத் தாஜா பண்ணி, தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி வேலை வாங்க வேண்டும். வென்னீரை ஊற்றும் போது கம்யூனிஸம் போல எல்லா இடங்களிலும் படுமாறு கொட்ட வேண்டும். அது ஒரு கலை. ஆனால் டீ போடுவது அப்படி இல்லை.


வீடுகளில் போடப்படும் டிகாஷனில் ரெண்டாம் டிகாஷன் காபி என்பது வேண்டும் என்றே அவமரியாதை செய்வதாகும். காபி மாதிரி வாசனையும், கழுநீர் மாதிரி சுவையும் இருந்தால் அது ரெண்டாம் டிகாஷன். அடிக்கடி காபி கேட்கும் பிள்ளைகளுக்கு ரெண்டு தடவை ரெண்டாம் டிகாஷன் காபியைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்ளும். இதில் பழம்பால் காபி என்பது லோகபிரசித்தம். அதைக் குறித்துத் தனியாகவே ஒரு விருத்தாந்தம் எழுதியுள்ளேன்.


காஃபியின் சுவையை அனுபவித்துச் சுவைக்காமல் என்ன கண்றாவிக்கு அதைப் பருகுகிறார்கள் என்று பல சமயங்கள் யோசித்ததுண்டு. ‘Much can happen during a coffee’ என்னும் அயோக்கியத்தனம் ஒழிக. காஃபி சாப்பிடும் போது என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? தூங்கும் போது பேசுகிறோமா என்ன? (விதி விலக்குகள் விலகலாம்).


காஃபி சாப்பிடும் போது பேசுபவர்களைப் பற்றி வள்ளுவர் இந்த இரண்டு குறள்களை எழுதியிருப்பார்.

‘காஃபியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?’

‘பேசியும் காஃபி சாப்பிடுதல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்’


அலுவலகத்தில் காபிக்கென்று மிஷின் உள்ளது. வேண்டியதைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்தல் என்பதாலோ என்னவோ அதிலிருந்து வரும் எந்தத் திரவமும் திராபையாகவே உள்ளது. இதையும் தேவனின் கதைகளில் வரும் ‘கள்ளிச் சொட்டுக் காபி’ யையும் எப்படி ஒப்பிடுவது? வைரமுத்து காஃபிப் பிரியராக இருப்பின் ‘கள்ளிச் சொட்டு இதிகாசம்’ என்று எழுதலாம்.

வெள்ளி, பித்தளை தம்ளர்களில் காஃபி சாப்பிட்ட போது இருந்த சுவை, காகித தம்ளர்களில் இல்லை என்பதைப் பற்றி சமுக அறிவியலாளர்கள் ஆராயலாம்.


சமீபத்தில் வீட்டில் ஒர்க் ஃப்ரம் ஹோமின் போது, கணினியைப் பார்த்துக் கொண்டே காபி சாப்பிட்டு ‘காபி ரெண்டாம் டிகாஷனா?’ என்றேன்.


‘காபியா? கபசுர குடிநீர்னா குடுத்தேன்’ என்றாள் தர்மபத்னி.

நான் வேங்கடநாதன்.. துவக்கம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர், விடியற்காலை.

‘இன்னிக்கி கார்த்தால ஒரு கனவு வந்தது சார். அத உங்ககிட்ட உடனே சொல்லணும்னு விடியற்கார்த்தாலயே கூப்டுட்டேன்’ என்றார் நெடுநாளைய நண்பர், சிங்கப்பூரில் இருந்து. அங்கு இருந்த சமயத்தில் இலக்கியப் பட்டறைகளில் இணைந்து செயலாற்றியிருந்தோம்.

‘அவ்ளோ அவசரமானதா?’ என்றேன் தூக்கக் கலக்கத்தில்.

‘ஆமாம். உங்களப் பத்தினது’ என்றார் பீடிகையுடன். தூக்கம் கலைந்தது.

‘கனவுல நான் ஶ்ரீரங்கத்துல கோவில் வாசல்ல ஒரு வீட்டு திண்ணைல உக்காந்திருக்கேன்.  அப்போ ரெண்டு பேர் வறாங்க. ஒருத்தர் வைஷ்ணவ லட்சணங்களோட பஞ்சகச்சம் கட்டிண்டிருக்கார். மத்தவர் சந்நியாசி’ நிறுத்தினார்.

சுவாரஸ்யம் அதிகரித்தது.

‘பஞ்சகச்ச வைஷ்ணவர் எங்கிட்ட கேக்கறார். ஆமாம், நீங்கள்ளாம் தேசிகன் தேசிகன்னு சொல்றீங்களே, அவர் ஆசார்யனா என்ன? ராமானுஜருக்கு அப்புறம் மணவாள மாமுநிகள் தானே உண்டு. இவர் எங்க புதுசா வறார்?’ ப.வைஷ்ணவர்.

‘இல்ல. அவரும் ஆசாரியன் தான். மாமுநிகளுமே கூட ஆசாரியன் தான்’ நண்பர்.

‘அப்ப அவரோட காலம் என்ன? ராமானுஜருக்கும் அவருக்கும் தேசிகனுக்கும் கால வித்யாசம் என்ன? அவரோட சித்தாந்தம் என்ன?’ சரமாரியாகக் கேட்கிறார் ப.வைஷ்ணவர்.

‘எனக்கு கால விஷயமெல்லாம் தெரியல்ல. ரெண்டு பேரும் ஆசாரியன்’ நண்பர்.

அப்போது சந்நியாசி குறுக்கிடுகிறார்.

வேதாந்த தேசிகன்
வேதாந்த தேசிகன்

‘இந்தக் கேள்விய ராமானுஜரப் பத்தி எழுதினானே, இங்க இருந்தானே, அவன் கிட்ட கேக்கச் சொல்லுடா. அவன எழுதச்சொல்லு’ என்கிறார் சந்நியாசி.

‘இது தான் சார் நடந்தது. தூக்கிவாரிப் போட்டு எழுந்துட்டேன். அதான் உடனே ஃபோன் பண்ணினேன்’ நண்பர் உணர்ச்சிப் பிரவாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘நீங்க அவசியம் தேசிகன் பத்தி எழுதணும்’ ஏதோ ஆணை போலவே பேசினார்.

ஃப்ளாஷ்பாக்.

ஈராண்டுகளுக்கு முன்னர் தேசிகனின் 750வது திருநக்‌ஷத்ரம் நடப்பதற்குச் சில மாதங்கள் முன்னர் இந்தியாவில் இருந்து ஒரு  மாணவ-வாசகி அழைத்து தேசிகனைப் பற்றி எழுதவேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கான உழைப்பை அளிக்க அப்போது என்னால் முடியவில்லை என்று தெரிவித்திருந்தேன்.

இப்போது மீண்டும் தேசிகனைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆணை.

நண்பரிடம் கேட்டேன் ‘ அந்த சந்நியாசி முகத்தப் பார்த்தீங்களா? திருமண், த்ரிதண்டம் எதாவது இருந்ததா?’

‘வைஷ்ணவ சன்னியாசி தான். ஆனா திருமுகத்தப் பார்க்கல. கைல தண்டம் இருந்தது’ என்றார்.

‘காஷாயம் முட்டிக்கு மேல இருந்ததா? இல்ல கீழ எறங்கி இருந்ததா?’ என்றேன்.

‘அது தெரியல்ல. மனசுல பதியல்ல. ஆனால் அவர் சந்நியாசி’ என்றார் நண்பர்.

தேசிகன் மீண்டும் ஆணையிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு, எழுத ஆணையை நிறைவேற்ற முடிவெடுத்தேன்.

ஆனால், அந்த சந்நியாசி யாரென்று மனதைக் குடைந்துகொண்டே இருந்தது.

முன்னர் ஒருமுறை என் கனவில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வந்து அவரது ஏக தண்டம் என்னிடம் வருவது போல் தோன்ற, இதை அவரிடவே காலஞ்சென்ற என் தாயார் கேட்க, ‘சந்நியாசிகள்  ந்ருஸிம்ஹ ஸ்வரூபம். சீக்கிரம் நல்லது நடக்கும்’ என்று அருளினார். சில நாட்களில் திருமணம் நிச்சயமானது.

சரி ஏதோ ந்ருஸிம்ஹ ஆக்ஞை என்று தேசிகன் பற்றி வாசிக்கத் துவங்கினேன்.

சில நாட்கள் கழித்து ஆமருவிப் பக்கங்கள் வாசகர் ஒருவர் தளத்தில் இருந்து தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

‘ரொம்ப நாளா பேசணும்னு எண்ணம். இபப்தான் முடிஞ்சுது. நீங்க அஹோபில மடம் 44-வது பட்டம் ஜீயரப் பத்தி எழுதணும்.’ என்று சொல்லி, அந்த ஆசாரியனுடனான பல நிகழ்வுகளைச் சொன்னார்.

ஒருவேளை கனவில் வந்தது 44ம் பட்டத்து ஜீயரோ? என்ற நினைவில் ஆழ்ந்தேன்.

அப்போது மனதில் பளீரென்று தோன்றியது:

44ம் பட்டம் ஜீயரின் சந்நியாசத் திருநாமம் ‘வேதாந்த தேசிக யதீந்திர மஹாதேசிகன்’. எனக்கு சமாஸ்ரயணம் அவரிடம். ஆக, இது ஆசாரிய ஆக்ஞை என்பது புரிந்தது.

வரும் வாரங்களில் ‘நான் வேங்கடநாதன்..’ தொடரில் சந்திப்போம் என்கிற சுப செய்தியை ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூர நன்நாளில் அறிவிக்கிறேன்.

‘வாழி தூப்புல் நிகமாந்த ஆசிரியன்’

 

 

யானை, சறுக்கல் இன்னபிற..

எழுத்தாளர் ஜெயமோகன் குடியுரிமைச் சட்டம் பற்றிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னூட்டங்கள், பதில் உரைகள் ஏற்கப்படா என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்தப் பதிவு.
 
பா.ஜ.க. தனது லாபத்திற்காகவே இதனைக் கொண்டுவந்துள்ளது என்கிறார். ஆனால், இதனைச் செயல் படுத்துவோம் என்று சொல்லாமல் செய்யவில்லை. பல ஆண்டுகளாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் இருந்ததைச் செயல்படுத்தியுள்ளது. சொல்லாமலா செய்தார்கள்? வாக்குறுதி அளித்ததைச் செயல்படுத்தியுள்ளார்கள். வாக்குறுதியின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றவுடன் மக்கள் ஆணையைச் செயல்படுத்துகிறார்கள். செயல்படுத்தவில்லை என்றால் ஏன் என்று கேட்பதும், செயல்படுத்தினால் குற்றம் என்பதும் சரியா?
 
இதற்கென்று தனியாகச் சட்டம் தேவையா? சாதாரண சென்ஸஸ் எடுக்கும் போதே செய்யலாமே என்று கேட்டுள்ளார் ஜெயமோகன். சட்டம் இல்லாமல் செய்தால் ‘எப்படிச் செய்ய முடியும்?’ என்று கேட்பதும், சட்டம் போட்டுச் செய்தால் சட்டம் தேவையா என்பதும் முரணன்றோ? சொல்லாமலே செய்திருக்கலாம் என்கிறார் ஜெயமோகன். அப்படிச் செய்வது நேர்மையா?
 
பா.ஜ.க. தனது தேர்தல் லாபத்திற்காகவே இவ்வாறு செய்துள்ளது என்கிறார் ஜெயமோகன். பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது பா.ஜ.க.விற்குச் சாதகமாக இருப்பதால் அது கூடாது, ஆனால், அதுவே மற்ற கட்சிகளுக்குச் சாதகமாக இருந்தால் சரியா? உ.தா: இட ஒதுக்கீடு நீட்டிப்பு. ஒரு தலைமுறை இடஒதுக்கீடு பெற்றபின் அந்தக் குடும்பம் ஒதுக்கீட்டில் இருந்து விலக வேண்டும் என்று மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், அவ்வாறு செயல்படுத்தாமல் நீட்டித்துக்கொண்டே இருப்பது சரியன்று என்று தெரிந்தே அனைத்துக் கட்சிகளும் செய்கின்றன. இதனை நீட்டிப்பவர்கள் தங்கள் லாபத்திற்காகவே செய்கிறார்கள் என்று கொள்ளலாமா? ஒரு சட்டம் பா.ஜ.க.விற்குச் சாதகமாக இருப்பது குற்றமா? வாக்குறுதியை நிறைவேற்றுவது தவறா? வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தில் இருந்து ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் 5 லட்சம் நிரப்புவேன் என்று பிரதமர் மோதி சொன்னதாக இன்றும் கேள்வி கேட்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
இந்தச் சட்டத்தால் இந்துக்கள் ஒற்றுமை பெற்று, பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறும் என்னும் தொனியில் உள்ளது அவரது கட்டுரை. இந்துக்கள் முட்டாள்கள் என்று சொல்வது போல் உள்ளது இது. ஒரு வேளை சாதிகளின் அடிப்படையில் ஒன்றுதிரட்டலாம் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தனது ‘சமூக நீதி கலந்த பஹுத் அறிவை’க் காட்டியது நினைவுக்கு வருகிறது.
 
பொருளியல் வீழ்ச்சியை மறைக்கவே பா.ஜ.க. குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது என்கிறார். கடந்த 29 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது மிகவும் கீழ் நிலையில் உள்ளது சீனாவின் பொருளியல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலகெங்கிலும் நிகழ்ந்துள்ள வீழ்ச்சி. சிங்கப்பூரில் வேலை இழப்பு கூடியுள்ளது. இது இந்தியாவை மட்டும் பாதிக்கும் விஷயமன்று என்று தெரிந்திருக்க வேண்டாமா?
 
ஒருசில நிறுவனங்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார். அவை யாவை என்றும் சொல்லியிருக்கலாம். அனில் அம்பானியின் நிறுவனங்கள் போண்டியாகும் நிலையில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.
 
இவை அனைத்தையும் மனுஷ்யபுத்திரன் சொல்லியிருந்தால் கடந்துசென்றிருக்கலாம்.
 
ஜெயமோகன் சறுக்கியுள்ளார். அவருக்குப் பிடித்த யானை நினைவிற்கு வருகிறது. #CAA