எழுத்தாளர் ஜெயமோகன் குடியுரிமைச் சட்டம் பற்றிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பின்னூட்டங்கள், பதில் உரைகள் ஏற்கப்படா என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்தப் பதிவு.
பா.ஜ.க. தனது லாபத்திற்காகவே இதனைக் கொண்டுவந்துள்ளது என்கிறார். ஆனால், இதனைச் செயல் படுத்துவோம் என்று சொல்லாமல் செய்யவில்லை. பல ஆண்டுகளாக அவர்களின் தேர்தல் அறிக்கையில் இருந்ததைச் செயல்படுத்தியுள்ளது. சொல்லாமலா செய்தார்கள்? வாக்குறுதி அளித்ததைச் செயல்படுத்தியுள்ளார்கள். வாக்குறுதியின் அடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மீண்டும் மாபெரும் வெற்றி பெற்றவுடன் மக்கள் ஆணையைச் செயல்படுத்துகிறார்கள். செயல்படுத்தவில்லை என்றால் ஏன் என்று கேட்பதும், செயல்படுத்தினால் குற்றம் என்பதும் சரியா?
இதற்கென்று தனியாகச் சட்டம் தேவையா? சாதாரண சென்ஸஸ் எடுக்கும் போதே செய்யலாமே என்று கேட்டுள்ளார் ஜெயமோகன். சட்டம் இல்லாமல் செய்தால் ‘எப்படிச் செய்ய முடியும்?’ என்று கேட்பதும், சட்டம் போட்டுச் செய்தால் சட்டம் தேவையா என்பதும் முரணன்றோ? சொல்லாமலே செய்திருக்கலாம் என்கிறார் ஜெயமோகன். அப்படிச் செய்வது நேர்மையா?
பா.ஜ.க. தனது தேர்தல் லாபத்திற்காகவே இவ்வாறு செய்துள்ளது என்கிறார் ஜெயமோகன். பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது பா.ஜ.க.விற்குச் சாதகமாக இருப்பதால் அது கூடாது, ஆனால், அதுவே மற்ற கட்சிகளுக்குச் சாதகமாக இருந்தால் சரியா? உ.தா: இட ஒதுக்கீடு நீட்டிப்பு. ஒரு தலைமுறை இடஒதுக்கீடு பெற்றபின் அந்தக் குடும்பம் ஒதுக்கீட்டில் இருந்து விலக வேண்டும் என்று மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், அவ்வாறு செயல்படுத்தாமல் நீட்டித்துக்கொண்டே இருப்பது சரியன்று என்று தெரிந்தே அனைத்துக் கட்சிகளும் செய்கின்றன. இதனை நீட்டிப்பவர்கள் தங்கள் லாபத்திற்காகவே செய்கிறார்கள் என்று கொள்ளலாமா? ஒரு சட்டம் பா.ஜ.க.விற்குச் சாதகமாக இருப்பது குற்றமா? வாக்குறுதியை நிறைவேற்றுவது தவறா? வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தில் இருந்து ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் 5 லட்சம் நிரப்புவேன் என்று பிரதமர் மோதி சொன்னதாக இன்றும் கேள்வி கேட்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தச் சட்டத்தால் இந்துக்கள் ஒற்றுமை பெற்று, பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறும் என்னும் தொனியில் உள்ளது அவரது கட்டுரை. இந்துக்கள் முட்டாள்கள் என்று சொல்வது போல் உள்ளது இது. ஒரு வேளை சாதிகளின் அடிப்படையில் ஒன்றுதிரட்டலாம் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தனது ‘சமூக நீதி கலந்த பஹுத் அறிவை’க் காட்டியது நினைவுக்கு வருகிறது.
பொருளியல் வீழ்ச்சியை மறைக்கவே பா.ஜ.க. குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது என்கிறார். கடந்த 29 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது மிகவும் கீழ் நிலையில் உள்ளது சீனாவின் பொருளியல் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலகெங்கிலும் நிகழ்ந்துள்ள வீழ்ச்சி. சிங்கப்பூரில் வேலை இழப்பு கூடியுள்ளது. இது இந்தியாவை மட்டும் பாதிக்கும் விஷயமன்று என்று தெரிந்திருக்க வேண்டாமா?
ஒருசில நிறுவனங்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார். அவை யாவை என்றும் சொல்லியிருக்கலாம். அனில் அம்பானியின் நிறுவனங்கள் போண்டியாகும் நிலையில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் மனுஷ்யபுத்திரன் சொல்லியிருந்தால் கடந்துசென்றிருக்கலாம்.
ஜெயமோகன் சறுக்கியுள்ளார். அவருக்குப் பிடித்த யானை நினைவிற்கு வருகிறது. #CAA