சிங்கப்பூர் நீர் மேலாண்மை – வலம் கட்டுரை

சிங்கப்பூர் தனது நீர்த் தேவைகளுக்கு என்ன செய்கிறது? தெரிந்துகொள்வோம். #Singapore

‘You know, you can drink the water direct from the tap.’ டாக்ஸி ஓட்டுநர் லிம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.

‘What lah? See ghost already ya? Why mouth open so wide?’ லிம் மேலும் கேட்டதும் திறந்த வாய் மூடிக்கொண்டது. ‘Yes, I mean what I say lah. You drink water from tap and fall ill, I pay you $100’ என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது. இன்னும் பலப்பல ஆச்சரியங்கள் என்னை ஆட்கொள்ளப்போவதை உணராமல் மோன நிலையில் அமர்ந்திருந்தேன்.

‘சிங்கப்பூரில் எத்தனை ஆறுகள் உள்ளன?’ என்று கேட்டவுடன் திரும்பிப் பார்த்த லிம் ஒரு விரலைக் காண்பித்தார். ரஜினிகாந்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலே என் நினைவுக்கு வந்தது.

‘ஆறுகள் எவ்வளவு?’ என்றேன் மறுபடியும்.

‘ஒன்லி ஒன்’ என்றார் ஒற்றை விரலை மீண்டும் ஆட்டியவாறே.

‘அது போதுமா?’ என்றேன் ஆச்சரியத்துடன்.

‘போதாது. ஆனால் அதுவும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் தண்ணீரை மலேசியாவில் இருந்து வாங்குகிறோம்’ என்றார் சிரிப்புடன். ‘காற்று தவிர அனைத்தும் வாங்குகிறோம். அதுதான் சிங்கப்பூர்’ என்று சொல்லி மகிழுந்தை நிறுத்தினார்.

சிங்கப்பூர் முழுவதற்குமான நீர்த் தேவை நான்கு குழாய்களில் இருந்து பெறப்படுகிறது. அவையாவன:

1. வெளி நாட்டு நீர் – மலேசியாவில் இருந்து பெறப்படும் நீர், சுத்திகரிக்கப்பட்டு, உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

1961 மற்றும் 1962ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் மலேசியா இடையே இரு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. 99 ஆண்டுகள் நிகழ்வில் இருக்கும் ஒப்பந்தங்களால் மலேசியாவின் ஜோஹோர் மாநிலம் சிங்கப்பூருக்கு நீர் வழங்கும். சிங்கப்பூர் நீரை சுத்திகரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நடந்தது வேறு. சுத்திகரித்த நீரைத் தனது பயன்பாடு போக மலேசியாவிற்கே விற்றுப் பணம் பார்த்தது சிங்கப்பூர். இல்லாத ஒன்றை வாங்கி, பயன்படுத்தி, மீதம் உள்ளதை விற்றவருக்கே விற்பது திறமையன்றி வேறென்ன?

மலேசியாவிலிருந்து ஒரு நாளைக்கு 250 மில்லியன் கேலன் நீரை, ஆயிரம் கேல்ச்ன் மூன்று செண்ட் என்னும் விலையில் பெற்று, சுத்திகரித்து, தனது பயன்பாட்டுக்குப் போக, பெற்றுக்கொண்டதில் 12% சுத்திகரிக்கப்பட்ட நீரை மலேசியாவிற்கு ஆயிரம் கேலன் ஐம்பது செண்ட் என்னும் விலையில் விற்க வேண்டும் என்பது உடன்பாடு. இதற்கான கட்டமைப்புகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீரை இறைக்கும் இயந்திரக் கட்டமைப்புக்கள் என்று கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டு அதற்கான பெரும் பகுதி செலவையும் ஏற்றுக்கொண்டது.

1990ல் சிங்கப்பூர் லிங்கூ அணையைக் கட்டியது. இது மலேசியாவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஜோஹோர் ஆறு வற்றிவிடும். இதனால் கடல் நீர் உட்புகுந்துவிடும். அதைத் தடுக்க, ஆண்டுதோறும் பொழியும் மழை நீரை லிங்கூ அணை தேக்கி வைக்கிறது. கோடைக்காலத்தில் நீரை ஜோஹோர் ஆற்றில் விடுகிறது. இதனால் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து நீர் கிடைக்க வழி செய்யப்படுகிறது. முன்னோக்கிச் செயல்படுவது என்பது இதுவே.

மலேசியாவிடமிருந்து பெறும் நீர் மட்டுமே சிங்கப்பூரின் நீர் ஆதாரமன்று. 721 சதுர கிமீ அளவே உள்ள நாட்டில் 8000 கிமீ அளவிற்கு நீர் சேகரிப்பு வாய்க்கால்கள் அமைத்துள்ளார்கள். இவை மழை நீரை நீர்த்தேக்கங்களுக்குச் கொண்டு செல்கிறார்கள். வானிலிருந்து விழும் ஒவ்வொரு மூன்று துளி மழை நீரில் இரண்டை சிங்கப்பூர் சேமிக்கிறது என்கிறார் தற்போதைய பிரதமர் லீ ஸியன் லூங். உலக வரைபடத்தில் ஒரு சிறு சிவப்புப் புள்ளி என்று அழைக்கப்படும் சிங்கப்பூரில் 17 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. தெருவில் நடந்து செல்லும்போது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கு துவங்குகிறது’ என்னும் வாசகங்கள் கண்ணில் தென்படுகின்றன. மழை நீரைச் சேகரிக்கும் புதைகுழாய் உள்ளதை நினைவுபடுத்துவன.

நீர்த்தேக்கங்கள் மட்டும் தானா? இன்னும் வேறென்னவெல்லாம் உள்ளன?

2. மழை நீர் – 720 சதுர கிமீ அளவுள்ள நாடு தனது மொத்த அளவையும் மழை நீர்ப் பிடிப்பு பகுதியாகப் பாவிக்கிறது. வானில் இருந்து விழும் நீர் ஒவ்வொன்றும் நிலத்தடிக் குழாய்கள் முலம் 17 நீர்த்தேக்கங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு சுத்திகரிக்கப்பட்டு நாட்டு மக்களின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீர்த்தேக்கங்களில் நீரின் சுத்தத்தை இடைவிடாமல் கண்காணித்த வண்ணமே உள்ளனர். நீரில் உள்ள உப்பின் அளவு, நீரில் இயற்கையாக உள்ள பாசிகள் மற்றும் நுண் உயிரினங்கள் என்று அனைத்தையும் ரோபோக்கள் மூலம் கண்காத்து வருகின்றனர். ரோபோக்கள் வாத்து வடிவில் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கங்களில் அங்குமிங்கும் அலந்துகொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவற்றின் காலுக்கடியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு நீரின் அளவு, வெள்ள அபாய அறிவிப்புகள் முதலியனவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். நாட்டில் தெருவோரங்களில் உள்ள நீர்ப் பிடிப்பு ஜல்லிக் கம்பிகளின் மீது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கிருந்தே துவங்குகிறது’ என்ற வாசகம் தென்படுகிறது. இவ்வகையாக, ஒரு தேசமே நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள நிலை உலகில் வேறேங்கும் இல்லை எனலாம்.

நீர்த்தேக்கம் பாழடைந்தும், செடிகள், விழுதுகள் நிறைந்தும், சமூகக் கேடான செயல்கள் நடைபெறும் இடமாகவும் இருப்பதைப் பல இடங்களில் கண்டிருந்த எனக்கு, பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் வீடு இருக்கிறது, பார்க்கிறீர்களா என்று கேட்ட அந்த வீட்டு முகவரிடம், ‘நீர்த்தேக்கம் இருந்தால் கொசு முதலியவை இருக்கலாம். எனவே வேறிடம் பார்க்கலாமே’ என்றிருந்தேன். முகவர் ஆச்சரியத்துடன் நோக்கினார். ‘நீர்த் தேக்கம் இருந்தால் கொசுக்கள் இருக்க வேண்டுமா? என்ன நியாயம் இது?’ என்றவர், மேலும் தொடரவில்லை. ‘பண்டான் தேக்கத்தின் அருகில் அருமையான அரசு குடியிருப்பு இருக்கிறது. காட்டுகிறேன். சுற்றுப்புறம் பிடிக்கவில்லையென்றால் வேறு வீடு பார்க்கலாமே’ என்றவரிடம் அரை மனதாக ஒப்புக்கொண்டேன்.

மகிழுந்து பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் சென்றது. ஒரு நொடியில் சுற்றுச் சூழலே மாறிவிட்டிருந்ததை உணர்ந்தேன். கீழிறங்கிப் பார்க்கையில் கதிரவன் கீழிறங்கிக்கொண்டிருந்தான். சுமார் நான்கு தொடர் ஓட்டக் குழுவினர் என்னைக் கடந்து சென்றனர். மிதிவண்டியில் வந்த விளையாட்டு வீரர்கள் போல் தோற்றம் அளித்த சிலர் பண்டான் ஏரியில் படகுப் போட்டிகள் நடத்தும் குழுவினராம். ஏரி எப்படியுள்ளது என்று பார்க்கலாமா என்று முகவரிடம் கேட்க, அவர் பாதை காண்பித்தார். ஏரியைச் சுற்றி பெரிய மதில் சுவர்கள் அமைத்திருந்தனர். மதிகளில் புற்செடிகள், அவற்றின் ஊடே படிக்கட்டுகள். படிகளின் மீதேறினால் 6 கி.மீ. சுற்றளவுள்ள ஏரியின் பிரும்மாண்டம். மறையும் கதிரொளி, செக்கர் வானம், மாபெரும் ஏரியின் கொள்ளளவு முழுவதும் கொண்ட ததும்பும் நீர். பூமித்தாயின் கருணைக் கொடை பேருருக்கொண்டு என்னை வரவேற்றதாக உணர்ந்தேன். அத்துணைத் தண்ணீரை அவ்வளவு அருகில் நான் கண்டிருக்கவில்லை. மீன்கள் துள்ளிக் குதிக்கும் பேரெழில். சடாரெனப் பறந்து வந்து மீனைக் கொத்திச் செல்லும் நாரைகள், மகிழ்ச்சியுடன் மதகின் மீது ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள், ஆங்காங்கே பாதுகாப்புக்கான அறிவிப்புகள், ‘மீன் பிடிக்கத் தடை’ வாசகங்கள் என்று அத்துணைக் காட்சிகளையும் ஒருசேர உள்வாங்கிக்கொள்ளத் தடுமாறினேன் என்பது உண்மை.

சற்றே நடந்து சென்றால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் பூங்கா, அதன் அருகில் நீர்த்தேக்கத்திற்கு மழை நீரை எடுத்து வரும் கால்வாய்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், கால்வாயின் மீதுள்ள சிறு குப்பைகளை நீக்கும் காற்றடித்த ரப்பர் குழாய்கள், கால்வாயில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் (நீரின் அளவு, குப்பைகளை வலைகளைக் கொண்டு அகற்றுதல் முதலிய பணிகளைச் செய்வர்) என ஒரு மாய உலகம் என் கண் முன் விரிந்தது. இந்த இடத்தையா வேண்டாம் என்றோம் என்று சற்று வெட்கப்பட்டேன். பண்டான் அருகில் இருந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தேன்.

நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் வினோதமான பறவைகள் வருவதுண்டு. அவை மலேயா பகுதியின் பூர்வகுடிப் பறவைகளாம். தினமும் இவற்றுடன் உரையாடியிருக்கிறேன். இவை தவிரவும் நீர் நாய்கள், மீன்கள் என்று தினமும் இயற்கைக் காட்சிகளால் நிரம்பியதாகவே எங்கள் வாழ்க்கை அமைந்தது. வேடிக்கை என்னவென்றால் அவை அனைத்துமே செயற்கையாக அமைக்கப்பட்ட இயற்கை.

ஓரிருமுறை மலேய உடும்பைக் கண்டு முதலையோ என்று பயந்திருக்கிறேன். ‘No lah, we don’t have crocodiles in our reservoirs. They are mostly garden lizards. However, stay away from them for your own safety’ என்று தனது ஓட்டத்தினூடே சில மணித்துளிகள் நின்று அறிவுரை கூறிச் சென்ற சீன மூதாட்டி தற்போது நினைவிற்கு வருகிறார்.

ஆச்சரியப்படத்தக்க இன்னொரு செய்தியும் உள்ளது. 1960, 70களில் சிங்கப்பூரின் வணிக மையங்களான நியூட்டன் சர்க்கஸ், ஆர்சர்ட் சாலை முதலியன வெள்ள நீரில் மூழ்கின. காரணம் இவை கடல் மட்டத்தை விடத் தாழ்வான பகுதிகள். இயற்கையின் இந்த தடையையும் சிங்கப்பூர் தகர்த்தெறிந்தது. ‘Storm Water Storage’ என்னும் திட்டத்தால் அப்பகுதிகளில் உள்ள உபரி நீரைப் பூமிக்கு அடியில் உள்ள குழாய்கள் மூலம் சற்று தூரத்திற்கு எழுத்துச் செல்லப்படுகின்றன. குழாய்கள் சற்று சரிந்த நிலையில் அமைக்கப்பட்டன. இதன் மூலம் உபரி நீரைப் பூமியின் புவியீர்ப்பு சக்தி மூலமே தேசத்தின் ஒரு பகுதில் இருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கே தனியாக அமைக்கப்பட்டிருந்த வெள்ள நீர் சேகரிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு. பின்னர் பூமிக்கு மேலே மோட்டார் பம்புகள் மூலம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து நீர்த்தேக்கங்களுக்கான கால்வாய்களுக்குள் செலுத்தப்படுகின்றன. வெள்ளத்தை வென்றதாகவும் ஆயிற்று, வெள்ள நீரைத் தேக்கியதாகவும் ஆயிற்று.

மரீனா கால்வாய் மரீனா நீர்த்தேக்கமாக மாறிய கதையைச் சொல்லாமல் சிங்கப்பூரின் நீர் மேலாண்மையைக் கடந்து செல்லவியலாது. இங்கு கடலுக்கே அணை போடப்பட்டுள்ளது. மரீனா கால்வாய் வழியே மேலதிக மழை நீர் கடலைச் சென்றடையும். அந்த நீரைத் தேக்கினால் என்னவென்று சிந்தித்தார் சிங்கப்பூரின் தந்தையும் முதல் பிரதமருமாகிய லீ குவான் யூ. மரீனா கால்வாக்குக் அணை கட்டுவது சாத்தியமா என்று ஆராயத் தனது பொறியாளர்களை ஊக்குவித்தார். விளைவு, மரீனா கால்வாய் வழியே கடலுக்குச் செல்லும் நீர் தடுக்கப்பட்டது. சுமார் 10,000 ஹெக்டேர் நீர்ப்பிடிப்புப் பகுதி உருவானது. அதிக மழையின் போது சிங்கப்பூரின் சைனா டவுன், ஜலன் புசார் முதலிய பகுதிகளில் பொழியும் மழை நீர் இக்கால்வாய் வழியே கடலைச் சென்றடையும். தற்போது தடுக்கப்பட்ட நிலையில் நீர் வீணாகவில்லை. அதிக மழை பொழிந்து, அதே நேரம் கடல் வற்றமும் (low tide) ஏற்பட்டால், மரீனா அணைக்கட்டின் 9 மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கடலில் கலக்கிறது. உயர் அலை (high tide) நேர்ந்தால், ராட்சத நீர் இறைப்பான்கள் மூலம் உபரி நீர் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. அப்படியாயினும் மரீனா நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு ஒரே அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் அதிக அளவில் படகு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு, மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் இவ்வணைக்கு அமெரிக்கச் சூழியல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இம்மாதிரியான பெருவியப்பளிக்கும் பொறியியல் சாதனைகளைப் பெரும் முயற்சி செய்தாவது செயலாக்க வேண்டிய தேவை என்னவென்ற கேள்வி எழலாம். அதற்கு நாம் 1965ம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி நாடான போது, அப்போதைய மலேசியத் தலைவர் துன்கு அப்துல் ரஹ்மான் இங்கிலாந்து தூதரிடம் சொன்னது: ‘மலேசியா நினைப்பதைச் சிங்கப்பூர் செய்ய வேண்டும். இல்லையெனில் நீரை நிறுத்திவிடுவோம்’. இந்த அச்சுறுத்தல் தன் தலை மீது தொங்கும் கத்தியென்றுணர்ந்த லீ குவான் யூ, தனி நாடான உடனேயே நீர் ஆதாரங்களில் தன்னிறைவை அடையும் வேலைகளில் இறங்குவிட்டார். அதற்கு மரீனா தடுப்பணை ஒரு உதாரணம். ஆங்கிலத்தில் ‘Leaving no stone unturned’ என்றொரு வாசகம் உண்டு. அவ்வகையானவையே சிங்கப்பூரின் நீர் ஆதாரப் பெருக்கத்திற்கான முயற்சிகள்.

பொழியும் மழையைத் தேக்கி வைக்கலாம். ஆனால், மழை பொழிய வேண்டுமே. சிங்கப்பூரின் தந்தை லீ குவன் யூ தடாலடியானதொரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இனி யாரும் மரம் வெட்டக் கூடாது. மரம் வெட்டினால் சிறை மற்றும் கடும் அபராதங்கள், சாலை விபத்துக்களில், சாலையோர மரங்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால் கடும் அபராதங்கள்’ என்று அதிரடி நடவடிக்கைகளை எழுத்தார். பலன்: நாடு பூங்காவானது. சாலையில் வாகனங்களில் செல்கையில் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தவிர பொட்டல் வெளிகள் என்று கிஞ்சித்தும் இல்லாதபடி நாடே பச்சை மயனானது. இதனால் மழை தவிரவும் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று, நாட்டின் வெப்பம் இரண்டு டிகிரி அளவிற்குக் குறைந்தது; அதனால் சில தொற்று நோய்க் காய்ச்சல்கள் குறைந்தன. இரண்டு, வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட மாசு கணிசமாகக் குறைந்தது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்தார் காலஞ்சென்ற பிரதமர் லீ. காற்று மாசடைவதைத் தடுக்கவும் நாட்டின் வெப்பத்தைக் குறைக்கவும் லீ சிங்கையைப் பசுமையாக்க முனைந்தார். அதன் பலனாக மழையும் பொய்க்காமல் வாரி வழங்குகிறது. அதனால் ஆண்டுதோறும் பெறும் 2400 மிமீ மழையை அனேகமாக முழுவதுமாகவே தேக்கி வைக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரைப் பசுமையாக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் பூமத்திய ரேகையின் மீதும் அதன் அருகிலும் அமைந்திருக்கும் நாடுகளுக்கு விஜயம் செய்தனர். அந்த நாடுகளில் என்னென்ன மரங்கள், தாவரங்கள் வளர்கின்றன என்று கண்டறிந்து, அவற்றைச் சிங்கப்பூரில் வளர்க்கத்துவங்கினர். ஏனெனில் சிங்கப்பூரும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள தேசம் என்பதால்.

3. கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம்: இதன்மூலம் தேவையான அளவு கடல் நிரைக் குடி நீராக்கித் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மார்ச் 2019 வரை மூன்று கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை சிங்கப்பூரின் நீர்த் தேவையில் 30% வரை அளிக்கின்றன. 2020ம் ஆண்டிற்குள் மேலும் இரண்டு நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அரசு இயற்றியுள்ள முன்வரைவுத் திட்டத்தின் படி 2060ம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையில் 30 விழுக்காடாவது கடலில் இருந்தே பெறப்பட வேண்டும். அரசும் தனியார் நிறுவனங்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

தற்போதுள்ள மூன்று சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஒன்றைக்காட்டிலும் மற்றொன்றில் நவீனத் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்க மிக அதிகமான அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. இதனைக் குறைக்கும் விதமாக முடிந்த இடங்களில் எல்லாம் சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளை நிறுவியுள்ளது சிங்கப்பூர். ‘எலக்ட்ரோ-டிஅயொனைசேஷன்’ என்னும் முறையைக் கண்டறிந்து, கடல் நீரை மின்காந்த அலைகளின் ஊடே செலுத்தி, அதன் மூலம் அதில் உள்ள உப்புகளைக் களைய முற்பட்டு அதனைத் தனது துவாஸ் சுத்திகரிப்பு மையத்தில் பொதுப் பயனீட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது.

அத்துடன் கடலோரத்தில் உள்ள மாமரங்கள் கடல் நீரிலிருந்து நன்னீரை எப்படிப் பிரித்தெடுக்கின்றன என்று கண்டறிந்து ‘பயோமிமிக்’ முறையில் செயற்கையாக அதனைச் செய்ய இயலுமா என்றும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது அரசு. அத்துடன் இயூரிஹலின் மீன் வகைகள் ( பல வகையான நீர் நிலைகளிலும் வாழும் மீன்கள்) எவ்வாறு உப்பு நீரை நல்ல நீராக்குகின்றன என்று கண்டறீயும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. இம்மாதிரியான இயற்கை முறைகளைக் கையாண்டால் குறைந்த மின்சாரச் செலவில் கடல் நீரைச் சுத்திகரிக்க இயலும் என்பதால் அம்முறைகளைக் கற்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.

ஒரு க்யூபிக் மீட்டர் அளவு சுத்திகரிப்பு நீரை உற்பத்தி செய்ய ஐம்பது காசுகள் முதல் ஒரு டாலர் வரை செலவாகிறது என்று கணக்கிட்டுள்ளார்கள். இந்தச் செலவையும் குறைக்கவே மேற்சொன்ன நடைமுறைகள்.

4. கழிவு நீர் சுத்திகரிப்பு: நாட்டு மக்கள் பயன்படுத்தி நீரை, உலகிலேயே மிகவும் அதிகமான தரக்கட்டுப்பாடுகள் கொண்ட சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு குடிநீராக மாற்றி அதனைப் பயன்படுத்துவது. மனிதர்கள் பருகும் தரத்தில் இருந்தாலும் தற்போது வரை இது மக்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இவ்வாறாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர், இரண்டாம் குழாயான நீர்த்தேக்கங்களுக்குச் சிறிய அளவில் அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வினியோகிக்கப்படுகிறது.

மக்கள் பயன்படுத்திய நீர் என்பதால் அந்த நீரும் மூன்றடுக்கு முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மெம்ப்ரேன் எனப்படும் மெல்லிய நீர் சலிப்பான்கள் மூலம் பலமுறை சுத்தப்படுத்தப் படுகிறது. இதன் மூலம் திடக் கழிவுகள், நுண் கழிவுகள் முதலியன நீக்கப்படுகின்றன. பின்னர் அந்த நீரின் ஊடாக அல்ட்ரா வயலட கதிர்கள் செலுத்தப்படுகின்றன. இதனால் பாக்டீரியா, வைரஸ் முதலான நுண் கிருமிகள் நீக்கப்படுகின்றன. இம்மாதிரிப் பல முறைகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் 2060ம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.

இவ்வகையாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றி அதன் தொழில் துறைப் பயன்பாட்டாளர்கள் கூறுவதைத் தெரிந்துகொண்டாலே அந்த நீரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள இயலும். இதற்காக அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என். சிங்கப்பூரில் உள்ள பயன்பாட்டாளர்களைப் பேட்டி கண்டது. இவ்வகையான நீரைப் பெரிய அளவில் பயன்படுத்தும் Systems on Silicon நிறுவனத் தலைவர் சி.வி.ஜெகதீஷ் சொல்வது, ‘சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை எங்கள் தொழிற்சாலையில் தொழில் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறோம். அரசு நிறுவனமான பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB – Public Utilities Board) அளிக்கும் இந்த நீரை நாங்கள் மூன்று முறைகள் மறு சுழற்சி செய்து பயன்படுத்திப் பின்னரே கழிவு நீர் வாய்க்காலில் விடுகிறோம்’ என்கிறார்.

இம்முறையில் பெறப்படும் நிரைப் பற்றி தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ கொள்கை ஆய்வுக் கழகத்தின் (Lee Kuan Yew School of Public Policy) பேராசிரியர் அசித் பிஸ்வாஸ், ‘சிங்கப்பூரின் இந்த மறுசுழற்சி முறைகளை உலக நாடுகள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கடைசிச் சொட்டு நீரையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும். இவ்வாறு மறுசுழற்சி செய்வதற்குப் பெரிய அளவிலான மின்சக்தி தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் குறைந்த மின்சக்தியில் நகழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதைப் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்’ என்கிறார்.

‘NeWater’ – ‘புதுநீர்’ என்றழைக்கப்படும் மறுசுழற்சி நீரை ஒரு க்யூபிக் மீட்டர் அளவு உற்பத்தி செய்ய முப்பது முதல் ஐம்பது சிங்கப்பூர் காசுகள் செலவாகிறது என்கிறது அரசு.

1974ல் புது நீருக்கான முயற்சிகள் துவங்கியிருந்தன. ஆனால், தொழில் நுட்பச் செலவுகள் மிக அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அது மீண்டும் துவக்கப்பட்டு 2002ம் ஆண்டு நனவானது. ‘புது நீர்’ குறித்துப் பேசுகையில் லீ குவான் யூ சொன்னது: ‘இதைச் சாதிக்கத் தேவையான தொழில்நுட்பம் எப்போதாவது ஏதாவது வகையில் உருவாகும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது.’ காலஞ்சென்ற தீர்க்கதரிசியின் நம்பிக்கை தற்போது உயிர் பெற்று நடமாடிக்கொண்டிருக்கிறது.

2061ம் ஆண்டு மலேசியாவுடனான நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் காலாவதியாகும் வரை காத்திருக்காமல், நீர் ஆதாரங்களின் தன்னிறைவை எட்டிவிட முயல்கிறது சிங்கப்பூர். 2014ம் ஆண்டு நாட்டின் நீர்த்தேவையில் 30% மறுசுழற்சி நீரால் ஈடுகட்டப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.

நீரைக் கொணர்வது, சுத்திகரிப்பது என்பது வரை சரி. ஆனால், உபயோகம் எப்படி? அங்கே சிக்கனம் பேணப்படுகிறதா? என்றால் அங்கும் பெருவியப்பே காத்திருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிற்கும் நீர்மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் கடந்த மாதம் பயன்படுத்தியுள்ள நீரின் அளவு, தேசம் முழுமைக்குமான சராசரிப் பயன்பாட்டின் அளவு முதலியன மாதாந்திர அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு குடும்பம் தான் அதிகமாகப் பயன்படுத்திய மாதங்கள் யாவை என்று அறிந்து, அதற்கேற்றாற்போல் பயன்பாட்டை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தற்போது வீடுகளில் கழிவறை, சமையல் அறை முதலிய இடங்களில் உள்ள குழாய்களிலும் நீர்மானிகள் பொருத்தப்படுகின்றன. நீராடுவதற்கு, கழிப்பிடப் பயன்பாட்டிற்கு, சமையலுக்கு என்று தனித்தனியாக எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது. உலகில் வேறெந்த நாட்டிலும் சிங்கப்பூர் அளவிற்கு நீர் மேலாண்மை செய்யப்படுகிறதா என்பது கேள்வியே.

நீர் மேலாண்மையில் தான் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மையில் திறன் வாய்ந்த நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது சிங்கப்பூர். அவற்றின் மூலம் மத்தியக் கிழக்கு நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள், பாரதத்தின் குஜராத், ராஜஸ்தான் முதலிய மாநிலங்கள் முதலியவற்றில் நீர் ஆதாரங்களைப் பெருக்கும் முயற்சிகளிலும், உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. உதா: சிங்கப்பூரின் ஹைஃபளக்ஸ் என்னும் நீர் மேலாண்மை நிறுவனம் ஜப்பானிய நிறுவனமான இத்தோச்சுவுடன் இணைந்து குஜராத்தின் பாருச் பகுதியில் நாளொன்றுக்கு 88 மில்லியன் கேலன் அளவிற்குக் கடல் நீரிலிருந்து நன்னீர் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றினாள் தனக்கு அன்னியச் செலாவணி கிடைக்க வழி செய்வதுடன், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்னும் கருதுகோளின் வழி தனக்குத் தெரிந்த, தன்னிடமுள்ள திறமையை உலகமும் பயன்படுத்திக் கொள்ளத் தன்னிடமுள்ள 180 நீர் மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் 26 நீர் தொடர்பான ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் வழிசெய்து வருகிறது சிங்கப்பூர். நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கங்கள், நீர் மேலாண்மை குறித்த புத்தாய்வுகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நீர் தொடர்பான தொழில் முனைவோருக்கான பயிலரங்குகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்று உலகில் பல நாடுகளையும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கச் செய்துவருகிறது சிங்கப்பூர்.

இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத நாடு இன்று உலகின் மற்றெல்லா நாடுகளுக்கும் பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. நீர் மேலாண்மை அவற்றில் ஒன்று. அவ்வளவே.

சுட்டிகள்:

https://www.financialexpress.com/opinion/water-management-heres-how-most-cities-in-india-can-meet-domestic-needs/1626613/

https://www.pub.gov.sg/watersupply/fournationaltaps/newater

https://www.cnbc.com/video/2017/03/22/how-singapore-reuses-its-water-.html

https://www.eco-business.com/news/lee-kuan-yew-the-architect-of-singapores-water-story/

https://www.sciencedirect.com/science/article/pii/S0958211812700927

வலம் இதழில் வெளிவந்த கட்டுரை

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

2 thoughts on “சிங்கப்பூர் நீர் மேலாண்மை – வலம் கட்டுரை”

  1. Excellent writeup sir! நீர் மேலாண்மையை….சரியாக…செயல்படுத்துவதும்…மேம்படுத்துவதும்…..நீர்வளம்…குறைந்த நாடுகளே! இங்கு…நீர்வளம் இருந்தும்…சரியான..திட்டமிடல்..தொழில் நுட்பம் இல்லாமல்…மழை பெய்தாலும்…மழை பெய்யாவிட்டாலும்….துயரம் தான்!..இஸ்ரேல் நாடுகூட…நீர் மேலாண்மையில்..மிகச்சிறந்த வழிமுறைகளை…பயன்படுத்தும்..நாடு!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: