‘கூடிய சீக்கிரம் குடி வந்துடுங்கோ’ சியாமளா மாமி சிரித்தபடி சொன்னது கண்களிலேயே நின்றது.
‘ ஶ்ரீமதி, என்ன சொல்ற? ஆத்தப் பார்த்தியே என்ன நினைக்கற?’
‘சொல்ல என்ன இருக்கு? ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த மாமாவும் மாமியும் இந்த வயசுல எப்பிடி இருக்கா பாருங்கோ. தன்மையா, அனுசுரணையா பேசறா. கீழ அவா இருக்கா. மேலாத்த வாடகைக்கு விடறா. அதிகம் பிக்கல் பிடுங்கல் இல்ல. லாக்டவுன் சமயத்துல வீடு மாத்தணும். அது ஒண்ணுதான் கஷ்டம்.’ ஶ்ரீமதி சொன்னது முதல் லாக்டவுன்.
‘ஆச்சு. வந்தாச்சு. வீடு பிடிச்சிருக்கு. மனுஷாளும் நல்லவாளா இருக்கா. அந்த மாமா ரொம்ப தன்மையாப் பேசறார். மயிலாப்பூர் மயிலாப்பூர்னு சொன்னோம். நல்ல இடமா கெடச்சதே பெருமாள் அனுக்ரஹம் தான்.’
பெருமாள் கோவிலுக்கு அருகில் வீடு கிடைத்து, வீட்டு ஓனர்கள் நல்லவர்களாகவும் கிடைக்க பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
‘உங்களுக்கு பையன் இருக்கான்னு சொன்னேளே, எங்க இருக்கான்?’
‘எல்லா பிராமணாளுக்கும் வர வியாதி தான். என்.ஆர்.ஐ. வியாதி. ஃபின்லாண்ட்ல இருக்கான். போகவேண்டாம்னா யார் கேக்கறா? ஆனா, ஜாதகத்துல இருக்கு, எட்டாத எடத்துல தான் இருப்பான்னு’ என்றார் சோதிடம் தெரிந்த ஓனர்.
‘நான் 55ல இஞ்சினியரா சேர்ந்தப்போ, சம்பளம் நூத்தியெம்பது ரூபா தொண்ணூறு நயா பைசா’ என்று துவங்கினார் என்றால் ஒரு மணி நேரம் போகும்.
நான்கு மாதங்கள் கழித்து ‘என்ன, டி.வி.ய ஹால்ல வெச்சிருக்கே?’ என்றார்.
‘இல்லியே, இங்கயேதானே இருக்கு?’
‘பெட் ரூம்ல இருந்து வெளில கொண்டு வந்துட்டியா?’
தன் நெற்றிப் பொட்டிற்கு அருகில் விரலைச் சுற்றி ஶ்ரீமதி ஜாடை காட்டி, ‘அவாத்துல இருக்கறதா நினைக்கறார்’ என்றாள்.
ஒரு மாதம் கழித்துக் கதவிடித்து, ‘ஒரு டூ தவுசண்ட் ருபீஸ் இருக்குமா?’ என்றார் ஓனர் மாமா.
சியாமளா மாமியிடம் சொல்ல, மாமி கண் கலங்கி, ‘இப்பல்லாம் பல நேரம் இப்பிடித்தான் இருக்கார். நேத்திக்கி கீழ எறங்கிப் போறேன்னு சொல்லிட்டு கல்யாண் நகர்ல நின்னுண்டு இருக்கார். என்ன பண்றதுன்னே தெரியல’
இரண்டு மாதங்களில் எங்கு பார்த்தாலும் பணம் கேட்கத் துவங்கினார். ‘கொடுத்துட்டேனே’ என்றால் ‘ஓ, சரி நான் பர்ஸ்ல வெச்சுட்டேன் போல’ என்று செல்லத் துவங்கினார்.
அப்போது சுரேஷ் ஃபின்லாந்தில் இருந்து வந்து இறங்கவும், லாக்டவுன் 2 துவங்கியது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்திருந்தான். சுமார் நாற்பது வயதிருக்கலாம்.
‘அங்க பண்ணிக்க நாலஞ்சு வருஷம் ஆகும். கிட்னி கிடைக்கறதே கஷ்டம். அதுவும் ஏஷியன் குரூப்போட சேராது. பல தொல்லைகள். அதால இங்க வாடான்னுட்டேன்’ என்ற சியாமளா மாமியின் நெற்றியில் கவலைக் கோடுகள் தெரிந்தன.
ப்ரிலிமினரி செக் அப் என்று சென்றவன் அட்மிட் ஆகி, விரைவில் கொரோனாவால் காணாமல் ஆனான்.
‘வந்த வேகத்துலயே போயிட்டான். நான் இருக்கறச்சே இவன் எதுக்குப் போகணும்?’ சியாமளா மாமிக்குத் துக்கம் கேட்டு ஆறுதல் சொல்ல வார்த்தைப் பற்றாக்குறை.
‘தோசை வார்த்திருக்கா. ஒண்ணு சாப்பிடறேளா?’ என்றார் ஓனர் மாமா.
Leave a comment