The side that is not spoken about, generally.

‘மாளிகாபுரம்’ என்றொரு மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருந்தார்கள். தெரியாமல் பார்த்துவிட்டேன். 

என்ன கொடுமை சார் ? எட்டு வயதுப் பெண் குழந்தைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும் என்று பகுத்தறிவில்லாத பாட்டி கதை சொல்கிறாள். அந்தப் பெண் குழந்தையும் ஐயப்பனைக் காணப் போவதாகக் கனவு காண்கிறது. 

கனவு கண்டால் போதாதா ? ஐயப்பனைத் தரிசிக்க அழைத்துச் செல்ல தன் தந்தையிடம் நச்சரிக்கிறது. பத்து வயதிற்குள் சென்று தரிசித்துவிட வேண்டுமாம். இல்லாவிட்டால் ஐம்பது வயது வரை காத்திருக்க வேண்டுமாம். இதெல்லாம் என்ன நம்பிக்கையோ ? அதுவும் எட்டு வயதுப் பெண் குழந்தைக்கு மனதில் உறைக்கும் படி பலர் இதையே சொல்லி வளர்க்கிறார்கள். 

பகுத்தறிவும், பெண்ணீயமும் தழைத்தோங்கும் கேரளத்தில் இம்மாதிரியான பிற்போக்குவாத விதைகளைக் குழந்தைகள் மனதில், பிஞ்சு உள்ளத்தில் விதைப்பது என்ன நாகரீகம் ? இந்த அழகில் கேரளம் கல்வியில் முன்னேறிய மாநிலமாம், இடது சாரி முற்போக்கு அரசு நடைபெறுகிறதாம்.. ஆனால் அதே மாநிலத்தில் இம்மாதிரியான பிற்போக்கு எண்ணங்களைக் குழந்தைகளின் மனதில் புகுத்தும் ஆர்.எஸ்.எஸ்.ஈய, பாஜகவீய, ஃபாசிஸ உடான்சுகளை அந்தச் சமூகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது ?

இப்படியான சனாதனத்தை வேர் அறுக்கவே நமது மாநிலத்தில் பொல்.வருமாஅழகன் வரிந்துகட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளார் என்பது கொசுறு தகவல். 

நம் தமிழ் நாட்டில் பாருங்கள். இந்தப் படம் வந்ததோ, ஓடியதோ வெளியே தெரியாமல் எப்படிப் பாதுகாத்தோம் ? அதுதானே பெரியாரீய தளிகையில் மார்க்ஸீய வெண்பொங்கலுடன் அம்பேத்காரீய அக்கார அடிசிலையும் அயோத்திதாசரீய அதியற்புத கருதுகோள்களைக் கலந்து உண்ணும் தமிழனின் மறப்பண்பு ? தியேட்டரில் ஈ ஓட்டக்கூட ஆளில்லாத நிலையில் அல்லவா இந்தப் படத்தைக் கடந்து சென்றோம் ? இது யார் மண் தெரிகிறதா இப்போதாவது ? சங்கிகளே, சந்து பொந்துகளில் ஒளிந்துகொள்ளுங்கள்.

சரி. போகட்டும். சனாதனச் சகதியில் உழன்றுகொண்டிருக்கும் மறை கழன்ற சில வம்பன்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்று பேட்டி, காணொளி என்று போட்டுள்ளார்கள். வீட்டில் வேலை இல்லாமல் வெட்டியாகப் படம் பார்த்துவிட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லிச் செல்வது பஹுத்தறிவுப் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட நமது தலை நிமிர்ந்த மாநிலத்தில் நடப்பது நமது சுயமரியாதை கலந்த சமூக நீதிச் சமூகத்திற்குக் கேடு தான். அந்தப் புல்லுருவிகளைக் களைந்திட, தீரா-விடப் போராளிகள் முன்னின்று செயல் ஆற்ற வேண்டும். ஆற்றுவீர்களா ? ஆற்றுவீர்களா ? 

சரி. படத்தில் காட்சிகள் அருமையாக உள்ளன. கேரளத்தின் இயற்கை அழகு கொப்பளிக்கிறது. படத்தில் வரும் சிறுவனும் சிறுமியும் அசாத்தியமாக நடித்துள்ளார்கள். பசப்பல் இல்லாமல், முற்போக்கு முகமூடிகள் இல்லாமல் நேரடியாக ஹிந்துக் கடவுள் பற்றிப் படம் எடுத்துள்ளார்கள். பாராட்டுகள். 

சிறுவர்கள் ஐயப்பனைத் தரிசித்தார்களா இல்லையா என்பது கதை. எப்போதாவது உங்கள் பன் டி.வி.யில், உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வெளிவரும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். நம் தலை எழுத்து அது தானே ?  

தமிழ்த் திரை உலகிற்கு வெட்கம், ரோஷம் இருந்தால், இம்மாதிரியாக ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியிடுங்கள் பார்க்கலாம். இன்றைய திரை நாயகர் யாராவது ஒருவர் உன்னி முகுந்தன் செய்த பாத்திரம் போலச் செய்யுங்கள் பார்க்கலாம். 

அப்போது ஒப்புக்கொள்கிறேன், நீங்கள் உணவில் உப்பு சேர்த்துக்கொள்கிறீர்கள் என்று.

ஒரு காந்தாராவால் கன்னடம் தன் ஆண்மையை நிரூபித்துவிட்டது. ஒரு மாளிகாபுரத்தால் மலையாளமும் அப்படியே. 

ஐயா தமிழ்த் திரை உலகே,  அப்ப நீங்க ? 

One response

  1. balajimarkandeyan Avatar

    பொல்.வருமாஅழகன் ! அட்டகாசம்

    Liked by 1 person

Leave a comment