லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்னும் எழுத்தாளர் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. சாஹித்திய அகாதெமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் என்னும் அறிமுகத்துடன் அவர் எழுதிய ‘அக்கினி சாட்சி’ என்னும் நூல் வாசிக்கக் கிடைத்தது நான் செய்த பாக்யம் என்றே கருதுகிறேன்.
அந்தர்ஜனம் என்பது நம்பூதிரிப் பெண்களைக் குறிப்பது என்பதை அறிந்திருந்தேன். வீட்டின் உள்ளே இருப்பவர்கள் என்கிற பொருளில் வரும் மலையாளச் சொல் அந்தர்ஜனம்.
பொதுவாகவே நம்பூதிரிகளின் வாழ்வு பற்றி அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவன் என்பதால், நம்பூதிரிப் பெண் எழுதி, சாஹித்திய விருது பெற்ற, நம்பூதிரிப் பெண்களைப் பற்றிய நாவல் என்பது நூல் விஷயமாக என் ஆவலை மேலும் தூண்டியிருந்தது.
பொதுவாகவே கனமான கருத்துள்ள நூல்களை வாசிக்கும் போது, எந்தவித கவனச் சிதறலும் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது என் வழக்கம். இந்த நாவலுக்கும் அதே முறையைப் பின்பற்றி, ஒரு நாளில் முடித்துவிடலாம் என்று இறங்கினேன்.
கனம் என்று எழுதியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. காத்திரம் என்று சொல்லலாமோ ? தெரியவில்லை. அடர்த்தி என்பது சரியான தமிழ்ச் சொல்லாக இருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லவும்.
ஒரு நாளில் வாசித்து முடிக்க எண்ணித் துவங்கியது, முதல் சில பக்கங்களைக் கடக்கவே முடியவில்லை. கதையாக்கம் நேரடியானதுதான் என்றாலும், கதைத் துவக்கத்தின் சூழல், காலம், வர்ணனை முதலியன புதியதாக இருந்தன. ஆழ்ந்த தத்துவப் பின்புலம் கொண்ட நாவல் என்பதை முதல் சில பக்கங்களே சுட்டிக்காட்டின.
ஆக, முதல் நாள், முதல் பகுதியைக் கூட வாசிக்கவில்லை. ஒரே சில பக்கங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கலானேன். ( இது என் வழக்கம் கூட. தத்துவப் பின்புலம் உள்ள நாவல்களையும், நூல்களையும் அவ்வகையில் வாசிப்பது நல்ல பலன் அளிக்கவல்லது என்பது என் அனுபவம். கதையின் ஓட்டத்திற்குள்ளும், கதைக் களத்திற்குள்ளும் என்னை முழுவதுமாக ஆழ்த்திக் கொள்ள இந்த உத்தி பயன்படுகிறது. ஆங்கில நூல்கள் எனில், அவற்றின் நடையை எனதாக்கிக் கொள்ளவும் உதவுகிறது ). நிற்க.
தினமும் ஒரு பகுதி என்று வாசிக்க முடிவெடுத்தேன். அதுவும் முடியவில்லை. தினம் ஒரு பகுதியில் சில பக்கங்கள் என்று வைத்துக்கொண்டேன். அலுவலகப் பணி தவிர, நாட்டு நடப்புகள், பிற வம்புகள் எதுவும் இன்றி, நாவல் ஒன்றே ஒரே நோக்கம் என்று ஒரு பிரார்த்தனை போல் வாசித்தேன் என்று தோன்றுகிறது.
ஆசாரமான நம்பூதிரிகளின் வாழ்க்கை முறை பேசப்படுகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில், கேரளத்தில் ஏற்பட்டு வந்த சமூக மாற்றங்கள், நம்பூதிரிப் பெண்களின் வாழ்க்கையும் மாற்றம் அடைய வேண்டிய கால கட்டம் என்றாலும், அவ்வாறு மாற முடியாத சூழல் பற்றிய சுய பரிசோதனைகள் பற்றிய கதை முகத்தில் அறைந்தாற்போல் சிலதையும், நாசூக்காகச் சிலதையும் சொல்லிச் செல்கிறது.
இடதுசாரி இயக்கங்கள் பற்றிய சுட்டிகள், காந்தி நடத்திய சமூக, அரசியல் மாற்றங்களுக்கான நடவடிக்கைகள், இவற்றுடன் ஆசாரமான நம்பூதிரி மனையின் உறவாடல்கள், இவை பற்றிய சித்தரிப்புகள் வாசகனை 1920-70 காலகட்டத்தில் அல்லாடச் செய்கின்றன. வாசகன் நிகழ் உலகில் இருந்து விலகி, அந்தக் காலகட்டத்திற்குள் சென்று வாழ்கிறான்.
நம்பூதிரி மனைகளில் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், முறைகள், கடுமையான சட்டங்கள், கடைப்பிடித்தே ஆக வேண்டிய ஆசாரங்கள், மூர்க்கமாக அமல்படுத்தப்பட்ட உடைகள், குறிப்பாகப் பெண்களின் உடை, குடை முதலியவை பொதுவாசகனுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவன. ‘ஸ்மார்த்த விசாரம்’ என்னும் ஒழுக்கம் சார்ந்த விசாரணை முறை பற்றி ஏற்கெனவே நிறைய வாசித்துத் தெரிந்துகொண்டிருந்ததால் ஒரு சில செய்திகள் எனக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால், இவை பற்றி எதுவும் அறிந்திராத மலையாள நம்பூதிரி வழக்கங்கள் பற்றி எந்த அறிமுகமும் இல்லாத நவீன வாசகனுக்கு இந்த நாவல் பேரதிர்ச்சியையே அளிக்கும்.

கதையின் முடிவு ஓரளவு ஊகிக்க முடிவதாக இருந்தாலும், முடிவின் நாடகத்தன்மை ஒரு திரைப்பட இறுதிக் காட்சி போல அமைந்துள்ளது சற்று நெருடல்.
நாவலை ஒவ்வொரு பகுதியாக, மெதுவாக வாசித்துவிட்டு, அடுத்த நாள் முழுவதும் அதன் பாதிப்பில் வாழ்ந்து வந்த ‘அக்னி சாட்சி’ நாட்கள் மறக்க முடியாதவை. எப்போது நினைத்தாலும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்விதமாக உள்ளதை நான் உணர்ந்து எழுதுகிறேன்.
நம்பூதிரி சமூகத்தில் இருந்து வந்த ‘சம்பந்தம்’ முறை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அது ஒரு நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டமைப்புக்கான வழிமுறை என்கிற பார்வையை நவீன வாசகன் கொண்டிருக்க வேண்டும். ‘சம்பந்தம்’ முறையைத் தற்கால நவீனப் பார்வைகள் கொண்டு நியாயப்படுத்த முயல்வது வெற்றி தர வாய்ப்பில்லை என்றாலும், அதே ‘சம்பந்தம்’ முறை, சில மாறுதல்களுடன் சோழ அரசில், அரச குடும்பத்தினரிடம் இருந்ததும், பின்னர் பல மன்னர்கள் அந்த வழியைக் கையாண்டதும் வரலாற்றில் காணக்கிடைப்பது. பெண் எடுத்து / கொடுத்து அரசுகளை விரிவு படுத்தி / காத்து ஆட்சி செய்தது போல, நம்புதிரிகளின் நிலப்பிரபுத்துவ முறைக்குப் போர்த் தொழில் வீரர்களின் பாதுகாப்பு கருதி ‘சம்பந்தம்’ முறை ஏற்பட்டிருந்தது என்பது ஊன்றி வாசிக்கும் யாருக்கும் விளங்கும்.
1976ல் எழுதப்பட்ட இந்த நாவலில், கதையின் ஓட்டத்தின் ஊடே, சில பிரபல மலையாள நாவல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றியும் கதை மாந்தர்களே சொல்லிச் செல்வது போல் அமைத்துள்ளது தற்போது 2023ல் வாசிக்கும் வாசகனுக்குப் பண்டைய பிரபல மலையாள எழுத்தாளர்களைக் காட்டிக் கொடுக்கிறது. இந்த உத்தி அருமை.

நாவல் முழுவதிலும் வெறும் உரையாடல்கள் மட்டுமே இல்லாமல், வால்மிகி ராமாயணம், பாரதம் மற்றும் சில கதைப் பாடல்கள் என்று பலதிலும் இருந்து மேற்கோள்கள்களைக் கதை மாந்தர்கள் வாயிலாகச் சொல்ல வைத்திருப்பதும், அல்லது, அவை பின்னணியில் வேறு யாரோ சொல்வது போல அமைத்திருப்பதும் ஆசிரியரின் கற்பனை வளத்தையும், ஆழ்ந்த ஆன்மீக மரபுப் பயிற்சியையும் காட்டுகிறது.
கேரளத்தின் ஜாதிக் கொடுமைகளைச் சுட்டிய சுவாமி விவேகானந்தர், அன்றைய கேரளத்தை, ‘மனநிலை பிறழ்ந்தவர்களின் இருப்பிடம்’ என்றார். அக்கினி சாட்சியில் அதற்கான சில தருணங்களைக் காண முடிகிறது.
சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்துள்ளதே இத்தனை அருமையான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும் போது, மூலமான மலையாளத்தில் வாசிக்கக் கிடைத்திருந்தால் ? மொழி தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே.
இந்த நாவல் 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வெறும் புறவயமான புரட்சி, மரபுத் தன்மை எதிர்ப்பு, வறட்டுப் பெண்ணீயம் என்று இல்லாமல், கேரள நம்பூதிரிப் பெண்களின் பார்வையில் சமூக, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட காலகட்டத்தை ஒரு ஆன்மீகப் பார்வையாக அளித்துள்ள எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனம், பாரதத்தின் உன்னதமான எழுத்தாளர்களில் ஒருவர் என்பதை உணர்ந்துகொண்டேன்.
நாவலின் கதை ஓட்டத்தைப் பற்றியோ, கதைகளில் வரும் நிகழ்வுகள் பற்றியோ வேண்டும் என்றே நான் எழுதவில்லை. வாசகர்களின் வாசிப்புக்கு அது இடையூறாக இருக்கலாம் என்பதால். தமிழில் இத்தகைய நூலை நான் வாசித்ததில்லை என்பதாலும்.
நூல் : அக்கினி சாட்சி. எழுத்தாளர் : லலிதாம்பிகா அந்தர்ஜனம். தமிழ்: சிற்பி பாலசுப்பிரமணியம். பாரத சாஹித்திய அகாதெமி வெளியீடு.
Leave a comment