The side that is not spoken about, generally.

சென்ற ஆண்டு ஏற்றிய தேசீயக்கொடி சற்று சிறியதாக இருந்தது. இந்த ஆண்டு பெரியதாக இருக்க வேண்டும் என்பதால் புதிய கொடி வாங்க வேண்டும் என்று வீட்டில் முடிவானது.

அலுவல் முடிந்து மாலை 8 மணி வாக்கில் கொடி வாங்க மயிலை ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள காதி வஸ்திராலயம் சென்றேன். ‘என்ன சார். . இப்ப வர்றீங்க.. கொடி ஸ்டாக் இல்ல, எல்லாம் வித்துடிச்சி’ என்றார் கடையில்.

தேசபக்தி அதிகரித்திருப்பது பற்றி கொஞ்சம் மகிழ்ச்சிதான் என்றாலும், கொடி கிடைக்கவில்லையே என்கிற வருத்தம். ( ‘நாலு நாளா சொல்லிண்டே இருக்கேன். முன்னாடியே வாங்கியிருக்கலாமோனோ?’ மனதின் குரல் ஒலிக்கவும் இன்னும் சோகம் அதிகரித்தது. கூடவே மழை வேறு.)

‘ஒண்ணு பண்ணுங்க. கோபாலபுரம் காதில கிடைக்கலாம். ஆனா, சாத்தியிருப்பாங்களே’ என்ற கடைக்காரர், ‘இங்க வெங்கடேச அக்ரஹாரத்துல இன்னொரு காதி இருக்கு. கடை சாத்தாம இருந்தா கெடைக்கலாம்’ என்றார்.

மழை நின்று தூரல் தொடர்ந்தது.

மனதில் நப்பாசையுடன், வெ.அ.காதி கடைக்குச் சென்றேன். எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தார் கடைப் பையன்.

‘கொடி. தேசீயக் கொடி’ என்றவாறே உள்ளே பார்த்தேன். பெரிய அளவிலான கொடியை மடித்துப் பையில் போட்டுக்கொண்டிருந்தார் கடைக்காரர், வேறு ஒரு வாடிக்கையாளருக்காக.

‘கொடி ஒண்ணே ஒண்ணு தான் இருந்துச்சு. இவர் வாங்கிட்டார்’ என்றான் பையன்.

‘அடடே.. உள்ள எதாவது ஒண்ணு இருக்கா பாருங்க’ என்றேன், நப்பாசையுடன்.

வாங்கியவர் சொன்னார் :’ நீங்க கோபாலபுரம் போங்க. கிடைக்கலாம். அதுக்கு முன்னாடி ராமகிருஷ்ணா மடம் ரோடு காதில கேட்டுப் பாருங்க’ என்றார்.

‘அங்க போயிட்டுத்தான் வரேன். அவங்கதான் அனுப்பினாங்க. சரி. வேற எங்கியாவது கிடைக்குமா?’ என்றேன்.

‘பில் போட்டுடலாமா? ‘ கடைக்காரர் முந்தைய வாடிக்கையாளரிடம் கேட்டார்.

‘ஒரு நிமிஷம் இருங்க’ என்ற வாடிக்கையாளர், என்னைப் பார்த்து, ‘இத நீங்க வாங்கிக்கோங்க. எனக்கு மாடி ஏற முடியாது. அதோட, நீங்க ரொம்ப ஈகரா இருக்கீங்க. முகத்துல தெரியுது ‘ என்றார்.

‘அப்ப உங்களுக்கு?’ என்றேன், கலவையான உணர்ச்சிகளுடன்.

‘இல்ல நீங்க வாங்கிக்கோங்க. நான் சின்னதா சட்டைல குத்திக்கற மாதிரி வாங்கிக்கறேன்’ என்றார் கொடியை முதலில் வாங்கியவர்.

‘இனிய சுதந்திர தின

வாழ்த்துகள் ‘ என்றபடி பணத்தைக் கட்டிவிட்டு தேசீயக் கொடியை வாங்கி வந்தேன்.

பாரததேவி, எப்போதும் போல், கைவிடவில்லை.

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

#HarGharTiranga#independenceday

Leave a comment