The side that is not spoken about, generally.

‘விஷ்ணு இலக்கு பிராம்மணனக் கொண்டாரும்னா, சுத்த சவுண்டிப் பிராம்மணன அழைச்சுண்டு வந்திருக்கீறே. நான் ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு சொல்றான்’, உபாத்யாயர் கிருஷ்ணனிடம் இரைந்தார் ராமசாமி.

‘வருத்தப்படாதீரும் ஸ்வாமி. அவருக்குக் காது கேக்காது. அதான், நீங்க கேட்க கேட்க அவர் சும்மாவே இருந்தார்,’ கிருஷ்ணன் சொன்னார்.

‘இது வேறயா ? போகட்டும். சாப்பிட்டீரே திருப்தியான்னு கேட்டா, திருப்தின்னு சமஸ்க்ருதத்துல சொல்லணுமா இல்லையா ? அது கூடவா தெரியாது?’ விஷ்ணு இலையில் அமர்ந்திருந்த ரகுவைப் பார்த்தவாறு உரக்கச் சொன்னார் ராமசாமி. ஏதோ புரிந்தது போலவும், வருத்தப்படுவது போவவும் முகம் சுண்டி எச்சில் இலையைப் பார்த்தவாறே அம்ர்ந்திருந்தான் ரகு.

‘என்னவோ போம். எங்க தோப்பனார் வேதவித்து. அவருக்கான ஸ்ராத்தம் நன்னா நடக்கணுமேன்னு படபடப்பா இருக்கு’ பிரபல தொழில் அதிபர் ராமசாமி சொல்லவும், ‘அதெல்லாம் நன்னா நடந்துடுத்துன்னா. பித்ருக்கள்ளாம் திவ்யமா அமிசேஞ்சா. உங்களுக்கு எந்தக் குறையும் வராது’ என்ற கிருஷ்ணன் வாத்யார், பையை எடுத்துக்கொண்டு கிளம்பும் ரகுவைக் கண்டதும், ‘இங்க பிராம்மணார்த்தம் சாப்பிட்டாச்சு. அடுத்த மூணு மாசத்துக்கு வேற எங்கியும் பிராம்மணார்த்தம் இருக்கப்படாதுன்னு சாஸ்த்ரம். அதுக்காகத்தான் ஸ்ராத்த கர்த்தா ராமசாமி சார் உங்களுக்கு ஏகத்துக்கு சம்பாவனை பண்ணியிருக்கார். மூணு மாசத்துக்குள்ள வேற பிராம்மணார்த்தம் சாப்பிட்டா பித்ருக்கள், ராமசாமி சார சபிச்சுடுவா. பல ஜென்மத்துக்குப் பாவம் அவருக்கு, தெரியறதா ரகு ஸ்வாமி?’ என்று உரக்கக் கேட்டார் கிருஷ்ணன்.

காதில் விழவில்லை என்பதை உணர்த்துவது போல் முக பாவனை செய்த ரகுவிடம் ராமசாமி, ‘நீங்க மூணு மாசத்துக்கு பிராம்மணார்த்தம் சாப்பிடாம இருக்கணும். தவறி சாப்பிட்டேள்னா அத்தனை பாவமும் எனக்கு வந்து சேரும். மூணு மாசத்துக்குண்டான சம்பாவனையக் குடுத்திருக்கேன்’ என்றார்.

கண்களை அகல விரித்து ராமசாமியை உற்று நேக்கிய ரகு, தன் நோக்கியா 1010 ஃபோனை எடுத்து, ‘சீமாச்சு, பித்ரு இலைக்கு ஆள் இல்லேன்னு கார்த்தால சொன்னியோன்னோ, அதுக்காகவே நான் இன்னும் சாப்பிடாம காத்துண்டு இருக்கேன். இதோ வந்துடறேன். இல்ல இல்ல. கிருஷ்ணன் சொன்ன ஆத்துல விஷ்ணு இலைல நான் உட்காரல. அரை மணில வந்துடறேன். குளிச்சுட்டு பித்ரு இலைக்கு உக்காண்டுக்கறேன்’ என்றார்.

Leave a comment