எல்லாம் அந்த ராஜாஜியைச் சொல்ல வேண்டும். அதான் சார், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்று ஒரு மஹானுபாவன் இருந்தாரே, அவரே தான்.
தான் ஏதோ காந்தியைப் பின்பற்றினோமா, வேதாரண்யத்த்ற்கு உப்பு சத்தியாக்கிரகம் பண்ணப் போனோமா என்று இல்லாமல், ஊரில் இருப்பவர்களை எல்லாம் நடுத்தெருவில் இழுத்து விட்டுவிட்டார் இந்த ராஜாஜி.
நல்ல ஆசாரமான வைஷ்ணவக் குடும்பத்தில் பிறந்த தேவராஜ ஐயங்கார் என்பவரைக் கெடுத்து, அவர் மனதை மாற்றி, காந்தி, மது விலக்கு, ஹரிஜன சேவை என்று குழப்பி, நடுச்சந்திக்குக் கொண்டுவந்துவிட்டால், வேறு என்ன சொல்வது.
1920ல் தான் உண்டு, தன் ஆசாரங்கள், கோவில் உண்டு என்று இருந்த தேவராஜன் என்கிற 17 வயதுப் பையனைத் தனது ‘அரசியல் பயிற்சிக் கூடம்’ என்கிற அமைப்பில் செர்த்துக்கொண்டார் ராஜாஜி. அரசியல் கற்றுத் தருகிறேன் என்று சொல்லி, அவன் மனதில் பின்வரும் செய்தியை அழியாமல் இருக்கச் செய்தார் ராஜாஜி :
- தீண்டாமைக் கொடுமையை அறவே ஒழிக்க வேண்டும்.
- ஹரிஜனங்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்.
- பிற்பட்ட மக்கள் வளர்ச்சி பெற முடியாமல் தடுக்கும் தீங்குகளில் மது முதலாவதாகும்
- ஆகவே மதுவை ஒழிக்க வேண்டும்.
ராஜாஜியின் அறிவுரைப்படி, வட ஆற்காடு மாவட்டம் வாலாஜா தலுகா காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்து, மது ஒழிப்பு பிரச்சாரம் துவங்கினார் தேவராஜ ஐயங்கார். போலீஸ் தடை உத்தரவு இருந்தது. அதை மீறி, ராஜாஜியுடன் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்ட தேவராஜனை மூன்று மாதக் காவலில் வைத்தது போலீஸ்.
1923ல் சோளிங்கரில் இருந்த ஹரிஜனக் காலனியில் தீப்பிடித்தது. மக்கள் வீடின்றித் தவித்தனர். தனது மனைவி செல்லம்மாளின் நகைகளை விற்று ஹரிஜனங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார் தேவராஜன் ஐயங்கார்.
காந்தி சொன்னார் என்பதற்காக அக்கிரஹாரத்தை விட்டு வெளியேறி, ஹிரிஜனக் குடும்பங்களுடன் வாழத் துவங்கினார் தேவராஜ ஐயங்கார். ஹரிஜனங்களின் வீடுகளில் உணவு உட்கொள்வது , அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது என்று இருந்த தேவராஜ ஐயங்காரையும் அவரது குடும்பத்தாரையும் ஜாதி ப்ரஷ்டம் செய்து, சோளிங்கரை விட்டு வெளியேற்றினர்.
இந்த நிகழ்ச்சி தேவராஜனை மேலும் உறுதிப்படுத்தியது. ஹரிஜனங்களின் சேவையை முன்னை விட அதிக முனைப்புடன் மேற்கொண்டார் தேவராஜ ஐயங்கார்.
காந்தியடிகள் கதர் இயக்கம் வெற்றி பெற உழைத்த தேவராஜன், ராமசாமி நாயக்கருடன் சேர்ந்து கதர் விற்பனையில் ஈடுபட்டார். ‘இவரைப் போல ஒவ்வொரு பிராமணரும் இருக்க வேண்டும்’ என்று நாயக்கர் சொல்லியுள்ளார் என்று மூத்த பத்திரிக்கையாளர் கே.சி.லட்சுமி நாராயணன் எழுதுகிறார்.

ராட்டையைப் பிரபலப்படுத்துவதிலும் ஈடுபட்ட தேவராஜன், தானும் நூல் நூற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
1939ல் தனி நபர் சத்தியாக்கிரகம் செய்து, அலிப்பூர் சிறையில் ஓராண்டு கழித்தார் தேவராஜன்.
1942ல் ஆகஸ்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பணியாற்றி, கைதாகி, வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் இரண்டாண்டுகள் இருந்தார்.
பாரத விடுதலைக்குப் பிறகு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குப் பத்து ஏக்கர் விவசாய நிலம் வழங்குவதாக அரசு அறிவித்தது. ‘சுதந்திரப் போராட்ட தியாகங்களுக்குக் கூலி பெறுவது முறை இல்லை’ என்று கூறி மறுத்துவிட்டார் ஐயங்கார்.
1979ம் ஆண்டு காலமான தேவராஜ ஐயங்கார் பற்றித் தமிழக/ மத்திய அரசுப் பாட நூல்கள் எதிலும் காணக்கிடைக்கவில்லை.
எல்லாம் அந்த ராஜாஜியைச் சொல்ல வேண்டும்.
#Azadikaamritmahotsav
Leave a comment