The side that is not spoken about, generally.

நீங்கள் ‘அந்நியன்’ திரைப்படம் பார்த்தீர்கள் தானே ? ஆமெனில், உங்களுக்கு ‘அம்பி’, ‘ரெமோ’ பாத்திரங்கள் தெரிந்திருக்கும்.

நிஜ வாழ்க்கையில் அப்படியானவர் வில்லியனூர் லட்சுமிநாராயண ஐயர். வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் மணியக்காரர் லட்சுமிநாராயண ஐயர். பகலில் மணியக்காரராகக் கோவில் வேலை. கணக்கு பார்ப்பது, கோவிலில் பராமரிப்பு, இன்ன பிற. இரவில் கடத்தல்.

அடடா.. சிலை / மணல் கடத்தல் எல்லாம் இல்லை. அதெல்லாம் செக்யூலர் கடத்தல்கள். இவர் செய்தது தேசீயத்திற்கான கடத்தல்.

கொஞ்சம் ப்ளாஷ்பேக் போகலாம்.

பாரதியாரின் ‘இந்தியா’ பத்திரிக்கையை ஆங்கிலேய அரசு தடை செய்தது. பாரதியாரையும் கைது பண்ண முயற்சித்தது அரசு. ஆங்கில அரசிடம் இருந்து தப்பி, பிரெஞ்சுப் பகுதியான புதுவைக்கு வந்தார் பாரதியார். இந்தக் கதை நமக்குத் தெரிந்ததே.

இந்த விஷயத்தில் புதுவை பிரெஞ்சுப் பிரஜையான லட்சுமிநாராயண ஐயர், ‘இந்தியா’ பத்திரிக்கையைத் தான் நடத்துவதாகப் புதுவை பிரெஞ்சு அரசிடம் அனுமதி பெறுகிறார். புதுவையில் பதிவும் பண்ணுகிறார். ஆசிரியராகப் பாரதியார் இருந்து ‘இந்தியா’ பத்திரிக்கை நடக்கிறது.

இதிலென்ன பெரிய சேவை என்று கேட்பவர்களுக்கு : புதுவையில் உள்ளவர்கள் ‘இந்தியா’ பத்திரிக்கை வாசித்தால் என்ன ? வாசிக்காவிட்டால் தான் என்ன ? ஆங்கிலேய இந்தியாவில் உள்ளவர்கள் வாசிப்பது தானே முக்கியமானது ? அதற்கு புதுவையில் வெளியாகும் பத்திரிக்கை, இந்தியப் பிரதேசத்திற்கு வர வேண்டும்.

எல்லையைத் தாண்டுவது எப்படி ? ஆங்கில போலீஸ் பிடித்துவிடாதா ?

அங்குதான் ‘அம்பி’அவதாரம் முடிந்து, ‘ரெமோ’ அவதாரம் துவங்குகிறது. கோவில் மணியக்காரர் லட்சுமிநாராயண ஐயர், கடத்தல் ஐயர் ஆகிறார்.

‘இந்தியா’ பத்திரிக்கை புதுவையில் அச்சாகும் அன்று, வில்லியனூரில் இருந்து புதுவைக்குச் செல்லும் லட்சுமிநாராயண ஐயர், அச்சகத்திற்குள் சென்று, மாலை வேளையில் சாக்கு மூட்டைகளில் ‘இந்தியா’ பத்திரிக்கையை அடைத்து மாட்டு வண்டியில் வில்லியனூர் எடுத்து வருகிறார். இரவு வேளையில், வைக்கோல் கட்டுகளுக்குள் ‘இந்தியா’ பத்திரிக்கையை மறைத்து வைத்து, தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு, வயல் வரப்புகளில் நடந்து, பிரெஞ்சு எல்லையைக் கடந்து, விழுப்புரம், கடலூர் என்று தன் நண்பர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். பார்ப்பவர்கள் யாரோ வைக்கோல் கட்டைத் தூக்கிச் செல்கிறார்கள் என்று நினைப்பர்.

இந்தப்பணியில் ஐயருக்கு உதவியாகப் பிரெஞ்சு புதுவைப் பகுதி விவசாயிகள் அனேகம் பேர் செயல்பட்டுள்ளனர். லட்சுமிநாராயண ஐயர் இல்லையெனில், இந்தியா பத்திரிக்கை அச்சாகியும் இருக்காது, பாரதியின் வீரம் சொட்டும் எழுத்துகள் இந்தியத் திருநாட்டில் அன்னாட்களில் வலம் வந்திருக்கவும் முடியாது.

ஐயர் அத்துடன் நிற்கவில்லை. வங்காளப் பிரதேசத்தில் ஆங்கிலேயரால் தேடப்பட்டு வந்த குதிர் ராம் போஸ் என்னும் தீவிரவாதப் போக்குள்ள விடுதலைப் போராட்ட வீரரைத் தான் மணியக்காரராக இருந்து வந்த வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவிலில் மறைத்து வைத்துப் பாதுகாத்தார் ஐயர்.

அரவிந்த கோஷ், வ.வே.சு.ஐயர் முதலிய தீவிரவாதப் போராளிகளியும் புதுவையில் தங்கவைக்க மிகவும் உதவியாகத் திகழ்ந்துள்ளார் ஐயர்.

தேச சேவையுடன் நிற்காமல், தமிழ்த் தாத்தா உ.வே.சா.விற்கும் உதவியுள்ளார் லட்சுமிநாராயண ஐயர் என்றார் நம்புவீர்களா ?

உ.வே.சா. வில்லியனூர் வந்த போது, அவரிடம் ‘வில்லைப் புராணம்’ என்னும் ஓலைச் சுவடி, பிரான்ஸின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள விபரத்தைத் தெரிவித்த ஐயர், அது உ.வே.சா.விற்குக் கிடைக்கவும் உதவினார். பின்னாளில் உ.வே.சா. ‘வில்லைப் புராணம்’ நூலைப் பதிப்பித்தார் என்று தெரிகிறது.

இதையெல்லாம் விட இன்னொன்று செய்தார் ஐயர். தீவிரவாதப் போக்குள்ள போராளிகளுக்கு உதவுகிறார் ஐயர் என்கிற சந்தேகம் எழுந்தவுடன், ஐயரைப் போலீஸ் கண்காணிக்கத் துவங்கியது. வீரன் வாஞ்சி நாதனுக்குத் துப்பாக்கி வரவழைத்துக் கொடுத்த சந்தேகத்தின் பேரில், ஐயரைப் பலமூறை போலீஸ் விசாரித்துள்ளது. நிலம், பெண், பொன் என்று பல வகையான ஆசை காட்டி விசாரித்துள்ளது போலீஸ். சித்திரவதை அனுபவித்தாலும், தானும் சிக்கிக் கொள்ளாமல், யாரையும் காட்டியும் கொடுக்காமல் தப்பித்துள்ளார் ஐயர்.

இத்தனைக்கும் வாத நோயால் ஒரு கால் முடமானவர் லட்சுமிநாராயண ஐயர். ‘நொண்டி வாத்தியார்’ என்று அழைக்கப்பட்ட ஐயர், வைக்கோல் சுமையைச் சுமந்து, ‘இந்தியா’ இந்தியாவெங்கும் கிடைக்க வழி செய்தார் என்று நினைக்கும் போது கண்ணீர் மல்குவதைத் தடுக்க வழியில்லை.

‘இன்னா ஆமருவி ஐயங்காரே, ஐயிரு இத்த செஞ்சாரு, அத்த செஞ்சாருன்னு டுமீல் உடுறியே’ என்று #திராவிடமாடல் குஞ்சுகள் கொக்கரிக்கலாம். 09-12-2001 தினமலர் வாரமலரில் பாரதிதாசனின் புதல்வர் மன்னர்மன்னன் இத்தகவல்களை எழுதியுள்ளார். ஆக..

#Azadikaamritmahotsav

Leave a comment