‘ஏன் சார் ஓடறீங்க ? நான் பைத்தியம் எல்லாம் இல்லை. நான் சொல்வதெல்லாம் உண்ம’ என்று சொல்லியும் அவர் தலைதெறிக்க ஓடினார்.
‘போய்யா.. நீயும் உன் கதையும். அசட்டு அம்மாஞ்சிகளப் பத்தி சொல்லி, தியாகம், மண்ணாங்கட்டின்னு என் நேரத்தை வீணடிக்கறியா ? இனி உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்’ என்று ஓடிய நண்பரிடம் நான் அப்படி என்னதான் சொல்லிவிட்டேன் ?
நீங்களாவது ஓடாமல் வாசியுங்கள்.. ப்ளீஸ்.
அப்பா துணை கலெக்டர். நல்ல சம்பளம். ( கிம்பளம் வாங்குவது வழக்கம் இல்லாத காலம்). அவர் சொந்த சம்பாத்தியத்தில் ஆதம்பாக்கத்தில் ஒரு வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் ராமகிருஷ்ணன் பிறந்தான்.
நல்ல வளர்ப்பு, நல்ல கல்வி. வழக்கறிஞராக ஆனான் ராமகிருஷ்ணன். நல்ல தொழில். நல்ல பணம். வக்கீல் ராமகிருஷ்ண ஐயர் சமூகத்தில் ஒரு புள்ளியானார்.
அப்போது வந்து சேர்ந்தது விதி, மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி வடிவில்.
1921ல் காந்தி மதுரைக்கு வருகிறார். ஓர் உரையாற்றுகிறார். அந்தச் சிறிய வயதிலா ராமகிருஷ்ணன் காந்தியைச் சந்திக்க வேண்டும்? ஹும். எல்லாம் பாழ்.
காந்தி ‘குஷ்ட நிவாரணம்’ செய்யச் சொன்னார் என்பதற்காக, ஆதம்பாக்கத்தில் பெருவியாதிக்காரர்களுக்காக ஓர் இலவச மருத்துவமனையைத் துவங்குகிறார் ராமகிருஷ்ண ஐயர். ஆஸ்பத்திரி சரி ஐயா.. தினமும் காலையில் அங்கு சென்று தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்கிறேன் என்று அவர்களின் புண்களைக் கழுவி, மருந்து போட்டுக் கட்டு கட்டி விடுவது எல்லாம் கொஞ்சம் அதிகம் தானே ? உங்களுக்குத் தெரிகிறது. ஆனால், காந்திக்கும் ராமகிருஷ்ண ஐயருக்கும் தெரியவில்லை பாருங்கள்.
ராமகிருஷ்ண ஐயரின் அம்மாஞ்சித்தனம் அத்துடன் நிற்கவில்லை. ஹரிஜன சேவை என்று ஆரம்பித்துவிட்டார். கேட்டால் காந்தி சொன்னாராம். ஹரிஜனப் பிள்ளைகளைத் தன் வீட்டில் வசிக்கச் செய்து, அவர்களுக்கு உணவளித்துப் பராமரித்து, கல்வி புகட்டி, கோவில்களுக்கும் அழைத்துச் சென்று ஆன்மீகப் பாதையில் வழிகாட்டியுள்ளார் ஐயர்.
‘என்னுள் ஒளிரும் சைதன்யம், மற்ற எல்லா உயிர்களிலும் ஒளிர்வதே’ என்கிற அத்வைத சித்தாந்த நெறி வழி, ஆடு, கோழி முதலான உயிர்கள் கோவில்களில் பலியிடப் படுவதை எதிர்த்தார் ஐயர். வழக்கம் போல் எதிர்ப்பு.
எதைப் பற்றியும் பவலைப்படாத ஐயர், மது விலக்கு, கதர் இயக்கம் என்று காலம் கழித்தார். காந்தியடிகளின் பல போராட்டங்களில் சிறை சென்றார்.

நாடு விடுதலை அடைந்தது. சைதாப்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார் ஐயர். இப்போது தான் பைத்தியம் முற்றி, காந்தி வழியில் தொடர்ந்து நேர்மையாக இருப்பேன் என்று ஆரம்பித்தார். 1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய பங்காற்றினார் ஐயர்.
ஆசார்ய விநோபா பாவேயுடன் சேர்ந்து தமிழகத்தில் ‘பூதானம்’ இயக்கத்தில் பணியாற்றினார் ஐயர். விநோபா தமிழகம் எங்கும் நடைபயணம் மேற்கொண்ட போது, ஐயர் அவருடன் பயணித்தார். 1956ல் காஞ்சிபுரத்தில் ‘சர்வோதய சம்மேளனம்’ என்னும் நிகழ்வை நடத்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் முதலியோரை வரவழைத்து சர்வோதய இயக்கத்திற்கு வலுவூட்டினார்.
அதுதான் போகட்டும் என்றால், மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த போதும், ‘செங்கல்பட்டு சேலம் ரயில் சேவை’, ‘ரயில்வே ஊழியர்களுக்கு வீட்டு வசதி’, ‘தமிழ் நாட்டில் சாலை வசதிகள்’, ‘மின் உற்பத்தி சாதனங்கள் தயாரித்தல்’, ‘ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் ஆஃபீசர்களுக்குப் பதவி உயர்வு’, ‘பால் பவுடர் கடத்தலைத் தடுபப்து’ என்று பலதைப் பற்றியும் கேள்விகள் எழுப்பி, மத்திய அரசிடம் இருந்து பதில்களைப் பெற்றுள்ளார். (ராஜ்ய சபா இணையதளத்தில் உள்ளன. )
பாராளுமன்றத்தில் சக்தி வாய்ந்த பல குழுக்களிலும் இடம் பெற்ற ராமகிருஷ்ண ஐயர், கருமமே கண்ணாகப் பணியாற்றினார்.
விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பென்ஷன் தருகிறோம் என்று அரசு சொல்ல, இவர் மறுத்துவிடுகிறார். ஆனால், படிப்பறிவில்லாத பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குப் பென்ஷன் வழங்க உதவுகிறார். என்னவோ போங்க சார்.
ஆதம்பாக்கத்தில் அவரது தந்தையார் வாங்கிய வீட்டை விற்கும்படி ஆனது. காந்தி வழியில் கதர் அணிந்து, பணம் சேர்க்காமல் தேச சேவை செய்தால் வேறு என்ன வாய்க்கும் சொல்லுங்கள் ?
ஓய்வு பெற்றுத் தமிழகம் திரும்பிய ஐயர், பின்வரும் இடங்களில் வாழ்ந்தார் :
- நந்தம்பாக்கம் ஶ்ரீநகர் காலனி
- மயிலாப்பூர் தாச்சி அருணாசல முதலித் தெரு
- திருவல்லிக்கேணி ஐயா பிள்ளைத் தெரு
- அண்ணா நகர் மேற்கு
ஆங்.. மறந்துவிட்டேனே. மேற்சொன்ன இடங்களில் வாடகைக்குக் குடி இருந்தார். ஆமாம் சார். சரியாகத் தான் வாசிக்கிறீர்கள். வாடகைக்குத் தான் இருந்தார்.
தன் மகள்களின் திருமணத்தை மிக எளிய முறையில் சிறிய மண்டபங்களில் நடத்திய ராமகிருஷ்ண ஐயர், அண்ணா நகர் மேற்கு குடித்தனத்தில் வாழும் போது உயிர் நீத்தார். அப்போது அவர் காதி கிராமோத்யக் பவனின் தலைவராக இருந்தார்.
ஆக, மூன்று முறை எம்.பி., ஒரு முறை எம்.எல்.ஏ. ஆனால், ஒரு விவசாய நிலம் இல்லை, சொந்த வீடு இல்லை, கார் இல்லை. பங்குப் பத்திரங்கள் இல்லை. சினிமா கம்பெனிகள் இல்லை. ஒரு மண்ணும் இல்லை. ஆம். அரை கிரவுண்ட் மண் கூட இல்லை.
இப்படி ஒரு கண்றாவியும் சம்பாதிக்காமல் நம்மூர் எம்பி ஒருவர் இருந்தார் என்று சொன்னேன் சார். அதற்குத்தான் அந்த நண்பர் தலை தெறிக்க ஓடினார்.
என்ன, நீங்கள் எங்கே ஓடுகிறீர்கள் ? ஹலோ.. சார்…
#திராவிடமாடல் #azadikaamritmahotsav
Leave a comment