இன்று ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்ல ஓலா செயலி மூலம் ஆட்டோ தேடினேன். வழக்கம் போல் மூன்று ஓட்டுநர்கள்,’ இங்க பக்கத்துல தான் இருக்கேன் சார்’ என்று சொல்லிவிட்டு, எந்தவித நியாயமும் இல்லாமல் கேன்ஸல் செய்தனர். விடாமல் நான்காம் முறையும் ஓலா தெய்வத்தை வேண்டினேன்.
ஓர் ஓட்டுநர் அழைப்பை ஏற்றார். பெண் குரல். சந்தேகத்துடன் ‘ஓலா ஆட்டோவா’ என்றேன் செல்பேசியில்.
‘ஆமாங்க. ஓலா தான். எங்க நிக்கறீங்க?’ என்றார். பெண் குரலே தான். ஓலா ஆப்பில் பார்த்தேன். பெண் தான். பெயர் ரேவதி.
சொன்ன நேரத்தில் ஆட்டோ வந்தது. வழக்கம் போல் பேச்சு கொடுத்தேன்.
‘காலைல 9 மணிலேர்ந்து ராத்திரி 8 மணி வரைக்கும் ஓட்டுவேங்க. ஓரளவுக்கு சம்பாத்யம் வருது. குடும்பம் ஓடுது’ என்றார்.
தனி ஒருவராக நின்று, ஆட்டோ ஓட்டி, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மகன் +2 வாசித்துவிட்டு சி.ஏ. வாசிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். மகனை கல்லூரி ஒன்றில் பி.காம். வகுப்பில் சேர்த்துள்ளார். மகள் 10ம் வகுப்பு வாசிக்கிறாள்.
தற்காலச் சமூகத்தின் அழுத்தங்கள், சுரண்டல்கள் என்று அனைத்தையும் மீறி, நாணயமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்படும் இந்தத் தமிழ் அன்னைக்கு நாம் எவ்வாறு உதவலாம் ?
- மயிலாப்பூர் / மந்தைவெளி / ராயப்பேட்டை / ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆடிட்டர்கள், பகுதி நேரமாக திருமதி ரேவதியின் மகனுக்கு வகுப்புகள் எடுக்கலாம்.
- ஆடிட்டர்கள் யாரேனும் அவரது மகனுக்குப் பகுதி நேரப் பணி வழங்கலாம்.
- தனியாகப் பயணிக்கும் பெண்கள், திருமதி.ரேவதியின் ஆட்டோவை அழைத்து அவருக்கு உதவலாம்.
- மயிலை / மந்தைவெளி / ஆழ்வார்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகள், பெண் குழந்தைகளை ஏற்றிச் செல்ல இந்த ஆட்டோவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- லேடீஸ் கிளப் / மஹிளா சங்கட்டன் முதலிய அமைப்புகள் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருமதி.ரேவதியின் கைப்பேசி எண் : +91-82484-89245
உலக மகளிர் தினம் என்று கூக்குரல் இடுவதை விட, நம் கண் எதிரில் வாழும் திருமதி.ரேவதி போன்ற பெண்களுக்கும் அவர் தன் குடும்பத்துக்கும் நன்மை செய்வது மனசாட்சியுள்ள பாரதீயர்கள் செய்ய வேண்டியது.
Leave a comment