ஆரிய திராவிடப் பிரிவினைக் கொள்கையை வெள்ளையர் திறம்படப் பயன்படுத்திப் பாரதீயர்களைப் பிரித்தனர், இன்றளவும் அதன் தாக்கத்தைக் குறிப்பாகத் தமிழகத்தில் பார்த்து வருகிறோம்.
தற்காலத்தைல் ‘ஆரியர் படையெடுப்பு’ என்றால் குழந்தையும் சிரிக்கும் விதமாகப் பல நூல்கள் வெளிவந்து அந்தக் கொள்கையையே நாசமாக்கிவிட்டது. எனினும் தமிழகத்தை ஆளும் கட்சிகள், அவர்களுக்குச் சேர்ந்திசை சமைக்கும் இயக்கங்கள் என்று பலரும் இன்னும் இந்தக் கொள்கையைச் சொல்லி வருவது நமது சாபக்கேடுகளில் ஒன்று. ‘Invasion that never was’ என்கிற ஆங்கில நூலைத் தமிழர்கள் வாசித்திருக்க நியாயமில்லை. இந்தக் கொள்கையைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்கிற ரீதியில் அம்பேத்கர் பேசியுள்ளதைத் திராவிடத் தலைவர்கள் பேசுவதில்லை. நிற்க.
இந்த அருமையான தருணத்தில் கருணாநிதி எழுதிய ‘ஆரியப்புயல்’ என்கிற கட்டுரை என் கண்ணில் பட்டது. அதில் இருந்து சில வரிகள்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைக் கடலில் இருந்து ஒரு புயல் வீசியது. மற்றொரு புயல் ஆசியாவில் வீசியது. அந்தப் புயல் கடலில் இருந்து வீசியது. இந்தப் புயல் கைபர் கணவாய் வழியாக வீசியது. இந்தப் புயல் தான், ஆசியப் புயல் தமிழகத்தில் வீசியது.
அந்தப் புயல் மாட மாளிகைகளை வீழ்த்தியது. இந்தப் புயல் தமிழ் வீரர்களின் பாசறைகளைத் தவிடுபொடியாக்கியது.
அந்தப் புயல் செடி கொடிகளைப் பாழாக்கியது. இந்தப் புயல் சிலப்பதிகாரக் கோட்டையை இடித்துவிட்டது. திருக்குறளைப் புழுதி மேடாக்க முயற்சித்தது.
அந்தப் புயலுக்கு நிவாரணம் அளிக்க 25,000 ரூபாய்கள் தேவை. இந்தப் புயலை அடக்க 25 ஆயிரம் ரூபாய்கள் தேவையில்லை; ஆனால், 25 ஆயிரம் உயிரை விடும் வீரர்கள் தேவை. தேவையானால் தூக்கு மேடைக்குச் செல்லத் தயங்காதவர்கள் தேவை.”
ஆதாரம் உள்ளதா ? சங்கிச் சதியா என்றெல்லாம் கேட்கலாம். இதை வெளிக்கொண்டு வந்தது இடது கம்யூனீஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தி. (‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ – பி.ராமமூர்த்தி. முன்னுரைப் பகுதி. பக்கம் 2. பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் தற்போதையத் தலைவர்கள் யாருக்கும் பி.ராமமூர்த்தியைத் தெரிந்திருக்க நியாயமில்லை.
எந்தவித அறிவியல் சான்றும் இல்லாமல் வெறுமெனே ஆங்கிலேயக் காலனி ஆதிக்கக் கொள்கையை வளர்த்தெடுக்கப் பயன்படுத்தபப்ட்ட ஆரிய-திராவிடப் பிரிவினைக் கொள்கையை மேலும் பெரிய அளவில் கொண்டு சென்று வளர்த்துப் பரப்பியதில் அண்ணாத்துரை + கருணாநிதி கூட்டணியின் பணி மகத்தானது.
தற்சமயம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ரூ 100 நாணயம் வெளியிட்டுள்ளது பாரத அரசு. பிரதமரும் கூட வாழ்த்து தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். இன்னின்ன சாதனைகளுக்காக நாணயம் வெளியிடுகிறோம் என்று அவர் சொல்லியிருக்கலாம்.
கருணாநிதி செய்ததில் தமிழ் நாட்டிற்குப் பெரிய அளவில் பயன்படக்கூடியது ஒன்று உண்டெனில், சென்னை கோட்டூர்புரத்தில் ‘அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்’ அமைத்ததைச் சொல்லலாம். அதற்காக நாணயம் வெளியிடுகிறோம் என்று பிரதமர் சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து.
கருணாநிதியின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். ஏனெனில் அவரது செயல்கள் மறக்கமுடியாதவை. அவற்றின் தாக்கங்கள் என்றென்றும் நிலைத்திருப்பவை – எல்லா வகைகளிலும்.
Leave a comment