சமீபத்தில் வந்த ‘ஜமா’ தமிழ்த் திரைப்படம் வெற்றிப்படமா ? தெரியவில்லை.
ஆனால், அந்தப் படம் வெற்றி பெற்ற இடம் ஒன்று உள்ளது. தமிழ்த் திரை உலகில் பொதிந்துள்ள சராசரி தமிழ் மனதின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை என்பதே ‘ஜமா’ திரைப்படத்தின் வெற்றி.
அனேகமாக ஊடகங்கள் மறைத்துவிட்ட திரைப்படம் ஜமா.

தமிழ்த் தெருக்கூத்துக் கலைஞர்களின் நிதர்சன வாழ்வைச் சொல்லும் ‘ஜமா’, தனது திரைக்கதையில் பின்வரும் விஷயங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதால் பொதுவான, மூளை மழுங்கடிக்கப்பட்ட ஊடக வெளிச்சம், போலி வெற்றிக் களியாட்டங்கள் முதலியன நம் பார்வையில் படவில்லை. அவ்வளவு ஏன் ? இவை எதுவும் நடைபெறவில்லை.
படத்தில் இல்லாதவை :
- இந்துமத எதிர்ப்பு
- கலைஞர்களின் வறுமைக் குரல்
- எப்போதும் ஒலிக்கவேண்டிய ஒப்பாரி
- சாதிப் பாகுபாடுகள் பற்றிய ஆக்ரோஷ வெளிச்சம்
- குமட்டும் வன்முறை
திரைப்படத்தில் என்னதான் உள்ளது ?
- தெருக்கூத்து என்னும் பழங்கலையிந் உண்மைப் பரிணாமம்
- கூத்துக்கள் சொல்லும் பண்பாட்டு உன்னதங்கள்
- கூத்துக் கலைஞர்களின் மன ஒருமைமிக்க வாழ்வு
- கலைஞர்களின் கூத்துக்கலை தொடர்பான உணர்வு உச்சங்கள்
- கூத்துக்கலைஞர்கள் வாழ்க்கையையே களியாட்டமாகக் காண்பது
ஓரிடத்தில் கூட கூத்துக் கலை பற்றிய கழிவிரக்கமோ, சுய பச்சாதாபமோ இல்லாமல் கதை நகர்ந்துகொண்டே இருக்க, கூத்து தன் போக்கில் தனது விஸ்வரூபத்தை உணர்த்திய வண்ணம் உள்ளது. இது இயக்குனரின் வெற்றி.
இம்மாதிரியான திரைப்படம் மலையாளத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும், அரசின் கவனிப்பும் இருந்திருக்கும். தெருக்கூத்து போன்ற பண்பாட்டுத் தொடர்புச்சங்கிலிகளை உடைத்து, மிஷனரிக் கூட்டங்களின் எச்சில் சோறு உண்ணும் அரசுகளும் ஊடகங்களும் வாய்க்கப்பெற்றது நமது தலையெழுத்து.
‘ஜமா’ திரைப்படம் மத்திய அரசின் கவனத்தையாவது பெறட்டும். சர்வதேச விருதுகள் அருளப்பெறட்டும்.
‘மர்ம தேசம்’ சேத்தனிடம் இப்படியானதொரு நடிப்பை எதிர்பார்க்கவில்லை. படத்தின் காரண நாயகன் பாரி இளவழகன் மேலும் நல்ல படங்களைச் செய்யட்டும். வாழ்த்துகள்.
திரைப்படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் மனதின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
–ஆமருவி
Leave a comment