நாஞ்சில் நாடனின் ‘இடமோ வலமோ’ தொகுப்பு ரொலர் கோஸ்டர் பயணம் எனலாம்.
அடக்க முடியாமல் சிரிக்கத் தூண்டும் இடங்கள், புன்னகை பூக்க வைக்கும் இடங்கள், மனதில் வெறுமையை ஏற்படுத்தும் இடங்கள் என்று பல வகையான உணர்வு நிலைகளை அளிக்கும் நல்லதொரு நூல் ‘இடமோ வலமோ’.
நாடனின் முன்னாளைய கும்பமுனிக் கதைகளில் உள்ள அங்கதச் சுவை சற்று குன்றியுள்ளது தெரிகிறது. பிரதமரின் திட்டங்களைப் பகடி செய்து கும்பமுனி பேசுவது போல் வருவதால் அப்படி எனக்குத் தோன்றுகிறதோ என்று நினைக்கிறேன். ஆயினும், பழைய கும்பமுனியைக் காணவில்லை. ஏற்கெனவே வயதாகிவிட்ட கும்பமுனிக்கு மேலும் வயதாகிவிட்டதால் இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறேன்.

முன்னாள் தமிழாசிரியரும் இந்நாள் வாயிற்காவலருமான சோணாசலத்தில் ‘இது நானே தான்’ என்று நாஞ்சில் நாடனே தெரிகிறார். சோணாசலம் பாத்திரம் நாடனின் கதைகளுக்கு இனிய வரவு.
சில சிறுகதைகளில் ஒரே உவமை தலைகாட்டுகிறது. கால்குலேட்டர் விஷயம் அவ்வாறான ஒன்று.
ஒரு பத்திரிக்கையில் எழுதிய கதையின் பொருளைப் பிறிதொரு பத்திர்கிகையில் எழுதிய கதையுடன் தொடர்புபடுத்தி எழுதியுள்ளது புதிய யுக்தி, முறை, வழக்கம் இன்ன பிற.
இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகளில் முன்னேறிய வகுப்பினர் என்று கருதப்படுபவர்களின் மனக்குறை சிறிது வெளிப்படுகிறது. பெரிய அளவில் யாரும் எழுதாத விஷயம் அது.
சாதிப்பெயர்களைத் தெருப்பெயர்களில் இருந்து நீக்கியுள்ளது பற்றிய பகடி அருமை.
அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வாசிக்கும் விதமாக உள்ள ‘இடமோ வலமோ’ தொகுப்பு, நாஞ்சில் நாடனின் இன்னுமொரு அணிகலன். ஆயினும் முந்தைய காரம் குறைவு என்பது நாடனின் ( அனேகமாக) அனைத்து நூல்களையும் வாசித்தவன் என்கிற முறையில் என் கருத்து.
எச்சரிக்கை: ரயிலில் பயணிக்கும் போது இந்த நூலை வாசித்தால், உங்களை மீறி நீங்கள் சிரிக்க இடங்கள் இருப்பதால், அடுத்த இருக்கைப் பயணி, உங்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, சற்றுத் தள்ளி அமர வாய்ப்புள்ளது.
நூல்: இடமோ வலமோ. ஆசிரியர்: நாஞ்சில் நாடன். சிறுவானி வாசகர் மையம் வெளியீடு. விலை: ரூ: 150. நூல் வாங்க : ஜி.ஆர்.பிரகாஷ் (8778924880 / 9940985920 )
Leave a comment