தமிழகத்தின் பாழடைந்த கோவில்களைப் புனருத்தாரணம் செய்கிறேன் என்று தனியாகக் கிளம்பும் ஆர்வலர்களுக்கு:
1. கோவில் 100 வருடப் பழமை கொண்டதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் தொல்லியல் கட்டுப்பாடுகள் அதிகம். ஒப்புதல்கள் பெறுவது சிரமம். பிரயத்னப்பட வேண்டும்.
2. கோவில் இந்து அற நிலையத் துறையின் கணக்கில் இருப்பின், அரசுடன் சேர்ந்து பணி செய்வதே வழி. தனியாகச் செய்கிறேன் எனில் அதற்கு எந்த ஒப்புதலும் கிடைக்காது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், ஆன்மீக மடாதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் என்று முடிந்தவரை பலரது ஒத்துழைப்புடன் செயல்படுவது மட்டுமே வழி. தனியாக மாட்டிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை விரயமாகும்.
3. நண்பர்கள் இருவராவது இணைந்து செயல்படுவது உதவும். நமது முடிவுகள் சரிதானா என்று பார்த்துக்கொள்ளவும், உதவிக்கும்.
4. ரூ 10 லட்சம் வரை மட்டுமே செலவாகும், சிறிய அளவிலான கிராமத் தனியார் கோவில்களை எடுத்துப் புனருத்தாரணம் செய்வது உங்கள் சக்திக்கு உகந்ததாக இருக்கும். அலைச்சல் கம்மி.
5. எந்தக் கோவிலானாலும், ஊர்க்காரர்கள் உதவி அவசியம் தேவை. அனேகமாக சாதி / பிரிவுகள், மக்கள் வெளியேற்றம் முதலிய காரணங்களால் கோவில் பாழாகியிருக்கவே வாய்ப்புள்ளது. எனவே ஊர்க்காரர்களை அனுசரித்து, அவர்களையும் சேர்த்துக்கொண்டு செயல்படுவது நல்லது.
6. கோவில் வேலை விஷயமாக யாரிடமும் பணம் வாங்காதீர்கள். வெளி ஊர்களில் இருப்பவர்கள் பணம் அனுப்புகிறேன் என்று வருவார்கள். உங்கள் வங்கிக் கணக்கில் பெறாதீர்கள். ட்ரஸ்ட் வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் செய்யும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். பல சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
7. செய்யும் செலவுகள் அனைத்திற்கும் ரசீது தேவை.
8. பாழான கோவிலில் சிலைகள் ஏதேனும் காணாமல் இருப்பின், அருகில் உள்ள காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். உள்ளதா என்று தெரிந்துகொள்ளவும். இல்லையெனில், முதலில் அதைப் பதியவும்.
9. புனருத்தாரணத்துக்கு முன் கோவிலை அங்குலம் அங்குலமாகப் படம் எடுத்துக் கொள்ளவும். மூர்த்தங்கள், கோஷ்டங்கள், நிலைகள், கதவுகள் என்று எல்லாம். ( பின்னாளில் வரும் சிக்கல்களைத் தவிர்க்க )
10. அற நிலையத்துறைக் கோவில்களைத் தவிர்ப்பது உங்களது மன நிம்மதியைக் காக்க உதவும்.
–ஆமருவி
09-02-2025
Leave a comment