The side that is not spoken about, generally.

நானும் போராட்டத்தில் இறங்கலாம் என்று நினைக்கிறேன். வேறு வழி தெரியவில்லை.

இது காலை உணவுக்கான போராட்டம். காலை உணவில் சமூக நீதி வேண்டும் என்பதற்கான போராட்டம். குறிப்பாக ரவா உப்புமாவிற்கு எதிரான போராட்டம்.

அதென்ன சார், காலை எழுந்திருக்க நேரமாகிவிட்டால் உடனே ரவா உப்புமா கிண்டிவிருகிறார்கள் ? ‘வாம்மா மின்னல்’ என்பது போல் தளிகை பண்ற உள்ளிற்குப் போய் ஒரு நிமிடத்தில் ரவா உப்புமா தயாராகிவிடுகிறது. அது எந்த அழகில் இருக்கும் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்த நிறமும் இல்லாமல் வெள்ளைவெளேரென்று இருக்கிறதே என்றால் அதில் கேசரி பவுடர் அல்லது மஞ்சள் எதையாவது போட்டு கலரை மாற்றிவிடுகிறார்கள். சரி, ஏதோ புதியதாக இருக்கிறதே என்று நப்பாசைப்பட்டுக் கொண்டு தட்டைப் போட்டுக்கொண்டால் அதே சுவை. ஆஃபீஸ் போகும் அவசரத்தில், ‘அவனா நீயி’ என்று புலம்பிவிட்டு ( மனதிற்குள் ) ஓட வேண்டியிருக்கிறது.

இன்னொரு நாள் சுவை மாற்றி இருக்கிறது என்றால் அது சம்பா ரவை உப்புமா என்கிற அவதாரத்தில் எழுந்தருளுகிறது. அதை எப்படித்தான் சாப்பிடுவதோ என்று இன்று வரை புரியவில்லை. கலரும் என் கலரில் இருக்கிறது.

ரவா உப்புமா எப்படி உருவாயிற்று என்று யாராவது ஆய்வு பண்ண வேண்டும். காலங்காலையில் 2 இட்லி, ஒரு வடை, ஒரு தோசை என்று ஒரு வெட்டு வெட்டலாம் என்று இலையில் உட்கார்ந்தால் ரவா உப்புமா பல்லை இளித்துக் கொண்டு வந்து விழுந்தால் அன்றைய நாள் முழுவதுமே வீணானது போல தோன்றுகிறது. உப்புமாவின் வீச்சு நாள் முழுவதும் மனதில் இருந்து, ஈ.மெயிலில் கூட அதன் காட்டம் தெரிகிறது. ஹிந்து பேப்பருக்கு ‘லெட்டர்ஸ் டு த எடிட்டர்’ எழுதலாம் என்றாலோ அந்தப் பேப்பரே உப்புமா போல கந்தரகூளமாக இருக்கிறது.

வீட்டில்தான் இப்படி இருக்கிறதே என்று அபுர்வமாக ஏதாவது கல்யாணத்துக்குப் போய், வாசனையும் நன்றாக இருந்து, நப்பாசையுடன் இலையில் உட்கார்ந்தால் முதலில் வந்து விழுவது இதன் மற்றொரு அவதாரமான ‘கிச்சடி’. அதில் சில நேரங்களில் வெங்காயத்தையும் போட்டு, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார்கள்.

வீட்டிலும் ஒன்றும் சொல்ல முடிவதில்லை. கல்யாணங்களில் இப்படி என்றால் ஒரு மனிதன் என்னதான் சார் பண்ணுவது ?

எதெற்கெல்லாமோ வழக்கு போடுகிறார்கள். இந்த உப்புமாவையும் வட இந்திய சதி, உப்புமா எதிர்ப்புப் போராட்டம் என்று எதையாவது சொல்லி நமக்கு நல்லது நடக்கக் கூடாதா ?

அப்புறம் அச்சே தின் என்ன சார் அச்சே தின் ? அப் கீ பார் உப்புமா சர்க்கார் என்று 2026லும் புலம்பாமல் இருக்க, நூறு தடா அக்கார அடிசில் கேட்ட ஆண்டாள் துணை செய்ய வேண்டும்.

-ஆமருவி

23-02-2025

Leave a comment