The side that is not spoken about, generally.

‘வந்தவர்கள்’ நாவலின் கதைக் களத்தைக் கேள்விப்பட்டு, திரைப்படமாக ஆக்குகிறேன் என்று இயக்குநர் ஒருவர் வந்தார்.

‘நாவல முழுசா படிச்சீங்களா?’ என்றேன். ‘இல்ல.. ப்ராமின் சப்ஜெக்ட். பிரிட்டிஷ் கதைன்னு கேள்விப்பட்டேன்’ என்றார்.

‘30% பிரிட்டிஷ் இந்தியக் களம். அப்பறம் சுந்தந்திர இந்தியா. அதுல ப்ராமின் சப்கெஜ்ட்.. படிச்சுட்டுப் பேசலாங்க’ என்றேன்.

3 வாரங்கள் கழித்து ஃபோன் செய்கிறார். ‘சார். இது நம்மூர்ல ஓடாது. வேணுன்னா கொஞ்சம் மாத்தி வங்காளத்துல முயற்சி பண்ணுங்க’ என்றவர், ‘ஒரு வேளை கன்னடத்துல ஓடலாம். ஆனா அதுவும் கூட அடுத்த எலக்‌ஷனுக்கு அப்பறம் ட்ரை பண்ணலாம்’ என்றவரிடம் நான் சொன்னது ‘இது இந்தியாவுல படமா ஓடாது. கதைய மாத்தி, ஈரானியன், ஜெர்மன் நாட்டுக் கதைக்களத்துல வேணா ஓடலாம். இல்ல, ப்ராமின மாத்தி, வேளாளர், செட்டியார் அப்படீன்னு மாத்தலாம். ஆனா கதையும் மாறும்’ என்றேன். என்னவோ நான் சினிமாவைத் தேடி அலைந்தது போல இருந்தது அவரது பேச்சு.

சினிமாக்கார்களிடம் இது இரண்டாவது முறை. நாவல் வந்து ஓராண்டு ஆகிறது. விருது ஒன்று கிடைத்ததே தவிர, இன்னும் எந்தப் பத்திரிக்கையிலும் ஒரு மதிப்புரையும் வரவில்லை. ப்ராமின் சப்ஜெக்ட் என்றால் அதுதான் தலை எழுத்து.

‘கல் மண்டபம்’ நாவலை எழுதிய வக்கீல் சுமதி அதை நூலாக ஆக்குவதற்குப் பெரும் முயற்சி செய்யவேண்டியிருந்திருக்கிறது. ‘ஆலமரம்’ எழுதிய விஜயலட்சுமி சுந்தர்ராஜனைத் தமிழ் உலகிற்குத் தெரியாது. இத்தனைக்கும் அவர் பல விருதுகள் வாங்கியவர். ‘அப்பம் வடை தயிர் சாதம்’ பாலகுமாரனின் சினிமா ப்ராபல்யத்தால் விற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. தொடர் கதையாக எழுதிய பாலகுமாரன் முதல் / இரண்டு தொடர்களில் முத்தக்காட்சி வைத்திருந்தார். அவருக்கே அது தான் நிலைமை.

சினிமா இயக்குநர் கடைசியில் சொன்னது தான் பிரமாதம் : ‘ப்ராமின் சப்கெட் கூட பரவாயில்ல. அதுல கடைசில மூன்றாவது தலைமுறைல மதம் மாற்றம், சமூக நீதி பக்கம் போறது அப்படீன்னு மாத்தினா ட்ரை பண்ணலாம். ஆண்டி-க்ளைமாக்ஸ் இருந்தா எடுப்பாங்க’.

எழுதுபவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதுங்கள். ப்ராமின் சப்ஜெக்ட் என்றால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதிப் பாருங்கள். ஒருவேளை தேறலாம்.

–ஆமருவி

Leave a comment