உங்களுக்கு மயிலாப்பூர் மாதவனைத் தெரிந்த அளவிற்குப் பூவராஹனைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஏனெனில் அவர் ‘தனியொருவன்’ பாணியில் ஒரு ஓரமாகவே இருப்பவர். நிற்க.
இந்தியா வந்து செட்டில் ஆன பிறகு இருக்க ஓர் இடம் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து, சென்னைக்குள் இடம் வாங்காமலேயே விட்டுவிட்டதால், மயிலாப்பூரில் வாடகைக்கு இருக்க நேர்ந்தது. சரி. பழகியவுடன் வாங்கலாம் என்றாலோ ஆனந்தவிகடன் பத்திராதிபர் மட்டுமே வாங்கக் கூடிய விலையில் வீடுகள் இருந்தன.
15 வருஷங்களுக்கு முன்னர் ஊருக்கு வெளியே வாங்கியிருந்த இரண்டு காணிகளை விற்றுவிட்டு மயிலாப்புரில் வாங்கலாம் என்றால், ‘சென்னைக்கு மிக அருகில்’ என்று சென்னையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருந்த இடத்தைப் போய்ப் பார்ப்பதற்கே ஒரு நாள் லீவு போடவேண்டி இருந்தது. பல முறை முயன்றும் விற்க முடியவில்லை. இன்னொரு இடமும் அப்படியே ஆனது. பணமும் முடங்கியிருந்தது. இந்தியா வந்து சேர்ந்தவுடன் கோவிட் வந்து 2 வருஷங்கள் முடக்கம் வேறு.
அப்போதுதான் இந்த பூவராஹனைப் பற்றி ஒரு புரோக்கர் சொன்னார். ‘அவர் கிட்ட சொல்லிவையுங்கோ. அப்புறம் பாருங்கோ’.
‘ஃபோன் நம்பர் இருக்கா?’ என்றவனை வினோதமாகப் பார்த்தவர், ‘அவருக்கு ஃபோன் எல்லாம் கிடையாது. நேர்லதான் போகணும்’ என்றார்.
மனைவியும் நானும் அவரைப் பார்க்கச் சென்ற போது, பூவராஹன் சாப்பிட்டுவிட்டு சாவதானமாக, சமாதானமாக இருந்தார். சேவித்தோம். ‘ஒண்னும் இல்ல. மயிலாப்பூர்ல வீடு வாங்கணும். ‘சென்னைக்கு மிக அருகில்’ இடங்கள விக்கணும்னு பார்க்கறோம். நடக்க மாட்டேங்கறது’ என்று மனதிற்குள் சொல்லிவிட்டு வந்தோம்.
‘இந்த மாதிரியான நம்பிக்கைகள் இல்லாதவனாகவே வளர்ந்தவன் நான். ஒருத்தர்கிட்ட போய் எனக்கு இன்னது வேணும்னு கேக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல’ என்று வசனம் பேசியிருந்தது நினைவிற்கு வந்தது. ‘என்னையும் இப்பிடி ஆக்கிட்டீங்களேடா” என்று தேவர் மகன் ஸ்டலில் நினைத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.
அடுத்த 2 மாதங்களில் ‘சென்னைக்கு மிக அருகில்’ இடங்கள் விற்றன. 10 ஆண்டுகளாக விற்க முடியாமல் இருந்த இடங்கள். தற்சமயம் மயிலையில் வீடும் வாங்கிவிட்டேன்.
சமீபத்தில் பூவராஹன் சொன்னார் ‘உனக்கு இன்னது வேணும்னு நீ கேக்க வேண்டாம். நான் உன்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். உன்னைக் கூப்பிட்டு அனுப்பினேன். நீ வந்தே. அவ்வளவுதான்’ என்றார், மானசீகமாக, வேண்டுதலான சர்க்கரைப் பொங்கலைக் கண்டருளியபடி.
இன்னும் தரிசிக்கவில்லை எனில், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோவிலில், தாயார் சன்னிதிக்கு அருகில் நின்றிருக்கும் பூவராஹப் பெருமாளைச் சென்று சேவித்து வாருங்கள். நீங்கள் கேட்க வேண்டாம். பலதும் நடக்கும்.
–ஆமருவி
19-03-2025
(பி.கு.: ஆதி கேசவனும், சீனிவாசனும் கோவமா இருக்காங்களாம். பக்கத்துல இருக்கற எங்ககிட்ட கேக்காம ராயப்பேட்டை போனியாமேன்னு )
Leave a comment