காஞ்சி மடத்து பக்தர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
நெய்வேலி ஸத்-ஸங்கம் மணித்வீபம் என்கிற ஸ்தாபனம் 1950களில் உருவானது. ஒரு காலத்தில் பிராம்மணர்கள் அதிகம் பேர் நெய்வேலியில் வேலையில் இருந்தபோது ஸத் விஷயங்கள் பேசவும், உபன்யாசங்கள் நடக்கவும் என்று ஏற்பட்ட ஸ்தாபனம் இது.
நீங்கள் காண்பது, ஸத்-ஸங்கத்தின் ப்ரவசன மண்டபம். மேடை ஒன்று இருந்தது. ஒரு பக்கம் சுமார் 100 ஸ்வாமி படங்கள் கொண்ட மேடை. சுற்றி வந்து ப்ரதட்சணம் பண்ண முடியும். இன்னொரு புறம் புதுப்பெரியவர் சந்நியாஸ ஆஸ்ரமம் ஏற்றவுடன் மூன்று ஆசார்யர்களின் படங்களும் ஏற்பட்டன.
நாராயணீயம், ஶ்ரீமத் பாகவதம், ராமாயண, மஹாபாரத உபன்யாசங்கள் என்று நிகழ்ந்த இடம். சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், கீரன், ஜெயராம சர்மா, கிருபானந்த வாரியார் என்று யாருடைய உபன்யாஸமாவது நடந்தவண்ணம் இருக்கும். ராதா கல்யாணம், அதற்கான உஞ்சவ்ருத்தி ஊர்வலம், பிள்ளையார் சதுர்த்தி என்று கோலாகலம் தான். காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பலமுறை விஜயம் செய்து, சந்திரமௌலீஸ்வர பூஜை செய்த இடம்.

ஆனால், 2022ல் உபன்யாஸ மேடையையே காணவில்லை. 100க்கும் மேற்பட்ட ஸ்வாமி படங்களையும் காணவில்லை. ப்ரவசன மண்டபமே வெறிச்சோடிக் கிடந்தது. பார்க்கவே முடியவில்லை.
ஸத்-ஸங்கம் மணித்வீபம் தற்சமயம் காஞ்சி மடத்தின் நெய்வேலிக் கிளையாக உள்ளது. பழைய பொலிவுடன் திகழ, மடத்தின் அன்பர்கள் ஆவன செய்ய வேண்டும். அமெரிக்கா போய்விட்டார்கள், நெய்வேலியில் யாரும் இல்லை என்றெல்லாம் சாக்கு சொல்ல வாய்ப்புள்ளது. உண்மையும் கூட. இருந்தாலும், மனம் கேட்கவில்லை. ஏதாவது செய்யுங்கள். ப்ளீஸ்.

என் வயதுள்ள நெய்வேலிப் பிள்ளைகள் ஓரளவு தார்மீகச் சிந்தனையோடு வாழ்வதற்கு இந்த ஸ்தாபனம் முக்கிய காரணம்.
–ஆமருவி
பி.கு.: எனது ‘நெய்வேலிக் கதைகள்’ நூலில் பல கதைகள், ‘பழைய கணக்கு’ நூலில் 3 கதைகள், ‘வந்தவர்கள்’ நாவலிலும் கூட ஓரிரு பகுதிகள் நிகழ்ந்த களம் ஸத்-ஸங்கம் மணித்வீபம்.
Leave a comment