வேறு யாருமில்லை, நம்ம ஸத்-ஸங்கம் பிள்ளையார் தான். இவர் மட்டுமே இன்னமும் மாறாமல் இருக்கிறார். இடம்: நெய்வேலி டவுன்ஷிப்.
அதே காற்றோட்டத்துடன், அரச மர நிழலில் அமர்ந்து கொண்டிருக்கிறார். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான பையன்களுக்கு, பெண்களுக்கு நல்ல படிப்பு கொடுத்து ஊரை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, தான் மட்டும் அதே இடத்தில் அப்படியே உட்கார்ந்துகொண்டிருக்கிறார் ஸத்-ஸங்கம் மணித்வீபம் பிள்ளையார்.
இவரைப் பற்றி ‘பழைய கணக்கு’, ‘நெய்வேலிக் கதைகள்’ சிறுகதைத் தொகுப்புகளில் சொல்லியுள்ளேன். குறிப்பாக, ‘தரிசனம்’ சிறுகதையில் வரும் டி.ஆர்.சி ( டி.ஆர்.சந்திரசேகரன்) என்கிற ஆத்ம ஞானியைப் போன்று இன்று யாரும் இருக்க வழியில்லை. கதையை வாசிக்காதவர்கள் அவசியம் வாசியுங்கள். அவர் யார், அவருக்கும் இந்தப் பிள்ளையாருக்கும் என்ன சம்பந்தம், அவரை ஆத்ம ஞானி என்று ஏன் அழைக்கிறேன் என்றெல்லாம் புரிந்துகொள்வீர்கள். ‘வந்தவர்கள்’ நாவலிலும் வருவார். வாசித்துப் பாருங்கள். நிற்க.

டி.ஆர்.சி. இருந்ததால் திராவிடர் கழகம் சற்று அமைதியாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி நடக்கும் அன்றுதான் அருகில் ‘ஸ்டோர் ரோடு ஜங்ஷன்’ என்று அன்று அறியப்பட்ட இடத்தில் கையில் கழியோடு நின்றிருக்கும் சிலை ஒன்றுக்கும் பிறந்த நாள் வரும். பிள்ளையாருக்கு பக்தர்கள் விபுதி அர்ச்சனை செய்யும் போது, அவ்விடத்தில் இருந்து ‘சொல்மாலை’ விழும்.
ஒரு வருஷம் கொஞ்சம் ரசாபாசமானது. கைத்தடி நாயக்கரின் அடிப்பொடிகள் அளவுக்கு அதிகமாகப் பேசினர் ( ஒலி பெருக்கி வழியே). மணித்வீபத்தில் எங்களால் அமர்ந்துகொண்டு அர்ச்சனையைப் பார்க்க முடியவில்லை. இங்கே ஒரு ‘நம:’ சொன்னால். அங்கிருந்து ‘க**** நம:’ என்று வரும்.
டி.ஆர்.சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். தொடர்ந்தது.
திடீரென்று எழுந்தவர் வெளியே நடந்து சென்று, நாயக்க பீடத்தின் அருகில் நின்றுகொண்டார்.
‘இப்ப சொல்லுங்கடா..’ என்றார் ஆக்ரோஷமாக.
மயான அமைதி.
நாயக்கர் ஜெயந்தி அமைப்பாளர் விழுந்தடித்துக் கொண்டு வந்தார். ‘சாமி, நீங்க போங்க. இவனுக வெளியூர்க்காரனுக. நான் பார்த்துக்கறேன்’ என்று மைக்கை அணைத்துவிட்டார்.
அங்கிருந்த அனைவரையும் ஒரு முறை கண்களை உருட்டிப் பார்த்தவர், இடுப்பில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து, ஒரு உதறு உதறிவிட்டு, மேலுக்குப் போட்டுக்கொண்டார்.
இரண்டு அடிகள் நடந்தவர், மீண்டும் திரும்பி ஒரு பார்வை.
‘அதான் சொன்னேன்ல சாமி,. நீங்க போங்க. நான் பேசிக்கறேன்’ விழா அமைப்பாளர்.
‘அரச மரத்து நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார்
பிள்ளையர் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்’ என்கிற கோஷத்திற்கு இடையில் இந்தப் பிள்ளையாருக்கு விசேஷமாக அர்ச்சனை நடந்தேறியது.
டி.ஆர்.சி., அரையபுரம் ஜெயராமன், எல்.வெங்கட்ராமன், யஞ்ய ராமன் என்று எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பிள்ளையாருக்கு சேவை செய்துள்ளன.
40 வருஷத்துக்கு முன்பு இருந்தது போலவே, ஒரு துளியும் மாறாமல், தன் இருப்பிடத்திற்கும் எந்த மாற்றத்தையும் ஏற்காமல் அமர்ந்திருந்த வரசித்தி விநாயகரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘இத்தனை வருஷம் கழிச்சு இப்பவாவது வந்தியே’ என்று மானசீகமாக உணர்ந்தேன்.
–ஆமருவி
20-03-2025
பி.கு.: தற்சமயம் கைத்தடி நாயக்கர் இரும்பு கூண்டிற்குள் நிற்கிறார்.
Leave a comment