உலக்கை நாயக்கர் ( உ) தம்பி அறிவுக் கழகத்துக்குப் பேச்சுக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டு அவசராவசரமாக நமது நிருபர் அசட்டு அம்மாஞ்சி மறைந்து நின்று பார்த்த, கேட்டவை.
உ: என்ன, யாராவது இருக்கேங்களா ?
ஸ் : யாரே வந்திருக்காங்க, காலங்கார்த்தால. போயிப்பாரும்மா.
உ: யாரும் இருக்காங்களான்னு கேக்கலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன்னு சொல்ல வந்தப்ப..
ஸ்: அடடே நீங்களா, வாங்க. வழக்கமா ராத்திரிலதானே வருவீங்க.. இன்னிக்கு என்ன கார்த்தாலயே ?
உ: இல்ல, சீட் பத்தி பேசிட்டுப் போகலாம்னு காலைலயே வந்துட்டா சீக்கிரமா பேச முடியாட்டாலும் மெதுவாவாவது பேசி முடிக்கலாமேன்னு சொல்ல வந்தபோது..
ஸ்: எதுக்கு இதெல்லாம். சமூக நீதி முறைல உங்களுக்கு சீட் உண்டு. இந்தாப்பா தம்பி, இவருக்கு நாற்காலி போடு.
உ: அதில்ல. நான் வகுத்த வியூகம், தியாகத்துல விளைந்த விவேகம்னு உங்களுக்குத் தெரியும்ங்கறதால நான் அதிகமா ஒண்ணும் கேக்கல, ஒரு நாலஞ்சு சீட் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்னு நான் சொல்றேன்னு நீங்க நினைக்கமாட்டீங்கன்னு தோணுதுன்னு சொல்ல வந்தேன்.
ஸ்: நீங்க மட்டும் தானே வந்திருக்கீங்க ? உங்களுக்கு எதுக்கு அஞ்சு நாற்காலி போடணும் ? அதான் ஒண்ணு போடச் சொன்னேன். சமூக நீதி இருக்குல்ல..

உ: ஓ.. நீங்க இதைச் சொல்றீங்களா ? நான் வேற என்னவோ நினைச்சுட்டேன். எனக்கு ஒரு நாற்காலி போதும். ஆனா நாலஞ்சு சீட் வேணும்னு நான் சொல்ல வந்தத நீங்க சரியா புரிஞ்சுப்பீங்கன்னு தெரிஞ்சுகிட்டாலும் உங்க வாயாலயே சொல்லிக் கேட்டுடலாம்னு நினைக்கறப்ப..
ஸ்: இதெல்லாம் பொதுக்குழுல தான் முடிவெடுக்கணும். அண்ணன் தன்முடியும், கறைமருகனும் கோர்ட்டுக்குப் போயிருக்காங்க. அவங்க வந்த உடனே பொதுக்குழு கூட்டலாம்..அடடே, அண்ணன் கறை வந்துட்டாரே.. இதைத்தான் அண்ணா அன்றே சொன்னார்..
கறை : தலைவரே, தன்முடிக்குத் தான் அடி பலம். எனக்கு இல்லை.. அடடே, உநா வந்திருக்காரே, வாங்க வாங்க.
உ: வாங்கத்தான் வந்தேன். சீக்கிரமா போட்டு அனுப்பிச்சீங்கன்னா நான் நாலு இடம் போய் வரணும்னு சொல்லுவேன்னு நினைக்க மாட்டீங்கன்னு தோணும்போது எனக்கே அழுகையா வந்ததாலும் சிரிச்ச மாதிரியே இருக்க வேண்டிய நிலை யாருக்குமே வரக் கூடாதுன்னு சொல்லலாம்னு தோணுதுன்னு நினைகக்றேன்.
ஸ்: சரி, சரி. சீக்கிரம் வந்த விஷயம் சொல்லுங்க. எனக்கு அல்வா கடை திறப்பு விழா இருக்கு.
உ: நல்ல வேளை, அல்வா கடைன்னு சொன்னீங்க. எங்க எனக்கு கொடுத்துடுவீங்களோன்னு கொஞ்சம் பயந்துட்டேன்னு சொல்ல மாட்டேன்னு நினைக்கும் போது..
கறை: அல்வா எல்லாருக்கும் உண்டு. இப்ப நீங்க. நாளைக்கு தருமாகழகன், சைகோ எல்லாருக்கும் நிறைய ஸ்டாக் வெச்சிருக்கோம். ஏன்னா நாங்கள்ளாம் திராவிட ஸ்டாக் இல்லியா ? ஹ ஹ
உ: அல்வா ஸ்டாக் இல்லியா ? எப்படி காமெடி. அல்வா ஸ்டாக்னு சொல்லும்போது அந்த வ்ளாடிவாஸ்டாக்ல அன்னிக்கி தனியா நின்னு ஜெயிச்சானே லெனின் அவனோட நினைவு வருதுன்னு சொல்ல வேண்டிய நிலைல இருந்தாலும்..
கறை: ஒண்ணு தான் தரமுடியும்.
உ: அல்வாவா ?
கறை: அல்வா, சீட் எல்லாமே ஒண்ணுதான்.
உ: ஒன்ணு ரொம்ப குறைச்சல்னு சொல்லவரும்போது, சமூக நீதியின் பார்வையில நின்னு நோக்கவேண்டியது உள்ளதுன்னு நடராஜகுருங்கற அத்வைத சாமியார் சொன்னதப்பத்தி நண்பர்..
ஸ்: அல்வா ரெண்டு. சீட் ஒண்ணு. அதுவும் நீங்க வந்ததால.
உ: ஒண்ணு ரொம்ப குறைச்சல்னு சொல்லும் போது இந்தியாவோட முதல் தீவிரவாதி ஒரு இந்துன்னு..
ஸ்: ஒண்ணுக்கு கீழ ஒண்ணும் கொடுக்க முடியாதே. அதான் ஒண்ணுன்னு சொல்றோம்.
கறை: ஏன் உங்களுக்கு ஒண்ணு பத்தாதா ?
உ: எனக்கு என்னிக்குமே ஒண்ணு போறாதுன்னு சொல்ல வேண்டிய நிலைல இருக்கற உண்மையப் புரிஞ்சுக்கணும்னு கேட்டுக்கறேன்ன்னு சொல்ல வர்றதுக்குள்ள நீங்களே ஒண்ணுன்னு சொல்லிட்டதால, இனிமே எனக்கு ஒன்ணுமே தோணமாட்டேங்குதேன்னு நினைக்கறச்சே..
கறை: நீங்க ஒருத்தர் தானே வந்திருக்கீங்க ? அப்புறம் ஒண்ணுக்கு மேல எப்பிடி கொடுக்கறது?
உ: கட்சியிலயே நான் ஒருத்தன் தானே இருக்கேன்னு நானே நினைச்சுப் பார்க்கற போது வீணா டீவிய உடைச்சது நினைவுக்கு வருதுன்னு தோணும் நேரம் இருக்கே அங்கே தான் ஒருவேளை கடவுள் இருக்காரோன்னு நினைக்க வைக்கக்கூடிய எண்ணம் தோன்றும் போது ஒரு பேரெழுச்சி ஏற்படும்னு நண்பர் ஜெயமோகன் சொல்லிக்கிட்டு இருந்தத நினைக்கையில..
ஸ்: அப்ப, ஒரு சீட்டு வேண்டாம்கறீங்களா ? கொஞ்சம் புரியறாப்ல சொல்லுங்களே. நானும் எழுதி வெச்சுக்கறேன். பார்த்துப் படிக்கறதுக்கு வசதியா இருக்கும்.
கறை: அவர் தான் சொல்லிட்டாரே தலைவரே. அவருக்கு ஒரு சீட்டும் வேண்டாமாம். அதைத்தான் இவ்வளவு கலை நயத்தோட குறீயீடுகளோட சொல்றார்னு நீங்க புரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கறேன்னு நினைக்கறச்சே… அடச்சே.. எனக்கும் அந்த வியாதி வந்துடுச்சு பாருங்க..
உ: அதாவது நீங்க என்ன சொல்ல வறீங்கன்னா இந்தியாவோட இதயத்துல இருக்க வேண்டிய மதச்சார்பின்மைங்கற ஆபரணத்த இந்த ஒன்றிய அரசு தன்னோட கால்ல போட்டுக்கற சலங்கையாகப் பயன்படுத்துதுன்னு நான் அறிக்கை விடணும்னு சொல்றீங்க.. இல்லியா ?
ஸ்: அப்டியே வெச்சுக்குங்க. இப்ப அல்வா கடைக்குப் போகணும். நீங்க ராத்திரி 10 மணிக்கு மேல வாங்க. எனக்குத் தூக்கம் வர்ற வரைக்கும் பேசிக்கிட்டு இருக்கலாம். ஜந்து ராம் காலைல ஆறு மணிக்கு வாக்கிங் வருவாரு. எடிட்டோரியல் என்ன எழுதணும்னு சொல்லிக்கொடுக்கணும். போய் வரீங்களா ?
உ : வரீங்களன்னு கேட்டீங்க பாருங்க ? அது தான் ‘இன்று போய்ப் போர்க்கு நாளை வா என்றான்’ னு சமீபத்துல படிச்சது நினைவுக்கு வருதுன்னு சொல்லலாம்னு நினைக்கையில..
கறை: தலைவர் அப்பவே போயிட்டாரே. தனியாவே பேசிக்கறது உங்க வழக்கமா ?
தினத்தந்தி, தினகரன் செய்தி : ‘உலக நாயகருடன் தமிழக முதல்வர் ஆலோசனை. மோதி ஆட்சி தப்புமா? ‘
தினமலர் செய்தி: உ ந விரட்டியடிப்பு. மேலும் பணம் கொடுக்க முடியாது. ஸ், கறை காட்டம்.
தி இந்து : Ulaka Nayakan meets S and Karaimurugan on steps to save the constitution.
—ஆமருவி
16-05-2025
Leave a comment