முக்கியமான செய்தி:
தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் மாற்று மதத்தினர் அத்துமீறல், அவமரியாதை செய்துள்ளனர், கம்பர் வாழ்ந்த வீடு பாழ்பட்ட நிலையில் உள்ளது, கம்பர் மேடு கழிப்பிடமாக உள்ளது என்று வாட்ஸப் பதிவுகள் வலம் வருகின்றன.
ஆமருவிப் பெருமாள் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தின் 2007-08ம் ஆண்டுப் புகைப்படைத்தை வெளியிட்டு ‘கம்பர் வாழ்ந்த வீடு பாரீர்’ என்று வதந்தி பரப்புகிறார்கள். மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நோக்கில் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதுபோல், சொல்லமுடியாத பல செய்திகளைச் சொல்லியுள்ளார்கள். அவை அனைத்தும் பொய்.
வேண்டுமென்றே யாரோ வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளார்கள். விஷமிகள் செய்துள்ள வம்பு இது.
2010ல் புனரமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் நேற்றுவரை ( 19-05-2025 ) பெருமாளுக்கு உற்சவத்தின் க்ரமப்படி, திருமஞ்சனம் நடந்துவந்துள்ளது. நேற்று திருத்தேர் உற்சவமும் நடந்துள்ளது. ஆக, அது கம்பர் வாழ்ந்த வீடு என்பது பொய், புரளி.
கம்பர் கோட்டம் ( திருமண மண்டபம் ) பாழ்பட்ட நிலையில் உள்ளது என்றும் சொல்லியுள்ளார்கள். அதுவும் பொய். 2024 மார்கழியில் நாங்கள் கம்பர் விழாவை, அரசு அனுமதியுடன், அவ்விடத்தில் தான் நடத்தினோம். சென்ற மாதம் மத்திய அரசு நடத்திய 9 நாள் ‘கம்ப ராமாயண விழா’வும் அவ்விடத்திலேயே நடந்தது. இந்தக் கட்டடம் தமிழக அரசின் கீழ் வருகிறது. இன்னும் சற்று பராமரிப்பு தேவை, காவல் தேவை என்று சொல்லலாமே தவிர, பாழாக உள்ளது என்பது பொய்.
கம்பர் வாழ்ந்த இடம் ( கம்பர் மேடு ) கழிப்பிடமாக உள்ளது என்பது அபாண்டமான பொய். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி இருந்தது. மத்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் உள்ள கம்பர் மேடு, தற்சமயம் நல்ல நிலையில் பராமரிக்கப்படுகிறது. 13-05-2025 அன்று நான் எடுத்த புகைப்படத்தை இணைத்துள்ளேன். அவ்விடத்தில் கம்பராமாயண ஓவியங்கள் மற்றும் பாடல்கள் கொண்ட திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துச் செயல்பட்டுவருகிறது.

பெரும் முயற்சிகள் எடுத்து, அரசிடம் முறையிட்டு மேற்சொன்ன பணிகள் நடக்க இருக்கும் நிலையில், கண்மூடித்தனமான பொய்களை அவிழ்த்துவிடுவதன் மூலம் இந்த நல்ல செயல்கள் பாதிக்கப்படலாம். ஒருவேளை அதுதான் புரளியாளர்களின் நோக்கமோ என்னவோ.
ஆகவே, வாட்ஸப் செய்திகளை நம்பாதீர்கள். வீண் புரளியைக் கிளப்பாதீர்கள். இது கம்பனுக்கு நீங்கள் செய்யும் துரோகம் தவிர வேறொன்றுமில்லை.
நன்றி.
ஆமருவி தேவநாதன்
20-05-2025
Leave a comment