The side that is not spoken about, generally.

கூப்பிட்டவுடன் ஃபோன் எடுத்துப் பேசினார் தமல். ‘சும்மாத்தான் இருக்கேன். ஆமாம்.தனியாத்தான் இருக்கேன். வாங்களேன் பேசிக்கிட்டிருக்கலாம்’ என்றார். சரியென்று போயிருந்தேன், டுமீல் டைம்ஸ் நாளிதழின் சார்பில். #satire

‘பேட்டியாவே வெச்சுக்கலாம்னு சொல்றீங்களா ? அப்ப அப்படியே வெச்சுக்கலாம்னு சொல்லலாம்னு நினைக்கறதுக்குள்ள வேற எந்த மாதிரி வெக்கலாம்னு எண்ணம் வந்துடுமோன்னு நினைப்பே எனக்கு எதிரா போயிடுமோன்னு..’

நிரு: புரிஞ்சுடுத்து சார். பேட்டியாவே இருக்கட்டும்

தமல்: சரி இருக்கட்டும். இருக்க வேண்டாம்னு சொல்லல, ஆனா இருந்தா நல்லா இருக்குமேன்னு சொல்லலாம்னு நினைக்கறேன்ன்னு உங்களுக்குப் புரியும்னு தெரியுது. புரியுதா ?

நிரு: போகட்டும். ராஜ்ய சபா போகப்போறீங்க போல. என்ன செய்யறதா உத்தேசம் ?

தமல்: நாரதகான சபா போறதில்லையா. அந்த மாதிரி ராஜ்ய சபா. லொள்ளு சபா மாதிரி இல்லாம இருந்தா சரின்னு தோண ஆரம்பிக்காத வரைக்கும் சரியாத்தான் இருக்கும்னு சொல்லலாம்னு நினைக்கறேன்.

நிரு: பாவம் சார்.

தமல்: யார் பாவம் ?

நிரு: ராஜ்யசபா சேர்மன் பாவம். நீங்க பேசறச்சே கேக்கப்போறவங்க பாவம். நான் பாவம். ஆண் பாவம். பெண் பாவம் பொல்லாதது. பாவ மன்னிப்பு. ஹே ராம்.. அட ராமா..அதுக்குள்ளயே கொழற ஆரம்பிக்குதே..

தமல்: எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல்லையே. நல்லாத்தானே பேசறீங்க ?

நிரு: உங்களுக்கு அப்படித்தான் இருக்கும். போகட்டும். ராஜ்ய சபாவுல என்ன பேசலாம்னு இருக்கீங்க?

தமல்: பேசணும். பேசலாம்னு நினைக்கறேன். ஆனா, என்ன பேசலாம்னு நான் முடிவு பண்ணக் கூடாது. ஆனா, என்ன பேசக்கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை வேணுங்கறது தான் மாநில சுயாட்சியோட முக்கிய கருதுகோள்ங்கறத எல்லா மாநிலங்களுக்கும் புரியறா மாதிரி பேசலாம்னு தோணுதுன்னு சொல்லலாம்னு நினைகக்றேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.

நிரு: புரிஞ்சுட்டுது நினைச்சுக்கலாம்னு தோணுது சார். உங்கள மன்னிப்பு கேக்கச் சொல்றாங்களே.. அதைப்பத்தி..

தமல்: எங்க மன்னி, பூ வாங்கிண்டு வரச் சொன்னா. அதைத்தானே சொல்றீங்க ?

நிரு: இதென்ன காதுல பூவா இருக்கே.. நீங்க மன்னிப்பு கேக்கப்போறீங்களா ?

தமல்: எதுக்கு கேக்கணும் ? எங்கிட்டதான் இருக்கே. எங்க அண்ணா, மன்னி ரெண்டுபேரும் இருக்காளே ? எங்க மன்னிகிட்ட நான் என்ன கேக்கறது ? எப்ப அவாத்துக்குப் போனாலும் சாரு அண்ணா கொம்பால அடிப்பார், மன்னி சாதம் போடுவா. அவ்ளோதான்.

நிரு: நிஜமாவே நான் கேக்கறது புரியலையா ? இல்ல…

தமல்: நீங்க கேக்கறீங்கன்னு புரியாத இளம் பாலகனா களத்தூர் கண்ணம்மால இருந்த தேவர் மகனுக்கே நாயகனா இருந்தாலும், தசாவதாரத்துலயும் சகலகலா வல்லவனா இருக்கற எனக்கே புரியாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா..அதுக்கு மேல வெறும் தக் லஃபா நான் விஸ்வரூபம் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்னு உன்னைப் போல் ஒருவன் மாதிரி சொல்லலாம்னு நினைக்கவேண்டிய கட்டாயம்..

நிரு: கரெக்ட் சார். புரிஞ்சுடுத்து.

தமல்: என்ன சார் புரிஞ்சுது ? எப்படிப் புரிஞ்சுது? வாய்ப்பே இல்ல. ஏன்னா எனக்கே புரியலங்கறத சொல்றதுக்குள்ள..

நிரு: காலெண்டர்ல இன்னிக்கி தனுசுக்கு குழப்பம்னு போட்டிருந்தான். இப்பத்தான் புரியுது.

தமல்: தனுசுக்குத் தானே குழப்பம். ரஜினிக்கும்ன் எனக்கும் இல்லையே. குழப்பத்துக்கே குழப்பம் வரும் வரை என்று தணியும் இந்த குழப்ப தாகம்னு எங்க திருவல்லிக்கேணி முண்டாசுக்காரன் சொன்னானே அதைத் தான் நானும் சொல்றேன்ன்னு உங்களுக்குப் புரியாம இருக்குன்னு நினைக்கறேன்.

நிரு: கன்னட மொழி பத்தி எதுக்கு பேசினீங்க ?

தமல்: நான் பேசறதெல்லாம் புரிஞ்சா, தெரிஞ்சா பேசறேன் ? உலகின் ஆதி மொழி தமிழ்னு அன்புமணி பேசறார். பிரதமர் பேசறார். நான் கூட இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்துன்னு பேசினேன். தெரிஞ்சா பேசறேன்? எங்கியோ ஆரம்பிக்கறேன். அது எங்கியோ போய் முடியுது. தமிழ் நாட்டுல என்னை அறிவாளின்னு சொல்றாங்க. அறிவாளின்னு சொன்னவுடனே சவாலே சமாளி படத்துல எங்கப்பா சிவாஜி சொன்ன ஒரு வசனம் நினைவுக்கு வருது. அதாவது..

நிரு: சிவாஜி உங்கப்பாவா ? பிரபு கோவிச்சுக்கப் போறார். என்ன சொல்றீங்க ?

தமல்: அப்பான்னா அப்பாவா ? ஆனா அப்பான்னா அப்பாதான்.

நிரு: அப்பப்பா. அப்போ, ராஜ்யசபாவுக்கு எதுக்கு போறீங்க ?

தமல்: நாலு பேர் இருப்பாங்க. பேசிக்கிட்டு இருக்கலாம். இங்கயே இருந்தா பயமா இருக்கு. கட்சில தனி ஒருவனா இருந்து பாருங்க தெரியும். வீட்டுலயும்.

நிரு: தெளிவா கேக்கறேன். கன்னடத்துக்குத் தமிழ் அம்மான்னு பேசினீங்களே. இதுக்கு மன்னிப்பு கேட்கப் போறீங்களா இல்லியா?

தமல்: மன்னிப்பு கேக்கறவன் மனுஷன், மன்னிக்கறவன் பெரிய மனுஷன். ஆனா, மன்னிப்பு கேக்கறதுக்கு மொதல்ல மனுஷனா இருக்கணும். நான் மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை. அதுனால மன்னிப்பு மிருகத்துக்கு உண்டான்னு நண்பர் ஜெயமோகன் கிட்ட கேட்டுப் பார்க்கணும். அவர் தான் யானை, நாய் எல்லாத்துக்கும் நண்பர். எனக்கும் தான்.

நிரு: நான் என்ன கேட்டேன் ?

தமல்: அது உங்களுக்குத் தான் தெரியணும். நீங்க கேட்டது எங்கிட்டதான்னாலும், நீங்க என்ன கேட்டீங்கன்னு எங்கிட்டயே கேட்டா அது பஹுத்-அறிவோட இருக்காதுன்னு எங்கய்யா ஈரோட்டுக்காரர் சொல்லியிருக்காரே. இன்ஃபாக்ட், ஈரோட்டுக்காரருக்கே தாய்மொழி கன்னடம் தான், இதுக்கு அவர் மன்னிப்பு கேட்டாரான்னு நான் கேட்பேன்னு நீங்க நினைச்சா அதுக்கு நீங்கதான் பதில் சொல்லணும்னு நான் சொல்லுவேன்.

நிரு: சார், ஒரே ஒரு கேள்வி. என்னோட தாய்மொழி என்னன்னு மறந்து போச்சு. கொஞ்சம் யார்கிட்டயாவது கேட்டுச் சொல்ல முடியுமா?

தமல்: நானே தனியாத்தான் இருக்கேன். அதுனால தான் நாலு பேர் இருப்பாங்களே பேசிக்கிட்டு இருக்கறதுக்கு சௌகர்யமா இருக்குமேன்னு ராஜ்யசபா போலாம்னு நினைக்கறச்சே நீங்க மன்னிப்புன்னு கேட்டு எங்க மன்னி என்ன சொல்லுவாங்களோன்னு பயந்து..

நிரு: நான் உங்கள்ட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். நானே ஃபோன் பண்ணி வந்து மாட்டிக்கிட்டதுக்கு மன்னிப்பு பேட்டுக்கறேன். ஏன்னா மன்னிப்பு கேக்கறவன் மனுஷன், மன்னிக்கறவன் சூப்பர் மேன். நான் பேட் மேனா, மந்திரவாதி மாண்ட்ரேக்கான்னு இன்னும் முடிவாகாத நிலைல, நானே உங்ககிட்ட டைம் கேட்டு வந்து பேசி மாட்டிக்கிட்டதுக்கு மன்னிப்பு கேட்டு, அதுனால உங்க மனசு புண்பட்டு, நீங்க மன்னிப்பு கேட்டு அதுனால எல்லாமே மன்னிப்பாயிடுமோன்னு நினைக்கறச்சே..

தமல்: ப்ரில்லியண்ட். இப்படிப்பட்டவங்க தான் எங்க கட்சிக்கு வேணும், இந்தாங்க ஃபார்ம். ஃபில் பண்ணுங்க. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, ராஜ்யசபாவுல. எங்க போனாலும் கையில டார்ச் லைட் கொண்டு போங்க. போற வழில டிவிய உடைக்கறதுக்கு உதவும். இந்த ஃபார்ம கார்ட்டூன் போட்டு எழுதறானே ஆமருவி, அவன் கிட்ட கொடுத்துடுங்க. பிரியுதா? #கமல்#thuglife@followers

ஆமருவி

31-05-2025

Leave a comment