நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவரின் தாயார் காலமாகிவிடுகிறார். துக்கம் கேட்கவேண்டி, உ.வே.சா. சென்னையில் இருந்து ராமநாதபுரம் செல்கிறார். மதுரைவரை ரயில் பயணம். பின்னர் முத்துராமலிங்கத் தேவர் வண்டியொன்றை ஏற்பாடு செய்கிறார்.
ராமநாதபுரத்தில் ஐயர் தங்குவதற்குப் பாண்டித்துரைத் தேவர் ஏற்பாடு செய்கிறார். சுமார் ஒரு மாதம் தங்கியிருந்த ஐயர் தினமும் பாண்டித்துரைத் தேவருடன் கலந்துரையாடுகிறார். தினமும் சில சொற்பொழிவுகள், தமிழாராய்ச்சி குறித்த கலந்துரையாடல்கள் என்று ஐயருடன் தேவர் மகிழ்வாக இருக்கிறார். ‘உங்களுடன் ஒரு நாள் இருந்து பேச நேரம் இருப்பதில்லை. நீங்கள் அத்துணை ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறீர்கள். ஆனால், என் துக்கத்தைப் போக்க இத்தனை நாட்கள் என்னுடன் தங்கியிருந்து, தமிழ் மூலம் எனது வாட்டத்தை நீக்கினீர்கள். இதுவுமே மறைந்த என் தாயின் கருணை தான்’ என்பது போல பேசுகிறார்.
ராமநாதபுரம் சேதுபதி அரசர், பாண்டித்துரைத் தேவரை அழைத்து, ஐயருக்கு ஒரு கிராமத்தை அளிக்க விருப்பம் என்கிறார். ஐயர் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டிற்கு நாம் அவருக்குச் செய்ய வேண்டும் என்று மன்னர் விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால், ஐயர் மறுத்துவிடுகிறார். ‘கிராம அலுவல், குத்தகை வசூல் என்றெல்லாம் செய்ய எனக்குச் சக்தி இல்லை. இதனால் என் நூல் பதிப்புப் பணி வீணாகிவிடும்’ என்று கிராம தானத்தை மறுக்கிறார் ஐயர்.
பின்னர் ஒரு முறை பணம் பெற்றுக் கொண்டு பாட நூல் எழுத வாய்க்கிறது, அதையும் ஐயர் மறுத்துவிடுகிறார். ‘பணத்தின் பின்னால் சென்றால் சுவடி ஆராய்ச்சி, நூல் பதிப்பு என்று என்னால் செய்ய முடியாது’ என்று தனது கொள்கையில் உறுதியாக நிற்கிறார் உ.வே.சா.
இத்தகைய மகான்களின் காலடி பட்டது நமது தமிழகம்.
இவரது உயர்ந்த வாழ்வையும், நமது அன்றாடத் தனத்தின் அற்பத்தனத்தையும் எண்ணியவாறே கண்ணீருடன் ‘என் ஆசிரியப்பிரான்’ நூலை வாசித்து வருகிறேன். ஆசிரியர் : கி.வா.ஜகந்நாதன்.
Leave a comment