The side that is not spoken about, generally.

‘திராவிட மாயை’ சுப்பு அவர்களின் கையடக்க நூல் ‘ஆரியம் திராவிடம் – அப்படின்னா என்ன?’. விஜயபாரதம் பதிப்பகம்.

எந்தச் செய்தியையும் அடிப்படையோ ஆதாரமோ இல்லாமல் சொல்வது திராவிட இயக்க எழுத்தாளர்களின் வழக்கம். அதற்கு நேர்மாறானது சுப்புவினுடையது. எதையும் ஆதாரத்துடன் சொல்வது – இதை அவரது ‘திராவிட மாயை’ நூல் வரிசையில் காணலாம். ‘ஹிந்துத்துவ கூகுள்’ என்று அழைக்கப்படும் சுப்பு அவர்களின் இந்த நூல் வழக்கமான சில திராவிடப் பொய்களைத் தோலுரிக்கிறது.

சிருங்கேரி சங்கராச்சாரியார் தன்னை வந்து பார்க்கும்படி ராமசாமி நாயக்கரை அழைத்தார் என்பது திக வின் புரட்டு. இதனை மிக எளிமையாக உடைக்கிறார் சுப்பு. திக வின் கட்டுரையில் சங்கராச்சாரியாரின் பெயரே தவறாக உள்ளதைச் சுட்டுகிறார். பொதுவாக மடாதிபதிகள், அதிலும் சிருங்கேரி பீடம் போன்ற பாரம்பரிய பீடம் “எங்களை வந்து பாருங்கள்” என்று யாரையும் அழைப்பது இல்லை. ஆனால், அப்படியான ஒரு கடிதம் வந்துள்ளது என்று வழக்கமான உருட்டுகளில் திளைக்கிறது திராவிடர் கழகம்.

தீரர் சத்தியமூர்த்தி தேவதாசி முறையை ஆதரித்தார் என்கிற மற்றொரு புரட்டையும் உடைக்கிறார் சுப்பு. இதற்கு சுப்புலட்சுமி ரெட்டியின் நூலையே மேற்கோள் காட்டுகிறார்.

‘தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும்’ என்று காய்தே மில்லத் சொன்னதாகத் திமுக கூறுவது பொய் என்பதை, காய்தே மில்லத்தின் மேற்கோள்களையே சுட்டிக் காட்டிச் சொல்கிறார் சுப்பு.

பசும்பொன் தேவர் இறுதி யாத்திரையில் கருணாநிதி கலந்துகொண்டது பற்றிய ஐயம் ஏற்படுத்தும் கட்டுரையும் உள்ளது. ‘மற்றும் பலர்’என்கிற நிலையில்தான் கருணாநிதி இருந்தாரா என்கிற வாழைப்பழத்தில் ஊசியையும் ஏற்றுகிறார் சுப்பு.

தமிழ் நாட்டில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்; அதிலும் திமுக, திக எனில் அண்டப்புளுகு ஆகாசப்புளுகாக இருந்தாலும் அவை கெஜட்டில் வரும் அளவிற்கு ஊதிப் பெரிதாக்கப்பட்டும். ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர்’ என்பதில் துவங்கி, அவருக்கு ‘யுனெஸ்கோ விருது’ கொடுத்தார்கள் என்பது வரை அவர்கள் சொல்லாத பொய்யே இல்லை. மேலும் நகைப்புக்கு உள்ளாவது யாதெனில் ‘யுனெஸ்கோ பார்வையில் பெரியார்’ என்று வீரமணி, தலையணை போன்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இம்மாதிரியான பொய்களைத் தோலுரித்துக் காட்டும் விதமாகத் ‘திராவிட மாயை’ சுப்பு அவர்கள் எழுதியுள்ள 31 பக்கங்களே கொண்ட இந்த நூலை ‘விஜயபாரதம் பிரசுரம்’ வெளியிட்டுள்ளது. விலை ரூ 30.

Leave a comment