The side that is not spoken about, generally.

‘டயாலிஸிஸ்’ என்கிற வஸ்து, ‘எகனாமிக்ஸ்’ போல எதோ படிப்பு என்றே பல நாட்கள் எண்ணியிருந்தேன். சமீபமாக எல்லார் வாயிலும் புகுந்து புறப்பட்ட வார்த்தையாக அது உள்ளது என்றதும் சுமார் இரண்டு வருஷங்கள் முன்னர் அது இன்னெதென்று தெரிந்துகொண்டேன்.

ஆனால், தற்சமயம் எங்கும் ‘டயாலிஸிஸ்’. வீட்டிலேயே கூட செய்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஆஸ்பத்தரியில் 24 வயது வாலிபன் ‘டயாலிஸிஸ்’ நடக்க, ஃபோனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தான்.

தந்தையின் சிராத்தம் நடந்தபோது, தளிகைப் பண்ணுபவர் “எல்லாம் பண்ணிவெச்சுட்டேன். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பறேன். ஒரு மணிக்கு ‘டயாலிஸிஸ்’ அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு” என்று சொல்லிச் சென்றார். கொஞ்சம் கேட்டுப்பார்த்ததில், வைதீகத்தில், உபாத்யாயத்தில் உள்ள பலருக்கும் ‘டயாலிஸிஸ்’ ஏதோ சந்தியாவந்தனம் பண்ணுவது போல் சஹஜமாக உள்ளது.

வேளைக்குச் சாப்பிடாமல் இருப்பது, நாழி கழித்துச் சாப்பிடுவது, சிராத்தம் முடிந்து, சொந்த ஊருக்குச் சென்று சாப்பிடும் தளிகைப்பண்ணும், உபாத்யாயம் பண்ணும் வாத்யார்கள் என்று காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அனேகமாக இவர்களிடம் மருத்துவக் காப்பீடு இருப்பதில்லை. ‘டயாலிஸிஸ்’ மாதிரியான மருத்துவ முறைகள் செலவு பிடிப்பவை. கிட்னி ஃபெய்லியர் என்று ஒரு வாத்யார் இருக்கிறார். மாற்று கிட்னி கிடைக்கவில்லை. காத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் வீட்டிற்கு திவசத் தளிகை பண்ணும் இள வயது நபர் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியில் காலமானார். “வேளைக்கு சாப்பிட மாட்டான். எங்கெல்லாமோ திவசத் தளிகை பண்ணி வெச்சுட்டு, படபடைக்கற வெய்யில்ல டிரெயின், பஸ்னு பிடிச்சு, ஆத்துக்கு வந்து தீர்த்தாமாடிட்டு நாலு மணி வாக்குல ஒரு சாத்துமுதுஞ் சாதம் சாப்பிடுவான். திடீர்னு போயிட்டான்” என்ற அந்தத் தாயாயின் மனக் குமுறலை எப்படிக் குறைப்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம் நானும் நண்பர் பிரசன்னாவும். அவரது குடும்பத்துக்கு நண்பர்கள் சிலர் உதவினோம் என்றாலும், எத்தனை வருஷம் உதவ முடியும் ? நாள்பட்டு நீடிக்குமா ?

இதிலும் ‘சவுண்டி ப்ராம்மணன்’ என்கிற வகை கொடுமையிலும் கொடுமை. இதைப் பற்றி சுமதி எழுதிய ‘கல் மண்டபம்’ நாவலை வாசித்துப் பாருங்கள்.

சம்பிரதாயப் பெரியவர்களிடம் ஓர் வேண்டுகோள் :

சிராத்தம் காலை 10:30 மணிக்குள் நிகழ வேண்டும். சாப்பிட்டு எழுவது 11:00 மணிக்குள்ளாக இருக்க வேண்டும். இத்தனை பதார்த்தங்கள் கூடாது என்பது மாதிரியான சில மாறுதல்களைச் செய்ய வேண்டும். மடங்கள், சம்பிரதாயக் கல்வி உடையோர், மருத்துவர்கள் ஒன்றூகூடி இம்மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று மனதின் ஆழத்தில் இருந்து கேட்டுக்கொள்கிறேன்.

Leave a comment