மனித இனத்திற்கு முந்தைய பருவம் குரங்கு என்று நாம் அறிவோம். பகுத்தறிவு மிகுதியால் பரிணாம வளர்ச்சி காரணமாக மனிதனானான் என்று அறிகிறோம்.
குரங்குகள் தங்களுக்குள் பேசுவதற்கு ஒரு மொழி வைத்துள்ளன. அதே போல் ஓராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழி வைத்துள்ளன.
ஆனால் குரங்குகள் தங்களுக்குள் மொழி வேற்றுமையால் சண்டையிடுவதில்லை.அன்பு பரிமாற, உணவு வேண்ட, தத்தம் தொகுதி வரையறுக்க – இதற்கு மட்டுமே அவற்றிற்கு மொழி தேவைப் படுகிறது.
ஒரு குரங்கு இனம் ஒரு நாளும் பிறிதொரு குரங்கு இன மொழியைத் தாழ்த்திப் பேசியதில்ல்லை. மொழி காரணமாக வெறி அடைவதில்லை.
குரங்கோ அல்லது மற்ற மிருகமோ தனது மொழி தான் உயர்ந்தது என்று மார் தட்டியதில்லை.
ஏன் என்றால் அவற்றிற்குப் பகுத்தறிவு இல்லை.
பகுத்தறிவு படைத்த மனிதன் அப்படி அல்ல.
முன்னேறிய வகுப்பினரன் முதல் பின்னேறவே விரும்பும் வகுப்பினரன் வரை மொழி, சம்பிரதாயம் முதலான தனது படைப்புகளைக் கொண்டே வேற்றுமைகளை உண்டாக்கி சண்டை போடுகிறான். தார் பூசிவிடுவதால் ஒரு மொழியை அழித்துவிட முடியும் என்று நம்புகிறான். மொழியின் தொன்மை குறித்து பெருமை அடைகிறான். அதனால் வெறி பிடித்து அலைகிறான்.
மொழி தவிர மதம், இனம் , தோல் நிறம் என்று புதிது புதிதான காரணங்கள் கற்பித்து சண்டை போடுகிறான்.
ஏன் என்றால் மனிதன் பகுத்தறிவு படைத்தவன்.
மேலே சொன்ன கருத்துகள் மிகவும் முன்னேறிய வகுப்பினரான அந்தண வைஷ்ணவர்கள் தங்களுக்குள் தென்கலை- வடகலை வேறுபாடு, ராமானுஜ தயாபாத்ரம் – ஸ்ரீ சைலேச தயா பாத்ரம், வடகலை க்குள் உள்ள வீராப்பு வேறுபாடு முதலான புண்ணாக்கு வேறுபாடுகள் பற்றின அல்ல.
திவ்யப் பிரபந்தத்தில் எந்தப் பாசுரம் தொடங்குவது, எந்த தொனியில், ராகத்தில் தொடங்குவது, எந்த ஆச்சாரியனை- குரு பரம்பரையை முன்னிலைப்படுத்துவது , திருமண்ணை எந்த அகலத்தில் இட்டுக்கொள்வது, முதல் தீர்த்தம் யாருக்கு அளிப்பது என்று தற்கால மனித வாழ்வுக்கு ஆதாரமான பிரச்சினைகளை அலசும் ஐயங்கார் அறிவு ஜீவிகளைப் பற்றி நான் பேசவில்லை.
தயிர்வடை உசத்தியா, புளியோதரை உசத்தியா, அக்கார அடிசில் உசத்தியா என்ற ரீதியில் மட்டுமே வாதிடும் அளவுக்கு தத்துவ அறிவு படைத்து ஆனாலும் எதுடா காரணம் சண்டை போட என்று அலையும் தற்கால ஐயங்கார்களைப் பற்றி இங்கு பேசி குரங்குளை அவமானப் படுத்த விரும்பவில்லை.
நிஜமான குரங்குகளைப் பற்றி மட்டும் பேசுகிறேன். அவைகள் தங்களுக்குள் மேல் சொன்ன அற்ப காரணங்களுக்காக ஒரு போதும் சண்டை போடுவதில்லை.
Leave a comment