சில நண்பர்களுடன் பல முறை சில விஷயங்கள் பற்றி பல கோணங்களிலும் சில கோணங்கித்தனங்களுடன் பலவாறு உரையாடிய அனுபவங்களை சில சிறிய கேள்வி பதில் வடிவத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன். இதுதான் தலைப்பு என்பதெல்லாம் இல்லை. இதைப்பற்றிப் பேசக்கூடாது என்று தமிழ்ச் சமுதாயம் வைத்துள்ள “மரபுகளை” மீறி மனதில் தோன்றியபடி பல கோணங்களிலும் பேசியுள்ளோம்.
இவற்றில் தமிழ்நாடு, இந்தியா, அமெரிக்கா, இலங்கை, சிங்கை, தமிழ்த் தலைவர்கள், தமிழ் எழுத்தாளர்கள், ஆங்கில எழுத்தாளர்கள், ஆங்கிலத்தில் இந்தியாவில் எழுதுபவர்கள், பெண் விடுதலை, ஆண் விடுதலை, சமூகம், பொருளாதாரம், வாழ்வியல், சமூக அக்கறை, மொழி, இனம், இன அடையாளங்கள், ஆன்மிகம், சாதி, மதம், வர்க்கம், விஞ்ஞானம், கல்வி முறை, வங்கி, வட்டி விகிதம், கடன் அட்டை, கணினி, யூனிகோட் வழிமுறைகள், தமிழ் எழுத்துக்கள், ஜப்பானிய எழுத்து முறை, ஆங்கிலம், மனித உறவு முறை இப்படிப் பல தலைப்புகளில் இவை நடந்துள்ளன.
ஒன்றை கவனிக்கவும். இவற்றில் சினிமாவும் விளையாட்டும் இல்லை. அவற்றை ஒதுக்க வில்லை. இவற்றில் மற்றவர்கள் பேசினார்கள், நான் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதால் அவற்றைப் பட்டியலிடவில்லை. இந்த இரண்டிலும் எனது அறிவு பூஜ்யத்திற்கு ரொம்பவும் நெருக்கம் ஆகையால் எனது மேதாவிலாசத்தை இவற்றில் காட்ட வேண்டியதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
ஆக இவை இரண்டு பற்றி மட்டும் தான் எனக்கு ஒன்றும் தெரியாது என்றோ அல்லது மற்றது, பட்டியலிட்டது எல்லாம் பற்றியும் தெரியும் என்றோ நான் கூற வில்லை. எல்லாம் தெரிந்திருக்க நான் என்ன கபில் சிபலா என்ன? ஏதொ எனக்குத் தெரிந்தவற்றைப் பேசினேன் என்று கூறலாம்.
இந்த பேச்சுக்கள் எந்த கால அளவுகளிலும் நடக்கவில்லை. பல நேரங்களில் சிலருடனும், சில நேரங்களில் பலருடனும், அவ்வப்போதும் அடிக்கடியும், ரமணனின் வானிலை அறிவிப்பு போல் தெளிவாக நடந்திருப்பன.
இந்தப் பேச்சுக்களினால் யாருக்கு என்ன பயன்? இதைப் படிக்காவிட்டால் என்ன பாதகம்? என்பது போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே.
இதைப் படிப்பதால் ‘ஊனினைக் குறுக்கவோ உள்ளொளி பெருக்கவோ” முடியாது என்பதை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன்.
இதை படிப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும்; குழந்தை இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் உண்டாகும்; பரீட்சை பாஸாகும் என்றெல்லாம் கலர் கலராக ரீல் விட நான் ஒன்றும் டி.வி. ஜோசியக்காரன் இல்லை. (அல்லது பண வீக்கம் குறையும் என்று ஆரூடம் சொல்ல நான் ஒன்றும் சிதம்பரம் இல்லை.)
இதனால் உங்களுக்கு என்ன பலன்? வேறு இன்றும் இல்லை. திட்டுவதற்கு உங்களுக்கு ஒரு அம்மாஞ்சி கிடைத்தான் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஒன்று மட்டும் மாற வில்லை. இந்தப் பேச்சுக்களினால் இந்தத் தலைப்புக்களில் எனது கருத்து மட்டும் மாற வில்லை. ஒன்று நான் மர மண்டையாக இருக்க வேண்டும். அல்லது அவர்கள் பேசியது / கத்தியது எனக்குப் புரியாமல் இருந்திருக்க வேண்டும். இரண்டும் ஒன்று தான் என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது.
தொடர்ந்து பேசுவோம். அல்லது எனது இலங்கை நண்பர் கூறுவது போல் ‘கதைப்போம்’..