The side that is not spoken about, generally.

நல்ல மழை அடித்து முடித்து வானம் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது. மழை ஒரு வாரமாக ரொம்பவும் பலமாக இருந்ததால் எங்கும் வெள்ளம். பாடசாலைகள் கூட மூடியிருந்தன. காவிரி எந்த நேரமும் கரை புரண்டுவிடும் என்று எதிர் பார்த்தனர். யுக முடிவு போல் அவ்வளவு மழை என் வாழ் நாளில் பார்த்ததில்லை. மழையைக்கண்டு பசு மாடுகள் மிரண்டதை மக்கள் ‘நல்ல சகுனம் இல்லை’ என்று பேசிக்கொள்கின்றனர்.

குடியானவர்கள் கழனி வேலைகளுக்குப் போக முடியவில்லை. வீடுகள் அடித்துக்கொண்டு செல்லப்பட்டன என்று சொன்னார்கள். அரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தைத் திறந்துவிடச் சொன்னேன். சில ஆயிரம் பேர் அங்கே தங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தளிகை ஏற்பாடு செய்ய சோழனின் அரண்மனைப் பரிசாரகர்கள் வந்திருந்தனர்.

அது தவிர, நமது மடம் விசாலமாக இருந்ததால் பல நூறு பேர் ஐந்து நாட்களாக இங்கேயே தங்கியிருந்து பண்டிதர்களின் உபன்யாசங்களையும் எனது பேச்சையும் கேட்டபடி இருந்தனர். இன்று தான் அவர்கள், மழை விட்டுவிட்ட படியால், தங்கள் வயல்கள், தோப்பு துரவுகள் எப்படி உள்ளன என்று பார்த்துவரக் கிளம்பினார்கள். எனக்கும் சற்று ஓய்வு கிடைத்தது. ரொம்ப நாள் எண்ணமான என் கதையை எழுதத் துவங்குகிறேன்.

இன்று கலி யுகம் 4238-வது வருஷம், பிங்கள வருஷம் என்று தமிழ் வருஷங்களில் சொல்வர். நான் பிறந்து இரண்டு பிங்கள வருஷங்கள் வந்துவிட்டன. போன முறை பிங்கள வருஷம் நடக்கும்போது என் அறுபதாவது வயதில் அனேகமாக விஸிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக உபதேசிக்கத் துவங்கிவிட்டேன். சன்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்டாயிற்று. அதற்குப் பிறகு இன்னொரு அறுபது வருஷங்கள் கடந்துவிட்டன.

நீங்கள் இதைப் படிக்கும்போது சில மாதங்கள், வருஷங்கள், நூற்றாண்டுகள் கூடக் கடந்திருக்கலாம். என்னைபற்றியும் நம் மடத்தின் செயல்பாடுகள் பற்றியும் நீங்கள் அறிந்திருந்தால் ஆச்சரியம் தான். அதனினும் நான் இப்போது எழுதும் நடை உங்களுக்குப் புரியும் வண்ணம் இருக்குமோ என்றுமே எனக்கு சந்தேகம் உண்டு. தமிழ் பாஷையே நாங்கள் பேசும்படியாகவே இருக்குமோ என்பதும் சந்தேகமே. நான் எழுதியதை நீங்கள் தமிழில் தான் படிக்கிறீர்களா என்றும் தெரியவில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எனது அந்திம காலம் நெருங்கிவிட்டது. அதனால் கொஞ்சம் அவசரமாகவே எழுத வேண்டியுள்ளது. நடந்துள்ள எல்லாவற்றையும் எழுத வேண்டுமா , அது என்னால் முடியுமா என்றும் தெரியவில்லை. ஏனோ இந்த எண்ணங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன.

ஆயிற்று. நூற்றி இருபது வருஷம் ஆயிற்று. கொஞ்சமா நஞ்சமா நிகழ்வுகள்? எவ்வளவு அனுபவங்கள்? எவ்வளவு தரிசனங்கள்? நினைத்துப் பார்த்தால் ‘நமக்கா இதெல்லாம் நடந்தது!’ என்பது போல் வியப்பாக உள்ளது.

‘எனக்கு நடந்தது’ என்று சொல்வதே தவறோ என்று தோன்றுகிறது. ‘எனக்கு நடத்துவிக்கப்பட்டது’ அல்லது ‘என்னை சாட்சியாக வைத்து நடந்தேறியது’ என்றோ வேண்டுமானால் சொல்லலாம் என்று தோன்றுகிறது. எப்படியோ, என் காலத்தில் பல மாறுதல்கள் நடைபெற்றன. அந்த மாறுதல்கள் நடக்க வேண்டும் என்று முன்னர் பல யுகங்களுக்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விதியினை என்னை ஒரு கருவியாக்கி நடத்திக் காட்டப்பட்டது என்று சொல்வது சரியாக இருக்கும்.

அப்படி நடத்திக் காட்டியது யார் ? நடத்தியவரைப் பற்றியும், கருவியாகிய என்னைப் பற்றியும் அறிந்துகொள்ள இவ்வளவு காலம் ஆகியுள்ளது எனக்கு. பூரணமாக அறிந்துகொண்டேனா என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. அந்த சந்தேகம் இப்போது இல்லை. அறிந்துகொண்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.

நான் பிறந்தபோது என் உடனிருந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. என் வாழ்வின் பல பகுதிகளிலும் பருவங்களிலும் என்னுடன் பயணித்த பலரும் தற்போது இல்லை. இவர்கள் அனைவரின் வாழ்க்கைகளின் சாட்சியாக, அனுபவங்களின் கருவூலமாக நான் மட்டும் இன்னும் அமர்ந்திருக்கிறேன்.

எத்தனை நேரம் மிச்சம் என்பது தெரியவில்லை. முடிவு நெருங்குவது அறிகிறேன். சமீபத்தில் தான் என்று உணர்கிறேன், ஆதலால் விரைகிறேன்.

மடத்தில் மழையை முன்னிட்டுத் தங்கி இருந்தவர்கள் அனைவரும் சென்று விட்டனர். நானும் உறங்காவில்லியும் தான் இருக்கிறோம். எந்த நேரமும் அவன் எனக்கு விசிறிக்கொண்டே இருக்கிறான். நான் இருக்கும் வரை என்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான் போல. நான் இப்போது எழுதும்போது கூட கையில் அகல் விளக்குடன் நிற்கிறான்.

உறங்காவில்லி அவன் மனைவி பொன்னாச்சி இருவரும் முன்னரே பரமபதித்து விட்டனர் என்று மற்ற சீடர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவன் என்னுடனே இருப்பது போலவே படுகிறது. அவன் போனது எனக்கு ஞாபகம் இல்லை. உடன் இருந்தவரை எவ்வளவு கைங்கர்யம் செய்துள்ளான் ?

அது போகட்டும்.

கடந்த பல வருடங்களாகவே என் எண்ணங்களை எழுதி வைக்க வேண்டும் என்று எண்ணம். பிரபந்தம், கீதை, பிரம்ம சூத்திரம் என்று எல்லாவற்றிற்கும் பாஷ்யம் எழுதுவதே பெரிய பிரயாசையாக இருந்தது. அது தவிர கோவில் சீரமைப்பு, சமூக வேலைகள் என்று பல வேலைகள். ‘வைகானசம்’ அழித்து ‘பாஞ்ச ராத்ரம்’ கொண்டுவரவே என் வாழ் நாளின் பெரும் பகுதி செலவானது என்று கூரத்தாழ்வான் சொன்னார்.

ஆனால் ஒன்று மட்டும் நிதர்ஸனம். எழுதுவதை இதற்கு மேலும் தள்ளிப்போட முடியாது என்று தோன்றுகிறது.

நான் ஒன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை.

பல, நீங்கள் ஏற்கெனவே அறிந்தவையாகவும் இருக்கக்கூடும்.நான் இவ்வாறு கூறினேன் என்றோ வேறு ஒரிருவர் இவ்வாறு கூறியிருந்தார்கள் என்றோ நீங்கள் கேட்டிருக்கலாம்; படித்திருக்கலாம். ஆனால் நான் சொன்னதைத்தான் நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது.

நான் நினைத்தது, பேசியது, ஆலோசித்தது, எனக்குப் பின்னால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரிவது – இவை பற்றி எல்லாம் எழுதி வைக்க வேண்டும் என்று பிரயத்தனப் படுகிறேன். அரங்கன் திருவுள்ளம் என்னவென்று தெரியவில்லை.

எனவே, முடிந்தவரை, என்னால் முடியும் வரை, என் முடிவு வரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Leave a comment