The side that is not spoken about, generally.

எழுத்தாளர் ஞாநி தேர்தலில் நிற்கிறார் என்பது ஒரு நல்ல செய்தி. தொகுதி என்னவென்பதெல்லாம் தெரியவில்லை. எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. ஏனெனில் ஞாநி போன்ற சமூக ஆர்வலர்கள் தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள் என்பதே என்னைப் பொருத்தவரை நல்ல செய்தி தான்.

தேர்தல் என்றவுடனே ‘ஆமாம் அவன் மட்டும் என்னவாம், கொள்ளை அடிக்கவில்லையா?’ என்று கேட்டே பழகிப்போன நமக்கு ‘அட, நல்ல மனுஷன் ஒருத்தர் நிற்கிறாரே !’, என்று ஒரு Positive  எண்ணம் ஏற்படுவது ஒரு புதிய அனுபவம்.

அவர் வெற்றி பெறுவாரா, அவர் சார்ந்த கட்சி  நல்லதா என்றெல்லாம் பற்றிப் பேசிப் பயனில்லை என்று நினைக்கிறேன். ஆம் ஆத்மி கட்சி வெறும் காட்சியே தவிர அது ஒரு கட்சி அல்ல. தில்லியில் அவர்கள் பதவியில் இருந்த 49 நாட்களில் அதன் தலைவர் வீதியில் இருந்ததே அதிகம். நாடகத்துக்குக் பெயர் போன கட்சி அது. நேர்மை என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ் ஆதரவு  பெற்றார்கள். தலைமைச் செயலகத்தில் அரசு நடத்தாமல் தொலைக்காட்சி நிலையங்களில் பழி கிடந்தார்கள். 49 நாட்களில் அவர்கள் செய்துகொண்ட சமரசங்கள் கூசச் செய்தன.

ஆனால் ஞாநி என்ற தனி மனிதரை ஆம் ஆத்மி கட்சி என்ற கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டியதில்லை. இவரால் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்தால் உண்டு.

ஞாநி அடிப்படையில் ஒரு போராளி. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இருந்து தனது கொள்கைப் பிடிப்பினால் வெளியேறினார். அக்காலத்தில் இப்போது இருப்பது போல் நிமிடத்திற்கு ஒரு பத்திரிக்கையில் வேலை கிடைக்காது. இருந்தாலும் வெளியேறினார். குடும்பம் சிரமப்பட்டது.

1988-ல் இருந்து கூடங்குளம் அணு உலையை எதிர்த்து வருகிறார். இன்றும் எதிர்க்கிறார். தினமும் இப்போது அதில் மின் உற்பத்தி நடக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டிருக்கிறார்.

2ஜீ வழக்கில் துக்ளக் சோ.ராமாஸ்வாமியைத் தவிர ஆணித்தரமாக எதிர்த்துப் பேசிய ஒரே தமிழ் எழுத்தாளர் இவர் தான்.அப்போது இவர் சாதிப் பெயர் சொல்லி வசை பாடப்பட்டார்.

அடிப்படையில் நல்ல மனிதர். அவர் சிங்கப்பூர் வந்திருந்த போது அவருடன் சுமார் 2 மணி நேரம் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சரளமாக எல்லா விஷயங்கள் பற்றியும் உரையாடினார். நம் உறவினர் ஒருவர் பல நாட்கள் கழித்து வந்து பேசுவது போல் இருந்தது அந்த சந்திப்பு. என் பெயர் பற்றிய பேச்சு வந்தவுடன் ,’தி.ஜானகிராமன் நாவலில் ஆமருவி என்றொரு பாத்திரம் வரும்’ என்று சொல்லி அசத்தினார்.

அவர் கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடில்லை. மோடி எதிர்ப்பு என்ற தளத்தில் கொஞ்சம் தரம் குறைந்தார் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் பற்றிய தனது கருத்துக்களில்- குறிப்பாக எழுத்துரு பற்றி – கொஞ்சம் தி.மு.க. தரத்தில் எழுதினார்.அணு உலை விஷயத்திலும் அவர் கருத்துக்கு எனக்கு எதிர் கருத்து உண்டு. அமெரிக்க இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் சென்னையில் பேச அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மௌனியாகவே இருந்தார். எல்லாவற்றிலும் இடது சாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் அவர், அவர்கள் அ.தி.மு.க.வுடன் செய்து கொண்ட உடன்பாடு பற்றி வாய் திறக்கவில்லை.

தான் ப்ராம்மணன் இல்லை , இடது சாரி தான் என்று எல்லா நேரங்களிலும் காட்டிக்கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருப்பதாக அவர் உணர்ந்திருப்பதாகவே அவரது பேச்சு பல சமயங்களில் இருந்துள்ளது என்பது என் கருத்து. இது தமிழ் நாட்டின் நிதர்ஸன அவலங்களில் ஒன்று.

இருந்தாலும் நான் ஞாநி அவர்களை ஆதரிக்கிறேன். அவர் வெற்றி பெற மாட்டார் என்பது உறுதி ஆகா விட்டாலும், அவரைப் போல் ஒருவர் பாராளுமன்றத்தில் பேசினால் ஒரு சில அறிவு பூர்வமான விவாதங்கள் நடக்க வழி ஏற்படும் என்று நினைக்கிறேன்.

நல்ல மனிதர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். ஞாநி நல்லவர்.

ஞாநி பற்றிய என் முந்தைய பதிவுகள் 1 :

ஞாநி பற்றிய என் முந்தைய பதிவுகள் 2 :

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Leave a comment